இரண்டாம் பாகம்

இந்திரா சௌந்தர்ராஜன்

6

பிரம்மா சொன்ன கருத்தைக் கேட்டு நாரதர் வியந்தார்.

Advertisment

""என்ன ஒரு அரிய கருத்து... மாயையை வெல்ல இதைவிட ஒரு அரிய கருத்தை எவராலும் கூறமுடியாது. ஆனால் பின்பற்றுவதுதான் மிகக் கடினம்'' என்றார்.

இந்தக் கதையை ஜெனமேஜெயனிடம் கூறிமுடித்த வியாசர், ஜெனமே ஜெயன் கூறப்போவதைக் கேட்கத் தயாரானார்.

""மாமுனியே! நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் நாரத முனியே கேட்டுவிட்டார். அதற்கு பிரம்மதேவர் கூறிய பதிலும் அபாரம். ஆனால் அறிவை வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தாமல் எப்படி வாழமுடியும்? அதேபோல் உணர்ச்சிகளின்றியும் வாழ்வதில் பொருள் இல்லையே'' என்றான்.

Advertisment

""உண்மைதான் ஜெனமேஜெயா... இப்படி ஒரு மாறுபட்ட தன்மைகளுக்கு நடுவில் வாழ்வதே வாழ்வாகும். இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது அசைவற்ற ஜடத்துக்கு ஒப்பாகிவிடும்.''

""அதுவும் சரிதான். பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் வாழவேண்டுமென்று பொருள் கொள்ளலாமா?''

""தாராளமாக... இதற்கு சரியான உதாரணம் தாமரைதான்! தாமரை தான் வளரும் தண்ணீரில் அதோடு கிடக்கின்றபோதும் நீரோடு ஒன்றுசேராது. அதுபோல் நமது வாழ்விலும் நாம் திகழவேண்டும்.''

""அப்படி வாழ்வது முனிவர்களாகிய உங்களுக்கு சாத்தியம். நாட்டையாளும் பொறுப்பிலிருக்கும் என் போன்றவர்களுக்கு சாத்தியமா?''

""எந்த வகையைச் சார்ந்திருந்தாலும் அனுபவத்தை உணர்வது மனமே. அந்த மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு விட்டால் மாயையின் தாக்கம் நம்மை ஒன்றும் செய்யாது.''

""இதெல்லாமே ஆறறிவு படைத்த மானிடர் களுக்கு மட்டும்தானே மகரிஷி.''

""ஆம். நியாய தர்மங்கள், கர்மவினைகள், அதன் நன்மை தீமைகள் அனைத்தும் மனித இனத்துக்கு மட்டுமே. ஏனைய உயிரினங்களுக்கு தங்களைக் குறித்த தெளிவே கிடையாது. அவை பசித்தால் உண்ணும்; களைத்தால் உறங்கும்; வலித்தால் துன்புறும். இதெல்லாம் எதனால் என்பதுகூட அவற்றுக்குத் தெரியாது. மனிதன் என்ன அப்படியா? நான் என்கிற மமதை மனிதனிடமே அதிகம்... எனவேதான் அவனுக்கு பாவ- புண்ணியங்கள் உண்டாயின!''

""மகரிஷி... இந்த மனித இனம் எப்படிப் பெருகியது? இதன் மூலம் யார்?''

yathumayi

""நல்ல கேள்வி... சப்த ரிஷிகளையே பிரம்மா முதலில் படைத்தார். மரீசி, ஆங்கீரசர், அத்திரி, வசிஷ்டர், புலகர், கிருதர், புலஸ்தியர் என்று ஏழுபேர். பின் தன் மனதினாலேயே சனகாதி முனிவர்கள் என்று நான்குபேரை உருவாக்கினார்.

இதுபோக ருத்திரமூர்த்தி, நாரதர், தட்சப்பிரஜாபதி ஆகியோரைப் படைத்ததோடு, பிரம்மதேவர் தன் இடக்கை பெருவிரலிலிருந்து மிக அழகான வீரிணி, அசிக்னி என்னும் இரு பெண்களையும் தோற்றுவித்தார்.

