இரண்டு நண்பர்கள் வழக்கமாக வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் ஒன்றாக நடந்துவருவார்கள். மது அருந்தி விட்டு வருவது அவர்களது வழக்கம். ஒருநாள் அவ்வாறு வந்துகொண்டிருந்தபோது பேச்சு திசைமாறி வாக்குவாதமாக, பெரியசாமி என்னும் நண்பர் தாக்கியதில் முனுசாமி என்பவர் அங்கேயே விழுந்து இறந்துவிட்டார். இவர் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆறு மாதங்கள் கடந்த நிலையில், முனுசாமியின் ஆவி தன் இன்னொரு நண்பரான ராமசாமியின் உடலுக்குள் புகுந்து அவரது வீட்டுக்கு வந்தது. விஷயம் தெரிந்து அனைவரும் கூடி, ஒரு பேய்விரட்டும் பெண்மணியின்மூலம் கேள்வி கேட்க, தன்னைக் கொன்றவனைப் பழிவாங்க வந்திருப்பதாக ஆவி கூறியது. அதன்பின்...
அப்போது பேய்விரட்டும் பெண் ராமசாமி யின் உடலுக்குளிருந்த முனுசாமியிடம், ""அதெல்லாம் சரி; இந்த உடம்புக்குள்ள எதுக்காக வந்த?'' என்று கேட்க, ""இவனும் என் சினேகிதன்தான். நான் செத்த இடத்தின் வழியா வந்ததால இவன் உடம்புல நுழைஞ் சிட்டேன்'' என்றது.
இந்த நிலையில் இறந்தபோன முனுசாமி யின் உறவினர்களெல்லாம் அங்குவந்து சேர்ந்துவிட்டனர். அவர்களது பெயர்களை யும் உறவுமுறைகளையெல்லாம் சொல்லி, பழைய சம்பவங்களையும் சொல்லத் தொடங் கியது ஆவி. இதனால் ராமசாமியின் உடலுக் குள் இருப்பது முனுசாமியின் ஆவிதான் என்பதை அனைவரும் உறுதிசெய்தனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியின் மனைவி அழுது புலம்பினாள். ""அண்ணா, நீ உயிரோட இருந்தப்ப எவ்வளவு பாசமா இருப்ப? இப்ப என் வீட்டுக்காரர்மேல வந்து புகுந்துகிட்டு என் வாழ்க்கையைக் கெடுக்கலாமா? தயவுசெஞ்சு போயிடுங்கண்ணா'' என்று கதறினாள்.
அதற்கு முனுசாமியின் ஆவி, ""கவலைப்படாத தங்கச்சி. நான் உன் வாழ்க்கைய கெடுக்கமாட்டேன். நான் போறேன். ஆனா என்னைக் கொன்னவனை பழிவாங்காம விடமாட்டேன்'' என்று கூறியது.
பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் ராமசாமி. ஊரே பின்தொடர்ந்து சென்றது. சரியாக முனுசாமி மரணமடைந்த இடத்தை அடைந்ததும் ராமசாமிக் குள் திடீரென ஒரு மாறுதல். சற்று நின்று திரும்பிப் பார்த்ததும் ஊரே திரண்டு நிற்பதைக்கண்டு வியந்து, ""நான் எதுக்கு இங்கே நின்னுட்டு இருக்கேன்? ஏன் எல்லாரும் இப்படி கூட்டமா வந்திருக்கீங்க?'' என கேட்க, ""அதெல்லாம் ஒண்ணுமில்லை'' என்று சமாதானம் சொல்லி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆவியின் வாக்குமூலத்தால், அவர் மரணத்துக்குக் காரணமானவர் இன்னார்தான் என்று ஊர் மக்களுக்குத் தெரிந்தாலும், அதை ஒரு காரணமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை யால் கைதுசெய்ய முடியவில்லை. ஏனெனில் எவ்வித சாட்சிகளும் இல்லை.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில், பெரியசாமி ஒருநாள் வீடு திரும்பவில்லை. நெடுநேரம் காத்திருந்த அவரது மனைவியும் உறவினர்களும் அவர் வரும்வழியில் தேடிச்சென்றபோது, முனுசாமி எங்கு இறந்துகிடந்தாரோ சரியாக அதே இடத்தில், அவர் எப்படி விழுந்திருந்தாரோ அதேபோன்ற கோணத்தில் பெரியசாமி இறந்து கிடந்தார்.
""பேய் அடிச்சிடுச்சுபா... அவன்தான் ஆவியா வந்து அப்பவே சொன்னானே'' என்று ஊர்மக்கள் பேசிக்கொண்டனர். 1985-ல் நடந்த இந்த சம்பவத்தை அங்குள்ள பலரிடமும் விசாரித்து பதிவும் செய்து கொண்டு வந்தேன். இதில் பகுத்தறிவுக் கேள்விகள் இருக்கின்றன.
