ஆனித்திருமஞ்சனம்- 8-7-2019
அமர்நீதி நாயனார்- ஆனிப்பூரம்- 7-7-2019
மும்பை ராமகிருஷ்ணன்
வைணவர்களுக்குக் கோவில் என்றால் திருவரங்கம்; சைவர்களுக்குக் கோவில் என்றால் சிதம்பரமே. பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத் தலம். கருவறையில் பஞ்சலோக நடராஜரைத்தான் காணலாம். தினம் அபிஷேகம் ஆதிசங்கரர் கயிலையிலிருந்து பெற்றுவந்த ஸ்படிக லிங்கத்திற்கே. ஆரத்திகள் முடிவில், பக்கத்தில் மறைவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தங்க வில்வ மாலைக்கே! இதையே சிதம்பர ரகசியம் என்பர். இரவு கடைசி ஆராதனை சமயம், எல்லா சிவன் கோவில் மூர்த்திகளும் இங்கே ஐக்கியமாகின்றனர் என்பது ஐதீகம். நடராஜர் அபிஷேக வெண்பா சிந்திப்போமா-
"சித்திரையில் ஓண முதற்சீர் ஆனி உத்திரமாம்
சத்து தனுவாதிரையும் சார்வாரும்- பத்திவளர்
மாசியரி கன்னி மருவு சதுர்த்தசி மன்று
ஈசர் அபிஷேக தினமாம்.'
(நட்சத்திரம் காலையிலும், திதி மாலையிலும் அபிஷேகம்).
நடராஜருக்கு பஞ்ச சபை என்பர். அவை:
கனக சபை (பொன்னம் பலம்)- சிதம்பரம்- ஆனந்த தாண்டவம்.
ரஜதசபை (வெள்ளியம் பலம்)- மதுரை- சந்தியா தாண்டவம்.
தாமிரசபை- திருநெல்வேலி- முனி தாண்டவம்.
சித்ரசபை- திருக்குற்றாலம்- திரிபுர தாண்டவம்.
ரத்னசபை- இந்திர சபை- (திருவாலங்காடு) காளி தாண்டவம்.
சிதம்பரத்தில், ஸதாரா (மகாராஷ்டிரா) மத்திய சிதம்பரத்தில் 108 நடனச் சிற்பங்கள் காணலாம். நடராஜ சகஸ்ரநாமமும் அவ்வாறே கூறும்!
சிவன் திருநடனம் புரிந்த தலங்களை சப்தவிடங்கத் தலங்கள் என்பர்.
1. திருவாரூர்- வீதிவிடங்கர்- அசபா நடனம்.
2. திருநாகைக் காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்.
3. திருக்காறாயில்- ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.
4. திருக்கோளிலி- அவணிவிடங்கர்- பிருங்க நடனம்.
5. திருமறைக்காடு- புவனிவிடங்கர்- ஹஸ்தபாத நடனம்.
6. திருவாய்மூர்- நிலவிடங்கர்- கமல நடனம்.
7. திருநள்ளாறு- நகவிடங்கர்- உன்மத்த நடனம்.
நடராஜர் அபிஷேகங்களில் பரவலாக அனைவரும் அறிந்தது ஆனித் திருமஞ்சனமும், மார்கழித் திருவாதிரையுமே!
இப்போது ஆனிப்பூர அமர்நீதி நாயனா ருக்கு வருவோம். அவரது காலம் கி.பி. 400 முதல் 600-க்குள் என்பர். ஔவையார், "தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே' என்பார்.
நம்பியாண்டார் நம்பி அருளிய "திருத்தொண்டர் திருவந்தாதி', அமர்நீதி நாயனாரை இவ்வாறு போற்றும்.
"மீண்டும் பொழிற் பழையாறை
அமர்நீதி வெண்பொறையின்
முண்டந்தரித்த பிராற்கு
நல்லூரின் முன்கோவணநேர்
கொண்டு இங்கு அருள் என்று தன்
பெரும் செல்வமும் தன்னையும் தன்
துன்பமதி நுதலானையும்
ஈந்த தொழிலனே!'
சேக்கிழார் இதனைக்கொண்டே பெரிய புராணத்தை விரிவாகச் செய்தார். அவர் "திருத்தொண்டர் நாமக்கோவை' என்று நாயன்மார்கள் பெயரைக் கூறி-
"தொடையாகப் பாடியவன் தொண்டர்- அடியிணைகள்
சிந்தனை செய்து இந்தத் திருநாமக் கோவைதனை
மந்திரமாகக் கொண்டு மயிர் சிலிர்த்து- நைந்துருகி
மெய்யன்பால் என்றும் விளம்பப் பெறுவார்கள்
கைதவமும் புல்லறிவும் கற்பனையும் மையலும் தீர்ந்து
அத்வைதானந்த அகண்ட பரிபூரணத்தில்
நித்யமாய் வாழ்வார் நிசம்'
என்பார். (கண்ணால் காணாத ஈசனைப் போற்றுவதைவிட ஈசனடியார் நாமம் சிந்தித்தலே போதும்; உய்யலாம்).
