"கர்மத்தால் வந்தவற்றை தர்மத்தால் தொலைக்க வேண்டும்'
என்பது பழமொழி. முற்பிறவி சூட்சுமத்தை உணர்ந்து இப்பிறவி யில் எந்த பழிபாவமும் வராதபடி தர்மத்தின் வழியே நடந்தால் தீய சக்திகள் அருகில் அண்டாது; எங்கும் எதிலும் வெற்றி பெறலாம்.
ஒவ்வொரு மனிதரும் புகழோடு வாழ்வதைக் காட்டிலும் சாபங் களின்றி வாழ்ந்தாலே சுகவாழ்வு வாழலாம். அத்தகைய சாபங்கள் 13 வகைப்படும். சாபங்களும்- அதன் விளைவுகளும்:
1. பிரம்ம சாபம்- படிப்பில் வளர்ச்சியில்லாதிருத்தல்.
2. பெண் சாபம்- வம்ச விருத்தியின்மை.
3. பிரேத சாபம்- குறைந்த ஆயுள்.
4. சர்ப்ப சாபம்- திருமணத் தடை.
5. பித்ரு சாபம்- ஆண் வாரிசு இல்லாமல் போவது, குழந்தைகள் இறப்பது போன்ற துர்பலன்கள்.
6. கோ சாபம்- குடும்பம், வம்சம் வளர்ச்சியின்மை.
7. பூமி சாபம்- நரகவேதனையைத் தரும்.
8. கங்கா சாபம்- குடிநீர்ப் பிரச்சினை.
9. விருட்ச சாபம்- கடன் மற்றும் நோயால் அவதிப்படுதல்.
10. தேவ சாபம்- உறவினர் பிரிவுடன் தனித்து வாழ்தல்.
11. ரிஷி சாபம்- வம்சம் அழியும்.
12. முனி சாபம்- செய்வினைக் கோளாறு ஏற்பட்டு அவதிப் படுவது.
13. குலதெய்வ சாபம்- குடும்பத் தில் மகிழ்ச்சியில்லாமல் எப்போதும் ஒருவகை துக்கம் சூழ்ந்திருத்தல். மேற்சொன்ன சாபங்களின்றி வாழ்வதற்கு தர்மசிந்தனை தழைத்தோங்க வேண்டும்.
உலகத்திற்கே வாழ்வியல் தர்மங்களை வகுத்துத் தந்த வள்ளுவர், அறத்துப்பால் பகுதி யிலுள்ள நான்கு பிரிவுகளில் இல்லறவியல், துறவறவியல் ஆகிய இரண்டையும் தெளிவாக வரையறுத்துள்ளார். இல்வாழ்க்கை என்னும் அதிகாரத் தில் துவங்கி புகழ் என்ற அதிகாரம் வரை இல்லற தர்மங் களையும், அருளுடைமை என்ற அதிகாரத்தில் துவங்கி அவா வறுத்தல் என்ற அதிகாரம் வரை துறவற தர்மங் களையும் அழகாக விளக்கியுள்ளார்.
உள்ளத்தை வைத்தே உலகம் நம்மை மதிப்பிடுகிறது. நாள்தோறும் சிவபெருமான் மீது கல்லை எறிந்தார் சாக்கியர். அவர் நாயன்மார்கள் வரிசையில் "சாக்கிய நாயனார்' என்று மதிக்கப்பட்டார். சிவபெருமான்மீது ஐந்து வாசனை மலர்களை வீசினான் மன்மதன்.
அவன் எரிக்கப்பட்டான். ஏன்? காரணம் இரண்டுக்கும் பின்னால் இருந்த மனம். ஒரு மலையில் மூன்று பாறைகள் அருகருகே நட்புணர்வுடன் நீண்டகாலம் இருந்தன. மூன்றும் தனித்தனியே பிரியும் சூழ்நிலை வந்தது. ஒருநாள் அவ்வழியே வந்த முனிவரிடம் முதல் பாறை, ""நான் படிக்கட்டாய் அனைவரிடமும் மிதிபடும் நிலை யில் உள்ளேன். அது ஏன்?'' என்று கேட்டது. அதற்கு முனிவர், ""நீ ஒரே அடியில் இரண்டா கப் பிளந்துவிட்டாய் வலி தாங்கா மல். அதனால் நீ படிக்கட்டாய் வாழ்கி றாய். ஓரளவு வலி தாங்கியதால் இரண்டாவது பாறை மிதிபடா வண்ணம் சுவரில் உள்ளது. மூன்றா வது பாறை ஓராயிரம் அடி தாங்கி பல சோதனைகளையும் கடந்ததால் அனைவரும் கையெடுத்துக் கும்பிடும் வண்ணம் தெய்வமானது.
