ஆடி மாதத்தை வடமொழியில் "ஆஷாடி' என்பர். ஆடிக்கிருத்திகை முருக பக்தர்களுக்குக் கொண்டாட்டமான நாள். ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்தது. பொதுவாக ஆடி மாதமே வழிபாட்டுக்குரிய சிறந்த மாதம். ஆடி மாதம் தோன்றியதற்குப் புராணக் கதைகளும் உண்டு.
ஒருமுறை கயிலையில் அம்பிகை இல்லாத நேரத்தில், ஆடி என்னும் அரக்கன் சிவ பெருமானை நோக்கி வந்தான். அங்கு பார்வதி யின் தோழி ஒருத்தி காவலுக்கு இருந்தாள்.
அவளைமீறி உள்ளே செல்லவியலாது என்பதால், அவன் பாம்பாக மாறி உள்ளே புகுந்தான். சிவபெருமான் இருக்குமிடத்தை அடைந்ததும் பாம்பு உருவி−ருந்த அரக்கன் பார்வதியாக மாறினான். இதனையறிந்த ஈசன், அரக்கன் அருகில் வந்ததும் தன் திரிசூலத்தால் அவனைத் தாக்கினார். பார்வதி உருவி−ருந்த அரக்கன் வீழ்ந்து துடித்தான். இதனையறிந்த பார்வதி, தன் உருவில் வந்தவன் என்பதால் அவன்மீது இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அந்த அரக்கன் பெயரால் ஒரு மாதத்திற்கு "ஆடி' என்று பெயர் ஏற்பட்டது. இதன்காரணமாக ஆடிமாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற் கொண்டால் அம்பிகையின் அருள் கிட்டுமென்ற வழக்கம் ஏற்பட்டது. மேலும், பூலோகவாசிகள் அம்பிகையை வழிபடுவதுபோல தன்னையும் வழிபடவேண்டுமென்ற அந்த அரக்கனின் ஆசையும் நிறைவேறியது.
ஆடிமாதம் குறித்து இன்னொரு புராணக் கதையும் உண்டு.
ஒருசமயம் கயிலையில் சிவபெருமானைப் பிரிந்து உமையவள் ஓரிடத்தில் தியானம் செய்துகொண்டிருந்தாள். இதனையறிந்த தேவலோகப் பெண்ணொருத்தி, சிவபெருமானை அடைய திட்டமிட்டு, உமையவள் இல்லாத தால் அவளைப்போல் உருமாறி கயிலாய நாதனை நெருங்கினாள். திடீரென்று ஏதோ விரும்பத்தகாத வாசம் வருவதை உணர்ந்த சிவபெருமான் அந்த திசைநோக்கிப் பார்த்தார்.
உமையவள்போல் தெரிந்த அந்தப் பெண்ணிட மிருந்து கசப்புச்சுவையின் தன்மை வெளிப்படு வதை உணர்ந்தார். அவள் உமையவளல்ல என்பதையறிந்த ஈசன், ""பெண்ணே, அங்கேயே நில். நீ யார் என்பதை அறிந்தேன். உனக் கேன் இந்த விபரீத ஆசை? நீ உமையவள் இடத்தைப் பிடித்துவிடலாம் என்று எண்ணுகிறாயா?'' என்று கேட்டார்.
""சுவாமி, மன்னிக்கவேண்டும். தங்கள் அருகில் உமையவள் இருப்பதுபோல், சில வினாடிகள் தங்களிடம் அமர்ந்து மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன்'' என்றாள் பெண்மைக்குரிய வெட்கத்தை விட்டு.
""பெண்கள் எப்பொழுதும் கற்புடன் வாழவேண்டுமென்பது விதி. அது தடம் மாறினால் விபரீத விளைவுகளைச் சந்திக்கநேரும். நீ மனதில் நினைத்த ஆசை தவறானது. அதன் விளைவாலேயே உன் உட−−ருந்து கசப்புத்தன்மை வெளிப்பட்டு இந்த இடமே பாதிப்புக் குள்ளாகியிருக்கிறது.''
