ஸ்ரீ ஞானரமணன்
திருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது கிரிவலம். அதிலும் கார்த்திகை மாதப் பௌர்ணமி அல்லது அதையொட்டி வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று மலைமீது ஏற்றப்படும் ஜோதி தரிசனம் வெகுவாகப் போற்றப்படுகிறது.
அன்று இறைவன் அண்ணாமலையாரையும் அன்னை உண்ணாமுலையம்மையையும் தரிசித்து, ஜோதி தரிசனம் கண்டபின் கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். மலைமீது ஏற்றப்படும் ஜோதி தொடர்ந்து பதினோரு நாட்கள் ஒளிதரும். இதனை பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களும் தரிசிக்கலாம்.
தீபமேற்றப்படும் முதல்நாள் ஜோதி தரிசனம் கண்டால் பாவங்கள் அழியும்; புனிதம் சேரும். இரண்டாம் நாள் தரிசிக்க சுகமான வாழ்வு கிட்டும். மூன்றாம் நாள் தரிசிக்க செல்வவளம் பெருகும். நான்காம் நாள்- உறவுகள் பலப்படும். ஐந்தாம் நாள்- தம்பதிகள் ஒற்றுமையாகத் திகழ்வர். ஆறாம் நாள்- அறிவிற்சிறந்த மக்கட்செல்வம் கிட்டுவதுடன், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஏழாம் நாள்- சனியின் தாக்கம் விலகும். எட்டாம் நாள்- பீடைகள் விலகும். ஒன்பதாம் நாள் நவகிரக தோஷங்கள் நீங்கும். பத்தாம் நாள்- நினைத்த காரியம் கைகூடும். பதினொன்றாம் நாள் வரை தொடர்ந்து ஜோதி தரிசனம் கண்டு வழிபட்டால் மறுபிறவியில்லை என்கிறது அண்ணா மலை புராணம்.
நிலவு பொழியும் அமிர்த சுரப்பை ஈர்த் திடவே, பௌர்ணமி நாளில் இல்லம், ஆலயம், தெரு ஆகியவற்றை நன்னீரால் கழுவியும், பசுஞ்சாணமிட்டு மெழுகியும், பச்சரிசி மாக்கோலமிட்டும் பௌர்ணமித் திதி நேரம் முழுவதும் விளக்குகளை ஏற்றி வைப்பர்.
இவையாவும் தொன்றுதொட்டு பூவுலகிற்கு அமிர்தசக்திகளை கிரகித்துத் தரும் தெய்வீக வழிமுறைகளாய்த் துலங்கி வருகின்றன.
இதன்மூலம் இல்லம், ஆலய வளாக மெங்கும் அமிர்த சுரப்பு நன்கு விருத்தியாகி, அந்தந்த ஊர் மற்றும் வானப் பரவெளியையும் அடையும்; சமுதாயத்திற்குச் சாந்தத்தையும் எளிதில் வர்ஷிக்கும்.v அருணாசலத்தை ஒருமுறை சாதாரண மாய் கிரிவலம் வந்தாலே கிட்டும் புண்ணியங் கள், தெய்வீக அனுபூதிகள் கோடானு கோடி என்பது உண்மையே. இவையெல்லாம் என்னவாகின்றன? அபரிமிதமான இப்பலன்கள் அனைத்தையும் ஆசாபாசங்கள், கர்மவினை அழுக்குகள் நிறைந்த சராசரி மனிதனின் வெளியுடலால் தாங்க இயலாது. எனவே அருணாசல கிரிவல வழிபாட்டில் கிட்டும் அத்தனைக் கோடி புண்ணியங்களும், தெய்வீக அனுபூதிகளும், மகத்தான இறை தரிசனங்களும் அவரவருக்குள்ளிருக்கும் சூக்குமமான உடல்களில் இயன்ற அளவில் சேமிக்கப்படும். இது வாழ்நாள் முழுவதும் நிறைந்துவரும். இதனைச் சிறிது சிறிதாய் அமிர்தம்போல் ஊறித் திளைக்க வைத்து, வாழ்வில் அவ்வப்போது பயன்படுத்திட உதவுவதே அருணாசல தீப தரிசனம். இது அருணாசல ரகசியம்.
