ஆருத்ரா தரிசனம் 20-12-2021

மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரம் கூடிவரும் நாளில் திருவாதிரைத் திருவிழா, ஆருத்ரா தரிசனம் என்று சிவாலயங்களில் விழா கொண்டாடப்படுகிறது.

ஆருத்ரா என்ற வடமொழிச் சொல்லே தமிழில் திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவாதிரை என்று குறிப்பிடப்படுகிறது.

திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்தநாளில் ஆனந்தத் தாண்டவமாடும் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிப்பது முக்தியைத் தரும் என்பர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரையாகும்.

Advertisment

பாற்கடலில் பள்ளிகொண்ட மகாவிஷ்ணு ஒருசமயம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தார். இதைக்கண்ட ஆதிசேஷன், "சுவாமி, தங்களது ஆனந்தத்திற்குக் காரணமென்ன?'' என்று கேட்க, நாராயணர், "சிவபெருமான் திருவாதிரை நாளன்று ஆடிய திருத்தாண்டவம் கண்டேன்.

அதுவே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்'' என்றார்.

மகாவிஷ்ணுவையே பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கு ஆவல் பெருகியது. தன் விருப்பத்தைப் பெருமாளிடம் சொல்ல, அவரும் ஆதிசேஷனுக்கு அனுமதி தந்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

Advertisment

ஆதிசேஷன் பூவுலகில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். இடுப்புக்கு மேல் உள்ள பகுதி மனித வடிவி லும், கீழுள்ள பகுதி பாம்பாகவும் உருக்கொண்டு பூவுலகில் பல்லாண்டு கள் தவமிருந்தார்.

இவ்வாறு தவம் செய்துகொண்டிருக்கும்போது, பதஞ்சலி முனிவர்முன் சிவபெருமான் திருக்காட்சியளித்தார். அவரை வணங்கிய பதஞ்சலி முனிவர், தனது உள்ளக்கிடக்கையைக் கூறினார்.

அதற்கு சிவபெருமான், "நீ என்னைக் குறித்து தவமிருந்த காரணத்தைப்போலவே, வியாக்ரபாத முனிவரும் தவமியற்றிக் காத்திருக்கிறார்.

நீங்கள் இருவரும் தில்லை வருக. அங்கு உங்களுக்கு யாம் திருத்தாண்டவக் காட்சியைக் காட்டியருளுவோம்'' என்று கூறி மறைந்தார்.

பதஞ்சலியும் வியாக்ரபாத முனிவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

தங்கள் விருப்பப்படி ஆடல்வல்லானின் திருநடனத்தை திருவாதிரைத் திருநாளில் கண்டுகளித்து பேரானந்தம் கொண்டனர்.

இந்த உலகம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்ச பூதங்களாலானது.

nn

அவையனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் திருநடனம் தான்.

இறைவனின் அசைவால்தான் உலகமே இயங்குகிறது. நடராஜரின் நடனங்கள் 108 என்பர். இதில் சிவபெருமான் தனித்து ஆடியது 48.

மார்கழித் திருவாதிரையன்று நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும் பாவங்களும் விலகும்.

திருவாதிரைக் களி சேந்தனார் என்பவர் சிதம்பரம் அருகே யுள்ள ஊரில் இருந்தார். சிறந்த சிவபக்தர்.

விறகுவெட்டி விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே வாழ்ந்துவந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டுதான் அவர் உணவருந்துவார். சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுளம் கொண்டார்.

ஒருநாள் மழைபெய்ததனால் அவரால் விறகுவிற்க செல்ல முடியவில்லை. விறகு விற்றால் தான் அரிசி வாங்கப் பணம் கிடைக்கும். வீட்டிலிருந்த சிறிது அரிசியை மாவாக்கி, அதில் களிசெய்து சிவனடியார் யாரேனும் வருகிறார்களா என்று காத்திருந்தார்.

ஆனால் யாரும் வரவில்லை. மனம் கலங்கினார்.

அப்போது சிவபெருமான் சிவனடியார் வேடம்பூண்டு சேந்தனாரின் வீட்டிற்கு வந்து, "உண்ண ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அகம்மகிழ்ந்த சேந்தனார் களியை அவருக்கு அன்போடு அளித்தார். அதை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார் சிவபெருமான். எஞ்சியிருந்த களியை, "எனக்கு அடுத்தவேளை உணவுக்குத் தருவாயா?'' என்று சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் கேட்க, தனக்கென்று இருந்த சிறிது களியையும் மனமுவந்து கொடுத்தார் சேந்தனார்.

அன்றிரவு அரசரின் கனவில் சிவபெருமான் காட்சிகொடுத்து, சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர் வீட்டில் களியுண்ட செய்தியைக் கூறினார்.

மறுநாள் அதிகாலை தில்லைவாழ் அந்தணர்கள் வழக்கம்போல சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந் தார்கள். அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக்கண்டு, என்ன அதிசயமென்று வியந்தார்கள். அரசருக்கு செய்தி தெரிவித்தார்கள். அதைக்கேட்ட அரசன் இரவு தான்கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தான்.

சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கிருந்தார்கள். சேந்தனாரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார்.

சிவபெருமான் திருவுருவை தேரில் அமர்த்தி, அரசர் முதலான அனைவரும் தேர்வடம் பிடித்தார்கள். ஆனால் தேர் நகரவே இல்லை. அனைவரும் மனம் வருந்தினார்கள்.

அப்போது ஓர் அசரீரி, "சேந்தா, நீ பல்லாண்டு பாடு' என்று ஒலித்தது. சேந்த னாரோ, "கல்வி அறிவற்ற யான் எப்படி பல்லாண்டு பாடுவேன்?' என்று எம்பிரானைத் தொழுது நின்றார். எம்பிரானோ, "யாம் உமக்கு அருள்புரிவோம்' என்றுரைத்தார்.

அப்போது சேந்தனார், "மன்னுக தில்லை' என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே' என்று முடியும் பதின்மூன்று பாடல்களை எம்பிரானை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் அசைந்தது.

அரசரும், சிவனடியார்களும் சேந்தனா ரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் கள். சேந்தனாரோ, "அரசர் அடியவனின் காலில் விழக்கூடாது'' என்று தயங்கிக் கூற, அரசர், "நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் எனும்போது யான் தங்களை வணங்குவது முறையே'' என்று, சிவபெருமான் கனவில் உரைத்த செய்தியை சேந்தனாருக்குக் கூறினார்.

அதைக்கேட்ட சேந்தனார் மனம் கசிந்து, எம்பிரான் அடியவர்கள்மீது வைத்திருந்த கருணையை எண்ணிப் பரவசமடைந்தார்.

இதன்காரணமாக "திருவாதிரையன்று ஆடல்வல்லானின் அனைத்துத் திருத் தலங்களிலும் களி படைக்கப்படுகிறது.

அதனால்தான் "திருவாதிரை நாளில் ஒருவாய்க் களி' எனும் பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவருளைப் பெறுவோமாக!