"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு', "ஆசாபாசம் அந்தம்வரை விடாது' போன்றவை பழமொழிகள்.
"அகத்தில் போட்டாலும் அளந்து போடு' என்றிருந் திருக்க வேண்டும். அகம் என்றால் மனம் என்று பொருள். மனதிற்குள் நல்ல கருத்துகளை அளவோடு பதித்துக்கொள்ள வேண்டும்.
கெட்டவற்றைக் கேட்ட மாத்திரத்திலேயே விட்டு விடவேண்டும். அப்படி யிருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
இங்ஙனம் வாழ்க்கையை வளப்படுத்தவும், வசப்படுத் தவும் நமக்கு முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான பழமொழிகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஈரடியில் வள்ளுவன் இனிய கருத்துகளைப் பதித்து வைத்ததுபோல, ஒரு வரிக்குள் உலக மக்களுக்குத் தேவை யான ஒப்பற்ற கருத்துகளை முன்னோர்கள் பதித்து வைத்தார்கள். ஒரு மொழிக்கு அணிகலனாகத் திகழ்பவை பழமொழிகள். உலக மக்கள் அனைவரும் தத்தம் உரை யாடல்களில் கருத்தைக் கவர பழமொழியைப் பயன் படுத்தி மகிழ்வார்கள். உணவை ருசிக்கவைக்கும் உப்புபோல பேச்சை ரசிக்க வைப்பவை பழமொழிகள்.
இப்பழமொழிகளைக் கேட்டு அதன்வழியே நடந்த வர்களுக்காகவும் ஒரு பழமொழியைச் சொல்லிவைத்திருக்கி றார்கள். அது, "மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும்' என்பதாகும். முதுநெல்லிக்கனி சாப்பிடும்போது கசப்பாக இருக்கும். பின்னர் தண்ணீர் அருந்தும்போதெல்லாம் இனிக்கும்.
ஆசைப்படாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். ஆசை என்னும் இரண்டெழுத்து ஒவ்வொரு மனிதரையும் ஆட்டுவிக்கி றது. அந்த ஆசை பெரிதாகிக் கொண்டே போனால் பேராசை யாகிவிடுகிறது. பேராசைப் பட்டால் வாழ்க்கையில் பிரச்சினைகள் பலவற்றையும் சந்திக்கநேரிடும். பொதுவாக, உலகில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்று ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப்படைக் கின்றன.
என்னதான் பற்றுபாசங் களைத் துறக்கவேண்டுமென்று ஞானிகள் போதித்தாலும், உலகியலில் உள்ளவர் களுக்கு அந்திமக் காலம்வரை ஆசை வளர்ந்து கொண்டேதான் போகிறது. அதனால்தான் "ஆசாபாசம் அந்தம்வரை விடாது' என்ற பழமொழி யைச் சொல்லிவைத்தார்கள்.
மகாபாரதத்தைப் படித்தால் மண்ணாசை கொள்ளக்கூடாது என்ற எண்ணம் நமக்கு வரும். சிலப்பதிகாரத்தைப் படித்தால் பொன்னாசை கொள்ளக்கூடாது என்றும், ராமாயணத்தைப் படித்தால் பெண்ணாசை கொள்ளக்கூடாது என்ற எண்ணமும் நமக்கு வரும். அதனால் தான் ஆசையை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. அதேசமயம் நியாய மான ஆசைகளை வளர்த்துக்கொள்வ தில் தவறில்லை என்றும் சொல்லிவைத்தார்கள்.
அந்தவகையில் அபிராமிப் பட்டர், திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் பற்பல நற்பேறுகளைக் கேட்டார்.
