"தான் கண்ட கனவுகள் அப்படியே நடப்பதாக சிலர் கூறுகின்றனர்.

இது உண்மைதானா' என சில வாசகர்கள் கேட்டிருந்தனர். அதற்கான சிறிய விளக்கத்தை இங்கு காணலாம்.

கனவுகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிக்மண்ட் ஃப்ராய்ட் என்பவர் எழுதிய "தி ட்ரீம்ஸ்' என்னும் நூலைப் படித்திருக்கிறேன்.

சுமார் ஆயிரம் பேரின் கனவுகள் பற்றிய விவரங்களை சேகரித்து இந்த நூலை எழுதியிருக்கிறார். நமது மறந்துபோன தினைவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். நம் மனப்பதிவுகளில் சேர்ந்துவிட்ட குப்பைகளை தூசிதட்டி அகற்றுவது போன்றவையே கனவுகள். மூளை தன்னைத்தானே தூய்மை செய்துகொள்ளும் நிகழ்வு. மிக சமீபத்தில் அல்லது உறங்குவதற்கு முன் நாம் நினைத்துக்கொண்டிருப்பவையும் கனவு களாக வெளிப்படும் என்கிறார்.

Advertisment

எட்டிலிருந்து பத்து விநாடிகளுக்குள்தான் கனவுகள் வருகின்றன.

அதுவும் கோர்வையான காட்சிகளாக இல்லாமல், தனித்தனி புகைப்படங்கள் போல வெளிப்படும். அவற்றை நம் மனம் ஒன்றிணைத்து ஒரு காட்சியாக்கிக் கொள்கிறது. அந்தக் கனவுகள் பெரும்பாலும் கருப்பு- வெள்ளை நிறங் களில்தான் வரும். பல வண்ணங்களில் வருவதே உண்மையான கனவு.

"சிவப்பு சேலையில் வந்தார்; மஞ்சளாடை அணிந்திருந்தார்' என்பதுபோல.

Advertisment

சிலர் பறப்பதுபோல கனவு கண்டதாகக் கூறுவர். இது அவர்களது ஆசையாக இருக்கலாம். அல்லது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலாக இருக்கலாம். அதாவது நீர்வாழ் உயிரினங்களில் ஆரம்பித்து ஊர்வன, நடப்பன, பறப்பன என வளர்ச்சிபெற்று, இறுதியில் மனிதப் பிறப்பெடுத்து இரண்டு கால்களில் நேராக நிற்பதுவரையிலான பரிணாம வளர்ச்சி. இந்தக் கோட்பாடு இந்து மதத்திலும் உண்டு.

rr

அப்படியான வளர்ச்சியில், சுமார் இருபத்தைந்து லட்சம் ஆண்டுகளுக்குமுன் மிகப்பெரிய வவ்வால்கள்போல வாழ்ந்த ஒரு காலகட்டமும் உண்டு.

அந்த எண்ணப்பதிவுகளால்தான் பறப்பது போன்ற கனவுகள் வருவதாகச் சொல்கிறார்கள்.

கனவுகளில் சில பிரிவுகள் உள்ளன. நான் 1979-ஆம் ஆண்டு ஜூன் மாதமே ஆசிரியர் பணியிலிருந்து விலகிவிட்டேன். ஆனால், நான் பள்ளிக்குச் செல்வதுபோலவும், காலதாமதமாகச் சென்றதால் தலைமை ஆசிரியரிடம் கடிதம் எழுதிக் கொடுப்பது போலவும் இப்போது கனவு காண்கிறேன். நான் பணியாற்றியபோது ஒருநாள்கூட தாமதமாகச் சென்றதில்லை. தேர்வு எழுவதுபோலவும் கனவு வருகிறது. இவையெல்லாம் காரணமற்ற கனவுகள்.

இன்னும் நூறுகோடி ஆண்டுகளில் இந்த பூமிப்பந்தானது அழிந்துவிடும் என்று சொல்கிறார் கள். அப்படி பூமிக்கு அழிவு நேர்ந்து மனிதகுலம் முடிவடையும் காலம்வரையிலான அனைத்து பதிவுகளும் நம் மூளைக்குள் உள்ளன. பால் டேனிஷ் என்பர் 1921-ஆம் ஆண்டு, ஓராண்டு கோமா நிலையிலிருந்து பின்னர் மீண்டார். 3900-ஆம் ஆண்டில் நிகழப்போவதைக் கூறினார். இது எப்படி நிகழ்ந்தது? நமது கடைசிப் பிறவி வரையிலான பதிவுகள் அனைத்தும் நம் மூளையில் இருப்பதால்தான்.