அதன்பின் தட்சனை அழைத்து, "தட்சா! நீ வீரிணி, அசிக்னியை மணந்து உனது வாரிசுகளை உருவாக்கு. மனித இனத்தின் தொடக்கம் மண்ணுலகில் உன் பெயரால் தொடங்கட்டும்' என்றார்.

தட்சனும் பிரம்மன் இட்ட கட்டளையை செயல்படுத்தத் தொடங்கினான். இதனால் ஒன்றிலிருந்து ஒன்று, அதனுள்ளிருந்து இன்னொன்று என்று ஐந்தாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். இந்த ஐந்தாயிரம் பேரும் தனித்தனியே ஐந்தாயிரம் பிள்ளைகளைப் பெற்றிடும் ஒரு கட்டளையை தட்சனே பிறப்பித்தான். தட்சனின் பிள்ளைகளாய்- அவனை மூதாதையனாகக் கொண்ட அந்த ஐந்தாயிரம்பேரும் இந்த பூவுலகில் தனித்தனியே தங்களுக்கென்று ராஜ்ஜியம் கண்டு, அங்கே தங்கள் இனத்தை விஸ்தாரம் செய்யத் தயாரானார்கள்.''

வியாசர் இவ்வாறு கூறவும் ஜெனமே ஜெயனிடம் வியப்பு.

""மாமுனியே... கோடானு கோடிபேர் கொண்ட இந்த பூமியில் இப்படித்தான் மனித இனம் தோன்றியதா... அப்படித் தோன்றிய விதத்தில்தான் நீங்களும் நானும்கூட வருகிறோமா?'' என்று கேட்டான்.

""ஆம் ஜெனமேஜெயா! நாம் அனைவருமே பிரம்ம சிருஷ்டிகளே! தட்சப்பிரஜாபதியே உலக உயிர்கள் அவ்வளவு பேருக்கும்மூலம். நாம் பிரம்ம சிருஷ்டியாதலால் பிரம்மத் தன்மை நம்முள்ளும் உண்டு. அதை உணர்ந்து தெளிவதே வாழ்வின் நோக்கம்.''

""முனிவரே... எதற்காக நாம் படைக்கப் பட்டோம்? நாம் வாழ்வதால், நம்மை வாழவைப்பதால் பிரம்மனுக்கோ அல்லது அந்த ஆதிநாராயணருக்கோ- அதுவுமில்லையெனில் அந்த பராசக்திக்கோ என்ன கிடைக்கிறது?''

""ஜெனமேஜெயா... என்ன இப்படிக் கேட்டுவிட்டாய்? இந்த உலகில் நீ மட்டும் இருப்பதாக வைத்துக்கொள். தனித்து உன்னால் வாழ்ந்துவிட முடியுமா? தனித்திருக் கையில் வாழ்வதற்கான காரணம்தான் இருக்க முடியுமா?''

""ஓ... தான் தனித்திருக்க இயலாத காரணத்தால்தான் அந்த பரம்பொருள் சகலத்தையும் படைத்ததா?''

""கேள்வியே தவறு... வாழ்வென்பது ஒரு அனுபவம். அந்த அனுபவங்களும் பலவிதமாக இருந்தாலே வாழ்க்கை ரசமானதாய் இருக்கும். அதன் பொருட்டே இத்தனை வண்ணங்கள்! எண்ணங்கள்!''

""சரி... தட்சப்பிரஜாபதியின்மூலம் முளைத்த 5000 பேர் அதன்பின் என்ன செய்தார்கள்... தங்கள் கடமையைச் செய்து சந்ததிகளைத் தோற்றுவித்தார்களா?''

""அப்படித் தோற்றுவிக்காவிட்டால் நீயும் நானும் நம்மைச்சுற்றி ஒரு மனித சமூகமும் எவ்வாறு இருக்க முடியும்?''

""இதன்மூலம் நீங்கள் கூறப்போவது எதை?''

""இப்படித்தான் மனித இனம் தோன்றியது என்று கூறுவதே என் நோக்கம். அதேசமயம் அவ்வளவு சுலபத்திலோ, சீக்கிரத்திலோ இந்த இனம் உருவாகிவிடவில்லை. நாரதர் பெரும் தடையாகிவிட்டார்.''

