கைரேகைக் கலையில் கீரோ (சீரோ, ஷீரோ எனவும் சொல்வர்) உலகளவில் பெரும்புகழ் பெற்றவர். அவர் நமது தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் வந்து கைரேகை சார்ந்த பல விஷயங்களையும் கற்றுச் சென்றுள்ளார்.

அப்போது ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவருக்கு எதிராகப் புரட்சியை உருவாக் கிப் போராடிக் கொண்டி ருந்தார் லெனின். அந்த கால கட்டத்தில் 1915 அல்லது 1916-ஆம் ஆண்டுவாக்கில் கீரோ ரஷ்யா சென்று லெனினை சந்தித்தார்.

அவரிடம் ""உங்கள் கைரேகை யைப் பார்க்கவேண்டும். கையைக் காட்டுங்கள்'' என்று கேட்டார். சிரித்த லெனின், ""எனக்கு இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதால்...'' என்று சொல்லி கையைக் காட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த கீரோ, ""நீங்கள் 1917-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி ஆட்சியைப் பிடித்துவிடுவீர்கள்'' என்றார். அதைக் கேட்டு மேலும் சிரித்த லெனின், ""இது மக்களின் நன்மைபொருட்டு நடைபெறுகிற புரட்சி. நீங்கள் சொல்வதுபோல நடந்தால் மகிழ்ச்சிதான். அதுதான் எங்கள் இலக்கு. ஆனால், நீங்கள் என் கையைப் பார்த்துச்சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை'' என்றார்.

Advertisment

rr

அதன்பின்னர் ரஸ்புடீனைப் பார்க்கச் சென்றார் கீரோ. ரஸ்புடீன் "ஹீலிங்' ஆற்றல் நிறைந்த மனிதர். அவர் நோயுற்ற ஒரு மனிதரைத் தொட்டால் அது குணமாகிவிடும். ஆனால் மிகவும் தீய நடத்தையுள்ளவர். அவர் செய்த தகாத செயல்கள் ஏராளம். இருந்தும் ஜார் மன்னர் அவரைத் தன் அரண்மனையில் வைத்திருந்தார். அதற்குக் காரணம், மன்னருடைய மகனுக்கு ஒரு வினோதமான நோய் இருந்தது. நீலநிறம் கலந்த ரத்தம் கொண்ட அவருக்கு அடிக்கடி ஒருவித காய்ச்சல் வரும். ரஷ்புடீன் சென்று தொட்டதும் குணமாகிவிடும். இந்த ஆற்றலால் அவர் தன்னையே கடவுள்போல் எண்ணிக்கொண்டு, மிகுந்த இறுமாப்புடன் வலம்வந்தார்.

அவரைச் சென்று சந்தித்த கீரோ கைரேகை யைப் பார்த்து விட்டு, ""1916 நவம்பர் ஏழாம் தேதி உங்களைக் கொல்ல உணவில் விஷம் வைப்பார் கள். அதிலிருந்து தப்பிவிடுவீர்கள். அடுத்து துப்பாக் கியால் சுடுவார்கள். அதிலும் தப்பிப் பீர்கள். பிறகு உங்களை அடித்து "பைக்காரா' ஏரியில் தூக்கி வீசுவார்கள். அதிலும் மீண்டுவருவீர்கள். இப்படி மூன்றுமுறை உயிர்பிழைத்த நீங்கள் நான்காவது முறை கல்லைக்கட்டி நீரில் தூக்கிப்போடுவார்கள். அதிலிருந்து மீளமுடியாமல் மரணமடைவீர்கள்'' என்று சொன்னார். அதைக்கேட்ட ரஸ்புடீன், ""எனக் காவது மரணமாவது'' என்று சொல்லிச் சிரித்தார்.

