சைவ சமயத்தையும், தெய்வீகத் தமிழை யும் என்றென்றும் பேணிக் காத்திட வேண்டும் என்னும் தொலைநோக்கு சிந்தனையுடன், சிவபெருமானின் அருளாசியோடு, ஏறத்தாழ 480 ஆண்டுகளுக்குமுன்பு தருமபுரத்தில் (மயிலாடு துறை) குருஞான சம்பந்த சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டதுதான் தருமை ஆதீனம்.

அன்றிலிருந்து இன்றுவரை வாழையடி வாழையாக குருமாமணிகள் அருளாட்சி புரிந்து, ஆதீனத் திருப்பணிகளைச் செவ்வனே செய்துவருகின்றனர்.

திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத் தின் 26-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் (1926- 2019) 4-12-2019 அன்று பரிபூரணம் எய்திய பின்னர், சின்ன பண்டார சந்நிதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் 27-ஆவது குருமகா சந்நிதானமாக நியமிக்கப்பட்டார். 13-12-2019 அன்று முறைப்படி அவருக்கு ஞானாச்சாரிய அபிஷேகம் சிறப் பாக நடைபெற்றது. இவர் சைவ சித்தாந்தம் மற்றும் தமிழில் மிகுந்த புலமை பெற்றவர்.

குமரகுருபரர் பற்றி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். துறவு நெறியை வழுவாது ஆதீன மரபு களைக் கடைப்பிடித்துவரும் இளம் துறவி யாவார்.

Advertisment

ஆதீனத்தின் புதிய குருமகா சந்நிதானம் என்னும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றபின்னர் ஆதீன நித்தியப்பணிகள், தனுர் மாத சிறப்புப் பூஜை, ஆலய வழிபாடு என பல திருப்பணிகள் இருந்தபோதிலும், "ஓம் சரவணபவ' இதழுக்கு ஸ்ரீ சொக்கநாதர் பூஜைக்குப்பின்பு மட வளாகத் தில் சிறப்புப் பேட்டியளித்தார். குருமகா சந்நிதானமானபின் தனிப்பட்ட பேட்டியை முதன்முதலாக "ஓம்' இதழுக்குதான் தந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கேள்வி: ஆசை, கோபம், பேராசை இவை மூன்றும் மனிதனுக்கு எதிரி என சொல்கிறோம். இதிலிருந்து மனிதன் மீள வழியுண்டா?

குருமகா சந்நிதானம்: ஆதீன முதற் குரவரான ஸ்ரீ குருஞான சம்பந்தர், இந்த மூன்றி லிருந்து மீள்வது பற்றி சொல்லியிருக்கிறார்.

Advertisment

"ஆசையறாய் பாசம் விடாய் ஆனசிவ பூசை பண்ணாய்

நேசமுடன் ஐந்தெ ழுத்தை நீ நினையாய்- சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்.'

(சிவபோக சாரம்-138)

ஆசையென்பது நோய் போன்றது. அதனால் தீமைதான் உண்டாகும். ஆசையை அறவே விடவேண்டு மென்று சொன்ன குருஞான சம்பந்தர், அதற்குக் காரணமான பாசத்தை விடவேண்டுமென்கிறார்.

பாசத்தை விடுவதற்கு வழி சிவபூஜைதான். இதைத்தான் "பற்றுக பற்றற்றான்...' என திருவள்ளு வரும் கூறியுள்ளார். சிவபூஜைக்கு முதற்படியாக தகுந்த குருமூலம் உபதேசம் (தீட்சை) பெற்று "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது (ஜபம்) நன்மை பயக்கும். சினம் தோன்றாதிருப்பதற்கு திருமுறைகளை தினமும் படிக்கவேண்டும். சினமென்னும் சிறுகுற்றம் இருக்குமானால் அது அவரையும், அவரைச் சார்ந்தாரையும் அழித்துவிடும்.

கேள்வி: கர்மாவின் பலனே விதியா? அதை மதியால் எப்படி வெல்ல முடியும்?

குருமகா சந்நிதானம்: விதியை மதியால் வெல்ல முடியுமென்று பேச்சுவழக்கில் சொல்கி றோம். உண்மையில்- நடைமுறையில் வெல்ல முடியாது. இறைவழிபாட்டால் விதியின் தன்மையை வேண்டுமானால் குறைக்க முடியுமே தவிர, முழுமையாக வெல்லமுடியாது.

