ண்மையான ஆன்மிகம் என்பது என்னவென்று எழுதுமாறு சில அன்பர்கள் கேட்டனர். அது மிகப்பெரிய விஷயம். அது குறித்து விளக்குமளவுக்கு நான் பெரியவனல்ல.

இருந்தாலும் என் அறிவுக்கு எட்டியவரையில், அனுபவப் பாடங்களில் அறிந்தவற்றைக்கொண்டு சில விஷயங் களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த அறுபது ஆண்டுகளில் திருமுருக கிருபானந்த வாரியார், உபன்யாசகர் கீரன், தலையாட்டிச் சித்தர், புரவிப்பாளையம் கோடி சாமியார் போன்ற பல ஆன்மிக வாதிகளை சந்தித்திருக்கிறேன். சந்திக்காதவர்கள் மிகக்குறைவு.

மனித இனம் உருவாகி 25 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

rajeshsir

ஹோமோ அபிலிஸ் என்னும் மனித இனம் 20 லட்சம் வருடங்களுக்குமுன் இருந்தது. அடுத்து ஹோமோ எரக்டஸ் என்னும் இனம் ஏழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் இருந்தது. இதுபோல மனித இனத் தின் உருவத்தோற்றங்கள் கொஞ்ச கொஞ்சமாக மாறுதலடைந்து, தற்போதுள்ள ஹோமோ சேஃபியன் என்னும் வடிவத்துக்குப் பரிணாமம் பெற்றுள்ளோம்.

இந்த 25 லட்சம் ஆண்டுகளில், மனிதன் எவற்றைக் கண்டெல்லாம் அஞ்சினானோ அவற்றையெல்லாம் கடவுளாக வழிபடத் தொடங்கினான். இடி, மின்னல், புயல், வெள்ளம், பெருமழை என்று மனித இனத்தை பயமுறுத்திய எல்லாம் வணங்கத்தக்கவையாகின. இவ்வாறு இந்த பிரபஞ்சத்தைப் பார்த்து அஞ்சியவர் கள், பின்னர் அவரவர் வாழ்ந்த இடத்தின் தன்மைக் கேற்ப மதங்களைத் தோற்றுவித்தனர். தற்போது உலகில் 4,200 மதங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பன்னிரண்டு மதங்கள் பெரியவை. நம் நாட்டில் நான்கைந்து மதங்கள் பெரியவை.

உலகளவில் 12 பெரிய மதங்கள் தங்களுக்கென்று ஒரு கடவுளைக் கொண்டுள்ளன. அப்படியென்றால் கடவுள் ஒருவரா அல்லது பன்னிரு வரா? ஒவ்வொரு மதத்தினருமே தங்களுடைய கடவுளே உயர்ந்தவர்; அவர் மட்டுமே கடவுள் என்கின்றனர். இதன் பேரால் பல்வேறு கலவரங்கள், போர்கள் நடந்திருக்கின்றன. பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மனித உயிர்களும் கொல்லப்பட் டிருக்கின்றன. திருஞான சம்பந்தர் காலத்தில் 3,000 சமணர்கள் கமுவேற்றிக் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அப்படியென்றால் இவற்றையெல்லாம் காணும் கடவுள் வருத்தப் பட மாட்டாரா? தனது பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சண்டையிட் டுக் கொள்வதை ஒரு தந்தை வேடிக்கை பார்ப்பாரா? இது போன்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

மிகப்பெரிய மனிதர்கள் பலர் தங்களை மதத்தின் பெயரால் அடையாளப்படுத்திக் கொண்ட தில்லை. தாமஸ் ஆல்வா எடிசன், ஷேக்ஷ்பியர், கோல்ட் ஸ்மித், மில்டன் போன்ற எவரும் தங்களை கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொண்டதில்லை. கிறிஸ்துவ மதத்தில் மட்டும் 650 பெரிய பிரிவுகள் உள்ளன. இவ்வளவு பிரிவு களையும் ஒன்றிணைக்க வேண்டு மென்று எவரும் முயன்றதில்லை.