நம் கனவில் இதுபோன்ற பதிவுகள் வந்தால் எதிர்காலம் நமக்குத் தெரியும். என் தாயார் இரண்டு மூன்று கனவுகளைச் சொல்லியிருக்கிறார். என் தம்பியும் சொல்லியிருக்கிறார். அவையெல்லாம் அப்படியே நடந்தன. ஆனால் நாம் காணும் கனவுகள் எல்லாமே பலித்துவிடாது. வண்ணத்தில் வரும் கனவுகளே எதிர்காலத்தை உணர்த்தும்.

சிலர் "பகல்கனவு காண்கிறான்' என்று சொல்வார்கள். அப்படி பகல்கனவு காண்பவர்தான் புகழ்பெறுவார். ஏனெனில் "கற்பனை என்பது அறிவைவிட உயர்ந்தது' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கெல்லாம் கற்பனையாற்றல் அதிகமாக இருக்கும். சுதந்திரத்திற்குமுன்பு மகாகவி பாரதியார், "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று பாடினார். அது நிறைவேறியது. கவியரசர் கண்ணதாசனும் ரஷ்யா ராக்கெட் விடுவதற்குமுன் "வானத்திலேறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா' என்று பாடினார். எதிர்காலத்தை உரைக்கக்கூடிய திறன் கவிஞர்களுக்கு உண்டு. காரணம் அவர்களது கற்பனைதான். அது மூளைக்குள் பதிந்துள்ள எதிர்கால நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது.

நாம் உறக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்பும்போது கண்கள் லேசாக படபடவென இமைக்கும். இதை "ரேபிட் ஐ மூவ்மென்ட்' என்பார்கள். சிலர் தூக்கத்தில் உளறுவார்கள். இதுபோன்ற சமயங்களிலெல்லாம் ஒருவரைத் தட்டி எழுப்பக்கூடாது என்பார்கள். அதற்கான காரணம் சொல்லப்படாவிட்டாலும் வழிவழியாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். தற்போது அறிவியல்ரீதியாக என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், ஒருவர் உறக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்பும் அந்த சில நொடிகளில், "ரேபிட் ஐ மூவ்மென்ட்' என்னும் இமைகள் திறந்துமூடும் நேரத்தில் ஒருவரை ஏழெட்டுமுறை தட்டினால், அவர் யாரைக் கனவுகண்டு கொண்டிருந்தாரோ அவர் உருவம் அவருக்குமுன் தோன்றிவிடுமாம். இதற்கு மூளை ரசாயனம் சார்ந்த பல்வேறு காரணங்கள் உள்ளன. "எலக்ட்ரோ லைட் இம்பேலன்ஸ்' எனப்படும் மூளையின் மின்னொளி சமநிலை தவறுதல் காரணமாக இது நடப்பதாகவும் சொல்கிறார்கள். ரசாயன சமநிலை தவறினால், நடந்திராத ஒன்றை நடந்துவிட்டதைப்போல் சொல்வார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

தூங்கி எழுந்ததும் அன்று நீங்கள் கண்ட கனவுகளை எழுதிவையுங்கள். அவை எந்த அளவில் நிறைவேறுகின்றன என்பதை நீங்களே ஆய்வுசெய்யுங்கள். "உன்னையே நீ அறிவாய்' என்றார் சாக்ரடீஸ். நமக்குள் தேடவேண்டும். "நான் யார் நான் யார்' என்று நமக்குள் கேட்டுக்கொண்டே இருந்தால் இந்த பிரபஞ்சம் நமக்கு உண்மையைச் சொல்லும். நமக்குள் நாமே மூழ்கித் தேடினால்தான் நாம் அறிந்துகொள்ள நினைக்கும் உண்மை புலப்படும்.

கனவுகள் என்பவையும் அப்படியே. நாம் காண்பதில் ஐந்து முதல் பத்து சதவிகிதக் கனவுகள் நிச்சயம் பலிக்கும்.

(அதிசயங்கள் தொடரும்)