Advertisment

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்! -கோவை ஆறுமுகம்

/idhalgal/om/ananda-nilayarulum-avaduthurai-gomuktiswarar-covai-arumugam

"அறத்திற்கே அன்பு சார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.'

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

Advertisment

"திருவிளையாடல்' திரைப்படத்தில் ஒரு காட்சி இப்படியிருக்கும்: ஔவை மூதாட்டியிடம் சிவபெருமான் கேட்பார்-

""அம்மையே, வேண்டும் வரம் கேள்.''

அதற்கு ஔவை, ""ஐயனே! பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால்

உம்மை என்றும்

மறவாமை வேண்டும்'' என்பார்.

சித்தர்கள், சாதுக்கள், முனிவர்கள், யோகிகள் மட்டுமின்றி, மானுடப் பிறப்பெடுத்த சாதாரண மனிதர்கள்கூட வேண்டுவது அந்தப் பிறவாப் பெருநிலையைத்தான்.

அதை எப்படி அடைவதென்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் பிறப்பு; கடைசியில் இறப்பு. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. பிறப்புமுதல் இறப்புவரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாக வும் நவரசங்களையும் கலந்து நம் வாழ்வை எழுதிவைத்திருக்கிறார் இறைவன்.

Advertisment

a

நாளை என்ன நடக்குமென்பதே தெரியாது. நாளை என்ன- அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதுகூட தெரியாத துப்பறியும் கதை போன்றதுதான் வாழ்க்கை.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம். இறப் புக்கு ஒரு காலம். அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம். அன்புக்கு ஒரு காலம். வெறுப்புக்கு ஒரு காலம். போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம். விதைப்பதற்கு ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்- இப்படி காலத்தைப் பற்றி அழகாக நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

நாம் நினைத்த சில விˆயங்கள் நடக்காமல் போகலாம் அல்லது காலம் கடந்துகொண்டு போகலாம். அதனால் எந்தக் கலக்கமும் கொள்ளாமல், மன அமைதியுடன், இறைசிந்தனையோடு எவனொருவன் அன்பு சார்ந்த, அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறானோ, அவனை ஆண்டவன் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற திருத்தலம்தான் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவி: ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை.

ஆகமம்/ பூஜை: காமிகம்.

விநாயகர்: துணை வந்த விநாயகர்.

தீர்

"அறத்திற்கே அன்பு சார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.'

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

Advertisment

"திருவிளையாடல்' திரைப்படத்தில் ஒரு காட்சி இப்படியிருக்கும்: ஔவை மூதாட்டியிடம் சிவபெருமான் கேட்பார்-

""அம்மையே, வேண்டும் வரம் கேள்.''

அதற்கு ஔவை, ""ஐயனே! பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால்

உம்மை என்றும்

மறவாமை வேண்டும்'' என்பார்.

சித்தர்கள், சாதுக்கள், முனிவர்கள், யோகிகள் மட்டுமின்றி, மானுடப் பிறப்பெடுத்த சாதாரண மனிதர்கள்கூட வேண்டுவது அந்தப் பிறவாப் பெருநிலையைத்தான்.

அதை எப்படி அடைவதென்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் பிறப்பு; கடைசியில் இறப்பு. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை. பிறப்புமுதல் இறப்புவரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாக வும் நவரசங்களையும் கலந்து நம் வாழ்வை எழுதிவைத்திருக்கிறார் இறைவன்.

Advertisment

a

நாளை என்ன நடக்குமென்பதே தெரியாது. நாளை என்ன- அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதுகூட தெரியாத துப்பறியும் கதை போன்றதுதான் வாழ்க்கை.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம். இறப் புக்கு ஒரு காலம். அழுகைக்கு ஒரு காலம். சிரிப்புக்கு ஒரு காலம். அன்புக்கு ஒரு காலம். வெறுப்புக்கு ஒரு காலம். போருக்கு ஒரு காலம். அமைதிக்கு ஒரு காலம். விதைப்பதற்கு ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்- இப்படி காலத்தைப் பற்றி அழகாக நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

நாம் நினைத்த சில விˆயங்கள் நடக்காமல் போகலாம் அல்லது காலம் கடந்துகொண்டு போகலாம். அதனால் எந்தக் கலக்கமும் கொள்ளாமல், மன அமைதியுடன், இறைசிந்தனையோடு எவனொருவன் அன்பு சார்ந்த, அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறானோ, அவனை ஆண்டவன் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற திருத்தலம்தான் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்.

