அனுமன் ஜெயந்தி- 26-12-2019

வாயுபுத்திரன் என்று போற்றப்படும் அனுமன் அழியா வரங்கள் பெற்றவர். சூரிய பகவானிடம் கல்வி கற்றவர். ஒருசமயம் இவர் பீமனை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது பீமன் ஆஞ்சனேயரிடம், ""அண்ணா, தாங்கள் சீதாதேவியைத் தேடிச்சென்றபோது, கடலைக் கடப்பதற்காக எடுத்த விஸ்வரூபத்தைக் காண விரும்புகிறேன்'' என்று வேண்டினான்.

அதற்கு அனுமன் சொன்னது: ""பீமா, கடலைக் கடக்கும்போது நான் எடுத்த உருவத்தை தற்போது உன்னால் மட்டுமல்ல; வேறு யாராலுமே காணவியலாது. ஏனென்றால் அப்போதைய காலநிலை வேறு.''

""அப்படியென்றால்...'' என்று பீமன் ஆஞ்சனேயரின் திருமுகத்தை ஏக்கத்துடன் பார்த்தான்.

Advertisment

""சொல்கிறேன் கேள். கிருதயுகத்தின் காலநிலை வேறு; துவாபரமான இந்த யுகத்தின் நிலை வேறு. வருங்காலமான கலியுகத்தின் நிலையும் வேறாக இருக்கும்.

pp

கிருதயுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், ராட்ஸசர்கள், நாகர்கள் ஆகியோர் இல்லை. வாங்குவதும் விற்பதும் இல்லை. வேதங்கள் இல்லை. மானிடர்களுக்கு உழைப்பென்பது இல்லை. அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்திலேயே பலன் கிட்டியது. நோய் நொடிகள் இல்லை. பொறாமை, வெறுப்பு, அகங்காரம், சோம்பல், விரோதம் போன்றவை இல்லை. உலகைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பரப்பிரம்மமான பகவான் நாராயணர், அந்தக் காலத்தில் வெண்மை நிறம் கொண்டவராகத் திகழ்ந்தார். மக்கள் அனைவரும் அவரவர் கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொண்டார்கள்.

மக்கள் அனைவரும் ஒரே தெய்வமான பரப்பிரம்மத்திடமே முழுமனதையும் செலுத்தி வணங்கிவந்தார்கள். களியாட்டம், காமம் இல்லாமல் இருந்தார்கள். அந்த உத்தமமான கிருதயுகத் தில் தர்மதேவதை நான்கு கால்களுடன் உறுதியாக இருந்தது.

அடுத்து, திரேதாயுகத்தில் தர்மதேவதையின் கால்களில் ஒன்று குறைந்தது. மூன்று கால்களுடன் சிறிது தடுமாற்றத் துடன் காணப்பட்டது. அந்த நிலையில் மக்கள், "எதைச் செய்தால் என்ன கிடைக்கும்?' என்ற ஆவலில் காணப்பட்டார்கள். கொடை செய்வதன்மூலம் புண்ணியப் பலன்கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்கள். தவம் செய்வதும், தானம் செய்வதும் முக்கியமாக இருந்தது. அவரவர் நீதிதவறாமல் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அந்த யுகத்தில் ஸ்ரீநாராயணரின் வெண்மை நிறமானது. சிறிது பழுப்பு கலந்து காணப்பட்டது.

மூன்று கால்களுடன் காணப்பட்ட தர்மதேவதையின் கால்கள் துவாபர யுகத்தில் இரண்டு கால்களுடன் நடமாடும் தோற்றத்தில் காணப்பட்டது. அந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு பொன்மயமான நிறத்தை அடைந்திருந்தார்.

வேதம் நான்கு பிரிவுகளானது. ஒவ்வொருவரும் வேதம் குறித்து பலவாறாகப் பேசத் தொடங்கினார்கள்.