இவ்வாறு சோதனைகளை எவ்வளவுக்கெவ்வளவு பொறுமை யுடன் தாங்குகிறாயோ அவ்வளவுக் கவ்வளவு வாழ்நாளில் சாதிக்கலாம்'' என்றார்.
ஆக முற்பிறவி சூட்சுமங்களை உணர்ந்து இப்பிறவியில் எவ்வித சாபங்களும் நம்மைத் தாக்காதபடி இறைசிந்தனையுடன் சோதனை களைத் தாங்கினால், வாழ்நாளில் சாதனைகளைச் செய்வதுடன் மங்காப் புகழடன் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக் கோவில்.
இறைவன்: பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர்.
இறைவி: பூங்குழல் நாயகி, சுகந்த குந்தளாம்பிகா.
புராணப்பெயர்: பிரம்மபுரி, புன்னாகவனம், அம்பர் பெருந்திருக்கோவில்.
ஊர்: அம்பல்.
தலவிருட்சம்: புன்னை மரம்.
தீர்த்தம்: அன்னமாம் பொய்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம்.
சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சோழ நாட்டுத் திருத்தலங்களுள் மேன்மை பெற்றதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புடையதும், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் காவிரி தென்கரையில் 54-ஆவது தலமாகத் திகழ்கின்றது மான இத்தலம் இந்துசமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் சிறந்த முறையில் நிர்வாகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே!'
-திருஞானசம்பந்தர்
கோச்செங்கட்சோழனால் திருப்பணி செய்யப் பட்டதும், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றதுமா னதுதான் இந்த நைமிசாரண்யம். நைமிசாரண்யம் என்றால் பகவான் தானாக அவதரித்த புண்ணிய க்ஷேத்திரம். இங்கு பகவான் வனஸ்வரூபியாக (காடு) விளங்குகிறான். அங்குள்ள மரங்கள், செடிகள், தீர்த்தங்கள், கொடிகள் அனைத்துமே பகவான் ஸ்ரீமந்நாராயணனின் அம்சமாகவே கிருதயுகத்திலிருந்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள சக்கர தீர்த்தம் மிகக்கொடிய பாவங்களையும் போக்கவல்லது. தன்னிகரற்ற தெய்வீக பூமியாதலால் வேதகால மகரிஷிகள் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக இந்த நைமிசாரண்யம் காலங்காலமாக இருந்துவருகிறது. இங்கு தவம் செய்த மகரிஷிகளில் குறிப்பாக வியாசர், துர்வாசர், சப்தரிஷிகள் ஆகியோரைக் கூறலாம்.
மகரிஷிகள் பலர் நைமிசாரண்யத்தில் ஒன்றுகூடி யிருந்த ஒரு தருணத்தில் சூதமா முனிவர் அங்கு எழுந்தருளினார். அப்போது சிவபக்தியில் தினைத்த அந்த மகரிஷிகள் சூதமா முனிவரை வரவேற்று அவரைப் பணிந்து, ""பாரத புண்ணிய பூமியில் விளங்கும் பெருமைமிக்க சிவத்தலம் எது? பல பிறவிகளில் மக்கள் செய்துள்ள பாவங்களையெல்லாம் போக்கவல்லது எது? தீராத வறுமையைப் போக்கி குபேர சம்பத்தைத் தரவல்ல திருத்தலம் எது?'' என்று கேட்டனர்.
