சுட்ட பழம் சுவைத்த ஔவையார், "தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே' என்பார்.
தியாகய்யாவோ, "எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனம்!- எத்தனையோ மஹான்கள்; யாவருக்கும் வந்தனம்' என்றார்.
கண்ணனோ கீதையில், "ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம் ஸாதூனாம் ஹ்ருதயந்து அஹம்-
ஸாதுக்கள் இதயத்தில் நான், என் இதயத்தில்
ஸாதுக்கள்' என்பார்.
ஒரு ஆழ்வார் பெயரே "தொண்டரடிப் பொடி ஆழ்வார்.' வினோதம்தானே.
ஆக பக்தர்களை நினைத்தாலே, அவர்கள் இதயத்தில் அமர்ந்துள்ள பகவான் மனம் குளிர்கிறார். அதன்மூலம் நம் மனம் சாந்தியடைகிறது. "ஸ்மரணே ஸுகம்' என்று க்ருஷ்ணப்ரேமி அண்ணா பாடுவார்.
சாக்த பக்தர்கள் பிரத்யேகமாக நினைக் கப்படுகிறார்கள். "ஆனந்த மயிமா என்கிற- கிழக்கு வங்காளத்தில் பிறந்து, டேராடூனில் உடலை விட்ட, வினோத அன்னையை தென்னிந்தியர்கள் அறிந்திருப்பது, துர்லபமே!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anandhamai.jpg)
"மா' என்றால் அன்னை. மா மதுரை மீனாட்சியை தரிசித்துள்ளாராம். அச் சமயம் மாவை தரிசித்தவர்கள் மீனாட்சி தேவியையோ, பராசக்தியையோ தரிசிக்கி றோமா என்று ஆச்சரியப்பட்டார்களாம்; மெய்சிலிர்த்தார்களாம்.
மா, ரமண மகரிஷியை தரிசித்திருக்கிறார். ரமணரின் சமாதிக் கோவில் மண்டபத்திற்கு 1952-ல் அடிக்கல் நாட்டினார். ஆக, சில ரமண பக்தர்கள் மாவை தரிசித்திருக்கலாம்.
நான் சென்னை, சைதையில் பிறந்தவன். உத்தியோக விஷயமாக பல இடங்களுக்கு மாற்றமும், பல இடங்களை, பல ஸாதுக்களை தரிசிக்க வாய்ப்பும் ஏற்பட்டதால், எனக்கு வினோதமாக அன்னையின் தரிசனம் கிட்டியது. அதனை முன் பகர்ந்து, அவரது சரிதம் சிந்திப்போம்.
1970-1971-ல் புனேவில் பணிபுரிந்துள்ளேன். கணேஷ் கிண்ட் என்னும் மலையில், சிலருடன் கணபதி தரிசனம் முடித்தபின்பு, வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏனோ, அவ்விடம் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது! சைக்கிளில் திரும்பிவந்து பார்த்தால், ஒரு சாதுக்கள் சங்கம். வயதான ஒரு அம்மா நடுவே உட்கார்ந்திருந்தார். தரிசித்தவுடனேயே மனதில் ஒருவித சாந்தியும் ஆனந்தமும் பெருகியது. அவர் யாரென்று விசாரித்தபோது ஆனந்தமயி மாலி வங்காளி சாது என்றனர். பாய்ஜி என்பவர் எழுதிய அம்மா சரிதம் புத்தகம் பெற்று வாசித்து, மா கூப்பிட்டு தரிசனம் தந்ததில் மனம் நெகிழ்ந்தேன். இரண்டு நாட்கள் தரிசனத்தில் மகிழ்ந்தேன்.
புனேயில், ஹரிக்ருஷ்ண மந்திர் என்னும் இடத்தில், அரவிந்தரின் சிஷ்யர், திலீப்குமார் ராய் என்பவர் வீட்டில் இந்திரா தீதி (மீரா அவதாரம் என்பர்) அவர்கள் சத்சங்கம் ஞாயிறு நடக்கும். அடுத்த ஞாயிறு சென்றபோது அங்கும் ஆனந்த மயிமா வந்துசேர்ந்தார். ஆக மூவர் தரிசனம், பஜன், பிரஸங்கம் மனதை ஆனந்தத்தில் ஆழ்த்தின.
1975, 80-ல் டில்லியில் வசித்தேன். 1976-ல். லக்னோவில் இருக்கும் எனது சகோதரர் வீடு சென்று, பின்பு அயோத்தி சென்று ராமர்கோவிலை தரிசித்தோம். அங்கு சிலர் ஆனந்தமயி மாவைப்பற்றி பேசியதைக் கேட்டேன். பின்பு 1979-ல் தகப்பனாருடன் மதுரா பிருந்தாவனம் சென்றேன். பிருந்தா வனம், ராமகிருஷ்ணா மடம் தரிசித்து வெளிவர, "இங்கும் வரலாமே' என்னும் பெண் குரல் கேட்டது! வியந்து, குரல்வந்த திசை சென்றால், அது ஆனந்தமயி மா ஆசிரமம். மா அச்சமயம் இல்லையென்றாலும், கூப்பிட்டு தரிசனம் செய்துவைத்த கருணையை என்னவென்று சொல்வேன்!