அவர்கள் அதுபற்றி கவலைப் பட்டதுமில்லை. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்களை கிறிஸ்துவர் கள் என்று கூறிக்கொள்வதுமில்லை. "நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன்; இத்தாலியிலிருந்து வருகிறேன்' என்று நாட்டைக் குறிப்பிடுவார்களே தவிர மதத்தைக் குறிப்பிடுவதில்லை. இங்கு மட்டும் ஏன் பிரித்துப் பேசிக்கொள்கிறார் கள் என்பது புரியவில்லை.

உண்மை, வாய்மை, நேர்மை என்னும் மூன்றும் இருப்பவரே சிறந்த ஆன்மிகவாதி. மனசாட்சி தான் கடவுள். "கடந்து உள்ளே செல்' என்பதே கடவுள். யார் மனமாவது புண்படும்படி பேசினால் அதுவே ஒரு பாவம். அடுத்தவருக்கு தீங்கு செய்ய நினைப்பதும் பாவம்; சொல்வதும் பாவம்; செய்வது அதை விட பெரிய பாவம். இன்னொரு மதத்தினரை வெறுப்பது கூடாது. அவர்களும் ஒரு கடவுளைத்தானே வணங்குகிறார்கள்? கடவுள் நம்பிக்கை என்பது ஒரு சமூகத்துக்கு அவசியமான ஒன்று. ஒரு மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையைப் போக்கிவிட்டோம் என்றால், அவன் உடலி-ருக்கும் ரத்தத்தை வெளியேற்றியவன்போல ஆகிவிடுவான்.

சிக்மண்ட் ஃபிராய்ட் என்னும் அறிஞர் உடல், உள்ளம், சமூகம் என மூன்றாக வகைப்படுத்துகிறார். அவரவர் பிறந்த நிலப்பகுதி, உணவுப்பழக்கம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டது உடல்.

மனோதத்துவரீதியாக அமைவது உள்ளம். அடுத்தது அவரவர் சமூகம் சார்ந்த மரபுகள். காரல் மார்க்ஸ் கருத்தியல், சட்டம்- ஒழுங்கு, சமுதாய அமைப்பு என்று பிரிக்கிறார். ஒருவன் குடிப்பழக்கம் உள்ளவன் என்றால் அவனை தண்டிக்க சட்டம் எதுவுமில்லை. இங்கு அரசே மதுக்கடைகளை நடத்துகிறது. அவன் குடித்து விட்டு ஏதேனும் தகராறு செய்தால்தான் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வரும். ஆனால் சமுதாயம் குடிப்பழக்கம் உள்ளவனைப் பார்த்து அருவருக்கும். இதுவே கருத்தியல்.

அதுபோல ஒருவன் தன் மனைவியையும் தவிர வேறொரு பெண்ணிடம் உறவு வைத்திருந் தால், அவன் மனைவி புகார் செய்தாலன்றி அவனை சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாது.

ஆனால் சமூகம் ஏளனமாகப் பேசும்.

இந்த உலகத்தில் பெரும்பாலான குற்றங் கள் மண், பெண் என்னும் இரண்டின் அடிப் படையிலேயே நடக்கின்றன. அதனைக் கொண்டே இராமாயணம், மகாபாரதம் என்னும் இரு மாபெரும் இதிகாசங்கள் இயற்றப்பட்டன. அடுத்தவர் மனைவி மீது ஆசை கொள்ளக்கூடாது என்று இராமாயணமும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைகொள்ளக் கூடாது என்று மகாபாரதமும் வலியுறுத்து கின்றன.

உலகப் பொதுமறையான திருக்குறள் மிக ஆச்சரியமான ஒன்று. இந்த உலகமக்களின் முழு வாழ்க்கையும், 360 பாகைகளையும் பிரித்து ஏழு சீர்கள் கொண்ட ஈரடி குறள்களில் அடக்கிவிட்டார். 133 அத்தியாயங்கள், 1,330 குறள்கள். இவற்றின் கூட்டு எண்ணிக்கையும் ஏழுதான்.

