திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தன் தொழில், குடும்ப முன்னேற்றத்திற்காக ஜோதிடம் பார்த்திருக்கிறார். அவரது ஜாதகத்தை வெகுநேரம் அலசிப் பார்த்த ஜோதிடர், "உங்கள் மகன் என்ன செய்கிறார்?'' என்றதும், "அவன் ஒரு வேலையுமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்'' என்றாராம்.

"ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. அதன்படி சில மாதங்கள் தந்தையும் மகனும் ஒருவரையொருவர் பார்க்காமிலிருப்பது நல்லது'' என்ற ஜோதிடர், எண்ணி "இத்தனை நாட்கள் பிரிந்திருக்க வேண்டும்' என்றும் சொல்லியிருக்கிறார்.

"அப்படி மீறிப் பார்த்தால், தந்தை தன் மகனுக்குக் கொள்ளிவைக்க நேரிடும். இது விதி. இதைத் தவிர்த்திருப்பது நல்லது'' எனவும் எச்சரித்தார். அதன்படி அவர் தன் மகனை கோவைக்கு அனுப்பி, "அங்கே வியாபார அலுவலகத்தைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் என்னைப் பார்க்க சென்னைக்கு வரக்கூடாது' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம்.

மகனும் அப்பாவின் கட்டளைப்படி கோவைக்குச் சென்றுவிட்டார். தந்தையும் கோவைக்குச் செல்வதைத் தவிர்த்து, சென்னை யிலேயே தங்கி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.

Advertisment

சரியாக ஜோதிடர் சொன்ன காலக்கெடு முடியும் தறுவாயில் விதி ஒரு காகிதமாக வந்தது. கோவையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து வருவதாக ஏற்பாடாகி இருந்தது. செல்போன் மற்றும் கூரியர் இல்லாத காலம் அது.

சென்னையிலிருந்து கோவை அலுவலகத் துக்கு டிரங்காலில் பேசும்போது, "மேனேஜர் தான் கடிதத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்' என்று "ஆபீஸ் பாய்' கூறியிருக்கிறான்.

அதனைக் கேட்டு நிம்மதியிடைந்திருக்கிறார் தந்தை.

Advertisment

ஆனால், கடைசி நேரத்தில் மேனேஜரிடமிருந்து அந்தக் கடிதத்தை மகன் வாங்கிக்கொண்டு ரயில் ஏறி விட்டார். "வெகு நாட்களாக என் நண்பர்களைப் பார்க்கவில்லை. கடிதத்தைக் கொடுத்துவிட்டு பகலில் நண்பர்களைப் பார்த்து விட்டு நாளை இரவே ரயில் ஏறி கோவை வந்துவிடுகி றேன். அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்'' எனக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

rr

விதியின் உண்மையை அறியாத மேனேஜர், வேறுவழியின்றி கடிதத்தைக் கொடுத்து விட்டார்.

மறுநாள் சென்னை வந்து இறங்கிய மகன், தந்தையின் அலுவலகத்திற்கு வந்து ஆபீஸ் பையனிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, "நான் வந்து கொடுத்ததாக அப்பாவிடம் சொல்லிவிடாதே!'' என்று எச்சரித்துவிட்டு, தனது நண்பர்களைப் பார்க்கச் சென்று விட்டார்.

அன்று பகல் 11.00 மணியளவில் தந்தை, காரில் நுங்கம்பாக்கம் வழியாகச் செல்லும்போது, எதிரே ஒரு ஸ்கூட்டரின் பின்னே தன் மகன் செல்வதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். உடனே தன் அலுவலகத்திற்குத் திரும்பி வந்து கோவைக்கு டிரங்கால் போட்டு, நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்டார்.

"இன்னும் இரண்டு, மூன்று நாட்கள்தானே அந்த கெடு இருக்கிறது. இதற்குள் எதற்கு வந்தான்?' எனக் கடிந்துகொண்டு, "எப்படி யாவது என் மகனைக் கண்டுபிடித்து கோவைக்கு ரயிலில் ஏற்றிவிட்டுவிட்டுதான் வரவேண்டும்' என ஆபீஸ் மேனேஜரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, தானும் எங்கும் வெளியேறாமல், அனைத்து அலுவல் களையும் தவிர்த்துவிட்டு ஆபீஸிலேயே தங்கிவிட்டார்.

மேனேஜர் சென்னை முழுவதும் முதலாளியின் மகனுடைய நண்பர்களைத் தேடி அவர்களைத் தொடர் புக் கொண்டு, அவருடைய மகனைக் கண்டுபிடித்து, சென்டிரல் ஸ்டேஷனில் வண்டி புறப்படும்வரை இருந்து அனுப்பிவிட்டு வந்தார்.