"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்

அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்

எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்

தவரவர் நினைவது தமையுணர் வதுவே'

(சிவபோக சாரம்- 4)

என்னும் ஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பாடலே இதற்கு எடுத்துக்காட்டு. இவ்வுலக வாழ்க்கையில் மக்கள் அடையும் இன்ப- துன்பங்களும், பிற ஏற்றத் தாழ்வுகளும் அவரவர் செய்த வினைப்பயனே என சொல்கிறார். நமக்கு வரும் நன்மை- தீமைகள் அனைத்தும் நாம் முற்பிறவிகளில் செய்த பழைய வினைகளாலேயே அமைகின்றன. உப்புத்தின்றவன் தண்ணீரைக் குடித்தேயாக வேண்டும். முன்செய்த தீவினையைப்பற்றி சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை யுருத்துவந் தூட்டும்' என கூறப்பட்டுள்ளது. கம்பு விதைத் தால் கம்புதான் அறுக்க முடியுமேதவிர, நெல்லை அறுக்கமுடியாது. நம்முடைய கர்மாவின் பலனை நாம் அனுபவிக்க வேண்டியதுதான். இதற்குத் திருமுறைப் பாராயணமும், திருக்கோவில் வழிபாடும் சிறந்த வழியாகும்.

கேள்வி: இன்றைய காலகட்டத்தில் சம்சார பந்தத்திலிலிருந்து (உலகப் பற்று) முழுமையாக விடுதலைபெற முடியுமா?

குருமகா சந்நிதானம்: முழுமையாக விடுதலை பெறமுடியுமா என்றால், நடை முறையில் சற்று கடினம்தான். குருவின் உபதேசம் மற்றும் தகுந்த பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். இறைவழிபாடு, குரு உபதேசம், அடியார்களின் சந்திப்பு, சத்சங்கத்தில் இறைவழிபாடு போன்றவை மூலம் பந்தத்தை சற்று மறக்கலாம். பந்தத் திலிலிருந்து நீங்கி முக்தியடைய, "தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவ போகம்' என பத்துப்படிகளை சாத்திரங்கள் வகுத்துள்ளன. பிறவியைப் பெருங்கடலாக திருவள்ளுவர் சொல்கிறார். பிறவியைப் "பொல்லாத பெருங்கடல்' என நம்பியாண்டார் நம்பி சொல்கிறார். திருநாவுக்கரசர் பிறவி நோயை "தீரா நோய்' என சொல்கிறார்.

"இறவா இறைவன் இணையடி பற்றிப்

பிறவாப் பெரும்பதம் பெறுவோம் நாமே.'

aa

கேள்வி: மனித வாழ்க்கையை எப்படிக் கழிக்கவேண்டும்?

குருமகா சந்நிதானம்: உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கே உயர்ந்த பிறப்பு (மனிதப் பிறப்பு) நமக்கு இறைவனால் தரப் பட்டுள்ளது. இந்த உணர்வோடு வாழ்பவரே நல்ல மனிதராவார். இறைவழிபாட்டால் தீர்க்க முடியாதது ஒன்றுமில்லை. சிவபெருமானை நாள்தோறும் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலையும். இதனால் இன்பம் கிட்டுமென்பதை-

"நன்று நாள்தொறும் நம்வினை போய் அறும்

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

சென்றுநீர் திருவேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடையானைத் தொழுமினே'

என ஐந்தாம் திருமுறையில் திருநாவுக்கரசர் பாடியுள்ளார். அதேபோன்று திருமுறைகளைத் தொடர்ந்து பக்தியோடு ஓதினால் (படித்தால்) நல்ல பலன் கிட்டும். ஸ்ரீ குருஞான சம்பந்தர், "திருமுறைகளே நமக்கெல்லாம் தாயாயிருந்து அருள்புரிந்து வீடுபேறு நல்கும்' என கூறியுள்ளார்.

கேள்வி: இன்றைய இளைஞர்களுக்குத் தங்களின் அறிவுரை?