1980-ல் தகப்பனாருடன் குருக்ஷேத்ரம் சென்று சக்கர தீர்த்தத்தில் நீராடி, வியாஸர் கோவில், மற்றும் நரஸிம்மர் மடம், சில கோவில்களை தரிசித்தோம். பஸ் கிளம்ப சிறிது நேரம் இருந்ததால், வேறு ஏதாகிலும் உளதா என ஒரு சிறு சுற்று நடந்தோம். அங்கு ஆனந்தமயி மா ஆசிரமம். மிகுந்த ஜோடனையுடன் இருந்தது. ஆசிரமம் கோவில் திறப்பு விழாவாம். "மா வந்திருக்கிறார்களா' என வினவ, ஒருவர் ஒரு அறையைக் காட்டி, அதனில் ஓய்வெடுக்கிறார் என்றார். நேரமில்லாததால், அறைக் கதவை நமஸ்கரித்த எழ, அம்மா தரிசனம் தந்தார். அதுவே எனது மாவின் கடைசி தரிசனம். மறக்கமுடியுமா? 1967-ல் டேராடூன் போயிருக்கிறேன். அச்சமயம் அம்மாவோ, ஆசிரமம் பற்றியோ தெரியாது.
டில்லியில் ஒரு வங்காளி கடையில் மாவின் படம் பார்த்து, வியந்து பேசியுள்ளேன். ஆசிரமம் போயுள்ளேன்.
1980- 84 கோவா வாசம். 27-8-1982 மாலை அரவிந்தர் சத்சங்கம் நடந்தது. நான் சென்றிருந்தேன். மா மிர்ரா படத்தையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். மனோ நிலை ஒருவிதமாக இருந்தது. புரியவில்லை! அன்றிரவு 9.00 மணி ரேடியோ செய்தியில், "ஆனந்தமயி மா இரவு கிஷன்பூர் ஆசிரமம் டேராடூனில் சமாதி எய்திவிட்டார். அவர் உடல் ஹரித்வார் கங்கால் ஆசிரமத்தில் வைக்கப்படும்' என்று அறிவித்தது. வியந்தேன்! இந்திராகாந்தி, நேரு, அவர் தாய் கமலா நேரு, யாவரும் ஆனந்தமயி மா பிரியர்கள். பிரதமர் இந்திரா காந்தி மௌரீஷி நாட்டில், தன் காரியங்களை விட்டுவிட்டு இந்தியா வந்தார். அவர் முன்னிலையில் சமாதி அடக்கம் செய்யப் பட்டது.
ஹரித்வார் சென்ற மூன்று சமயங்கள்
அன்னை சமாதி தரிசனம் செய்துள்ளேன். அந்த ஆனந்தத்தை, அனுபூதியை விவரிக்கமுடியுமா? அருணகிரியார், "பேசா அனுபூதி' என்பார்.
பணி விஷயமாக மே 2007-ல் ராஞ்சி செல்ல நேர்ந்தது. வினோதமாக அங்கும் ஆசிரம தரிசனம், புத்தகம் கிடைத்தது. அதேபோல் 2009-ல் அஹமதாபாத்துக்கு வேலை விஷயமாக காரில் போய்க்கொண்டிருந்தபோது, ஓரிடத் தில் டிரைவரை வண்டியைத் திருப்பச் சொன்னேன். காரணம் எனக்கோ, டிரை வருக்கோ புரியவில்லை! 100 மீட்டர் வந்தால் அங்கு ஆனந்தமயி மா ஆசிரமம், ஜெயந்தி விழா கொண்டாட்டம்! தரிசனம் செய்து, தமிழில் மாத்ரு தரிசன புத்தகமும் பெற்றேன்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மாவைப்பற்றி ஒன்றும் தெரியாதிருந்தாலும், வினோதமாக அழைத்து தரிசனம் செய்விக்கிறார் எனின், ஆனந்தம், சாந்தம் பொங்க வைக்கிறார் எனின், அம்மா மகிமையை, கருணையை என்னவென்று உரைப்பது. ஸ்மரணே ஸுகம்!