Advertisment

1916, நவம்பர் 7. ரஸ்புடீனின் எல்லையற்ற அத்துமீறலைத் தாங்கமுடியாத மன்னர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து ரஸ்புடீனை அழைத்தார். அவருக்கு கொடிய விஷம் கலந்த உணவு பரிமாறப்பட்டது. ஆனால் அந்த விஷம் எவ்வித பாதிப்பையும் ரஸ்புடீனுக்கு ஏற்படுத்தவில்லை. அதுகண்டு திகைத்து நின்றனர். உடனே ரஸ்புடீன் துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த குண்டுகளும் பயனற் றுப் போயின. அப்போது ரஸ்புடீன் ஜார் மன்னரைப் பார்த்து, ""என்னைக் கொல்லவா முயல்கிறீர்கள்? அது நடக்காது. இன்றைக்கு நவம்பர் மாதம் ஏழாம் தேதி. அடுத்த ஆண்டு இதே நாளில் உங்கள் அரசபதவி பறிக்கப்படும்'' என்று சொன்னார்.

முதலில் கீரோ லெனினுக்கு 1917 நவம்பர் ஏழாம் தேதி ஆட்சியைக் கைப்பற்றுவீர்கள் என்றும்; ரஸ்புடீனுக்கு 1916 நவம்பர் 16-ல் நான்காவது கொலை முயற்சியில் இறப் பீர்கள் என்றும் சொன்னார். ரஸ்புடீன் ஜார் மன்னரிடம் 1917 நவம்பரில் பதவி பறிக்கப்படும் என்றார். இவையனைத்துமே சொன்னது சொன்னபடி நடந்தன.

ஜோதிட சாஸ்திரத்தில் "ஹோரை' என்னும் காலக்கணக்கு உண்டு. ஒரு ஹோரை ஒரு மணி நேரத்தைக் கொண்டது. ஞாயிற்றுக்கிழமை என்றால் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரிய ஹோரை நடக்கும். திங்கட்கிழமை என்றால் சந்திர ஹோரை ஆரம் பிக்கும். தொடர்ந்து மற்ற கிரக ஹோரைகள் நடைபெறும். இதில் ராகு- கேது ஹோரைகள் இடம் பெறாது. இந்த அட்டவணை பஞ்சாங்கங் களில் குறிப்பிடப்பட்டிருக்கும். சில நாட்காட்டிகளிலும் இருக்கும்.

இதில் பல சூட்சுமங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலான சூரிய ஹோரையில், முதல் அரைமணி நேரத்தில்- அதாவது 6.00 முதல் 6.30 மணிக்குள் ஒரு குழந்தை பிறந்தால் அது ஆணாக இருக்கும். திங்கட்கிழமை இதே அரைமணி நேரத்தில் பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்; புதன் பெண்; வியாழன் ஆண்; வெள்ளி பெண்; சனி; ஆண். இதேபோல ஞாயிற்றுக்கிழமை 6.30 முதல் 7.00 மணிக்குள் பிறந்தால் பெண். மறுநாள் ஆண். இப்படி ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொண்டு சுமார் முந்நூறு குழந்தைகளின் பிறப்பை ஆராய்ந்தபோது அது மிகச்சரியாகவே இருந்தது. ஹோரை கணக்கீட்டிலுள்ள நுட்பங்களை உணர்ந்து அதிசயித்தேன். இங்கு எல்லாமே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் கண்ணதாசன் எழுதிய, "புத்தியுள்ள மனிதரெல் லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை' என்னும் பாடல் வரிகளும்; கே.டி. சந்தானம் எழுதிய, "ஒண்ணுமே புரியல உலகத்திலே. என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது' என்னும் பாடல் வரிகளும் என் மனதில் தோன்றின. இவற்றின் உண்மைகளை அறியும்போது மனதில் ஒரு உற்சாகம் பிறந்தது.

rr

நான் என் தாய்- தந்தையரை நன்கு கவனித்துக்கொண்டேன். என் சகோதரரும் என்னோடு இருக்கிறார். குடும்பத்தை முன்னின்று நடத்திச்செல்லும் நிலை எனக்கு அமைந்துள்ளது. இதற்கான கிரக அமைப்பு என் ஜாதகத்தில் இருக்கிறது. இதை பெருமைக்காக நான் குறிப்பிடவில்லை.