சேக்கிழார் பெரிய புராணத்தில் அமர் நீதி நாயனார் சரிதத்தை 502-549 துதிகளில் வர்ணித்துள்ளார்.
புனித காவிரி நதியோடும் கும்ப கோணத்திற்கு மேற்கே "பழையாறை' என்ற தலத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதியார். குலப்பெருமையும் நற்குணங்களும் பொருந்திய சீலர்; சிவபக்தர். பொருட்களை நியாய விலையில் விற்றதால் மக்கள் பேராதரவுடன் வாங்கிட, அவர் பெரும் தனவந்தரும் ஆனார். இத்தலம் இப்போது "ஆறைமேற்றளி, ஆறைதென்றளி, ஆறைவடதெளி, கீழைப்பறையாறு' என பல பிரிவாய் உள்ளது.
சிவனடியார்க்குத் தொண்டுசெய்ய விரும்பினார் அமர்நீதியார். ஆக, அருகே யுள்ள பெருமைவாய்ந்த நல்லூர் எனும் சிவத்தலம் வந்துசேர்ந்து மடமும் கட்டினார்.
திருவிழாக்காலங்களில் சிவனை தரிசிக்க வரும் அடியார்களுக்கு இருக்க இடம், உடுக்க உடை (கோவணம்), உண்ண உணவு யாவும் இலவசமாகவே அன்புடன் ஈந்தார். சிவனடியார்களும் அவரது சிவபக்தி, சிவனடியார்கள் தொண்டால் மகிழ்ச்சியடைந்தனர். ஆசிகள் கூறினர். இதனால் இவர் தொண்டு மேலும் பெருகியது.
வளர்ந்தது.
திருநல்லூர் தலச்சிறப்பைச் சிறிது சிந்திப்போமா-
சிவன்: பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், பெரியாண்டவர்.
அம்மை: கல்யாண சுந்தரி. அப்பர்-2, சம்பந்தர்-3 என ஐந்து பதிகங்கள் இத்தலத்துக்கு உண்டு.
அப்பர் பெருமான் வேண்ட, சிவன் இத்தலம் வருமாறு பணித்து தமது திருவடி சூட்டியருளினார். அவர் பாடிய ஒரு தேவாரம் சிந்திப்போமா!
"நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார்
நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே.'
இத்தலத்துக்கு வேறு சிறப்புகள் என்ன?
இறைவன் பொன்வண்ணன். ஆறு நாழிகைக்கு ஒருமுறை ஐந்து வண்ணமாக மாறுவதைக் காணலாம். அகத்தியருக்கு சிவன் கல்யாண தரிசனம் தந்த தலம். அகத்தீஸ்வரர் லிங்கம் சிவனுக்கு அருகிலேயே உள்ளது. சாளக்கிராமத்தினால் செய்யப்பட்ட மிக அழகிய பிள்ளையாரைக் காணலாம். மாடக்கோவில். லிங்கத்தில் சில துளைகள் உள்ளன. பிருங்கி முனிவர் துளைத்து வணங்கிய சிவன் என்பர். சுயம்பு லிங்கம்.
கோவில் எதிரே சப்த சாகர தீர்த்தம் உள்ளது. குந்தி தன் முதல் புதல்வன் கர்ணனை நீரில் இட்ட சாபம் அழிய, நீராடி வழிபட்டு சாந்தியடைந்த தலம். மாசி மகத்தில் இதனில் நீராடி 12 முறை வலம்வர, நலம் பெறலாம்; உடல்பிணிகள் நீங்கும் என்பர். அஷ்டபுஜ காளியும் மிக வரப்ரசாதி. சிவனுக்கு பழச்சாறு அபிஷேகம் விசேஷம். ஆண்டுக்கு ஒருமுறை பலிபீடத்திற்கு பிரத்யேக அபிஷேக ஆராதனைகள் உண்டு. இதுவும் ஒரு தனிச்சிறப்பு.
ஆக, திருநல்லூர் தலம், சிவன் திருவருளை அள்ளிப்பொழியும் நல்ல திருத்தலம் என்பர் சிவனடியார்கள்.
சிவபெருமானே தன் தொண்டரின் தொண்டினை மெச்சி ஆட்கொள்ள விரும்பினார் போலும். எனவே ஒரு லீலை புரிந்தார்.
தன் மடத்தின் பக்கம் சிவனடியார் ஒருவர் கோவணம் அணிந்து, தனது தண்டத்தில் இரு கோவணத்தை வைத்துக்கொண்டு, உடல் முழுவதும் விபூதி பூசி, சடையுடன் வருவதைக் கண்ட அமர்நீதியார், ""முன்னே வந்திராத நீவிர் தரிசனம் தந்தது என் தவப்பயனே'' என்று கூறி வரவேற்றார்.