மா சரிதம் சற்று சிந்திப்போம்-
ஸாதுக்கள் சரிதமே வினோதம். வேடன், வால்மீகி ரிஷியாகி ஸ்ரீமத் இராமாயணம் 24,000 சமஸ்கிருத சுலோகங்களில் செய்வேன் என்று எதிர்பார்த்திருப்பானா? ஊமை, மடப்பள்ளியில் பணி செய்பவன் காமாட்சி அருளால் மூக பஞ்ச சதி என்று 508 துதிகள் செய்வேன்; காமகோடி சங்கராசார்யரும் ஆவேன் என்று எதிர்பார்த்திருப்பானா? மடையன், அகிலாண்டேஸ்வரி கிருபையால், காளமேகப் புலவர் ஆவேன் என உணர்ந்தானா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anandhamai1.jpg)
இடையன், காளி அருளால், காளிதாஸனாகி கவி ஆனானே!
புராணம் கூறும்- "ராதை பதம் பணிந்தான் கண்ணன்; வள்ளி பதம் பணிந்தான் கந்தன்' என்று.
கணவன் தன் மனைவியை குருவாக மதித்ததாகப் புராணம் இல்லையே. ஆனந்த மயி மாவின் கணவன், ரமணிமோகன் சக்ரவர்த்தி- போலோநாத் பிதாஜி என்று கூறப்பட்டவர். மாவை குருவாக மதித்தாரே!
வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே கேயோரா எனும் கிராமத்தில், காஸ்யப கோத்ரத்தில் பிராம்மணகுல பிபின் பிஹாரி சாட்டர்ஜிக்கும். மோக்ஷதா சுந்தரிக்கும் 30-4-1896 இரவு 1.12-க்கு பிறந்த பெண் குழந்தையின் பெயர் நிர்மலா சுந்தரி தேவி. பெயருக்கேற்றபடி நிர்மலமான மனது.
அழகான ரூபம். இவர்கள் குடும்பமே புகழ்பெற்ற கல்விமான்களாகவும், ஆழ்ந்த பக்திமான் களாகவும் திகழ்ந்தனர், அன்பு, தயை, கருணை, பாசம், நேசமுடைய குடும்பங்கள். இந்த குணங்கள் நிர்மலா வுக்கு இருந்ததில் ஆச்சர்ய மில்லை. இரண்டாம் வகுப்பே, அந்த காலம் போல் படிப்பு. அப்பா ஆழ்ந்த காளி பக்தர்.
அம்மாவின் 12-ஆவது வயதில், பாரத்வாஜ வம்ச விக்ரம்பூரில் அட்பாரா கிராமத்தில், சமூக சேவைக்கே வாழ்ந்த, ரமணமோகன சக்ரவர்த்தி யுடன் மணம் நடந்தது.
திருமணமானபிறகு, கணவனின் மூத்த சகோதரர் ரேவதி மோஹன்- ப்ரமோதா தேவி இல்லத்தில் நான்கு வருடங்கள் இருந்தார். வீட்டு வேலைகள் செவ்வனே செய்தார். அக்கம் பக்கத்தவரிடமும், உறவினர் களிடமும் சுமுகமாகப் பழகினார். நேரம் கிடைத்தபோதெல்லாம் தெய்வீக ஈடுபாட்டில், சாதனையில் கழித்தார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. மௌன வழிபாடுதான்.
தனது 18-ஆவது வயதில் தன் கணவனுடன் அஷ்டக்ராம் எனும் தலத்தில் வாழ்ந்தார். மந்திரபாவ நிலை, யோகாப்யாஸம், மாந்த்ரீக- தாந்த்ரீக சைகைகள் என மனம் ஈடுபட்டது. இதில் "விட்ட குறை தொட்ட குறை' என்பர். முன் ஜென்ம வாஸனை நீடித்தது என்றுதான் கொள்ளவேண்டும். டாக்காவிலுள்ள சித்தேஸ்வரி காளியம்மன் கோவிலின் தலவரலாறு அம்மாவுக்கு உதித்ததாம். கணவன் காளி பக்தர். ஆழ்ந்த ஆன்மிகர். ஆக அம்மாவின் பக்தியோக சாதனைகளில் தடை ஏதும் செய்யவில்லை. எவ்வாறு இராமகிருஷ்ண பரமஹம்ஸரும் சாரதா மாவும் ஆழ்ந்த, ஆன்மிக சாதனைகள் செய்யும் தம்பதிகளாக வாழ்ந்தார்களோ, அவ்வாறே இந்த தம்பதிகளும்! தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. சந்ததிகள் கிடையாது. பக்தர்களே சந்ததிகள்.
பரமஹம்ஸர்போல், நாம சங்கீர்த்தனம் நடந்தால் அம்மா பாவ சமாதி எய்திவிடுவார். சமநிலை வர தாமதமாகும், ஸ்ரீ ஜோதிஷ் சந்த்ரராய் என்பவர், பாயிஜி (அண்ணா) என்று அழைக்கப்பட்டவர். "மாத்ரு தரிசனம்' என்று முதலில் அம்மாவைப்பற்றி, அவர், பிறர் அனுபவங்களை 1937-ல் எழுதினார்.