ஆனால் இவ்வாறு பெற்ற புண்ணியமா னது- மனிதர்களின் அதர்ம, அசத்திய, பாவகரமான செயல் களால் பெரிதும் கரைந்துபோய் விரய மாகிவிடும். எனவே, வாழ்வில் நல்லொழுக் கம் மிகமிகத் தேவை.
கார்த்திகை தீபத்தை தரிசித்து கிரிவலம்வந்து பெற்ற அளப்பரிய புண்ணியத்தை வீண் செயல்களால் விரயம் செய்துவிடலாகாது.
நட்சத்திரக் குரவ தீபம்!
இந்நன்னாளில் கிரிவலத்தின் எட்டுத் திக்குகளில், நட்சத்திரம்போல ஐந்து கோணங்களில் ஐந்து எலும்மிச்சம் பழ ஓடு களையும், நடுவில் ஆயுத எழுத்து போல (ஃ) மூன்று எலுமிச்சை ஓடுகளையும் வைத்துத் தேங்காய் எண்ணெய்- தாமரைத் தண்டுத் திரியால் தீபமேற்றி, இந்த நட்சத்திரக் குரவ தீபத்தை எட்டுமுறை சுற்றிவந்து வணங்கி கிரிவலத்தைத் தொடர்ந்திடுக! ஆயுத எழுத்தின் சக்தி பெருகும் நாளிது! அன்று மூன்று கற்களை "ஃ' போல் வைத்து உணவு சமைத்து அன்னதானம் செய்திடுதலால் திருமணம் நிச்சயமானபிறகு ஏற்படும் முவ்வழி முட்டுத் தடங்கல்கள் நீங்கி, தடைப்பட்டுள்ள திருமணங்கள் நன்கு நிறைவேற நல்வழிகள் பிறக்கும். முச்சந்தியில் வீடு, கடை கொண்டி ருப்போர் அன்று திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீபம், சங்கு, படிகாரம் போன்றவை கூடிய கறுப்புக் கயிறு ஆகியவற்றைத் தாங்கி, அருணாசல கிரிவலம்வந்து இல்லம், கடையில் தீபமேற்றி வழிபட்டு, கறுப்புக் கயிறை வெளியில் மாட்டிடவேண்டும். அஷ்டமிதோறும் அருணாசல கிரிவலம்வந்து இவ்வாறு செய்தலால் கால திருஷ்டி தோஷங்கள் தீரும்.
"இந்த உலகம் மட்டுமல்ல; இந்த பிரம்மாண்டம் முழுவதும் அருணாசலத்தின் ஒரு சிறு துளியே!' என்றார் சத்குரு வேங்கடராம சுவாமிகள்.
திருவண்ணாமலை உச்சியில் என்றும், எப்போதும் சூக்குமமான தீபஜோதி உண்டு. இந்த நித்தியப் பரஞ்ஜோதியை குருவருளின்றி தரிசிக்க இயலாது. இதனால்தான் அனைவரும் தீபத்தை தூலக் கண்களால் தரிசித்திடுவதற்காக கார்த்திகை மாதத் தீபத் திருவிழாவில் மானுடப் பிரயத்தனமாய் மலையுச்சியில் தீபமேற்றப்படுகிறது. இது நித்திய ஜோதியுடன் இணைந்து மகாகார்த்திகை தீபமாய்க் காட்சிதரும்.
அமிர்தகல்ப அகல்விளக்கு பசுமையான இஞ்சித் துண்டுகளை ஈரப்பசையின்றி நன்கு துடைத்து, மலைத்தேனுள் இட்டுக் குறைந்தது மூன்று நாட்களுக்கேனும் ஊறவைக்க வேண்டும். இதற்கு "மதுர பிந்துரசம்' என்று பெயர். மலைத்தேன், இஞ்சி சேர்ந்த மதுர பிந்துரசத்தை கண்ணாடிக் குவளை அல்லது ஜாடியில்தான் வைக்கவேண்டும். பாத்திரம், பிளாஸ்டிக் கூடாது.
