இறைவனைத் தொழுது வழிபடவும், நம்முடைய காரியம் சித்தியடையவும் அந்தந்த தேவதைகளைத் தேடிச்செல்வது அல்லது அந்தந்த தேவதைகளுக்கான சிறப்புப் பூஜைகள், யக்ஞங்கள் (யாகம்) செய்வது பொதுவான வழக்கம். ஆனால் அத்தனை தேவதைகளும், ஏழு புண்ணிய நதிகளும் ஒன்றுகூடி தினமும் வந்து செல்லும் இடம் எதுவென்றால், "அக்னி ஹோத்ரம்' நடக்கும் இல்லம் தான் என கிருஷ்ண யஜுர் வேதத்தில் கூறப் பட்டுள்ளது.
நம்முடைய மதத்திற்கு வேதம்தான் பிரம்மாணம். (ச்ருதி ப்ரமாணை கமதே). பரமேஸ்வரனின் அருளால் நமக்கு வேதம் வந்ததால் அதை "அபௌருஷேயம்' என்றும் சொல்வார்கள். (அதாவது மனிதர்களால் இயற்றப்படாதது). பரமேஸ்வரன் வேதத்தை பிரம்மதேவருக்கு உபதேசிக்க, அதை அடிப்படையாகக்கொண்டு, தன் தவ வலிமையால் இந்த உலகத்தையும் ஜீவராசிகளையும் பிரம்மதேவர் படைத்தார். வேதத்திற்கு எவ்வளவு மகிமை என்பதை இதன்மூலம் நாம் உணரலாம். வேதம் சொன்ன முறையில் முறையாக நடந்தால்தான் ஒருவன் சிரேயஸ் (அபிவிருத்தி) அடையமுடியும்.
அப்பேற்பட்ட வேதத்தில் மோட்சத்தை அடைய சொல்லப்பட்ட ஒரு வழிதான் யக்ஞங்கள். இன்றைக்கு வேதத்தில் சொல்லப்பட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட யக்ஞங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றை வேதமுறைப்படி பக்தி சிரத்தையுடன் அனுசரிக்கவேண்டுமென முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இராமாவதாரத்தில் இராமபிரானும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனும் யக்ஞங்களை தங்களது வாழ்க்கையில் நடத்திக்காட்டியுள்ளனர்.
யக்ஞங்களைவிட சிறந்த கர்மா ஒன்றுமில்லை. ஐந்தாவது வேதமென போற்றப்படும் மகாபாரதத்தில், வேதத்தின் பயனே அக்னி ஹோத்ரம் உள்ளிட்ட யாகங்களைச் செய்வதுதான் எனச் சொல்லப்பட்டுள்ளது. யாகம் என்பதற்கு தமிழில் வேள்வி என சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் யாகம், ஹோமம் என்பதற்கு சற்று வித்தியாசம் உள்ளது.
முறையாக வேதாத்யயனம் செய்தவர்கள் அக்னிஹோத்ரத்தை அனுஷ்டிப்பதுபோல, சோம யாகத்தையும் செய்வது சிறந்தது எனச் சொல்வார்கள். இந்த சோம யாகம் அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, அதிராத்ரம், அப்தோர் யாமம், வாஜபேயம் என ஏழுவகை உண்டு. ஸ்ருதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கர்மாக்கள் செய்யப்படுவதால் இதற்கு "ச்ரௌத கர்மா' என்னும் பெயரும் உண்டு.
நமக்கு வேண்டிய ஐஸ்வர்யங்களையும் அறிவையும் தருபவர் அக்னி பகவான் என்பதால், யக்ஞங்கள் நடக்கும் சமயத்தில் அவருக்கு முதலிடத்தையும் முக்கியத்துவத்தையும் தருகிறோம். எனவேதான் தினமும் மாலையில் செய்யும் அக்னிஹோத்ரத்தின்போது ஹோமத்தில் தரப்படும் ஆஹுதி (அர்ப்பணிப்பு) அக்னி பகவானுக்கும், காலையில் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆஹுதி சூரிய பகவானுக்கும் போய்ச்சேருவதாக வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன.