இறைவி: ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை.

ஆகமம்/ பூஜை: காமிகம்.

விநாயகர்: துணை வந்த விநாயகர்.

தீர்த்தம்: முக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.

தலவிருட்சம்: படர் அரசு.

ஊர்: திருவாவடுதுறை.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீனத் தின் நிர்வாகத்தில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களுள் 99-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களுள் 36-ஆவது தலமாகவும் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ்சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததொரு திருத்தலம்தான் திருவாவடுதுறை.

"திகழும் மாலவன் ஆயிரம் ஏத்து

வானொரு நீண்மலர் குறையம்

புகழினால் அவன் இடந்தடலும்

புரிந்து சக்கரங் கொடுத்தல் கண்டடியேன்

திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித் திறம்பல பிதற்றி தேவதேவரின்

அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்தடைந்தேன்

ஆவடுதுறை ஆதியெம் பெம்மானை.'

-சுந்தரர்

a

தல வரலாறு

ஒருசமயம் கயிலையில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றிபெற்றதாகத் தன்னை அறிவித்துக்கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளைப் பசுவாகப் பிறக்கும்படி சபித்தார். தேவி தனக்கு சாபவிமோசனம் தருமாறு வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டுவர சாபம் நீங்கும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து சிவனை வேண்டித் தவமிருந்தாள்.

சிவன் அவளுக்குக் காட்சி தந்து தன்னுடன் அணைத்துக் கொண்டு விமோசனம் கொடுத்தார். "கோ'வாகிய பசுவுக்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று இறைவனுக்குப் பெயர் வந்தது.

திருமூலர்

சுந்தரநாதர் என்ற சிவ யோகியார் கயிலாயத்திலிருந்து பூவுலகுக்கு வந்து சிவத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது மூலன் என்ற இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுதுகொண்டி ருப்பதைக் கண்டார். பசுக்களின்மீது பரிவு காட்டிய அவர், தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு, இத்தலத்தில் தவம்செய்யத் தொடங்கினார். மூலன் வீட்டிற்குத் திரும்பாததால் அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாள். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே, மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார்.

இவர் படர் அரசமரத்தடியில் இருந்து மூவாயிரம் பாடல்கள் இயற்றினார். இவையே திருமூலரின் திருமந்திரமாகத் தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் திருமூலருக்கு தனிச்சந்நிதி உள்ளது.

ad

முசுகுந்த சக்கரவர்த்தி

குரங்கொன்று மகாசிவராத்திரியன்று வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட, அவை அங்கிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. இதனால் மகிழ்ந்த இறைவன் அந்த குரங்குக்கு மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியாகப் பிறக்க வரமளித்தார். அவரே முசுகுந்த சக்கரவர்த்தியாவார். அவர் இறைவன் திருவடி பணிந்து, தான் சக்கரவர்த்தியானா லும் குரங்கின் முகத்தோடு, இறைவனைப் பற்றிய சிந்தனை தனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது விருப்பத்தை நிறைவேற்றி ஆசி வழங்கினார்.

வலன் என்ற அசுரன் தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்ததுடன், இந்திரனையும் போரில் வென்றான். இதனால் வானுலகைவிட்டு பூமிக்கு வந்தான் இந்திரன். இதையறிந்த முசுகுந்தன் பெருஞ்சேனையுடன் புறப்பட்டு வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார். தனக்கு உதவிசெய்த முசுகுந் தனைப் பாராட்டிய இந்திரன், ""நீ விரும்பு வதைக் கேள்'' என்றான்.