""எப்படி?''

""அவர் தட்சன் பிள்ளைகளிடம் சென்று, "மக்கள் எண்ணிக்கையைத் தோற்றுவிக்குமுன் பூமண்டலத்தில் மனிதன் வாழத்தகுதியான நிலப்பரப்பும் நீராதாரமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? எனவே அதுவரை அமைதியாக இருங்கள்' என்றார்.

இதனால் தட்சபுத்திரர்களும், அவர்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் வாளாவிருந்தனர்.

இதையறிந்த தட்சனுக்கு கோபம் வந்தது.

அவர்களிடம் வந்து, "ஏன் எல்லாரும் சும்மா இருக்கிறீர்கள்?' என்றும் கேட்டான்.

"என்ன செய்வது? பூமண்டலம் எத்தனை பெரியதென்று தெரியாதே... பிறக்கச் செய்வதைவிட, வளர்க்கச் செய்வதே பெரிய காரியம். அதற்கு உணவு வேண்டும்.

அவற்றைத் தோற்றுவிக்க இடமிருக்கிறதா? நீர் இருக்கிறதா என்று பார்க்கவேண்டாமா?' என திருப்பிக்கேட்டனர்.

"எல்லாம் இருக்கிறது... எனக்குத் தேவை ஒரு பெரும் ஜன சமூகம்' என்றான் தட்சன். இதையடுத்து தட்சனின் வாரிசுகள் திரும்பத் தயாராகவும் இம்முறையும் நாரதரே வந்து திரும்பத் தடுத்தார்.''

""நாரதர் ஏன் இவ்வாறு செய்தார்?''

""இதன் பின்புலத்தில்தான் மிக நுட்பமான விஷயம் உள்ளது. இதனால் தட்சனுக்கும் நாரதருக்கும் யுத்தம் ஏற்பட்டது.''

""அந்த நுட்பமான விஷயம் என்ன மகரிஷி?''

""அவ்வளவுபேரும் தட்சன் வாரிசு களாகிவிடுவர் என்பதே அதன் சூட்சுமம். உலகில் பல இனங்கள் இருந்தால்தான் உயிர்களின் வாழ்க்கை சுகமானதாயிருக்கும்.''

""அதற்கு நாரதர் வழிகாட்டவில்லையா?

""நாரதர் வழியும் காட்டவில்லை. வழியை அடைக்கவும் இல்லையப்பா...''

""வினோதம்... பிறகு என்னாயிற்று?''

""என்னாகும்? தட்சனுக்கு கோபம் வந்தது. நாரதரை சபித்துவிட்டான்.''

""என்னவென்று?''

""நாரதர் தட்சனின் மகனாகப் பிறந்து வந்து தன் பாடுகள் அவ்வளவையும் பட வேண்டும் என்று...''

""ஓ... நாரதர் அதன்பின் தட்சனின் மகனாகப் பிறந்தாரா?''

""ஆம்... அவரிடம் இருந்துதான் புதிய தேவபரம்பரையும் உருவாகத் தொடங்கியது.''

""மனித இனத்தைத் தொடர்ந்து தேவர்கள் இப்படித்தான் தோன்றினார்களா?''

""ஆம்... தட்சன் தொடர்ந்து பிள்ளை உற்பத்தியில் இறங்கி அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களில் பதின்மூன்றுபேரை காஸ்யப முனிவருக்கு மணம் புரிவித்தான். பத்துபேரை எமதர்மனுக்கு மணம் புரிவித்தான். 27 பெண்களை சந்திரனுக்கு மணம் புரிவித்தான். மீதம் உள்ளவர்களில் நான்குபேரை ஆங்கீரச ரிஷிக்கும், நான்கு பேரை பிருகு முனிவருக்கும் அளித்தான். இவர்களிடமிருந்து தேவபரம்பரை மட்டு மல்ல... அசுரபரம்பரையும் உருவாயிற்று.''

-வியாச மகரிஷி ஜெனமேஜெயன் முன்னால் ஒரு பட்டியலையே வெளியிட்டார். ஜெனமேஜெயனும் வாயைப் பிளந்தவனாய், ""இவர்களில் எவர்வழியில் அல்லது எவர்மூலம் நான் பிறந்தேன் என்று கூறமுடியுமா?'' என்று கேட்டான்.