இதை சேக்கிழார்-
"வடிவு காண்டலும் மனத்தினும் மிகமுக மலர்ந்து
கடிதுவந்து எதிர்வணங்கி இம்மடத்தினிற் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில்தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர்
அமர்நீதி அன்பர்'
என்று வர்ணிக்கிறார். வந்த அடியாரும், ""உமது தொண்டு, பெருமை கேட்டே உவந்து இங்கு வந்தோம்'' என்றார்.
அமர்நீதியார் மிகப்பணிந்து, ""நான்மறை வேதியர்களும் உண்ணத்தக்கவாறு இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. அடியார் இங்கிருந்து, உண்டு களித்து, சிரமப்பரிகாரம் செய்து, வேண்டும் உடைபெற்று ஆசிர்வதிக்கவும்'' என வேண்டினார்.
சிவனடியாரும், ""நான் நீராடிவிட்டு வருகிறேன். இடையே மழை பெய்தால், தண்டத்தில் வைத்திருக்கும் இரு கோவணமும் நனைந்துவிடும். எனவே இதில் ஒன்றை மிக பத்திரமாக வைத்திரு. வந்து பெற்றுக்கொள்கிறேன்'' என்று கூறிச்சென்றார்.
அம்ர்நீதியாரும் அடியாரின் கோவணத்தை தனியிடத்தில் வெகுபத்ரமாகத்தான் வைத்தார்.
சிறிது நேரங்கழித்து சிவனடியார் வந்தார். உடல் நனைந்து காணப்பட்டது. ""அமர்நீதியாரே, யாம் நினைத்தபடி மழை பெய்து நனைந்தோம். உன்னிடம் கொடுத்ததையும் எடுத்துச்சென்றிருந்தால் அதுவும் ஈரமாகியிருக்கும். சரி... எனது காய்ந்த கோவணத்தைத் தருக'' என்றார். ""அப்படியே'' என்ற அமர்நீதியார் அதை பாதுகாப்பாக வைத்திருந்த இடத்துக்குச் சென்று பார்க்க, அது அங்கில்லை. அதிர்ச்சியடைந்த அமர்நீதியார் "என்ன விந்தை இது' என்று, வேறொரு புதிய பட்டுக்கோவணத்தை எடுத்துச்சென்று, நடந்த விவரத்தைக் கூறி, அதை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டார். அடியாரோ, ""எனது பழைய கோவணமே தேவை. புதியது வேண்டாம்'' என்றார் கோபத்துடன்! அமர்நீதி யார், ""அடியாரது ஆடையை நான் திருடவில்லை; பொய் பேசவில்லை. மாயமாக மறைந்து விட்டது. தங்கள் கோவண எடைக்கு ஈடாக பட்டாடைகள் தருகிறேன்'' என்றார்.
அடியார் வேண்டா வெறுப்பாக ""தராசு கொண்டுவா'' என்று, தனது மற்ற கோவணத்தை ஒரு தராசுத் தட்டிலிட்டார். மற்ற தட்டில் அமர்நீதியார் முதலில் ஈந்த பட்டுக்கோவணம் வைக்கப்பட்டது. தராசு சமமாகவில்லை. புது வேட்டிகள் வைத்தார். சமமாகவில்லை. பெரிய தராசு கொணர்ந்து, அடியார்களுக்கு வாங்கிவைத்த எல்லா புத்தாடைகளையும் வைத்தார். சமமாகவில்லை. தனது மனைவியின் நகைகள் யாவும் வைத்தார். தராசு சமமாகவில்லை. அமர்நீதியார், ""நல்லூர் சிவபெருமானே! இதென்ன சோதனை? என் மனம் நீ அறியாயோ'' என புலம்பினார்.
"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ'
என்னும் கண்ணனின் பகவத் கீதை வாக்கியம் உதித்தது போலும்; பரிபூரண சரணாகதி அடைவோம் என மகன், மனைவியுடன் தானே தராசில் ஐந்தெழுத்தை ஓதி அமர, தராசு சமநிலை ஆயிற்று. அடியார் சிவபெருமானாகக் காட்சி தந்தார். தேவர்கள் மலர்மழை பொழிந்தனர்.
சேக்கிழார் இந்த வைபவத்தை இவ்வாறு கூறுவார்-
"அண்டர் பூமழை பொழிய மற்றதனிமை ஒளித்த
முண்ட வேதியர் ஒருவழியான் முதல் நல்லூர்ப்
பண்டுதாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.'
அவர்கள் அமர்ந்த தராசே விமானமாகி கயிலை சேர்ந்தது. சிவனடியில் இன்புற்றனர்.
ஆக, சிவ ஆராதனையைவிட சிவத் தொண்டர்கள் ஆராதனையை சிவன் அன்புடன் ஏற்கிறான் என்பது நிதர்சனமாயிற்று.
நல்லூர் தலத்தில் அமர்நீதி நாயனார் மனைவியுடன் இடங்கொண்டுள்ளார். அடியாரைப் போற்றி அருள்பெறுவோம்.