முசுகுந்தன், ""மயன் உனக்களித்த தியாகேச மூர்த்தியைத் தரவேண்டும்''என்று கேட்டார். அதைக் கேட்டு திடுக்கிட்ட இந்திரன், கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாதென்பதற்காக, உடனே மயனை அழைத்து ஆறு விடங்கேசர் திருவுருவை உருவாக்கினான். அவற்றை முசுகுந்தனிடம் இந்திரன் காண்பிக்க, இறைவன் திருவருளால் உண்மையான விடங்கேசரை அறிந்து, அதைத் தரும்படி கேட்டார் முசுகுந்தன். இதையடுத்து இந்திரன் அந்த ஆறு விடங்கேச மூர்த்திகளுடன், உண்மையான தியாகேசமூர்த்தியையும் கொடுத்தான். சப்தவிடங்கேசரையும் பெற்றுக்கொண்ட முசுகுந்தன், தேர்மேல் வைத்து பூமிக்குக் கொண்டுவந்தார். பின்னர் திருநாகைக்காரேணம், திருக்கோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு, திருக்காரவாசல் ஆகிய ஆறிடங்களில் கோவில் அமைத்து எழுந்தருளச் செய்தார். பின்னர் வீதிவிடங்க தியாகேசரை திருவாரூரில் பொற்கோவில் உருவாக்கி இறைவியோடும் பீடத்தில் எழுந்தருளச் செய்து, ஆகம விதிப்படி ஆறுகால பூஜையையும் விழாக்களையும் நடத்திக்கொண்டு அரசாண்டு வந்தார்.

ad

இப்படி சிறப் பாக ஆட்சிசெய்த முசுகுந்தனுக்கு குழந்தை பாக்கியமில்லை. இத னால் விடங்க தியாகேசர் சந்நிதிக்குச் சென்று தன் மனக்குறையைத் தெரிவித்தார்.

அன்றிரவு முசுகுந்தன் கனவில் தோன்றிய இறைவன்,""திருவாரூரில் உள்ளதைப்போலவே திருவாவடுதுறையிலும் நான் உள்ளேன். அங்கு சென்று பணிசெய்து வா! குறிப்பிட்ட காலத்தில் புத்திரரைப் பெற்று மகிழ்வாய்'' என்றருளினார்.

மறுநாள் முசுகுந்தன் சேனைகளோடு புறப்பட்டு ஆவடுதுறை வந்து முக்தி தீர்த்தத்தில் நீராடி மூலவர் சந்நிதிக்கு வந்தார்.

திருவாரூரில் உள்ளதுபோலவே ஈசன் வன்மீக லிங்கமாக அவருக்குக் காட்சி தந்தார்.

அப்பொழுது அசரீரி வாக்கு,"முசுகுந்தா, உமக்கு புத்திரப் பேற்றையளித்தோம். ஞானத் தைப் பின்னர் தருவோம். அதுவரை இங்கேயே இருந்து எம்மை வழிபடுவாயாக!' என்றது.

ஆனந்தம் கொண்ட முசுகுந்தன்

அத்தலத்திலேயே தங்கியிருந்து, சுற்றியுள்ள கிராம தேவதைகளுக்குப் பத்து நாட்கள் திருவிழா நடத்தி, தேரோட்டம், திருநடனம் போன்ற நிகழ்வுகளுடன் ரதசப்தமி மகோற்சவத்தில் அரசர்கள், வேதவிற்பன்னர் களுக்கு சன்மானம் வழங்கினார்.

இறைவன் திருவருளால் முசுகுந்தனுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சியை அவனிடம் ஒப்படைத்தார். பின்னர் சிவனடி யார் கூட்டத்தில் சேர்ந்து, ஈசன் திருவடியில் கருத்தைச் செலுத்தி அவன் திருவடி சேர்ந்தார்.