ஒரு விளக்கில் பசு நெய்யுடன் சிறிது தேனை ஊற்றி, தாமரைத் தண்டு, பஞ்சுத் திரியிட்டு, அமிர்தயோகம் அல்லது சித்தயோக நேரத்தில் தீபமேற்றி, இதன்முன் மதுர பிந்து ரசத்தை வைத்து, பாம்பன் சுவாமிகளின் பஞ்சாமிர்தத் துதிகளையும், அப்பர் சுவாமி களின் "இல்லற விளக்கது இருள் கெடுப்பது' போன்ற இறைத் துதிகளையும் ஓதி, மலர்களிட்டுப் பூஜிக்கவேண்டும். குறைந்தது மூன்று நாட்களுக்கு இந்த மதுர பிந்துரசத்திற்குப் பூஜை நிகழ்த்தல் உத்தமம்.
பிறகு மதுர பிந்து ரசத்துள் புதிய அகல்விளக்குகளை முழுமை யாய் நனையும்படி வைக்கவேண்டும். வேண்டுமானால், இப்போது மதுரபிந்து ரசத்தை ஒரு அகன்ற புது மண் வட்டிலுக்கு (புதுப்பானை மூடி அல்லது மடக்கு) மாற்றிக்கொள்ளலாம்.
மதுரபிந்து ரசத்தில் அகல்விளக்குகளை ஐந்து நாட்களுக் கேனும் ஊறவைத்து, மேற்கண்ட பூஜையை இறைத் துதிகளோடு தொடரவேண்டும். பிறகு அகல்களை வெளியே எடுத்து நல்ல துணியால் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
இவ்வகையில் உற்பவிப்பவையே அமிர்தகல்ப தீபசக்தி அகல் கள். இந்த விசேஷமான அகல்களில் ஏற்றும் தீபஜோதியின் பாங்கு பிறவற்றிலி−ருந்து வித்தியாசமானதாய், திவ்யப் பிரகாசத்துடன் பரிமளிக்கும்.
கோவில் வாசலி−ல் அவ்வப்போது புது அகல்களை வாங்கி ஏற்றுவோர், வீட்டிலி−ருந்தே மதுர பிந்துரசத்தை எடுத்துச்செல்லவும். வாங்கிய புது அகல் விளக்குகளின் உள்ளும் வெளியும் பிந்துரசத்தைப் பூசி, விளக்கேற்றிட வேண்டும்.
இவ்வாறு மதுர பிந்துரச அகல்களை ஆக்கிட வசதியில்லா தோருக்கு, அமிர்த கல்ப சக்தி அகல் தீபங் களை தானமளித்தல் விசேஷமானது. அருணா சல கார்த்திகை தீபத் திருவிழாக் காலத்தில், அமிர்தகல்ப அகல்களில் தீபங்களை ஏற்றியும், தானமாய் அளித்தும் அண்ணாமலையை வலம் வருதல் விசேஷமானது.
இயன்றால் அவரவர் ஊரில் மண்பாண்டம் செய்வோரிடம் கேட்டுக் கொண்டு, சர்க்கரை, வெல்லம், கற்கண்டுடன் மலைத் தேனையும் சேர்த்து மண்ணில் குழைத்து, அதி−ருந்து நேரடியாய் அமிர்த கல்ப அகல்களைச் செய்து கொள்வது பன்மடங் காகப் பலன்தரும். வேண்டு மாயின் இத்தகைய அகல் களை மீண்டும் மதுர பிந்துரசத்தில் வைத்திட லாம்.
அருணாசல கிரிவலமே பூவுலகின் சக்திவாய்ந்த பூஜை!
அருணாசல கிரிவல மென்பது, அப்பர் சுவாமி கள் பாடிப் பரவசித்தது போன்று "கைத்தொண்டு, மனத் தொண்டு, உடல் தொண்டு' ஆகிய மூன்றும் இணைந்ததாய் அமைந் தருளும் உத்தம வழி பாடாகும்.
திருவண்ணா மலை யில் கிரிவலம் வருகையில் வெளியுடலோடு, அவர வர் உள்ளிருக்கும் சூக்குமச் சரீரங்களும் அபூர்வமாய் ஒரே தளத்தில் அமைந்து இயங்கும். ஏனைய வழி பாடுகளில் வெளியுடலும், இதர சூக்கும சரீரங்களும் ஒரே தளநிலையில் அமை வது அபூர்வமே.