"கலையாத கல்வியும், குறையாத வயதும், ஒரு கபடு வராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி யில்லாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவி யும், தவறாத சந்தானமும் வேண்டும்' என்கிறார். தான் கேட்டதில் எது தவறினா லும் பரவாயில்லை; ஆனால் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைப் பேறு தவறாமல் கிடைக்க வேண்டும் என்கிறார் அவர்.ஆசையிலும் வெகு நியாய மான ஆசையல்லவா அது! ஏனென் றால்- திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதத்திலிருந்தே கணவனிடமும் மனைவியிடமும் ஊரார் உறவினர் கள் கேட்கும் கேள்வி- "விசேஷம் ஏதாவது உண்டா?' என்பதுதான். இங்கு விசேஷம் என்றால் புத்திர பாக்கியம். சிலருக்கு உடனே கிட்டும்.
பலருக்கும் தற்போதைய உணவு முறையாலும், கர்மவினைகளாலும், சாப தோஷங்களினாலும் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ஆண்களில் பலருக்கு உயிரணுக் களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், பெண்களுக்கு மாத விலக்கில் தடைகள், கருமுட்டை உருவாவதில் தடைகள் போன்ற காரணங்களும் குழந்தைப் பிறப்பைத் தடைசெய்கின்றன என்று மருத்துவம் கூறும் அதேவேளையில், அந்த மருத்துவத்திற்கு சவால்விடும் வகையில் "மலடியும் குழந்தை பெறுவாள்' என்கிறது ஒரு ஆலய தலபுராணம். அப்படிப்பட்ட அற்புதமானதொரு திருத்தலம்தான் திருவாலங்காடு சிவாலயம்.
இறைவன்: வடவாரண்யேஸ்வரர்.
இறைவி: வண்டார்குழலம்மை.
விசேஷ மூர்த்தி: புத்திர காமேஸ்வரர்.
ஊர்: திருவாலங்காடு, நாகை மாவட்டம்.
விநாயகர்: இரட்டை விநாயகர்.
தீர்த்தம்: புத்திர காமேஸ்வர தீர்த்தம்.
தலவிருட்சம்: வில்வமரம்.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களைப் பெற்றது. காவிரி தென்கரைத் தலங்களுள் வைப்புத்தலமாகத் திகழ்வது. மகப்பேறு அருளும் மகிமைவாய்ந்த பெருமையுடன் விளங்குகிறது. பரதன், இந்திரன், அதிதி வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இன்னும் பல சிறப்புகளுடன் திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டு பொலிவுடன் திகழ்கின்ற தலம்தான் திருவாலங்காடு.
"போற்றும் அத்தீர்த்த நாமம் புத்திர தீர்த்தம் என்பர்
ஆற்றும் ஒவ்வோர் ஏதுக்களாவினும் பலபேர் சொல்வார்
சாற்றுநல் மீனமாதம் தலையுலா நாளில் மூழ்கின்
மாற்றுவன் மலடியேனும் மகப்பெறற்கு ஐயமில்லை.'
14-ஆவது திருவாலங்காட்டுப் படலம்.
திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு தலங்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள- ஈசனின் ஊர்த்துவ நாட்டியம் நடந்ததும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று இந்தக் கட்டுரையில் காணும் திருவாலங்காடு. இவ்விரு தலங்களிலும் ஈசனின் திருநாமம் வடவாரண்யேஸ்வரர் என்பதுதான். அம்மனின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே.
தலவரலாறு
பரதன் என்னும் அந்தண சிவபக்தன் நீண்டகாலமாக புத்திரப்பேறின்றி வருந்தினான். அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்தமுகிழாம்பிகை உடனுறை சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டுத் தவம் மேற்கொண்டான். அப்போது உலககெமல்லாம் கேட்டிட ஒரு வான வாக்கு எழுந்தது.
""பரதா! நீவிர் நின் இல்லாளோடு அருகிலுள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து ஆலங்காட்டீசரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வழிபட்டு வா. புத்திர பாக்கியம் கிட்டும். அதுமட்டுமல்ல; ஆண்டுதோறும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் அத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள்'' என்றருளினார். பரதனும் அவரது மனைவியும் அவ்வாறே வழிபட்டு ஒரு பெண் மகவைப் பெற்றதோடு, எண்ணிய செல்வமெல்லாம் பெற்று இன்புற்றனர் என்கிறது தலவரலாறு.