வேதங்களைக் கற்றறிந்த விற்பன்னர் கள் நித்ய கர்மாவாக அக்னிஹோத்ரத்தை காலை, மாலை இருவேளைகளில் தச திரவியங்கள் (10 வகையான பொருட்கள்) எனப்படும் பசும்பால், பசும்நெய், சுத்தமான தண்ணீர், அட்சதை (அரிசி), பசுஞ்சாண வறட்டி, சமித்து, தர்ப்பை, புரோடாசம் (அரிசிமாவு) போன்றவற்றைக் கொண்டு சிரத்தையுடனும், பக்தியுடனும் தியாக உணர்வுடனும் செய்வார்கள். அதேபோன்று 15 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை, பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமையன்று "தர்சபூர்ணமாச இஷ்டி' (Darsha Purnamasa Ishti) என்னும் யாகத்தையும், வருடத்திற்கு ஒருமுறை ஆக்ரஹாயணி (Agrayana) என்னும் யாகத்தையும் கட்டாயம் செய்யவேண்டும் என்னும் சில நியமங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. அக்னி ஹோத்ரம் செய்யும் எஜமானான- ஆஹிதாக்னி என்று சொல்லப்படும் அக்னிஹோத்ரிகளுக்கு உணவிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. இதுபோன்ற ஹோமங்கள் செய்யும் சமயத்தில் எஜமானனுக்கு உதவ குறைந்தது நான்கு ரித்விக்குகள் (புரோகிதர்) தேவைப்படுவார்கள்.
இப்படி முறையாக அக்னிஹோத்ரத்தைச் செய்வதால் நாட்டில் சுபிட்சம் வளர்கிறது; மக்களிடையே ஒற்றுமையுணர்வு வளர்கிறது; சர்வ ஜீவராசிகளும் திருப்தியாக வாழ்கின்றன; மனிதர்களுக்கு தேக ஆரோக்கியம், மனசாந்தி ஏற்படுகிறது; ருது தர்மம் (வசந்த ருது, கிரிஷ்மருது, சரத் ருது, வர்ஷ ருது, ஹேமந்த ருது, சிசிர ருது எனும் ஆறுவகையான பருவ காலங்கள்) காக்கப் படுகிறது; நம் நாட்டின் பாதுகாப்பு வலுவடைகிறது; கடைசியாக உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்கிறது என பட்டியலிடலாம். இவற்றைப் பொதுவான பலன் என்று எடுத்துக்கொண்டாலும், விஞ்ஞானரீதியாகவும், மருத்துவரீதியாகவும் பல பலன்களை இதுபோன்ற யக்ஞங்கள் நமக்குத் தருகின்றன.
அக்னி ஹோத்ர ஹோமத்தை தினமும் செய்பவர்கள் நாட்டுப் பசுமாட்டைத் தங்கள் இல்லத்தில் அவசியம் வளர்ப்பார்கள். இந்தப் பசுவின் மூலம் கிடைக்கும் பால், நெய், சாணம் (அ) வறட்டி, கோமியம் ஆகியவற்றைக் கொண்டுதான் தினமும் ஹோமம் செய்யமுடியும். மேலும் இவற்றுக்கு மருத்துவ குணமும் உண்டு.
குறிப்பாக பசுஞ்சாணம் நோய் தடுக்கும் சக்தியைக் கொண்டது என்பதை சாரகா சம்ஹிதா, சஷ்சுரா சம்ஹிதா, பிரகர் வக்பத் போன்ற பண்டைய ஆயுர்வேத நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. எனவேதான் நம் முன்னோர்கள் வீட்டை மெழுவதற்கு பசுஞ்சாணத்தையே பயன்படுத்தினர்.
அதேபோன்று யாக சாலையை பசுஞ்சாணத்திலேயே மெழுகுவார்கள். கிருமி நாசினியான பசுஞ்சாணத்தை வீடுகளில் உபற்யோகப்படுத்துவதால் ஈகோ-,
கே. நிமோனியா போன்ற தொற்றுக் கிருமி பாக்டீரியாக்களின் பெருக்கத் தைக் கட்டுப்படுத்த முடியுமென சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப் பட்டது.