இப்படி எல்லாருமே கொலை செய்தவர்களைப் பழிக்குப்பழி வாங்கினால் அனைவருமே திருந்தி விடுவார்கள். யாருக்கும் யாரையும் கொல்லவேண்டு மென்ற எண்ணமே வராது. யாருக்கும் தெரியாமல் கொலைசெய்து விட்டோமென்று எண்ணுபவர்களின் குட்டுகள் எல்லாம் எளிதில் வெளியாகும். குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது.
ஆனால் இது எல்லாருக்கும் நடப்பதில்லை. ஏன் சில ஆவிகள் மட்டும் அடுத்தவர் உடலுக்குள் புகும் சக்தியைப் பெறுகின்றன? இரவுநேரத்தில் அசைவ உணவு வாங்கிவரும்போதுதான் ஒரு ஆவி இன்னொரு வரைப் பிடிக்கிறது என்பதில் என்ன உண்மை? மேற்சொன்ன நிகழ்வில், நண்பனின் உடலுக்குள் இருந்த ஆவி அவன் வீட்டுக்குச் சென்றபோது, கதவைத்தட்டி உள்ளே சென்றால் அவன் மனைவியுடன் படுக்க நேரும்; அது தவறென்று திண்ணையிலேயே படுத்திருந்ததே? அப்படியென்றால் ஆவிகள் மிக ஒழுக்கம் நிறைந்தவையா? அதேசமயம் சொன்னது போல் பழிவாங்கியதே? அவ்வாறென்றால் அதிக மூர்க்கமானவையா? இவ்வாறு நிறைய கேள்விகள் வரும்.
ஆனால் இதுபற்றிய அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் கடந்த 200 ஆண்டுகளாக மேல்நாடுகளில் செய்யப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் குரல்களை டேப்ரெக்கார்டர்களில் பதிவும் செய்திருக்கிறார்கள். இதற்கு "எலக்ட்ரானிக் வாய்ஸ் பினோமினா' என்று பெயரிட்டிருக்கி றார்கள். ஆவிகளுடன் பேசுவதென்பதை பலராலும் நம்பமுடியாது என்றாலும், அவ்வாறு பேசும் ஒருசிலர் இப்போதும் இருக்கிறார்கள்.
காலஞ்சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் என்பவர் மிகப்பெரிய கம்யூனிசவாதி. நூறாண்டுகள் வாழ்ந்தவர்.
அவரும் அவரது மனைவியும் மிகுந்த அன்புடன்- இணக்கமான தம்பதிகளாக வாழ்ந்தவர்கள். அவர் தன் மனைவி இறந்தபிறகு அவருடன் பேசியிருக்கிறார் என்னும் தகவல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த கண்டு பிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன், "இறந்தவர் களுடன் பேச நாம் முயற்சிப்பது போல, அவர்களும் நம்முடன் பேச முயல்வார்கள் அல்லவா? அதற்கான கருவியை எதிர்காலத் தில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள்' என்று கூறியுள்ளார்.
1956-ஆம் ஆண்டு அனிலா அன்சாலி, ரேமாண்ட் ரேலஸ் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகள், ஆவிகளின் குரல்களைப் பதிவுசெய்தார்கள். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்கள்.
அவர்களைத் தொடர்ந்து 1959-ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் ஜர்கன்சன் என்னும் ரஷ்யநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், ஸ்வீடன் நாட்டின் கானகப் பகுதிகளுக்குச் சென்றார்.
திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக பல்வேறு பறவையினங்களின் குரல்களை டேப்ரெக்கார்டரில் பதிவுசெய்துகொண்டு திரும்பினார். பதிவான குரல்களை வீட்டில் கேட்டபோது மிகவும் ஆச்சரியப் பட்டுப்போனார். ஏனென்றால் அதில் பறவைகளின் ஒலியைவிட பல்வேறு மனிதக் குரல்கள் பதிவாகியிருந்தன.
அதுவும் பல்வேறு மொழிகளில்.
அதேசமயம், நாம் இயல்பாகப் பேசும் வேகத்தைவிட அந்த குரல்களின் வேகம் அதிகமாக இருந்ததால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவை மனிதக் குரல்கள்போலவே தோன்றின. நம்பிக்கை வராத அவர் வேறு காடுகளுக்குச் சென்று பதிவுசெய்துவந்து ஆய்வுசெய்வதைத் தொடர்ந்தார்.
அதன்படி ஒருமுறை காட்டுக்குச் சென்று பதிவுசெய்துவந்ததைக் கேட்டபோது அப்படியே ஆடிப்போய்விட்டார். ""ஃப்ரீடல்... என் செல்ல மகனே... நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா?'' என்று இறந்துபோன தாயின் குரல் ஒலித்தது! மற்றவர்கள் இவரை ஃபிரெட், ஃபிரெடி என்று சுருக்கமாக அழைப்பார்கள். தாய்மட்டும்தான் செல்லமாக ஃப்ரீடல் என்று அழைப்பார். இது உண்மைதானா என ஆய்வுசெய்ய விரும்பினார் ஃபிரெட்ரிக்.