அம்பிகையின் அருட்சிறப்பு
இத்தலத்தின் அம்பிகை கருணையே வடிவானவள். சிறகை யிழந்த பருந்தொன்றுக்கு அன்னை அருள்புரிய, அப் பருந்து உருவம் மாறி செல்வத் திருமகள்போல எழிலுருவம் பெற்றுத் திகழ்ந்தது. இவ்வாறு அம்மையும் அப்பனும் அருளிய அருட்சிறப்பை-
"ஒரு மகளாகி அம்மை
யுறலரும் உருவம் பெற்றுத்
திருமகள் ஆகியோரிற்
சிறந்தடிப் பணிபூண்டன்று
கருமகள் கழிந்து போகக்
கண்டிடும் வலிசாண்ஞானப்
பெருமகள் ஆலங்காட்டுப்
பெருமை சொற்றிட வல்லவர் யார்'
என்று தலபுராணம் சொல்கிறது.
இத்தலத்தில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. பழைய அம்மன் சிலை சேதமானதால் புதிய சிலை செய்யப் பட்டது. புதிய சிலையைப் பிரதிஷ்டை செய்ததும், பழைய சிலையை அகற்ற முயன்றனர். அப்போது ஒலித்த அசரீரி, "உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது பின்னமாகிவிட்டால் அவர் களை வீட்டைவிட்டு அகற்றிவிடுவீர் களா?' என கேட்க, பழைய அம்மன் சிலையை அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து வழிபடத் துவங்கினர்.
இத்தலத்தில் பழைய அம்மனும் உயிரோட்டமானவள். அதனால் மூலவர் வண்டார்க்குழலம்மைக்குச் செய்யும் அனைத்து உபசாரங்களை யும் பழைய அம்பாளுக்கும் செய்து வருகிறார்கள்.
சிறப்பம்சங்கள்
✷ காவிரியாற்றின் தென்கரையில் இலைவீட்டில் (பர்ணசாலை) இருந்த வண்ணம் தன் மனைவி சுபத்திரை யோடு தவம் செய்துவந்த பரதனுக்கு சிவபெருமான் காட்சிதந்து, ""பரதா! வேண்டுவது யாது?'' என்று கேட்க, பரதனும், ""எந்தாய்! எனக் கொரு மகவு வேண்டும். இன்னும் பல திருவும் வேண்டும். கடவுளர் நட்பும் கைவரல் வேண்டும். இறுதியில் நின்திருவடித் தாமரையைப் பெற்றின்புற லும் வேண்டும்'' என்று விண்ணப்பிக்க, அதற்கு ஈசன், ""மறையோய்! ஒரு பெண்மகவை வியப்புறப் பெற்று வாழ்க. இன்னும் கேட்பன யாவும் ஈந்தனம் பெறுக'' என்றருளி மறைந்தார். இறைவனார் மறைந்தருளியபோதே பரதன் எண்ணிய திருவெலாம் இனிதே நிறைவேறின. இத்தகைய ஈசன் சுயம்புவாய் எழுந்தருளிய தலம்தான் திருவாலங்காடு.
✷ சிறகிழந்த பறவையை உருமாறச் செய்து திருமகள்போல மங்கையருள் சிறந்த விளங்க அருளிய அருட்சிறப்பை திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய திருத்துருத்திப்புராணம் (குத்தாலம்) திருவாலங்காட்டுப் படலம் கூறுகிறது. ✷ மறையவர் குலத்தில் தோன்றிய அதிதி என்பவள் புத்திர தீர்த்தத்தில் நீராடி முப்பத்து முக்கோடி தேவர்களைப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.
✷ இந்திரன் இத்தல தீர்த்தத்தில் நீராடி விருந்திராசுரனைக் கொன்ற பழி நீங்கி ஜெயந்தனை மகனாகப் பெற்று மகிழ்ந்தான்.