""சுவாமி, என் தவறை மன்னித்தருள வேண்டும். உமையவள்போல என்னையும் எல்லாரும் வழிபடவேண்டும் என்ற விருப்பத்தால்தான் தங்களிடம் நெருங்கினேன்.''
""நீ செய்த தவறுக்கு- கசப்புத்தன்மை கொண்ட உன் எண்ணத்திற்கு, நீ பூலோகத் தில் வேப்ப மரமாக அவதரிப்பாய். "வேம்பு' என்று அழைக்கப்படுவாய். நீ என்னை நோக்கி "ஆடி... ஆடி' வந்ததால் இந்த மாதத்தினை "ஆடி மாதம்' என்று பூலோகத் தில் அழைப்பார்கள்.''
""என்னை மரமாக சபித்துவிட்டீர்களே சுவாமி. இதி−ருந்து நான் விமோசனம் பெற வழியில்லையா?''
""பெண்ணே, நீ சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறாய். "ஆடி' என்ற பெயரும் உனக்கு சூட்டினேன். அத்துடன் உன்னை பூலோகத்தில் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மக்கள் பூஜிப்பார்கள். உமையவள் இருக்கும் இருப்பிடத்தில் நீ அமர விரும்பியதால், நீ உமையவள்போல் வழிபடப்படுவாய். நீ வேப்பமரமாகி நோய் எதிர்ப்பு சக்தியை மக்களுக்கு அளிப்பாய். உன்னை வழிபடும் பக்தர்கள் ஆரோக்கியமாகவும், தோஷங்கள் நீங்கியும் சுகமுடன் வாழ்வார்கள். இனி நீ தேவலோகத்தில் வசிக்க இடமில்லை. பூலோகம் செல்'' என்றார் ஈசன்.
இறைவனின் சாபமே அவளுக்கு வரமானது. அடுத்த வினாடி, ஆடி மாதம் என்று சிறப்புப்பெயர் பெற்ற அந்தப் பெண் பூலோகத்தில் வேப்பமரமாகத் தோன்றினாள்.
அந்த மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவையாகத் திகழ்கின்றன. அந்த மரத்தின் பூக்களும், அதிலி−ருந்து வெளிப்படும் காய்கள் கனியாக மாறும்போது அதன் வித்துகளி−ருந்து கிடைக்கும் என்ணெயும் பலவிதங்களில் மக்களுக்குப் பயன்படுகிறது.
தேவலோகப் பெண்ணின் விபரீத ஆசையே ஆடிமாதம் உருவாகக் காரண மாகி, வேப்பமரமாகவும் திகழ்ந்து இன்று மக்களுக்கு நல்வாழ்வளிக்கிறது. உமையவள்போல் அவள் ஆசைப் பட்டதால், வேப்பமரத்தையும் அம்மனாக பாவித்து மக்கள் வழிபடுகிறார்கள். வேப்பமரத்தின் சக்தியை உணர்ந்த மக்கள், அந்த மரத்திற்கு அடிப்பகுதியில் அபிஷேகம் செய்து, மஞ்சள் பூசி குங்குமமிட்டு அதற்குரிய மஞ்சளாடையை அணிவித்து, பூஜித்துப் பயன்பெறுகி றார்கள்.
எனவே, ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வேப்பமரத்தை வழிபட வாழ்வு நலம்பெறும். ஆரோக்கியம் கிட்டும். இன்றும் கிராமப்புறங்களில் வேப்பமர வழிபாடு போற்றப்படுகிறது. நகர்ப்புறங்களில் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வேப்பமரத்திற்கு சுமங்க−கள் பூஜை செய்கிறார்கள்.
ஆடி மாதத்தில் மட்டுமல்ல; எல்லா நாட்களிலும் வேப்பமரத்தை வழிபட்டால் என்றும் சுகமே.