ஆனால், துரதிர்ஷ் டம்! ரயிலில் சென்ற மகன் தன் நண்பன் ஒருவனைப் பார்த்ததும், பிளாட்பாரத்தை ரயில் கடப்பதற்குள் ரயிலில் இருந்து கீழே இறங்கி விட்டான். அந்த நண்பனும், "நானும் கோவை வரவேண்டி இருக்கிறது. இன்று ஜாலியாக இருந்துவிட்டு, இரண்டு பேரும் நாளை போகலாம்'' என அவனை அழைத்தான். அவ்வளவுதான்...! எடுத்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை வாங்கிக்கொண்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப் பட்டுவிட்டனர்.

இரவு நன்றாகக் குடித்துவிட்டு, இரண் டாவது காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு, வாகனத்தில் அதிவேகமாக தேனாம்பேட்டைக்கு வரும்போது லாரியில் அடிபட்டு- இருவரும் படுகாயமடைந்து- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை யளித்தும் பலனின்றிக் காலமானார்கள்.

மகன் கோவைக்குச் சென்றுவிட்டான் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு, அதிகாலை நான்கு மணிக்கு மருத்துவமனையிலிருந்து போன் வருகிறது. "உங்கள் மகன் உடல் "மார்ச்சுவரி'யில் இருக்கிறது. உடனே புறப் பட்டு வரவும்'' என்று காவல்துறையினர் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றவர், தன் மகனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். அன்றுதான் ஜோதிடர் கூறிய அந்த "காலக்கோடு' முடிகிறது!

இது சற்று நெருடலான சம்பவம். ஜோதிடம் உண்மை என்பதற்காகதான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நெல்விளைச்சலுக்குப் பெயர்பெற்ற மண்ணில், நிலக்கிழாரும் பெரிய வியாபாரியுமான ஒருவர் இருந்தார். அவர் உணவு தானியங்களை அதிக அளவில் வாங்கி மொத்த வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி, கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலை பார்த்துவந்த டிரைவரிடம் நெருங்கிப் பழகினார்.

அந்த டிரைவர் வெகுகாலமாக அவர்களது வீட்டில் வேலை செய்து வருபவர். மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும், நேர்மையாகவும், அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராகவும் இருந்து வந்திருக்கிறார்.

கணவன் வெளியூர் செல்லும்போதெல் லாம் மனைவி, தானியங்கள் உள்ள கிடங்கில் கணக்குப் பார்ப்பதற்காக ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு, டிரைவர் உதவியுடன் அங்குள்ள மூட்டைகளைக் கணக்கெடுத்திருக்கிறார். நாளடைவில் அவர் களிடையே பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கணவனுக்கும், மனைவிக்குமிடையே அதிக வயது இடைவெளி இருந்ததும் இதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பார்கள். எந்தவொரு திருட்டுத்தனத் தையும் சிலநாள் மறைக்கலாம்; பலகாலம் மறைக்கமுடியாது. "சில வீடுகளுக்குள் நடக்கும் அதிசயங்கள், தெருவில் போகிறவர்களுக்குத் தெரியும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு கடைசியில்தான் தெரியும்' என்கிற முதுமொழிக்கேற்ப இந்த விஷயம் கணவனின் காதுக்கு எட்டியது.

அவர் அடிக்கடி ஒன்றை சொல்லிக் கொண்டு இருப்பாராம். "நம்முடைய மானம் போகிற அளவுக்கு யாராவது நமக்கு துரோகம் செய்தால், அவர்கள் யாராக இருந்தாலும் உடனே தீர்த்துக்கட்டிவிட வேண்டும். அது மனைவியாக இருந்தாலும் சரி- பிள்ளையாக இருந்தாலும் சரி' என்பாராம்.

மனைவியின் செயல்களை முழுவது மாகக் கேட்டறிந்த அவர் மிகவும் கோபப் பட்டிருக்கிறார். பிறகு, தன்னிடம் உண்மை யாக உழைத்த ஆட்கள் சிலரையும், வெளியிலிருந்து சிலரையும் அணுகி, டிரைவரை கொன்றுவிடுமாறு கூறியிருக்கிறார். அதன் படியே கூலிப்படையினர் டிரைவரைக் கொன்றுவிட்டனர். பின்னர் காவல் துறை யினர் அவர்களைக் கைதுசெய்தனர்.

கொலை செய்தவர்களின் குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் இவரே செய்திருக்கிறார். கொலை செய்தவர்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை பெற்று பழையபடி சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

அதே ஊரில் அரசியல் கட்சியில் நல்ல பொறுப்பில் ஒருவர் இருந்தார். அவர் ஜோதிடத் தில் அதிக ஈடுபாடுள்ளவர். யாராவது புது ஜோதிடர் அந்த ஊருக்கு வந்தால், அவரைத் தான் முதலில் சென்று பார்ப்பார். ஜோதிடரி டம் பல பரீட்சை வைத்துப் பார்ப்பார். அதை வைத்து ஜோதிடருடைய அறிவை நன்றாக அளந்துவிடுவார்.