✷ மலரவன் நீராடி பத்து புதல்வர்களைப் பெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
✷ பழைய வண்டார்குழலம்மைக்கு அருகில் நின்றநிலையில் அருளும் சரஸ்வதிக்கு புதன்கிழமை, புனர்பூசம், பஞ்சமி திதி வருகின்ற நாட்களில் நெய்தீபமேற்றி வழிபட்டு வர, குழந்தைகள் கல்வியில் சிறப்புறுவர்.
✷ தெற்கு நோக்கி நின்றநிலையில் அருளும் வண்டார்குழலம்மைக்கு அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி நாட்களில் அம்மன் கருவறைதீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்துவர தடைகள் நீங்கி வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறும்.
✷ இந்த சிவாலயம் மூன்றாம் குலோத் துங்க சோழன் காலத்தில் ஏற்றம் பெற்றதா கும். இங்கு இடம்பெற்றுள்ள குலோத்துங்க னின் உருவச்சிலை, இதுவரை நமக்குக் கிடைத் துள்ள உருவச்சிலை வரிசையில் கலைச்சிறப் பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும். மாமன்னன் தன் கூப்பிய கரங்களால் மார்பில் வீரவாள் ஒன்றினை அணைத்துள்ளான். எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது- முடி போட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டி னைச் சுமந்து நிற்பதேயா கும். தாடி, மீசை திகழ, மார்பில் உத்திராட்ச மாலைகள் அணிசெய்ய, பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான். மாவீரன் ஒருவன் சைவச் செம்மலாய் கயிலைநாதனின் திருவடி களைச் சுமந்து நிற்கும் இக்காட்சியைப்போல இதுவரை எந்தவொரு மன்னனது சிலையும் நமக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய கோலத் தில் தனது சிலையைப் படைத்துக்கொண்ட குலோத்துங்கனின் பெருமை சாதாரண ஒன்றா? பன்னிரு திருமுறைகளில் திருவிசைப் பாவினை வகுத்த கண்டராதித்த சோழன், சிவபாத சேகரன் என்று தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராச சோழன், திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து, தில்லையம்பலக் கூத்தனின் பொற்பாதங்களாகிய தாமரை மலரை மொய்க்கின்ற வண்டுதான் நான் எனக் கூறிக்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவனல்லவா! இவனது இக்கோலத்தைக் காணும்போது-
"நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே'
என்று அப்பர் பெருமான் நல்லூர்ப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ள வரிகள் நினைவில் தோன்றும். (இதன் காலம் கி.பி. 1178-1218).
✷ நீங்காத காய்ச்சலால் அவதிப்படுபவர் கள் இவ்வாலய ஆலங்காட்டீசரையும், தெற்கு உட்பிராகாரத்தில் வடக்கு நோக்கியருளும் ஜுரகேஸ்வரரையும் முறைப்படி தொழுதால் பூரண நலம் பெறுவர்.
✷ எமவாதனை உற்றவர்களும், நீண்ட ஆயுள் வேண்டுவோரும், தங்கள் ஜாதகத் தில் ஆயுள்கண்டம் உள்ள வர்களும் இத்தலம் வந்து மூலவரை முறையாகத் தொழுது வலம் வந்து, தெற்கு உட்பிராகாரத் திலுள்ள எமதர்மராஜனை மனமொன்றி வழிபட, ஆலங்காட்டீசனின் அருளால் நீண்ட ஆயுள் கூடப்பெறுவர்.