சூதமா முனிவர் சிறிது நேரம் தியானித்து, பின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, ""பூவுலகிலுள்ள "பிரம்மபுரி' என்ற சிவக்ஷேத்தி ரம் கலிதோஷத்தினால் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் போக்கி நல்வினை அளிக்கக் கூடிய தன்னிகரற்ற க்ஷேத்திரம்'' என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்- ""ஆனந்தவனம் எனப்படும் காசியில் ஆயுள்முழுவதும் வசிக்கும் பேறு பெற்றவர் அடையும் புண்ணியத்தை பிரம்மபுரியில் ஒரே ஒரு நாள் தங்கினால் அடையமுடியும். காசியில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னம் அளிப்பதால் கிடைக்கும் புண்ணியத்தை இத்தலத்தில் ஒரு ஏழைக்கு- அதுவும் ஒரு கைப்பிடிச் சோறு அளித்தால் அடையலாம். பிரம்மபுரியில் ஒருவர் செய்யும் அணுவளவு தர்மம் இமயத்தைப் போன்ற வானுயர்ந்த புண்ணியத்தைத் தரும்'' என்றார்.
முற்பிறவியில் செய்துள்ள கர்மவினையின் பயனாய் இப்பிறவியில் இழிபிறப்பு உயிர் களாகப் பிறவி எடுத்தவர்கள்கூட பிரம்ம புரியில் வசித்தால் அதன்பயனாக சிவலோகப் பதவியைப் பெற்றுய்வர் என்று, இத்தல மகிமையை சூதமா முனிவர் விளக்கியதைக் கேட்டு அங்கு கூடியிருந்த மகரிஷிகள் அனைவரும் அளவற்ற ஆனந்தமடைந்து, சூதமா முனிவரை நன்றிப்பெருக்குடன் வணங்கி அவரது ஆசியைப் பெற்றனர்.
பிரம்மன் வழிபட்டது பிரம்மன் சிவபெருமானின் முடியைக் காண அன்னமாய்ப் பறந்து சென்று, காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார்.
பெருமான் பிரம்மனை அன்னமாகும்படி சபித்தார். பிரம்மன் பிழைபொறுக்க வேண்ட, பெருமான் புன்னாகவனம் எனும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்ம னும் அவ்வாறே இத்தலத்தில் பொய்கை ஒன்றை உருவாக்கி, அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பல ஆண்டு கள் வழிபட்டு அன்னவடிவம் நீங்கிப் பழைய உருவம் பெற்று படைப்புத்தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் ரிஷபாரூடராய் மாசி மகத்தன்று காட்சி தந்தார்.
அம்பல்- பெயர்க் காரணம்
சிவபக்தியில் சிறந்த துர்வாச முனிவர் பிரம்மபுரியில் எழுந்தருளியிருக்கும் பூங்குழல் நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதற் காக ஆகாயமார்க்கமாக வந்துகொண்டி ருந்தார். அப்போது அசுரகுலத்தில் உதித்த வளாயினும், தேவமங்கையைப்போல் அழகு டன் திகழ்ந்த மதலோலை என்ற மங்கை, துர்வாசர் முன்பு வந்து தனக்கு மகப்பேறு அருள வேண்டுமென்று வேண்டினாள். அப் பெண் சிறிதும் நாணமின்றி அவ் வாறு கேட்டதைக் கண்டு சினம்கொண்ட மகரிஷி, ""தீவினைகளையே விரும்பிச் செய்யும் இரு புதல்வர்களைப் பெறுவாய்'' என்று சாபமளித்து பிரம்மபுரி சென்றடைந்தார்.
முனிவரின் சாபத்திற்கேற்ப மதலோலை இரு ஆண் குழந்தைகளைப் பெற்றாள். அக் குழந்தைகளுக்கு அம்பரன், அம்பன் எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தாள். பின்பு அசுரர் குருவான சுக்கிரனின் அறிவுரைப்படி, அவ்விரு வரும் பிரம்மபுரி ஈசனைப் பூஜித்து அள வற்ற பலத்தினைப் பெற்றனர். அதனால் அவர் களது ஆணவம் தலைக்கேறியது.
தேவர்களின் உலகைக் கைப்பற்றிய அம்பரன், அம்பன் சகோதரர்கள் தேவர் களையும், மகரிஷிகளையும், மக்களையும் துன்புறுத்தினர். அவர்களது கொடிய செயல்களைத் தாங்க இயலாது ஈசனிடம் முறையிட்டனர். ஈசனும் தன் இடபாகத்திலிருந்த தேவியை சற்று நோக்கினார். அம்பிகையின் அம்ச மாக காளி அங்கு தோன்றினாள்.