குருமகா சந்நிதானம்: முதலிலில் மனமொன்றி எந்த வேலையையும் செய்யவேண்டும். ஒரு மாணவனுக்கு படிப்பில் கவனம் இருந்தால்தான் நன்றாகப் படித்து முன்னேறமுடியும். ஒரு அதிகாரி தனது பணியில் சிந்தனை செலுத்தினால்தான் நிர்வாகம் நன்றாக அமையும். அடுத்து, எந்த நிலையிலும், எதற்கும் மனம்தளரக் கூடாது. எக்காலத்திலும் மனம்தளராத தன்மையராய்த் தன்னைச் சரணடைந்தவர்களை சிவபெருமான் காப்பான் என்பதை-

"தாம் என்றும் மனம் தளராத்

தகுதியராய் உலகத்துக்கு

ஆம் என்று சரண் புகுந்தார்

தமைக் காக்குங் கருணையினான்

ஓம் என்று மறை பயில்வார்

பிரமபுரத்து உறைகின்ற

காமன்தன் உடல் எரியக்

கனல் சேர்ந்த கண்ணானே'

என இரண்டாம் திருமுறையில் திருஞான சம்பந்தர் அருளியுள்ளார். மனச் சோர்வு ஏற்படும் வேளையில், "எல்லாம் இழந்தாலும் நீ இழக்கா தது ஒன்றுண்டு. அது உன் எதிர்காலம். அதில் எந்த அற்புதங்களும் நிகழலாம்' என்னும் வாசகத்தை இளைஞர்கள் மனதில் பதித்துக்கொண்டால் தன்னம்பிக்கை தானே வளரும். மனச்சோர்வு ஏற்பட்டவர்கள், தன்னம்பிக்கை இழந்தவர்கள் அதற்குத் தீர்வு கேட்டும், ஆறுதல் கேட்டும் ஆதீனத்திற்கு வரும்போது இந்த வாசகத்தைச் சொல்லிலி, அவர்களை மனத்தளர்விலிருந்து விடுபடச் செய்து மன உற்சாகப்படுத்துவது வழக்கம். கடைசியாக, இன்றைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். இது தவறான பாதை என்பதை உணரவேண்டும். இதற்காகவே 11-ஆம் திருமுறையில் "திரு ஈங்கோய்மலை எழுபது' எனும் தலைப்பில்-

"வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ

முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி

எழுந்தெழுத்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்

கொழுந்தெழுத்த செஞ்சடையான் குன்று'

என நக்கீரதேவ நாயனார் பாடியுள்ளார். இப்பாடலைப் படித்தால் நிச்சயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதிலிருந்து விடுதலை பெறலாம். போதைப் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

கேள்வி: தருமை ஆதீனத்தின் எதிர்காலத் திட்டங்கள்?

குருமகா சந்நிதானம்: சைவமும் தமிழும் தழைத்தோங்கவும், மக்களுக்கு நலில்வழி காட்டவும் தருமையாதீனம் ஸ்ரீகுருஞான சம்பந்தரால் நிறுவப்பட்டது. 24-ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் தொடங்கிய வேதாகம பாடசாலையை மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவ சிந்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்புகள் பரவலாகக் கொண்டுவரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலிலி போன்ற இடங் களில் தொடங்கப்படும். மரம் வளர்த்தலிலின் தேவையை வலியுறுத்தி, மரங்களை ஆதீனம் சார்பில் வளர்த்து, மண் வளத்தைக் காத்து, சுற்றுப்புறச் சூழலை இயற்கையாக வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திருக்கோவில் களைப் புதுப்பித்து குடமுழுக்கு விழா (கும்பா பிஷேகம்) நடத்தப்படும். இந்து மதத்தின் ஆணி வேரான வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், திருமுறை, சைவ சித்தாந்தம் போன்றவற்றைப் பற்றி மக்களிடம் தர்மப்பிரசாரம் செய்யப்படும்.

இவ்வாறு குருமகா சந்நிதானம் நமக்கு பேட்டியளித்தார்.

"ஓம்' வாசகர்கள் அனைவருக்கும் 2020-ஆம் ஆண்டு சிறப்பாக அமைய குருமகா சந்நிதானம் அருளாசி வழங்கி, வாழ்த்தினார்.