அதுபோல பெற்றோரை கவனிக்காதவர் குறித்தும் ஏதும் சொல்வதற் கில்லை. நான்கைந்து மனைவியரை மணந்து கொண்டு வாழ்பவரைப் பழித்துப்பேசுவது, ஒரே மனைவியுடன் இறுதிவரை வாழ்பவ ரைப் புகழ்ந்து பேசுவது போன்றவை நமது சமுதாயக் கட்டமைப்பிலுள்ள ஒழுக்கநெறி கள் சார்ந்தவை. ஆனால் எவரெவருக்கு என்னென்ன விதியோ- அப்படித்தான் இங்கே எல்லாமே நடைபெறுகின்றன.

வாழ்க்கையில் பெரிய திருப்பம், சிறிய திருப்பம் என்று சொல்வார்கள். என் அனுபவத்தில் நிகழ்ந்த சிறிய திருப்பம் ஒன்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். அப்போது பட்டுக்கோட்டையில் வசித்துக்கொண்டிருந்தோம். 1970-ல் வேலை கிடைக்காமல் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தேன். இன்னும் பல போராட்டங்கள் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்தேன். காலை ஏழு மணி இருக்கும். எங்காவது நடந்துவிட்டு வரலாமா என்று எழுந்தபோது, சுமார் பதினேழு வயது மதிக்கத்தக்க ஒரு இஸ்லாமிய சிறுவன் வந்தான். தோளில் ஒரு ஜோல்னா பையை மாட்டியிருந்தான். அவன் என்னிடம், ""சார்... ஜோதிடம் பார்க்கிறீர்களா?'' என்று கேட்டான். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏனென் றால் பெரியார் புத்தகங் களையெல்லாம் தலையணை யருகே வைத்துப் படித்துக் கொண்டிருந்த காலகட்டமது.

அவனை அலட்சியமாகப் பார்த்து, ""நீ ஜாதகம் பார்க்க எவ்வளவு காசு வாங்கற?'' என்றேன். ஏனென்றால் என்னிடம் கையில் பணமில்லை. இருபத்தைந்து காசுதான் இருந்தது. அதில் டீ, இரண்டு பன் வாங்கி சாப்பிடலாம்.

அவன், ""நீங்க குடுக்கறத குடுங்க சார்'' என்றான். ""எங்கிட்ட நாலனாதான் இருக்கு'' என்றேன். ""பரவாயில்ல சார்'' என்றான்.

""நீ ஜாதகம் பார்த்து சொல்லுவியா இல்ல முகத்தைப் பார்த்துச் சொல்லுவியா?'' என்று கேட்டேன். ""கை பார்த்து சொல்லுவேன்'' என்றான். ""நீ சொல்றதெல்லாம் உண்மையா இருக்குமா?'' என்றேன். ""சார், உங்க வாழ்க்கை யில நடந்த ரெண்டு சம்பவத்தை சொல்றேன். அதுக்கப்புறமாவது என்னை நம்புவீங்களா?'' என்று சவால்விடும் தொனியில் கேட்டான்.

நம்பிக்கையில்லாமல் அவனிடம் கையைக் காட்ட, அவன் பார்த்துவிட்டு, ""சார்... உங்க பதினோறாவது வயசுல எலும்பு முறிவு ஏற்பட்டுச்சா?'' என்று கேட்டான். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஏனென்றால் அவன் சொன்னது உண்மைதான். அடுத்து அவன், ""உங்க பன்னிரண்டாவது வயசுல தண்ணியில கண்டம் ஏற்பட்டு காப்பாத்தப்பட்டீங்களா?'' என்றான். மேலும் அதிர்ச்சி. இதுவும் உண்மைதான். எனக்கு எதுவுமே புரியவில்லை. பத்து ஆண்டுகளுக்குமுன் என் வாழ்வில் நடந்த சம்பவத்தை, யாரென்றே தெரியாத இவன் வெறும் கையைப் பார்த்தே எப்படிச் சொல்கிறான்? ""சரி; மேற்கொண்டு சொல்லு'' என்றேன். ""என்ன சார் சொல்லணும்'' என்றான்.