பல அதர்மச் செயல்களில் ஈடுபட்ட அம்பரன், அம்பனிடம் போரிட்டு அவர்களை வதம் செய்தாள் காளி. பல கொடுமை களைச் செய்திருந்தும் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரை பக்தியுடன் பூஜித்த காரணத்தினால் இறுதிநேரத்தில், "இத்தலம் தங்கள் பெயராலே விளங்கவேண்டும்; இறைவனின் திருநாமமும் தங்களது பெயரிலே விளங்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டதால், அன்றுமுதல் இத்தலம் அம்பலராபுரம் என்றும், இறைவனின் திருநாமம் அம்பரீசன் என்றும் ஆயிற்று. காலப்போக்கில் அம்பர் என்றிருந்து தற்போது அம்பல் என்று மருவிவிட்டது.
மாற நாயனாரும், இறைவனின் திருவிளையாடலும் சோழநாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் அந்தணர் மரபில் பிறந்தவர் மாற நாயனார். இவர் அறவொழுக்கங்களில் நெறி பிறழாது வாழ்ந்து யாவராலும் போற்றப் படும் அளவுக்கு மேம்பட்டு விளங்கினார்.
அம்பராலயத்து ஈசனான பிரம்மபுரீஸ்வரர் பால் அளவற்ற பக்தி கொண்டு வாழ்ந்து வந்த இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே "நமச்சிவாய' மந்திரம் துலங்கும். ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசிக்க ஆவல் கொண்டு திருவாரூர் சென்று அவரது திருமாளிகையை அடைந்தார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து திருவாரூர் தியாகேசனையும் தரிசனம் செய்துவந்தார். பின்பு பிரம்மபுரீஸ்வரர் நினைவால் அம்பல் திருத்தலத்திற்குத் திரும்பினார்.
இறைவனின் திருவடி நிழலையே பற்றி வீடுபேற்றைப் பெறுவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்திவந்தார். இவர் நடத்திவந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிகமிகச் சிறந்தது. எண்ணற்ற சோமவேள்விகளைச் செய்தமையால்தான் இவருக்கு சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று.
ஒருமுறை சோம யாகத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் எழுந்தருளி அவிர் பாகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என மாற நாயனார் ஆசைப்பட்டார். சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் மாறனாரின் விருப்பத்தைத் தெரிவித்து, தியாகேசன் அந்த யாகத்திற்கு எழுந்தருளி அவிர்பாகத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டி னார். அதற்கு ஈசனும் இசைந்தருளினார்.
குறிப்பிட்ட நாளில் யாகசாலையில் சுந்தரரும், மாறனாரும் யாகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தனர். சிவபெருமானுக்கு அவிர்பாகம் அளிக்கவேண்டிய தருணம் வந்தபோது, கரியமேனியுடன், அரையில் அழுக்கு நிறைந்த ஆடையொன்றைக் கட்டிக்கொண்டு துர்நாற்றம் பிடித்த தோல் ஒன்றை தோளில் தாங்கி ஒரு புலையனும் புலைச்சியும் யாகசாலையில் புகுந்தனர்.
வந்த இருவரும் சிவபெருமானும் அம்பிகை பார்வதியும் என்பதை அறிந்த சுந்தரமூர்த்தி நாயனாரும், மாறனாரும் அம்மையப்பனின் கருணையை நினைத்து நினைத்து ஆனந்தக் கண்ணீர் பெருகிவர அவிர்பாகத்தை அளிக்க, இறைவனும் தனது தேவியுடன் அதனை ஏற்றுக்கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தான் கொண்ட பக்திக்காக இத்தகைய திருவிளையாடலை நடத்தி, தன்னை ஆட்கொண்ட கருணையை எண்ணிப் பரவசமானார் நாயனார்.
ஐயனின் திருவடிகளே தனக்கு அனைத்தும் என்ற பக்தியுடன் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரைச் சரணடைந்து, சோமாசி மாறர் என்றாகி, இறுதியில் 63 நாயன்மார்களில் ஒருவரா னார். இத்தகைய மகத்தான பெருமை பெற்றது தான் அம்பல் திருத்தலம்.
சிறப்பம்சங்கள்
✷ சோமாஸ்கந்த மூர்த்தியுடன் சுயம்பு மூர்த்தியாய் பிரம்மபுரீஸ்வரர் காட்சியளிக்கி றார். அவருக்குப் பின்னால் அம்மையப்பன் வீற்றிருப்பது அற்புதம்.