அவரவர் செயலுக்கேற்ப வேதங்களைப் பலவாறாகப் பிரித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் வேதங்கள் பலவாறாகப் பிரிந்தன. செயல்களும் பலவிதங்களாக மாறின. மக்களுக்கு வஞ்சககுணம் ஏற்பட்டது. புத்திசாலிகள் குறைந்துபோனார்கள். சத்தியத்திலிருந்து விலகியும் போனார்கள். சத்தியத்தில் விலகியதன் காரணமாக யாரும் நிலைபெற்று மகிழ்வுடன் வாழமுடியாதநிலை ஏற்பட்டது. மனம் ஒருநிலைபெறாமல் அலைந்ததால், பலவித நோய்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி அவதிப்பட ஆரம்பித்தார்கள். துயரம் தாங்காத மானிடர்கள், "என்ன செய்தால் சுகமுடனும் வளமுடனும் வாழலாம்' என்று நினைக்க ஆரம்பித்தார்கள். இதனால் யாகங்கள் பல செய்தார்கள். சுயநலத்திற்காக மேற்கொள்ளும் யாகங்களும் தர்மங்களும் நல்ல பலன்களைத் தராமல் நலிவடையச் செய்தன. துவாபரயுகத்திலேயே தர்மம் நிலைகொள்ளாமல் காட்சிதந்தது.

கலியுகத்தில் தர்மதேவதை ஒரே காலில் நிற்கும் நிலையில், ஸ்திரத்தன்மையில்லாமல் தவிக்கும் இந்த காலகட்டத்தில் மகாவிஷ்ணு கருமை நிறத்தில் காட்சிதருவார்.

நீதி, நேர்மை, தர்மங்கள், யாகங்கள், செயல்கள் ஆகியவை எதுவும் சிறந்ததாகத் திகழாது. எல்லாம் சுயநலமாக இருக்கும். மானிடர்களின் பார்வை பலவிதமாக இருக்கும். மனதிற்குள் ஒன்றும், வெளியில் வேறொன்று மாகப் பேசுவார்கள்.

"ஒருவருக்கு உதவினால் நமக்கு என்ன லாபம்?' என்று கணக்குப் போடுவார்கள். எதிலும் நேர்மையைக் காண இயலாது. சுயநலத்திற்காக வாழ்பவர்களாக இருப்பார்கள். இதன்விளைவால் மனோவியாதி, பயம் ஆகியவை அதிகமாக உண்டாகும் நிலையைக் காணலாம்.

நாட்டில் காலாகாலத்தில் மழை பொழியாமல் வறட்சி ஏற்படும். திடீரென்று பெரும் மழை பொழிந்து மக்கள் வாழும் பகுதி பாழ்படும் நிலை ஏற்படும். புதுப்புது வியாதிகள் தோன்றும்.

ஒருவர் துன்பப்படுவதைக் கண்டு, அனுதாபப் படுபவர்கள்போல் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள். ஆனால் அவர்கள் உள்மனதில் "நன்றாகத் துன்பப்படட்டும்; அப்போதுதான் புத்திவரும்' என்று நினைப்பார்கள்.

கலியுகம் முற்றமுற்ற சுயநலம் மிக அதிகமாக இருக்கும். கோவில்களில் இறைவனை மிக பக்தியுடன் வழிபடுவார்கள். வேண்டுதல்களும், பரிகாரங்களும் மானிடர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றா கும். தான தர்மங்கள் செய்வதிலும் சுயநலமும் நிறைந்திருக்கும். ஒவ்வொருவரும் தன்னை மற்றவர்கள் பெரிய அறிவாளி; தர்மவான் என்று நினைக்கவேண்டும் என்று வேஷம் போட்டுத் திரிவார்கள். வேதங்கள் அறிந்தவர்கள்கூட அத்தகைய மானிடர்களுக்கு முதல் மரியாதை செய்வதைக் காணலாம். வருங்கால கலியுகத்தில் இறைவன்மீது பக்தி கொண்டு சுயநலமின்றி தானதர்மங்கள் செய்தால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்'' என்று ஆஞ்சனேயர் பீமனுக்கு அருளியதாகப் புராணம் கூறுகிறது.