""என் மனசுல ஒண்ணு நினைச்சிருக்கேன். அது நடக்குமா?'' என்றேன். ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்பது அப்போது என் லட்சியமாக இருந்தது. அதற்கு அவன், ""நீங்க ஏதாவது ஒரு பூவை மனசுல நினைச்சுக்கங்க.

அந்த பூவோட பேரை நான் சரியா சொன்னேன்னா நீங்க எண்ணியிருக்கற விஷயம் நிச்சயமா நிறைவேறும்'' என்றான்.

சாதாரணமாக மல்லி, முல்லை, ரோஜா போன்ற புழக்கத்திலிருக்கும் பெயர்களை நினைத்துக்கொண்டால் அவன் எளிதில் சொல்லிவிடக்கூடும். எனவே வேறு மலர்களின் பெயர்களை யோசித்து, இறுதியாக மனோரஞ்சிதம் என்னும் மலரை மனதில் எண்ணிக்கொண்டு அவனிடம், ""நீ சொன்னபடி ஒரு பூவை நினைச்சிக்கிட்டேன். அது என்னன்னு சொல்லு'' என்றேன். ""மனோரஞ்சிதம்'' என்றான்! இந்த சம்பவமே எனது சிறு திருப்பமாக அமைந்தது. நடிகனாகிவிடு வோம் என்று தெம்புவந்தது. போராட்டங்கள் பலவற்றை சந்தித்தாலும், நான் விரும்பியபடி நடிகனானேன்.

மனிதன் பிறக்கின்ற நேரம் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். காரைக்குடி யில் ஆச்சார்யார் என்றொரு ஜோதிடர் இருந்தார். எனது சிற்றப்பா கம்யூனிச சிந்தனையாளர். அவர் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு விரிவுரையாளராக பணிமாற்றலாகி வந்திருந்தார். அது 1952-ஆம் ஆண்டு. இந்த ஜோதிடரைப் பற்றி என் சிற்றப்பாவிடம் மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இவர் கம்யூனிச சிந்தனையுள்ளவர் என்பதால், அந்த ஜோதிடரை சோதிப்பதற்காக அவரைப் பார்க்கச் சென்றுள்ளார்.

அவர் என் சிற்றப் பாவின் கை பெருவிரல் ரேகையை மட்டும் பார்த்துவிட்டு, ""நீங்க போய் டீ குடிச்சிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சு வாங்க'' என்று சொல்லியிருக்கிறார். இவரும் அப்படிச் சென்றுவிட்டு அரைமணி நேரம் கழித்து வந்ததும் ஒரு தாளைக் காட்டி, ""இதுதான் நீங்கள் பிறந்த நாள், நேரம். சரிதானா?'' என்று கேட்டிருக்கிறார். அதைப் பார்த்த என் சித்தப்பா ஆடிப்போய்விட்டார். ஏனென் றால் மிகச்சரியாக அவர் குறிப்பிட்டிருக்கி றார். ""நீங்க ஒரு மணிநேரம் கழிச்சு வாங்க. உங்க ஜாதகத்தை எழுதி வைக்கிறேன்'' என்று ஜோதிடர் சொல்ல, ""வேண்டாம். உங்களை சோதிக்கறதுக்காகதான் வந்தேன். மன்னிச்சிருங்க'' என்று சொல்லி வந்து விட்டார் என் சித்தப்பா.

(அதிசயங்கள் தொடரும்)