"தியரி பிராக்டீஸ்' என்பார் லெனின். தத்துவத்தை செயல் படுத்துவது. கம்யூனிசம் ஒரு நல்ல தத்துவம். அதுபோல மதங்கள் நல்லவைதான். கொள்கைகள் நல்லவைதான். பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து நூல் களும் நல்லவைதான். ஆனால் அதை யார் நடைமுறைப்படுத்து வது? திருக்குறள் நெறிப்படி ஒவ்வொரு மனிதனும் வாழ ஆரம்பித்துவிட்டால் இவ்வுல கில் காவல்நிலையங்கள், சிறைச் சாலைகள், பதிவுநிலையங்கள் என எதுவுமே தேவையில்லை. ஆனால் நடைமுறைப்படுத்து வதில் உள்ள சிக்கல்கள்தான் அனைத்துக்கும் காரணமாக அமைகின்றன.

மதம் என்பது தனிப்பட்ட விஷயம். சிலர் அதை கட்சியாகவும், கொள்கை யாகவும் மாற்றிவிட்டனர். இரண்டு உலகப் போர்கள் நடைபெற்றன. அது இரண்டு கிறிஸ்துவர்களுக்கிடையே நிகழ்ந்த போர்தான். கிறிஸ்துவர்கள் என்றால் என்ன அடையாளம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை திருப்பிக்காட்டவேண்டும். ஆனால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் உலகில் 84 நாடுகளை அடிமைப்படுத்தியது. ரஷ்யாவில் உள்ளவர்களும் கிறிஸ்துவர்கள்தான்.

அமெரிக்கர்களும் கிறிஸ்துவர்கள்தான். என் றாலும் போரிட்டுக் கொண்டார்களே! மதம் மனிதர்களை இணைக்காது. மொழி மனிதர் களை இணைக்காது. பொருளாதாரத்துடன் கூடிய நட்புறவே அவர்களை இணைக்கும்.

இந்த பிரபஞ்சத்தை யார் அதிகம் தெரிந்துகொள்கிறார்களோ அவர்களுக் கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருக்காது. இந்த பூமியின் குறுக்களவு எட்டாயிரம் மைல்கள், பூமி சூரியனைச் சுற்றிவரும் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 66,000 மைல்கள், சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 28 நாட்கள், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட், உள்மைய வெப்பம் ஒரு கோடி டிகிரி சென்டிகிரேட், ஒரு நொடிக்கு 1,86,564 மைல் கடக்கக்கூடிய ஒளியானது நமது அண்டத்தைக் கடக்க ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன... இதுபோன்ற பிரபஞ்ச அறிவியலை அறியத் தொடங்கிவிட்டால் அவர் களுக்கு கடவுள் பற்றிய சந்தேகம் வந்துவிடும்.

ஆனால் பிரபஞ்சத்துக்கும் நம் உள்ளத்துக்கும் ஒரு தொடர்புண்டு என்பது குறித்து ஜோசப் மர்ஃபி என்பவர் ஒரு அருமையான நூல் எழுதியிருக்கி றார். "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்' என்பது சித்தர் கள் வாக்கு. "மனமது செம்மை யானால் மந்திரம் தேவையில்லை' என்கிறார் திருமூலர். மனசாட்சிக்கு மிஞ்சிய கடவுளே இல்லை. தவறு என்று பெரியோர்கள் சொன்னதை விலக்கி, மனசாட்சிக்கு அஞ்சி யாரொருவர் உண்மையுடனும் வாய்மை யுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்கிறாரோ, அவரே உண்மையான ஆன்மிகவாதி. மதம் என்பது மனிதனுக்கு ஒரு ஊன்றுகோல். அதைத் துணைக்கொண்டு நல்லவராக வாழ்வதே ஆன்மிகம்.

(அதிசயங்கள் தொடரும்)