ஜெர்மனியில் "பேரா சைக்காலஜிஸ்ட்' டாக்டர் ஹான்ஸ் பெண்டர் என்பவர், ஃபிரெட்ரிக்கின் ஒளிநாடா பதிவுகளை யெல்லாம் ஆய்வுசெய்து அவை உண்மை தான் என்று கண்டறிந்தார். அது மட்டுமல்ல; ஹான்ஸ் பெண்டர், கான்ஸ்டன்டன், ராவ்டீவ் ஆகிய மூவரும் சேர்ந்து, 1965 முதல் 1974 வரை பல்வேறு இடங்களுக்கும் சென்று சோதனைகளை நடத்தினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒளிநாடா பதிவுகளை ஆராய்ந்து, ஃபிரெட்ரிக்கின் பதிவு உண்மைதான் என்பதை, மிகப்பெரிய பேரா சைக்காலஜிஸ்ட் மருத்துவரான ஹான்ஸ் பெண்டர் நிரூபித்தார். அவருடன் பணியாற்றிய ராவ்டீவ் என்பவர் இந்த கண்டுபிடிப்பின் உண்மைகளை "பிரேக் த்ரூ' எனும் தலைப்பில் நூலாக எழுதி 1971-ல் வெளியிட்டார்.
அதன் பின்னர் விஞ்ஞானிகள் இந்த "எலக்ட்ரானிக் வாய்ஸ் பினோமினா' என்பதை ஒப்புக்கொண்டு மேலும் ஆய்வு களைத் தொடர்ந்தனர்.
ரேடியோவைக் கண்டுபிடித்த மார்கோனி தனது கடைசி 16 ஆண்டுகளில் ஆவிகளுடன் பேசுவதற்கான ஒரு கருவியைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிசெய்தார். அந்தக் குறிப்புகளை டைரியில் எழுதி வைத்துவிட்டு, என்ன காரணத்தாலோ அதை அவர் வெளியிடாம லேயே இறந்துவிட்டார். அதன்பின்னர் அவரது நண்பர்கள் மார்கோனியின் டைரியைப் பார்த்துவிட்டு அது உண்மை யென்று தெரிந்துகொண்டனர். "ஆவிகளு டன் பேசமுடியும்' என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.
ஹிட்லரின் ஆவியுடன் பேசிய மேத்யூ மார்னிங் என்பவர் மிக முக்கியமானவர். நல்லவர்களின் ஆவியைவிட கொடூரமானவர்களின் ஆவிகள்தான் சீக்கிரம் வந்து பேசுமென்பதை அறிந்து, ஒரு காட்டுக்குச் சென்று, "ஹிட்லர்! வந்து உன் குரலைப் பதிவுசெய்' என்று உரக்கக் கூறினார். எந்தவிதமான அசைவுமில்லை. வெவ்வேறு இடங்களில் பலமுறை முயன்றும் எதுவும் பதிவானதுபோல் தோன்றவில்லை. வீட்டுக்கு வந்து அமைதியாக அமர்ந்து ஒலிநாடாவை ஓடவிட்டார்... முதலில் இராணுவ அணிவகுப்பின்போது எழுப்பப்படும் "டம் டம்' என்னும் ஒலி கேட்டது! பின்னர் ஹிட்லரின் உரை கேட்டது! நாஸிக்களின் பிரபலமான பாடல் ஒலித்தது! துப்பாக்கி முழக்கங்களும் கேட்டன. மிரண்டுபோனார் மேத்யூ மார்னிங்.
அதன்பின்னர் ஹிட்லரின் உரைப் பதிவுகள், இராணுவ அணிவகுப்பு ஒலி, நாஸி பாடல் போன்றவற்றை சேகரித்து, அவற்றுடன் இந்தப் பதிவிலுள்ள ஒலி களையும் ஹிட்லரின் குரலையும், "மல்டி வேரியேட் அனலைசர்' என்ற கருவிமூலம் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, அவை உண்மையே என்று தெரிந்தது. ஆனால் இதில் பதிவான ஹிட்லரின் உரை அவர் உயிருடன் இருந்தபோது எங்கும் பேசாதது. இதை அவர் இறந்தபின்பு பேசினாரா அல்லது உயிருடன் இருக்கும்போது பேசிப் பதிவு செய்யாமல் விடப்பட்டதா என்பது தெரிய வில்லை.
"பிரேக் த்ரூ' நூலை எழுதிய ராவ்டீவ் என்பவருக்கு வலக்கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர் ரேமாண்ட் ரேலஸ் என்பவர். அவரும் எலக்ட்ரானிக் வாய்ஸ் பினோமினா என்னும் கருவியின்மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். 14-6-1974 அன்று அவர் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று ஒரு ஆவியின் குரல், "உன் வாழ்வின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. நீ வோக் மரம்போல் உறுதியானவன்தான். ஆனால் நீ கல்லறையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறாய்' என்று ஒலித்தது.
அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். உடலில் எந்தக் குறைபாடும் இல்லை. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ அறிக்கைகளும் தெரிவித்தன.
ஆனால் ஆய்வுக்கருவியில் ஆவியின் குரல்கேட்ட காரணமோ என்னவோ- அடுத்த மூன்றாவது மாதம் அவர் இறந்து போனார்!
(அதிசயங்கள் தொடரும்)