""நீ பாண்டுவின் பரம்பரையில் வந்தவன். பாண்டு புத்திரன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் பிள்ளை பரீட்சித்து. அவன் பிள்ளை நீ'' என்று ஜெனமேஜெயனின் பரம்பரை வரிசையைக் கூறிய வியாசர், ""ஜெனமேஜெயா... இவர்கள் எவருக்கும் கிட்டாத வாய்ப்பு உனக்கு மட்டுமே கிட்டியுள்ளது. நீயே தேவியின் சக்தியை அறியும் தேவைக்கு உள்ளானாய்.

இதனால் உனக்கு நான் சகலத்தையும் உபதேசித்தேன். இந்த உபதேசம் வரும் காலத்தில் தேவி பாகவதம் என்றும் வணங்கப்படும். இந்த தேவி பாகவதத்தைக் கேட்பவர்கள்கூட மிக பயனுறுவார்கள். அவர்களும் தங்கள் மூதாதையர் இதில் எவர் என்கிற கேள்விக்கு ஆளாகி, தங்களில் தொடங்கி தட்சன்வரை நினைத்துப் பார்ப் பார்கள். இது எல்லாரையும் எண்ணி வணங்கியதற்குச் சமம்'' என்றார்.

""உண்மைதான் மகரிஷி... தேவியின் வல்லமையை நான் புரிந்துகொண்டேன்... அதேவேளை தேவர்கள் உயர்வாகவும், மானிடர்கள் கீழாகவும் இருப்பதுபோல் ஒரு கருத்து உருவாகியிருக்கிறதே... எதற்கு இந்த பேதம்?''

""அப்படியல்ல... அது உண்மையுமல்ல. அவரவர் தன்மைக்கேற்ப அவரவரும் தம் கடமையைச் செய்திடவேண்டும். செய்யத் தவறும்போதுதான் துன்பம் உருவாகிறது.''

""நீங்கள் இப்படிச் சொன்னாலும் மேலான தேவர்கள் மனிதர்களிடம் வந்து உதவி கேட்டதாகவோ, மனிதர்கள் தேவர்களுக்கு உதவியதாகவோ வரலாறு உண்டா?''

""ஏனில்லாமல்... சசாதனன் என்பவன் அதற்குப் பெரிய உதாரணம்.''

""சசாதனனா? யார் இவன்?''

""ஸ்ரீராமபிரான் அவதரித்த இக்ஷவாகுவின் சூரிய குலத்தில், இக்ஷவாகுவின் மகனாகப் பிறந்தவன். இவனது உண்மையான பெயர் விரூஷி!''

""பின் ஏன் சசாதனன் என்றாயிற்று?''

""சசாதனன் என்றாலும் சண்டாளன் என்றாலும் ஒன்றுதான்; தெரிந்துகொள்.''

""சண்டாளர்கள் என்றால் இழிவானவர்கள் என்றல்லவா பொருள்...''

""ஆம்... விரூஷியும் ஒரு இழிவான செயலைச் செய்யப்போய் சசாதனன் என்றானான்.''

""அப்படி என்ன செய்தான்?''

""இக்ஷவாகு தன் முன்னோர்கள் நிமித்தம் அஷ்டகா சிரார்த்தம் எனும் காரியத்தைச் செய்ய முனைந்தபோது, அந்த சிரார்த்தத்தில் யாகத்தில் சேர்க்க தூய்மையான மாமிசம் தேவைப்பட்டது. அதாவது தானாய் உயிர்விட்ட பன்றி, மான், முயல் போன்றவற்றின் மாமிசமே தூயதாகும். கொன்று பெறப்பட்ட மாமிசம் தோஷமுடையதாகும். இதில் புனித மாமிசம் வேண்டி, தன் மகன் விரூஷியை இக்ஷவாகு காட்டுக்கு அனுப்பினான். காட்டில் இந்த மாமிசத்தைத் தேடி அலைந்து அதை அடைந்த விரூஷிக்கு அப்போது மிகவும் பசி எடுக்கவே அந்த மாமிசத்தில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டான்...''