அதேபோன்று நோய் உருவாக்கும் கிருமிகளை (Pathogens) அழிக்கும் சக்தி- குறிப்பாக பசுஞ்சாணத்திற்கு உண்டு.
உலர்த்த சாணமான வறட்டி புகையிலிருந்து வரும் வாயுக்கள் நோயை உண்டாக்கும் கொசுக்களை விரட்டும் தன்மைகொண்டது. பசுஞ்சாண வறட்டியால் குறைந்த செலவில், நிறைந்த எரிசக்தியை (12 ஙஓ/கிலோ) உண்டாக்க முடியும். அதேபோன்று மாட்டுச் சாண கரைசலைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தொழில் நுட்பத்தை இந்தியாவில் குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய பால்வள மேம்பாடு நிறுவனம் வெற்றியுடன் இன்றும் நடத்திவருகிறது.
அரிசியை பசும் நெய்யுடன் கலந்து ஹோமத்தில் இடும்போது புரபலின் ஆக்ஸைடு (Propylene Oxide) என்னும் வாயு உருவாகிறது. இந்த வாயுதான் மழையைப் பொழியவைக்கும் தன்மை கொண்டது. உதாரணத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் மத்தூர், (Mathur), ஷிமோகா பகுதியில் ஒன்பது நித்ய அக்னிஹோத்ரிகள் வசிக்கிறார் கள். இவர்கள் தினமும் செய்யும் அக்னி ஹோத்ரத்தால் கடந்த 25 ஆண்டுகளாக பிற பகுதிகளைவிட இவ்விரு இடங்களில் குறைந்தது 30 சதவிகித மழைப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி பாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைவதாக கர்நாடக மாநிலத்தில் நித்ய அக்னிஹோத்ரியான வேத வித்வான் டாக்டர். எம்.எல். சனத்குமார் சோமயாஜு தெரிவித்தார். இந்தியாவில் மத்தூர் கிராமத்தில்தான் அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருதத்தையே பேச்சுமொழியாகப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மூதுரையில் ஔவையார் "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என கூறியதில், "நல்லவர்' என்பதற்கு, இவ்விடத்தில் அக்னி ஹோத்ர வேத பண்டிதர் எனவும் பொருள் கொள்ளலாம். பிறரின் நலனுக்காக இவர்கள் செய்யும் தியாக உணர்வுதான் இதற்குக் காரணம். இதே கருத்தைதான் திருவள்ளுவரும்-
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுகின்றேல்
பண்புக்கு மாய்வது மன்'
என கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்சமயம் சுமார் 40 பேர் நித்ய அக்னிஹோத்ரிகளாக உள்ளனர். "பிரவசன சக்ரவர்த்தி' சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ எஸ். அனந்தராம தீட்சிதரின் (1903-1969) குடும்ப வாரிசுகள் தமிழகத்தில் சேங்காலிபுரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் போன்ற புண்ணிய தலங்களில் வசித்து வருகிறார் கள். தமிழ்நாட்டில் இன்றிருக்கும் வேத பண்டிதர்களிடையே "முசிறி வாத்தியார்' என மரியாதையுடன் அழைக்கப்படும் பிரம்மஸ்ரீ எஸ். அனந்த நாராயண வாஜபேயாஜீ (Vajapeyaji) அவர்களிடம் வேதம் பயின்றவர்கள் பலர். அவருடைய மகனும், முசிறி கிராமத்தில் "Shreekavam Trust' (04326-261055) என்னும் அறக்கட்டளை மூலம் வேதபாடசாலை மற்றும் கோசாலையை நடத்திவருபவருமான பிரம்மஸ்ரீ யக்ஞராம சோமயாஜு அவர்களிடம், தமிழ்நாட்டில் வசிக்கும் அக்னி ஹோத்ரிகள் சார்பாக உலகில் வாழும் ஜீவராசிகளின் நன்மைக்காக வேதமுறைப்படி செய்யப்படும் அக்னி ஹோத்ரத்தின் பெருமையைப் பற்றி கேட்டபோது-
"என் தந்தையார் 1936-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். ஏழு வயதில் உபநயனம் நடந்தவுடன் முறையாக வேதங்களைக் கற்க ஆரம்பித்தார். இந்த சமயத்தில் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார் காஞ்சி மகாபெரியவர். சிறியவனாக இருந்த எனது தந்தையார் வேத மந்திரங்களைச் சொன்னவிதம் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மகாபெரியவர் அன்று முதல் வாழ்நாளில் கடைசிவரை என் தந்தையாரிடம் தனிப்பற்றும் அக்கறையும் கொண்டிருந்தார்.