அதனால் 100-க்கும் மேலானவர்களின் ஜாதக நோட்டுகள் அவரிடம் இருந்தன. இறந்த வர்களின் ஜாதகமும் மற்றும் பல்வேறு வகை யான, மிகவும் சுவாரசியமான மனிதர்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய ஜாதக நோட்டு களையும் அவர் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்தி ருந்தார். அப்படி சேகரித்த ஒரு நோட்டை, அவ்வூரைச் சேர்ந்த பெரிய ஜோதிடரிடம் கொடுத்துப் பலன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய நண்பரின் சிபாரிசில் ஒரு திறமையான ஜோதிடர் வெளியூரிலிருந்து இவரிடம் வந்திருக்கிறார். இவர், கொலை செய்யப்பட்டு இறந்துபோன டிரைவரின் ஜாதகத்தையே கொடுத்து அவரிடம் பலன் கேட்டிருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்த புதிய ஜோதிடர், சில நிமிடங்கள் கழித்து இவரிடம், "இந்த ஜாதகத்திற்கு சொந்தமான ஆள் இப்பொழுது உயிருடன் இருக்கமாட் டார்'' என்று சொல்லியிருக்கிறார். உடனே இவர், "அவர் இறந்து எத்தனை வருடங்கள் இருக்கும்?'' என்று கேட்டுள்ளார். அதற்கு பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு, "அவர் இறந்து எப்படியும் 15 ஆண்டுகள் இருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.

உடனே, "இல்லை... இல்லை. அவர் இன்னும் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார்'' என்று இவர் பொய் சொல்லியிருக்கிறார். அதற்கு ஜோதிடர், "அந்த ஆள் இறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்'' என்று அடித்துச் சொல்லி யிருக்கிறார். இதைக் கேட்ட அந்த ஆராய்ச்சி யாளர் சப்த நாடியும் அடங்கிப்போய், சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லையாம்.

அந்த நிலையில் ஆராய்ச்சியாளரின் மனைவி இதுதான் தக்க தருணம் என்று நினைத்து அவரிடம், "உங்களுக்குத் தேர்தலில் போட்டியிட தொகுதி கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் வெற்றிபெறுவீர்களா என்று ஜோதிடரிடம் கேளுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.

உடனே இவர் தனது ஜாதகத்தை ஜோதிடரி டம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிப் பார்த்து கணக்குகளைப் போட்டு விட்டு, "உங்களால் அரசியலில் பெரிய அளவில் பெயர்பெற முடியாது. நீங்கள் கடைசிவரை கட்சியில் தொண்டனாகத்தான் இருக்கமுடியும். அது மட்டுமல்லாமல் தற்போது நடக்கின்ற நேரமும் உங்களுக்குச் சாதகமாய் இல்லாமல் இருப்பதோடு, மிகவும் பாதகமாக உள்ளது'' என்று பலன் சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டதும் அவருடைய வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. காரணம், மிகவும் நம்பிக்கையாக- இவருடைய பெயரை வேட்பாளராக எழுத சுவர்களையும் பிடித்து, சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் எல்லாரும் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆராய்ச்சியாளர், "தலைவரிடம் நேற்று முன்தினம்கூட பேசினேன். தொகுதி உறுதி என்று வாக்களித்தார். அதனால் எனக்கு பயமில்லை. ஆனால், ஜோதிடர் சொன்னதால்தான் சற்று குழம்பி நிற்கிறேன்'' என்றா ராம்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்ட இவருடைய மனைவி மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். காரணம், கணவர் அரசியலில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. கையில் இருக்கிற பணத்தை யெல்லாம் கட்சிக்கு செலவு செய்கிறார் என்பதுதான் காரணம்.

அதன்பிறகு அதே பெரிய தலைவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "எதற்கும் கவலைப் பட வேண்டாம். அடுத்த இடைத்தேர்தலில் பார்ப்போம். இந்தத் தேர்தலில் சில முக்கியமான அரசியல் காரணங்களால் வேறு ஒருவருக்கு உன்னுடைய தொகுதியைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது'' என்றாராம். இந்த செய்தியைக் கேட்டதும் அவர், "ஜோதிடம் வென்றது. ஜோதிடர் ஜெயித்துவிட்டார். நான்தான் தோற்றுவிட்டேன்'' என்றாராம்.

(அதிசயங்கள் தொடரும்)