✷ "மாந்தி- குளிகன் நின்ற வீடு குட்டிச் சுவர்' என்பார்கள் மாந்தி தோஷம் உள்ளவர்கள் தெற்கு உட்பிராகாரத்திலுள்ள மாந்திக்குப் பூஜை செய்ய தோஷம் விலகி நன்மை ஏற்படும். மாந்திக்கு ஆயுதம்- கோடரி; வாகனம்- பல்லி; தானியம்- பருத்திக்கொட்டை. அதனால் பருத்திக்ù காட்டையை தரையில் பரப்பி, அதன்மேல் நல்லெண்ணெய் இட்டு ஐந்து விளக்குகளை (பஞ்சதீபம்) ஏற்றிப் பிரார்த்தனை செய்தல் வேண்டும். இப்பரிகாரம் பெரும்பாலும் சனிக்கிழமை ராகு காலத்தில் (காலை 9.00 முதல் 10.30 வரை) அபிஷேக ஆராதனையுடன் இவ்வாலயத்தில் நடக்கிறது. தோஷங் களை நீக்கி யோகங்களைத் தருவதால் மங்கள மாந்தி என்ற பெயரும் உண்டு.
✷ இரட்டை விநாயகர் சந்நிதி உண்டு. ஒன்று தலவிநாயகர்; மற்றொன்று பரதன் என்ற அந்தணன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்தருளிய விநாயகர்.
✷ எமனுக்கு வலப்பக்கம் சுதுர்மதா (எமனின் மனைவி), இடப்பக்கம் ஏடும் எழுத் தாணியும் கொண்ட சித்திரகுப்தனும் உள்ளனர். எமதர்மன் நான்கு கரங்களுடன் அங்குசம், பாசம், சூலம், வரதம் கொண்டு எருமைக்கடா வாகனத்துடன் அருள்கிறார்.
பித்ருக்களின் சாபம் இப்பிறவியில் சிலருக்கு தொழில் முடக்கங்களையும் துன்பங்களையும் தருகிறது. அவ்வாறு பித்ரு தோஷம் உள்ளவர் கள் தேய்பிறைத் துவிதியை திதியில் எமதர்ம னுக்கு முறைப்படி பூஜைசெய்தால் தோஷங் களகன்று இகபர சுகங்களைப் பெறலாம்.
பெரிய சுற்று மதிலைக்கொண்ட- மூன்று பிராகாரங்கள் கொண்ட இவ்வாலயத் தில், சிவாலயத்திற்குரிய பரிவாரமூர்த்தி சந்நிதிகள் எல்லாம் சிறப்பாக அமைந்துள் ளன. மகப்பேறு நல்கும் மகிமைமிகு ஆலயமாம்- அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்பதற்கிணங்க, மணிமகுடம் சூட்டாமல் "என்றென்றும் நிரந்தரமாக இருப்பது சிவன் சேவடி' என்று, அச் சேவடி இரண்டையும் தலையில் அணிந்து சிறந்த அரசனாகத் திகழ்கின்றவன் காட்சி தருகின்ற திருத்தலமாம்- பங்குனி அமாவாசை நாளில் ஈசனுக்கு தீர்த்தவாரி நடக்கின்ற திருத்தலமாம்- வம்சத்தை விருத்தி செய்து வாழ்வை வளமாக்கியருளும் வண்டார் குழலம்மை சமேத வடவாரண்யேஸ்வரரை யும், புத்திர காமேஸ்வரரையும் விளம்பி வருடம் பங்குனி 21, 22 அமாவாசையன்று தரிசனம் செய்வோம். விமோசனம் பெறுவோம்.
காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு: இரா. சண்முகம், தலைமைக் கண்காணிப்பாளர், அலைபேசி: 94439 00408.
டி. பட்டாபிராமன், ஆலயக் கண்காணிப் பாளர், அலைபேசி: 94438 22333, 86674 59410
வடவாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு அஞ்சல், நாகை மாவட்டம்- 609 810.
ஆர். சுவாமிநாத குருக்கள், சேனாபதிசிவம் குருக்கள், டி. பாலசுப்ரமணியன் கணக்கர்.
அமைவிடம்: மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் குத்தாலத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருவாவடுதுறைக்கு வடகிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருவாலங்காடு. பஸ் வசதி உண்டு.
படங்கள்: போட்டோ கருணா