தூல உடலும், சூக்கும சரீரங்களும் நாடிநாளப் பூர்வமாய் ஒன்றிணையும் போதுதான் மனிதனுக் குள் அமிர்தசக்திப் பிரவே சம் நன்கு நிகழும். இவ்வரிய ஆன்மநிலை அருணா சலப் புண்ணிய பூமியில் மிக எளிதாய் அனைத்து சரீரங்களுக்கும் கிட்டும். எனவே அருணாசல கிரிவலத்திற்கு ஈடு இணையான பூசனை எதுவும் இல்லைதானே!
புனிதமான கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திர (அருணாசல மகாதீப) நாளின் மாலை 6.00 மணியளவில் உலகத் தின் எந்த மூலையிலும் ஜாதி, மத, இன, பேதமின்றி எவர் விளக் கேற்றினாலும், அதில் அருணாசல ஜோதிப் பரஞ்சுடர் தானே வந்து நிறையும். சர்வ தெய்வ மூர்த்திகளும் திருவண்ணாமலை புண்ணிய பூமியிலி−ட்ட தெய்வ சத்தியவாக்கு இதுவாகும்.
மானசீக அருணாசல கிரிவலம் பொருள் வசதியற்றவர்களுக்கு திருவண்ணாமலை தீபோற்சவத்தின் பதினோரு நாட்களிலோ, தீபத் திருநாளன்றோ, பௌர்ணமி, மாத சிவராத்திரி மற்றும் ஏனைய தினங்களிலோ திருவண்ணாமலையில் தங்கி கிரிவலம் வருவதற்கான பொருட்செலவை ஏற்பதும் சிறப்பான தானமே!
பிணி, தள்ளாமை, முதுமை காரணமாக அருணாசல கிரிவலத்தை திருக்கார்த்திகை தீபோற்சவத்தின் பதினோரு நாட்களில் கடைப்பிடிக்க இயலாதவர்கள், மானசீகமாகவேனும் கிரிவலத்தைக் கடைப்பிடித்திடலாம்.
மனதினுள் அருணாசல மலையை வலம்வருவதை தியானமாகக் கடைப்பிடிப்பது மானசீகமான அருணாசல கிரிவலமாகும். உண்மையிலேயே பாதயாத்திரையாக மலையை வலம்வருவது போன்று, அதே நேர அளவில் ஒவ்வொரு மலைமுகடு தரிசனமாக மனதில் கண்டு ஆனந்தித்து வணங்கிவரும் பாங்கிது!
தியான யோகமாகக் குறைந்தது ஐந்து மணி நேரமேனும் மானசீகமாக அருணாசல கிரிவலத்தை ஆற்றுதல் வேண்டும். அதற்காக, "மானசீக கிரிவலம் செலவில்லாதது ஆயிற்றே- இவ்வாறு மனத் தாலேயே செய்துவிடலாமே!' என்று குறுகிய மனப்பான்மை கொள்ளலாகாது.
உண்மையிலேயே நோய், இயலாமை, உபாதை காரணமாக கிரிவலத்தை நிகழ்த்த இயலாதவர்களுக்கு மட்டுமே இந்த மானசீக கிரிவலம் அளிக்கப்படுகிறது. மற்றபடி உடல் சக்தி உள்ளவர்கள் கார்த்திகை தீபோற்சவத்தில் அருணாசலத்தைப் பாத யாத்திரை யாக வலம்வருவதே முறையானது.
பொதுவாக இறைவனே ஜோதியாய்க் காட்சிதந்து குளிர்ந்த இந்தத் திருவண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமையில் கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும்; திங்கட்கிழமை வலம்வர ஏழு உலகங் களை வலம்வந்த பலனும்; செவ்வாயன்று வலம்வர கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளமும்; புதன்கிழமை வலம்வர சிறந்த கல்வி ஞானமும்; வியாழனன்று வலம்வர தேவர்களுக்கும் ரிஷி களுக்கும் குருவாகும் தகுதியும்; வெள்ளிக்கிழமையில் வலம்வர விஷ்ணுவின் அனுக்கிரகமும்; சனிக்கிழமை வலம் வருபவர்களுக்கு நவகிரகத் தொல்லைகள் நீங்குமென்றும் அண்ணாமலை புராணம் கூறுகிறது.
அரனடி போற்றி மலைவலம் வருவோம்!