அம்மாவின் சூட்சும தரிசனங்கள் பல பெற்றார்.
மஹாத்மா காந்தி, அம்மாவின் மகிமை, தவநிலை உணர்ந்து, அம்மா பாதத் தூளி தன் ஆசிரமத்தில் படவேண்டும் என விரும்ப, ஜமன்லால் பஜாஜ் முயற்சியால், வேண்டுதலால் அது 1942-ல் நிறைவேறியது.
திருவனந்தபுரம், மைசூர், சோலன், மண்டி, பவநகர், டேஹ்ரி, காசி, குவாலியர், சம்ஸ்தான அரசர்கள், அரசியர்கள், மாநில ஆளுனர்கள், பிர்லா, ஸிங்கானியா போன்ற தொழிலதிபர்கள் அம்மாவை நாடி அருள் பெற்று செழித்தனர்.
அரவிந்தர், அவர் படத்தைப் பார்த்து, "இது சச்சிதானந்த ஸ்வரூபம்' என்றாராம்.
1929-ல்தான், டாக்காவில் முதன்முதலாக ஆசிரமம் ஏற்பட்டது. 1938-ல் டேராடூனில் ஆசிரமம் ஏற்பட்டபிறகே இந்தியாவின் பல இடங்களிலிருந்து பக்தர்கள் வர, அம்மா மகிமை, எளிமை, அத்வைத தன்மை, உணர பல இடங்களிலும் ஆசிரமம் உருவானது.
காஞ்சி மஹா பெரியவரை நாம் நடமாடும் தெய்வம் என்று கூறுவதுபோல் அம்மாவையும் தெய்வ ஸ்வரூபமாகவே கண்டுள்ளார்கள். துர்க்கையாக, லட்சுமியாக, ராதாவாக, கிருஷ்ணராக, சைதன்யராக, அவரவர் இஷ்ட தெய்வமாக, அம்மாவை தரிசித்து, பலர் ஆழ்ந்து வணங்க ஆரம்பித்தனர்.
அம்மா எங்கு தங்கினாலும், நாள் முழுக்க தியானம், பூஜைகள், பஜனை, ஆன்மிக சொற்பொழிவுகள். ஹோமங்கள், அம்மாவின் பொன்மொழிகள், வந்தவர்களின் சந்தேகம், பிரச்சினைகளுக்கு சமாதானம், அன்னதானம் என நடந்தன. சண்டியாகம், ருத்ரயாகம் எனவும் நடக்கும்.
இங்கிலாந்திலிருந்து கைரேகை பார்ப்பவர் வந்து, "அம்மாவின் கைரேகை பார்க்கலாமா' என்று கேட்டார். அம்மா ஒப்புதலில் பார்த்த அவர். "நான் பல்லாயிரக் கணக்கில் கைரேகை பார்த்துள்ளேன். எல்லாவகை மனிதர்களும் அடக்கம். இதனைப்போன்று பார்த்ததே இல்லை. படித்ததுதான் உண்டு. இது தெய்வீக கை என்பதில் துளி சந்தேகமும் இல்லை' என கண்களில் ஒற்றிக்கொண்டு தன் தலையில் ஆசீர்வதிக்க வேண்டினார்.
சாதகர்கள், தன் சாதனையில் முன்னேற வழிகள் கூறுபவர் அம்மா. சாதகர் திரும்பி வந்தால், சாதனையின் முன்னேற்றம், தடைகளை விசாரித்து, மேலும் முன்னேற வழிகள், ஆசிகள் கூறுவார் அம்மா.
டேராடூனில், ஸர்வே ஆப் இந்தியாவில், உன்னத பதவியிலிருந்த முகம்மதியர் தலாத்து ஹுஸேன் என்பவர். மெக்கா சென்றார். இஸ்லாமிய வழியில் ஆழ்ந்து முன்னேற விரும்பியவருக்கு ஒரு ஸுபி முனிவர் தோன்றி, "நீ இந்தியா சென்றதும், ஒரு இந்து அம்மையாரைக் காண்பாய். அவரே உனக்கு ஆன்மிக குருவாவார். அதன்மூலம் உன் ஆன்மிக லட்சியத்தை அடைவாய்'' என்றார். அவருக்கு டேராடூன் அம்மையாரைப்பற்றி தெரியாது. ஒரு இந்து நண்பருடன், சென்று அம்மாவைக் காண, "நீ என்னிடம் வருவாய் என்று தெரியுமே'' என்று கூறி ஆசீர்வதிக்க, அவரின் ஆன்மிக முன்னேற்றத்தில் மனம் நெகிழ்ந்தாராம். இதுபோன்ற சம்பவங்கள் அனேகம்.
மா பாதம் பணிவோம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/anandhamai-t.jpg)