மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதக் கடைசிவரை ராசிக்கு 9-ல் திரிகோண மாக இருக்கிறார். அவருடன் 2-க்குடைய சுக்கிரனும் வக்ரகதியில் செயல்படுகிறார். எனவே, இந்த மாதம் பொருளாதாரத்தில் அனுகூலமான நிலை காணப்படலாம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அவ்வப்போது சில குழப்பங்களும், பிரச்சினைகளும், வீண்வாக்குவாதங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. என்றாலும் அவற்றை சுமூகமாகத் தீர்க்கும் வழிவகைகளும் உருவாகும். 2-ஆமிடத்து ராகுவும், 8-ஆமிடத்துக் கேதுவும் அந்த குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகும். சூரியனும் சனியும் பகை கிரகமாவதால் 10-ல் இணைவது நல்லதல்ல என்றாலும், சனி சொந்த வீட்டில் ஆட்சியாக அமர்வதால் பெரிய பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது என்று நம்பலாம். 9-க்குடைய குரு 11-ல் இருப்பது ஒரு பலம். தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும். 13-ஆம் தேதி 5-க்குடைய சூரியன் 11-ல் மாறுகிறார். வேலை, உத்தியோகத்தில் சாதகமான நிலைகள் உண்டாகும்.

பரிகாரம்: சிவ பெருமான், ஆஞ்சனேயர் வழிபாடு நற்பலன் தரும்.

ரிஷபம்

Advertisment

இந்த மாதம் கடைசி வரை ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். 10-ஆம் தேதிவரை வக்ரகதியில் இயங்குகிறார். 12-க்குடைய செவ்வாயும், 2-க்குடைய புதனும் 8-ல் மறைவு. மாத முற்பாதிவரை பொருளாதாரத்தில் திருப்தியற்ற சூழல் காணப்படும். தேவையற்ற பிரச்சினைகளும் மன உளைச்சல்களும் தோன்றி மறையும். என்றாலும் குரு 10-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடைசி நேரத்தில் பணத் தேவைகளை சமாளிக்கும் வழி வகை உருவாகும். 10-க்குடைய சனி 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அது ஒருவகையில் உங்களை வழிநடத்தும். 4-க்குடைய சூரியன் 9-ல் திரிகோணம். பொதுவாக தகப்பனார் காரகன் தகப்பனார் ஸ்தானத்தில் நிற்பது நல்லதல்ல என்பது ஜோதிடவிதி. எனவே, தகப்பனா ரால் சில சிக்கல், சிரமங்களை சந்திக்க நேரும். அல்லது தகப்பனார்வழியில் சில சங்கடங் கள் உண்டாகலாம். ஜென்ம ராகு, சப்தம கேது சில நேரங்களில் அனுகூலமும், சில நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாகவும் அமையும்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை யம்மனை வழிபடவும்.

மிதுனம்

Advertisment

இந்த மாதம் 9-ஆம் தேதிமுதல் மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். 8-ல் சூரிய னும் சனியும் மறைவு. அவர்களுடன் புதனும் மறைவு. மற்ற கிரகங்களின் மறைவைப்போல் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது ஜோதிட மொழி. சனி 8-ல் மறைந்தாலும் ஆட்சி பலம் பெறுகிறார். மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருக்கிறது. எனவே, காரியத் தடை அல்லது தாமதம். பொருளாதாரச் சிக்கல் போன்ற பலன்கள் ஏற்படலாம். அலுவலகரீதியாகவோ அல்லது குடியிருப்புரீதியாகவோ இடமாற்றம் உண்டாகும். 7-க் குடைய கேந்திராதிபதியான குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, மேற்கண்டவகையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சமாளிக்கின்றவகையில் ஆற்றலைத் தருவார். 12-ஆமிடத்து ராகு வெளிமாநிலம், வெளிநாட்டு வேலை முயற்சிகளில் சாதகமான பலன்களைத் தருவார். 13-ஆம் தேதிமுதல் 3-க்குடைய சூரியன் 9-ல் மாறி குருவோடு இணை கிறார். 3-ஆமிடத்தை குருவும் சூரிய னும் பார்க்கிறார்கள். சகோதர வகையில் நிலவிய சங்கடங்கள் விலகி சமாதான நிலை ஏற்படும். 7-ல் செவ்வாயும் சுக்கிரனும் தாமதத் திருமணத்தை உண்டாக்குவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

monthrasi

கடகம்

கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு 8-ல் இருக்கிறார். 6-க்குடையவர் 8-ல் மறைவது நல்லது என்றாலும் 9-க்குடையவர் 8-ல் மறைவது நல்லதல்ல. போட்டி, பொறாமை, திருஷ்டி ஆகியவற்றை சந்திக்க நேரும். தகப்பனார்வழியில் சங்கடம், சிரமங்கள் உண்டாகலாம். 5, 10-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவு என்றாலும், செவ்வாய்க்கு 3, 6, 11-ஆமிடங்கள் நல்ல இடங்கள். ஆக, 6-ல் மறைவு தோஷம் பாதிக்காது. உங்கள் திட்டங்களை, முயற்சிகளை செயல்பாடாக்குவதில் சற்று போராட வேண்டியதிருக்கும். 12-க்குடைய புதன் 6-ல் மறைவது நன்மையே. 9-ஆம் தேதிமுதல் சூரியனுடன் புதன் இணைகிறார். புதனாதித்ய யோகம் உங்களுக்கு அனு கூலம் தரும். 13-ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 8-ல் மறைவு. அரசு வேலை சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகும். அரசாங் கத்தால் கிடைக்கவேண்டிய- எதிர்பார்த்துக் காத்திருந்த சலுகையும் நிராகரிக்கப்படலாம். 8-ல் குரு நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பணப் பற்றாக்குறைக்கு இடமில்லை என்றாலும், தாராள வரவு- செலவுகளுக்கும் இடமிருக்காது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி வழிபாடும், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணமும் செய்யலாம்.

சிம்மம்

மாத முற்பகுதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு. சூரியனுக்கு வீடுகொடுத்த சனி 6-ல் ஆட்சி. சனிக்கு 6-ஆமிடம் மிகமிக நல்ல இடம். அதிலும் அவர் ஆட்சி. 5-க்குடைய குரு 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, ராசிநாதன் மறைவு தோஷம் பாதிக்காது. வேலை தொழில், உத்தியோக இயக்கத்தில் சிரமங்கள் ஏற்படாது. உங்களது செல்வாக்கும், மதிப்பு, மரியாதையும் குறையாது. நற்காரியங்கள் குடும்பத்தில் நடைபெறும். சிலருக்கு தன் முயற்சியாலோ அல்லது பிள்ளைகளின் ஆதரவினாலோ வீடு, வாசல், மனை அமையும் யோகமுண்டாகும். மாதப் பிற்பகுதியில் ராசிநாதன் 7-ல் கேந்திரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். நீங்கள் எண்ணிய காரியங்களை எண்ணியபடி நிறைவேற்றலாம். அதற்கு சூரியனுடன் இணைந்த குருவும் துணைபுரிவார். 4-ல் உள்ள கேது தாய்சுகம் அல்லது தன் சுகத்தில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தினாலும் பாதிப்புகளுக்கு இடமுண்டாகாது. 8-ஆமிடத்தை செவ்வாயும் சனியும் பார்க்கிறார்கள். திடீர் ராஜயோகத்திற்கும் வழி ஏற்படலாம்.

பரிகாரம்: கும்பகோணமருகில் சூரியனார் கோவில் சென்று ஒருமுறை வழிபடவும்.

கன்னி

இம்மாதம் 9-ஆம் தேதிமுதல் கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெற்று சூரியனுடன் இணைவதால் புதாதித்ய யோகம் உண்டாகிறது. ஒருபுறம் உங்கள் காரியங்கள், முயற்சிகள் வேகமாக நடைபெறுவதுபோலத் தோன்றினாலும் சனி அவற்றை சற்று மந்தமாக செயல்படுத்துவார். 4-ல் செவ்வாய், சுக்கிரன். ஒருசிலர் குடியிருப்பு மாற்றத்தை சந்திக்கலாம். இன்னும் ஒருசிலர் புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கலாம். 4-ல் உள்ள செவ்வாயும், 5-ல் உள்ள சனியும் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார்கள். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களில் ஒருசிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்தை எதிர்கொள்ள நேரிடும். 7-ஆமிடத்து குரு 6-ல் மறைவதால், அது பெற்றோர் சம்மதமில்லாமலும் நிகழலாம். 9-ல் ராகு. குலதெய்வ வழிபாட்டில் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது முக்கியமான ஒன்றா கும். 3-ல் கேது- தைரியம் தன்னம்பிக்கையை அதிகமாக்குவார்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் சக்கரத் தாழ்வாரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் வக்ரமாக செயல்படுகிறார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ஜென்ம ராசியைப் பார்க்கி றார். அது ஒருவகையில் பலம். என்றாலும் 3-ல் சுக்கிரன் மறைவதால் உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் ஒரு திருப்தியற்ற நிலையில்தான் செயல்படும். ஒரு நிறைவு ஏற்படாது. சுக்கிரனின் வக்ர நிவர்த்திக்குப்பிறகு (10-ஆம் தேதிக்குப் பிறகு) காரிய அனுகூலம் உண்டாகும். 2-ல் உள்ள கேது குடும்பத்தில், பொருளாதாரத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம். 5-ஆமிடத்து குரு அந்த பற்றாக்குறையை கடைசி நேரத் தில் சமாளிக்கலாம். ஆக, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டிய நிலையில், மாற்றங் கள் ஏற்படாதது மனதிற்குள் ஒருவித கவலை, எதிர்கால பயம் ஆகியவற்றைத் தரும். கணவன்- மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியமான ஒன்றாகும். 6-ஆமிடத்தை செவ்வாய், சனி பார்ப்பதால் போட்டி விலகும். சத்ரு இம்சையும் மறையும். வேலை, உத்தியோகத்தில் இடமாற்றம் ஏதும் உண்டாகாது.

பரிகாரம்: வியாழன்தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருக்கிறார். அவருடன் 12-க்குடைய விரயாதிபதியான சுக்கிரன் சேர்க்கை. எவ்வளவு உழைத்தாலும் சம்பாதித்தாலும் மிச்சப்படுத்தும்படியான நிலை இன்னும் அமையவில்லைதான் என்று சொல்லவேண்டும். பத்து ரூபாய் வந்தால் இருபது ரூபாய் செலவாவதைத் தடுக்கமுடியாது. ஜென்மத்தில் கேது நிற்பதும் சப்தம ராகு அவரைப் பார்ப்பதும் ஒருவகையில் விசேஷம்தான் என்றாலும், மற்ற கிரக அமைப்புகளின்படியும் ஆராய்வதால் சற்று தேக்கமான நிலைகளே அமைகிறது. 3-ல் சனி ஆட்சியென்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றிபெறும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார் என்பதில் சந்தேகம் வேண்டாம். 11-க்குடைய புதன் 10-க்குடைய சூரியனோடு 9-ஆம் தேதிமுதல் இணைகிறார். அந்த காலகட்டத்தில் தொழில், உத்தியோகம் இவற்றில் புதிய அணுகுமுறைகள் ஏற்படும். 4-ல் உள்ள குரு புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வத்தை ஏற்படுத்துவார். அதை வங்கிக்கடன் அல்லது தனியார் கடன்மூலமாக நிறைவேற்றுவார்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் முருகப் பெருமானின் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்யவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 3-ல் நின்று 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். நல்ல இடங்களைப் பார்ப்பதால் ஏழரைச்சனி நடந்தாலும் நற்பலன்களும் உண்டாகும். திருமணம், குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், சுபகாரிய பேச்சுவார்த்தைகள் பூர்த்தியாகுதல், தொழி-ல் முன்னேற்றகரமான நிகழ்வுகள் போன்ற பலன்களை சந்திக்கலாம். 5-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் அனுகூலமான சூழல்கள் அமையும். ஒரு சிலர் புதிய மனை வாங்கலாம். ஒருசிலர் சொந்தமனையில் குடியேறலாம். அல்லது கட்டிய வீட்டை வாங்கி கிரகப் பிரவேசம் செய்யலாம். 2-ல் சூரியன், சனி சேர்க்கை அவ்வப்போது குடும்பத்தில் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் பிரிவினை, சங்கடங்களுக்கு இடமில்லை. பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். சகோதரவகையில் நிலவிய சங்கடங்கள் விலகும். ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்தால் உறவும் பலப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடக்கிறது. 13-ஆம் தேதிவரை ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சாரம். உங்கள் முயற்சிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படலாம். எனினும் விசுவாமித்திரர்போல விடாமுயற்சி செய்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அமைப்புகள் உருவாகும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூ- தரும்' என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப உங்கள் செயல்பாடுகள் அமையும். 12-க்குடைய குரு 2-ல் இருக்கிறார். பணப் பற்றாக் குறைக்கு இடம் இருக்காது. என்றாலும், சில சமயங்களில் ஏற்படும் வீண்விரயங்களும் தவிர்க்க முடியாதவையாக அமையும். 4-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவு. வாகனம் சம்பந்தமான செலவுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமாக விற்பனையாகாமல் நிலுவையில் கிடக்கலாம். வேறுசிலருக்கு கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்கு வங்கிக்கடன் உரிய நேரத்தில் கிடைக்காமல் இழுபறியாகலாம்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும் ஆரணவல்-யம்மனையும் வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. கும்ப ராசிக்கு ராசிநாதன் சனியே விரயாதிபதியாக அமைவது ஒருவிதத்தில் மைனஸ்தான். ஜென்மத்தில் இருக்கும் குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். உங்கள் திட்டங்களை நீங்கள் எண்ணியபடியே செயல்படுத்தலாம். முயற்சி வீண் போகாது. அதேசமயம் போராட்டமும் சற்று கடினமாகத்தான் அமையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். பேச்சுவார்த்தைகள் நல்லமுடிவுக்கு வரும். 2-ஆமிடத்தை சனியும் செவ்வாயும் பார்ப்பதால் காதல் திருமணம் ஏற்படலாம். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டானாலும் கலகலப்புக்கும் குறைவிருக்காது. 11-ல் செவ்வாய். அவர் 10-க்குடையவர். அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. எனவே 9, 10-க்குடைய தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. மற்ற யோகத்தைப் பற்றிய கவலை வேண்டாம். தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்திச் செல்லும். வெற்றிக்கான வழிவகைகளை அமைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றி வழிடவும்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 12-ல் விரயஸ்தானத் தில் இருக்கிறார். சாண் ஏற முழம் வழுக்கிய கதையாகத்தான் உங்களது காரிய அமைப்புகள் நடைபெறுகிறது. இன்று இந்த வேலையை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் அதை முடிக்கவிடாமல் தடை, தாமதங்களை சந்திக்கநேரும். முன்பு கேட்ட இடத்தில் எல்லாம் கிடைத்த உதவி, இப்போது தள்ளிப்போகும். வரவேண்டிய பாக்கி சாக்கிகளும் வசூலாகாமல் இழுபறியாகும். என்றாலும் 3-ல் ராகு இவற்றையெல்லாம் எதிர்நோக்கும் தைரியத்தைத் தரும்; ஆற்றலும் தென்படும். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 13-ஆம் தேதிக்குப் பிறகு 6-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. கெட்டவன் கெட்டிடில் யோகம் என்பதுபோல மாதப் பிற்பாதியில் நின்றுபோன வேலைகள், செயல்கள் மளமளவென்று நிறைவேறும்; பழைய பாக்கிகளும் வசூலாகும்.

பரிகாரம்: தத்தாத்ரேயரையும், கார்த்தவீர்யார்ஜுனரையும் வழிபடவும்.