✷ பிரம்மதேவனுக்கு ரிஷபாரூடராய் அருட்காட்சி தந்த மாசிமக நாளில் பிரம் மோற்சவ விழா நடப்பது மிக முக்கியமான திருவிழா.
✷ விஸ்வாமித்திரரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, மன்மதன் அம்பல் ஈசனை வழிபட்டு சாபநீக்கம் பெற்றான்.
✷ விமலன் என்ற காசி நகர அந்தணர் அன்னமாம் பொய்கைத் தீர்த்தத்தில் நீராடி அம்ப ரீசரை வழிபட்டு புத்திரப்பேறு பெற்றார்.
✷ இறைவன் தேவர்களைக் காக்க காலபைரவரை ஏவி அசுரர்களைக் கொன்று அமரர்கட்கு அருள்புரிந்த தலம் அம்பல்.
✷ திருவானைக்காவல் வெண்ணாவல் மரத்தின் கீழிருந்து ஜம்புகேஸ்வரரை முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட பெரும்பேற்றால், கோச்செங்கட்சோழன் மன்னனாகப் பிறந்து யானை ஏறமுடியாத எழுபது மாடக் கோவில்களைக் கட்டினார். 63 நாயன்மார்களில் ஒருவரான அம்மன்னர்
திருப்பணி செய்த மாடக்கோவில்தான் அம்பல். அதன் நினைவாக ஆலயப் பிராகாரத்தில் ஜம்புகேஸ்வரருக்கு தனிச் சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
✷ நந்தகூபன் என்னும் அரசன் புலித்தோல் உடுத்த முனிவரைப் புலி எனக் கருதி அம்பு விடுத்தான். அந்தக் குற்றத்தினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அம்பல் ஈசனை வழிபட்டு, தோஷம் நீங்கப்பெற்று பல திருப்பணிகள் மேற்கொண்டு விழாக்கள் நடத்தி மகிழ்ந்தான் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
✷ இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், நந்தராசன் காலத்துக் கல்வெட்டுக் களும் உள்ளன.
✷ சுசீலா அம்மை- சோமாசி மாறனார்
தம்பதி சமேதராக ஈசனை வணங்கும் விதத்தில் காட்சி தருகின்ற இவ்வாலயத்தில், பூவையர்க்கு பூப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை (மாதவிடாய்க் கோளாறு) போக்கி ஆரோக்கியவிருத்தியுடன் சுகமாக வாழவைப்பதில் சுகந்த குந்தளாம்பிகா என்கிற பூங்குழல்நாயகி தனித்துவம் மிக்கவள் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர் தண்டபாணி சிவாச்சாரியார்.
ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் அமைந் துள்ள இவ்வாலயத்தில் சிவாலய சந்நிதிகள் எல்லாம் சிறப்புற விளங்குகின்றன. விருட்சங் களுள் கற்பகத்தரு போன்றும், பசுக்களுள் காமதேனு போன்றும், மணிகளுள் சிந்தாமணி போன்றும், ஒளிகளுள் சூரியனைப் போன்றும் திகழ்கின்ற தலமாம்- காசியைவிட வீசம் அதிகம் என்று சொல்லப்படுகிற தலமாம்- ஈசனே கதி என்று சரணடைந்தவர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற 13 வகை சாபங்களை சாம்பலாக்கி சந்தோஷ வாழ்வருளும் அம்பல் அம்பரீசனாம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை விளம்பி வருட மாசி மகத்தில் பத்துநாள் பிரமோற்சவ விழாவில் வழிபடுவோம். மகிழ்வுடன் வாழ்வோம்.
காலை 6.00 மணிமுதல் பகல் 11.30 வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: தண்டபாணி சிவாச்சார்யார், அலைபேசி: 97885 18300, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், பூந்தோட்டம் (வழி), அம்பல் போஸ்ட், நாகை மாவட்டம்- 609 603.
ஆலயக்கணக்கர்- எஸ். புகழேந்தி, அலை பேசி: 96880 44478.
அமைவிடம்: நாகை மாவட்டம், பூந்தோட்டத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் கொத்தவாசல், கோவில் திருமாளத்தை அடுத்து அரசலாற்றின் வடகரையில் உள்ளது அம்பல் திருத்தலம். பேருந்து வசதியுள்ளது.