மனம் என்பது எத்தகைய உயர்ந்த விஷயம்!
ஆனால் அது மாயையில் சிக்கி மாய்ந்து கொண்டிருக்கிறது. மனமானது மணமும் ஒளியும் வீசக்கூடிய ஒன்றாகும். அப்படித்தான் ஈஸ்வரன் அதைப் படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அதனுள்ளே அமர்ந்து கொள்ளவும் செய்கிறார். சிவபெருமான் பரம்பொருளாக அமர்ந்துள்ள இவ்வுடலெனும் கூட்டை நாம் எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது மிகவும் முக்கியமானது.
வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர்-
"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்'
என்கிறார். அதாவது ஒருவன், சகமனிதன் அழகான உடையுடுத்துவதையும், தரமான உணவுண்பதையும் பொறுத்துக்கொள்ளாமல், அவரிடம் ஒரு குற்றமும் இல்லாமல் இருந்தா லும் வேண்டுமென்றே அவர்மீது ஒரு கொடூரக் குற்றத்தைத் திரித்துக் கூறுவதில் வல்லவனாக இருப்பான்; அவன் கீழ்மகன்.
எனவே, ஒருவனுக்கு உணவு கிடைப்பதும், உடை கிடைப்பதும் ஈஸ்வரனின் கருணை யாலேயே கிடைக்கும். அப்படியிருக்க நாம் ஒருவருக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்கவோ, கெடுக்கவோ நினைத்தால் அதை விட மிகக் கொடுமையான குற்றம் வேறில்லை. அத்தகைய செயல் மிகவும் பாவகரமானதாகும்.
நமது சிந்தனையும், செயலும் எப்படி இருக்க வேண்டுமென்று கண்டோம். அடுத்து பாவங் களையும் ரோகங்களையும் நிவர்த்திசெய்யும் அம்பாபுரீஸ்வரரை தரிசிக்க, அம்பத்தூரில் அமைந்திருக்கும் சிவகாமி அம்மை உடனுறை அம்பலவாணேஸ்வரரின் ஆலயத்திற்குச் செல்வோம்.
சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது. பல்லவர்களின் ஆளுகைக்குப்பிறகு- பிற்காலச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியபிறகு அது ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்ற பெயரில் அழைக்கப் பட்டது. பண்டைய அரசர்கள் வாயிலாகக் கண்டறியப்பட்டு, அவர்களால் நிர்மாணிக் கப்பட்ட 108 சிவத்தலங்களில் 51-ஆவது தலம் அம்பாபுரியாகும். அம்பலப்புத்தூர் என்று வழக்கில் இருந்தது. தற்போது பெயர் மருவி அம்பத்தூர் என்று வழக்கத்தில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உழவாரப் பணிக்குப்பிறகு சிவனடியார்கள், சிவபக்தர்களின் தீவிர முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சூரியனும் சந்திரனும் பிரபஞ்சத்தில் உள்ளவரைக்கும், இந்த ஆலயத்தின் வழிபாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமென்பது பிரம்ம லிபியாகும். அத்த கைய இவ்வழிபாட்டிற்கு எவராலும் தடைகள் ஏற்படுமாயின், அதற்குக் காரணமானவர் பெரும் பாவங்களுக்கு ஆளாவார். கங்கைக் கரையில் பசுதானம் செய்தாலும் அந்தப் பாவம் தீராதாம். இத்தகவலானது இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின்மூலம் அறியமுடிகிறது. மேலும், சோழர்களின் ஆட்சிக்குப்பிறகு கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றே இந்த அம்பலப்புத்தூர் எனும் அம்பத்தூர் ஆகும்.
கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்களான காளத்தி ராஜா, பெத்த ராஜா ஆகியோர்களைக் குறித்தும், அவர்களின் காலத்தில் சந்தையில் வரும் வருமானத்தில் ஐம்பது சதவிகிதத்தை அம்பாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கச் சொல்லும் அரசாணை குறித்த தகவல்களும் இங்குள்ள கல்வெட்டுகள்மூலம் அறிய முடிகிறது. 2006-ஆம் வருடத்திற்குப்பிறகு 4-7-2018-ஆம் ஆண்டும் மீண்டும் புனரமைக்கப் பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கியும், கோவில் கிழக்குப் பார்த்தும் அமைந்துள்ளது. சுற்றுப் பிராகாரத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தி, விநாயகர் மூர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளன. நுழைவு வாயிலின் இடப்புறம் மேற்கு திசையில் யோகவாஸ்து பிரம்மா கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். வாஸ்துக்கு அதிபதியே இந்த யோகவாஸ்து பிரம்மா ஆவார். சொந்த வீடு அமையவும், கட்டுமானப்பணி செய்யவும் இவரின் ஆசிர்வாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுப்பிராகாரத்தின் பின்புறம் ஐயப்பன் சந்நிதி உள்ளது. கோவிலின் கோஷ்டத்தில் (பின்பகுதியில்) மகாவிஷ்ணு அமைந்துள்ளார். வடபகுதியில் தெற்கு நோக்கி சண்டிகேசுவரர் உள்ளார்.