ஞானசம்பந்தர் பொற்கிழி பெற்றது

ஒருசமயம் திருஞானசம்பந்தரின் தந்தை சீர்காழியில் வேள்வி ஒன்றை நடத்தினார். அந்த வேள்விக்குத் தங்கம் தேவைப்பட்டது. இதற்காக சம்பந்தர் திருவாவடுதுறை வந்து கோமுக்தீஸ்வரரை வணங்கி இறைவனை நினைத்து மனமுருகிப் பாடல்களைப் பாடினார்.

"இடரினும் தளரினும் எனதுரு நோய்

தொடரினும் உனது கழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை

மிடரினில் அடக்கிய வேதி யனே!'

இந்தப் பாடலைப் பாடியவுடன் சிவபெருமான் பூதகணங்களை அனுப்பி, ஆயிரம் பொற்காசுகள் நிரம்பிய பொற்கிழியை திருஞானசம்பந்தருக்கு வழங்கினார்.

ad

சிறப்பம்சங்கள்

=இத்திருத்தலம் நந்திக்ஷேத்திரம், அரசவ னம், கோகழி, துறைசை, மகா தாண்டவபுரம், கோமுக்தி தலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், சிவபுரம், பிரம்மபுரம், தருமபுரம், கஜாரண்யம் ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தாலும், திருவாவடுதுறை என்றே நடைமுறையில் அழைக்கப்படுகிறது.

=மூலவர் சுயம்புமூர்த்தியாக மாசிலா மணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர் ஆகிய திருநாமங் களுடன் அருள்கிறார். சந்நிதிமேலுள்ள விமானம் துவைதளம் என அழைக்கப் படுகிறது.

=இறைவி ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை, ஒப்பிலா நாயகி ஆகிய திருநாமங்களுடன் அருள்கிறாள்.

=போகரின் சீடரும் சிவபக்தருமான திருமாளிகைத் தேவர்மீது படையெடுத்து வந்தார் நரசிங்க மன்னர். அவரைத் தோல்வி யுறச் செய்வதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில்மீதிருந்த நந்திகளையெல்லாம் ஒரே நந்தியாக்கி அனுப்பினாள். அதனால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில்மீது நந்திகள் கிடையாது. திருமாளிகைத் தேவருக்கு வெற்றி தேடித்தந்து ஒப்பில்லா நாயகியாக அம்பிகை திகழ்கிறாள்.

= இங்கு மூன்று சூரியர்கள் இருப்பது மிகவும் விஷேம். சிவபெருமானே சகல தோஷங்களுக்கும் நிவாரணமாக இருப்பதால் இங்கு நவகிரக சந்நிதி கிடையாது.

=தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்தி இங்குதான் உள்ளது. இங்கு பிரதோஷம் மிக விசேஷம்.

=இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆதீனமாக விளங்குவது திருவாவடுதுறை ஆதீனம் தான்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் காலபூஜைகள் சிறப்பாக நடக்கும் தலம்- நவகோடி சித்தர்களுக்கும் அஷ்டமாசித்தியை ஈசன் வழங்கிய தலம்- முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு தந்து ஆனந்த நிலையுடன் முக்தி நிலையருளிய தலம்- திருமாளிகைத் தேவர், திருமூலருக்கு ஜீவசமாதிகள் அமைந்த தலம்- பிரிந்த தம்பதியை ஒன்றுசேர்க்கும் அணைத்தெழுந்த விநாயகர் வீற்றிருக்கும் தலம்- வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தலமான ஆவடுதுறை அரனிடம் சரணாகதி அடைவோம்; நற்கதி பெறுவோம்.

ஆலயத் தொடர்புக்கு:

சண்முகம் (மேலாளர்),

அ/மி கோமுக்தீஸ்வரர் ஆலயம்,

திருவாவடுதுறை ஆதீனம்,

திருவாவடுதுறை அஞ்சல்,

நாகை மாவட்டம்- 609 803.

அலைபேசி: 94439 00408, 63790 03371.

காலை 6.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாவடுதுறை. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கே ஒரு கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம்.

படங்கள்: போட்டோ கருணா

om011020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe