ட்சய திருதியை நாள் என்பது கடை கடையாக ஏறி இறங்கி ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கி ஆனந்தப் படும் நாள் மட்டுமல்ல...

அட்சய திருதியை நாளுக்கென்று தனிச்சிறப்புகள் உள்ளன. அட்சய திருதியை நாளில் பல தெய்வீக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரம் பரசுராம அவதாரம் ஆகும். "தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'' என்ற வாக்கின்படி வாழ்ந்தவர் பரசுராமர். சிறப்புமிகு பரசுராமர் அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளில்தான்.

ss

ஈசனின் தலையிலிருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகிரதன் கடுந்தவம் புரிந்தான். அவனின் எண்ணப்படி பரமன் கங்கையை பூமிக்கு அனுப்பியதும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

சிவபெருமான் காசிக்கு பிட்சாந்தேகியாக சென்று அன்னை அன்னபூரணியிடம் அன்னத்தைப்பெற்ற அற்புதம் நடந்தது அட்சய திருதியை நாளில்தான்...

இந்திய இதிகாசங்கள் இரண்டு. ஒன்று இராமாயணம், இன்னொன்று மகாபாரதம். மகத்தான மகாபாரதத்தை ஸ்ரீ விநாயகப் பெருமான் அருளுடன் வியாச முனிவர் எழுதத் தொடங்கியது அட்சய திருதியை நாளில்தான்.

ஏழை நண்பன் குசேலன் இல்லம் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ஒருபிடி அவலைத் தந்து அவனது வறுமையைப் போக்கிய நாள் "அட்சய திருதியை'நாளே!

துரியோதனன் அவையில் பலர் முன்னிலையில் துகிலுரியப்பட்டு திரௌபதி மானபங்கப்படுத்தப்பட்டபோது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் புடவையை வரவழைத்து மானம் காத்த சம்பவம் அட்சய திருதியை நாளில்தான் நிகழ்ந்ததாக புராணம் சொல்கின்றது.

"அட்சய' என்றால் "அள்ள அள்ள குறையாத' என்று அர்த்தமாம். அள்ள அள்ள குறையாத "அமுதசுரபியை' மணிமேகலை பெற்றதும் அட்சய திருதியை நாளின் சிறப்பம்சமாகும்.

அட்சய திருதியை நாளன்று ஆபரங்கள் வாங்குவதில் தவறில்லை. அன்றைய தினம் உப்பு வாங்குவதுதான்- மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது! அன்றைய தினம் உப்பு வாங்கினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்! மேலும் வாழ்வில் ஒருவர் "பாவம்' எவ்வளவு செய்தாலும் அட்சய திருதியை நாளன்று பசித்தோற்கு உணவு அளிக்கும் "அன்னதானம்' பாவங்கள் அகலும் என்று சொல்லப்படுகிறது.

எனவே "அட்சய திருதியை'யன்று உப்பு வாங்கி வளம் பெறுங்கள். பசித் தோர்க்கு உணவளித்து பாவத்தைப் போக்கிக்கொள்ளுங்கள்! அள்ள அள்ள குறையாத இன்பங்கள் பெற்று ஆனந்தமாக வாழுங்கள்! அனைவருக்கும் அட்சய திருதியை நன்னாள் வாழ்த்துகள்!