வடக்குப் பார்த்த நிலையில் விஷ்ணு துர்க்கை காட்சி தருகிறாள். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எலுமிச்சை விளக்கேற்ற, திருமண தோஷம் நீங்கும். இவர்களின் நடுநாயகமாக தலவிருட்சமான வில்வமரத்தின்கீழ் அய்யன் அம்பலவாணேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
மூலஸ்தான சந்நிதியின்முன் இடப்புறம் விநாயகரும், வலப்புறம் பாலமுருகனும் காட்சிதருகின்றனர்.
மூலவர் சந்நிதியின் எதிரில் பிரதோஷகால நந்தி வீற்றிருக்கிறார். தென்திசை நோக்கி காலபைரவர் சந்நிதி உள்ளது. பிதுர்தோஷங்கள் நீங்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
தென்திசை நோக்கி சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் உற்சவமூர்த்தியாய் அழகு மிளிரக் காட்சிதருகிறார். சதாசிவனை, அவரையே நினைத்து உருகிப் புலம்பும் மாணிக்க வாசகர், அவர்களின் அருகிலேயே இருக்கிறார்.
அதற்கு சற்று அருகில் வேம்பும், அரசும் இணைந்து குடை பிடிக்க, ஆனந்த ஜோதி யாக தனிசந்நிதியில் காட்சி தருகிறாள் அம்பாள் ஸ்ரீசிவகாமி. அம்பாளுக்குமுன் பலி பீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அரசு, வேம்பின் அடிப்பகுதியில் சர்ப்பவிக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஈசான பாகத்தில் நவகிரகங்களும், அக்னிமூலையில் மடப்பள்ளியும் அமைந்துள்ளன. அம்பல வாணேஸ்வரர் சந்நிதியின் எதிர்ப்புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. சுவாமிக்கு வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ வழிபாடும், அன்னதானமும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. சிவகாமி அம்மைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
சர்ப்பதோஷம், பிள்ளைப்பேறின்மை நிவர்த்திக்கான பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன. சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறு கின்றன.
சிவகாமி, நடராஜர் ஆனித்திருமஞ்சன திருக் கல்யாண வைபவம் ஆண்டுக் கொருமுறை அழகுற நடத்தப்படுகிறது. மார்கழி மாதத்தில் ஆருத்ரா அபிஷேகம் உட்பட இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடராஜருக்கான பூஜைகள் சிதம்பரத்தைப்போலவே இங்கும் வெகுசிறப்பாக அறங்காவலர் குழுவினரும் சிவாச்சாரியார்களும் இணைந்து நடத்துகின்றனர்.
மாண்ககவாசகர்-
"வினை என்போல் உடையார் பிறர்ஆர்
உடையான் அடிநாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு
அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நல்மலர் பிரிந்திருந்தும் நான்
முட்டிலேன் தலைகீறேன்
இளையள் பாவனை இரும்பு கல்மனம் செவி
இன்னது என்று அறிகிலேன்'
என்று பாடுகிறார்.
எம்பெருமானே! என்னைப்போல் பாவம் செய்தவர்கள் யார்? நாயைவிட கீழான என்னைத் தினையளவு பொழுதுகூட பிரிந்திருப்பது இறைவனின் திருவுளச் சம்மதமல்ல. அதாவது நான் ஈசனை பிரிந்திருப்பதென்பது எம்பெருமானின் விருப்பமல்ல. அது என்னுடைய வினைப்பயனேயாகும். இப்படி ஈசனை நான் பிரிந்திருக்க நேர்ந்து, அதற்காக மனம் வருந்தி, நான் தலையைக் கல்லில் முட்டிக்கொள்ளவில்லை. மோதிக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நான் உணர் வற்ற இரும்பா? என் மனம் என்ன கல்லா? எனது மனமும் உடலும் மரத்துப்போனாலும் என் காதுக்கு என்ன என்ன கேடு வந்தது? ஈசனின் புகழையாவது கேட்டிருக்கலாமே? எனது காதுகளும் செயல்படவில்லையே.
இப்படி பலவாறாக மாணிக்கவாசகர் புலம்புகிறார். இறைவனைப் பிரிந்திருக்க நேர்ந்த நிகழ்வையே தனது பாவம் என கருதுகிறார் மாணிக்கவாசகர்.
இந்த இடத்தில் நாம் நம்மைப் பற்றியும், நம் மனதின் செயலைப்பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வுடலெனும் கூட்டிற்குள் இறைவன் குடிகொண்டிருப்பதை பாக்கியமாகக் கருதும் மாணிக்கவாசகர் எங்கே? நாம் எங்கே? இறைவன் அமர்ந்திருக்கும் இந்த வீட்டை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதளவிலும்கூட பாவம் செய்யக்கூடாது. வினைப்பயனால் தவறி பாவம் செய்திருந்தாலும்- அந்தப் பாவங்களைப் போக்கும் சர்வரோக தோஷப் பரிகாரத் தலத்தில் வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் உடனுறை அய்யன் அம்பா புரீஸ்வரர் தலத்திற்குச் செல்வோம். நமது பாவங்களுக்குப் பரிகார தோஷ நிவர்த்தி பெறுவோம்.
சென்னை- அம்பத்தூர் பேருந்து சாலையில், டன்லப் பஸ் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது காமராஜபுரம். அங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ஆலயத்தை அடையலாம். அம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர்.