பின்னர் மேற்கொண்டு வேதம் படிக்க சுவாமிகள் பெரிதும் உதவினார். இதனால் வேத, சாஸ்திரங்களை சரிவரக் கற்றுத் தேர்ச்சிபெற்றார். திருப்பதி தேவஸ்தானம் நடத்திய வித்யா கேந்திராவில் முதல்வராகப் பணிபுரிந்தார். வேதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து புத்தங்களை எழுதியதால் 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு "ராஷ்டிரபதி' விருதை வழங்கி கௌரவித்தது.
அவரது வாழ்நாளில் சுமார் 45 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் இரு வேளைகளில் அக்னி ஹோத்ரத்தை செய்துவந்தார். அவருக்குப் பின்பு நாள் 1999 முதல் தொடர்ந்து இக்கிராமத்தில் அக்னிஹோத்ரத்தை தொடர்ந்து செய்து வருகிறேன். என்னைப்போல என் உடன் பிறந்த மூன்று சகோதரர்களும் வேத அத்யயனம் முடித்து தர்ம பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள அக்னி ஹோத்திரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஸ்ரீகாஞ்சி மகாபெரியவர் "அக்னி ஹோத்ர ரக்ஷண நிதி டிரஸ்ட்' என்னும் அமைப்பை ஏற்படுத்தி, உதவிசெய்ய வழிவகுத்தார். காஞ்சி மடத்தின்மூலம் சாதூர்மாஸ்ய சமயத்தில் அக்னிஹோத்ர வித்வத் சபை தொடர்ந்து நடந்துவருகிறது.
சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் 1987-88-ல் முசிறிக்கு வருகைதந்த சமயத்தில், எங்கள் இல்லத்தில் அக்னிஹோத்ரம் தொடர்ந்து நடைபெறு வதை அறிந்து அவரே நேரில் வந்து "வேதி'யைப் பார்வையிட்டுப் பாராட்டினார். அக்னி ஹோத்ரம் செய்பவர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களை செய்து தரவேண்டும் என தன் விருப்பதைத் தெரிவித்தார்'' என்று கூறினார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக உஜ்ஜயினியில் மகர்ஷி சந்திப்பனி ராஷ்ட்ரிய வேதவித்யா பிரதிஷ்தான் என்னும் (Maharshi Sandipani Rashtriya Vedavidya Pratishthan) அமைப்பு, நாட்டில் வேதம் படிப்பவர்களுக்கும், குருகுல வேத பாடசாலையை நடத்துபவர்களுக்கும் உதவவும், ஊக்குவிக்கவும் 1987-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. முன்பு புதுடெல்லியில் இயங்கிய இந்த அமைப்பு 1993 முதல் உஜ்ஜயினில் செயல்பட்டுவருகிறது.
இன்றைய காலகட்டத்தில் எல்லாராலும் அக்னிஹோத்ரம் உள்ளிட்ட யக்ஞங்களைச் செய்யமுடியாது. அதேசமயத்தில் செய்பவர்களை ஊக்கப்படுத்தி ஆதரித்தால் அதுவே மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும். முடிந்தால் தமிழ்நாட்டில் வசிக்கும் நித்ய அக்னிஹோத்ரிகளிடம் நேரில் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றால் அக்னி பகவானின் கிருபை நமக்கு நிச்சயம் கிட்டும்.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்னும் வேத வாக்கியப்படி, உலகில் வாழும் அனைவரும் சுகமாக வாழ பிரார்த்தனை செய்வோம்!
'வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உலகம் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நல்தவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்!