தேவாமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர் களும் திருப்பாற்கடலைக் கடையும் நேரத்தில், கொடிய விஷம்கொண்ட வாசுகி எனும் நாகம் கக்கிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிரினங்களைக் காத்தார் என்பது பிரதோஷ வழிபாட்டு வரலாறுமூலம் நாம் அறிந்ததே! இந்த சம்பவத்தை மையமாக வைத்து திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில், "விடமுண்ட கண்டன்' (கழுத்தில் விஷத்தை உடையவர்) எனப் பாடினார்.

அந்த சிவபெருமானுக்கு, விஷத்தன்மை அதிகம்கொண்ட இயற்கைத் தாது உலோகமான பாதரசத்தைக் (ஙங்ழ்ஸ்ரீன்ழ்ஹ்) கொண்டு சிவலிங்கத்தை கரூர் மாவட்டம், வெண்ணெய்மலையில் அருள்மிகு ஆத்மஞானேஸ்வரர் என்னும் பெயரில் உருவாக்கியுள்ளனர். பொதுவாக, சிவலிங்கம் கல்லிலான உருவமாகத்தான் இருக்கும். சில இடங்களில் ஸ்படிகத்திலும், மரகதத்திலும் என அமைந்திருக்கும். பாதரச லிங்கம் புதுமுயற்சி.

இறைவனின் அருளால் சித்தி நிலையைப் பெற்றவர்கள்தான் சித்த புருஷர்கள். சாதாரண மனிதர்களைக் காட்டிலும் ஞானத்திலும் இறைநிலையிலும் உயர்ந்து நிற்பவர்கள். இவர்கள் மருத்துவம், யோகம், ரசவாதம் போன்றவற்றில் அதிகளவு ஞானத்தைப் பெற்றவர்களாகவும், அதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். நாம் வணங்கும் நிலையில் இருக்கும் இந்த சித்தர்கள்தான் சித்த மருத்துவத்தின் தந்தை போன்றோர்.

தங்களின் தவயோக ஆற்றலால் அட்ட மாசித்திகள் எனப்படும் அணிமா, கரிமா, மஹிமா, லகிமா, பிராப்தி, வசித்துவம், ஈசத்துவம், பிரகாமியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களில் சிலர் இன்றும் காட்டிலும் மலைகளிலும், ஒருசிலர் நகரத்திலும் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு நமக்குத்தான் இறைப்பக்குவம் வரவேண்டும். இதை சிவவாக்கிய சித்தர்-

Advertisment

"சித்தர் என்றும் சிறியர் என்றும்

அறியொணாத சீவர்காள்!

சித்தர் இங்கிருந்தபோது

Advertisment

பித்தர் என்று எண்ணுவீர்

சித்தர் இங்கிருந்தும் என்ன

பித்தன் நாட்டிருப்பரே!

அத்தன் நாடும் இந்த நாடும்

அவர்களுக்கெலாம் ஒன்றே'

என்று தம் பாடல்மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

பதினெண் சித்தர்களில் ஒருவரான காளங்கிநாதரின் சீடரான போகர், பல அரிய மருத்துவ மூலிகைகள், உலோகங்களைக்கொண்டு நவபாஷாண முருகன் சிலையை (பழனி தண்டாயுத பாணி) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார். இந்த நவபாஷாணம் நோய்களைத் தீர்க்கும் அரிய மருந்தாகும். அதேபோல் சிவபெருமானின் விந்து என அழைக்கப்படும் பாதரசமும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த திரவ உலோகம்.

பார்ப்பதற்கு வெள்ளியை (நண்ப்ஸ்ங்ழ்) உருக்கியதுபோன்று காணப்படும். இதை உயர்வெள்ளி எனவும் கூறுவார்கள். தங்கம், செம்பு ஆகிய இரண்டு மட்டுமே வெண்மை நிறமற்ற உலோகங்கள்.

இயற்கையே ஒரு பிரம்மாண்டமான வேதியியல் ஆய்வகம் எனக் கூறலாம்.

காரணம், இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பல்லாயிரக்கணக்கான காலமாக பல்வேறு வேதியியல் மாற்றத்திற்கு உட்பட்டது. பண்டைய கால மக்களின் நாகரிகப் பண் பாட்டை ஆராயும்போது அவர்கள் சில தனிமங்களைப் (ஊப்ங்ம்ங்ய்ற்ள்) பயன்படுத்தினார் கள் என்பதை அறியமுடிகிறது. அவற்றுள் தங்கம், வெள்ளி, கார்பன், கந்தகம் போன்ற கனிமங்கள் முக்கியமானவை. உலகில் இதுவரை சுமார் நூறுவிதமான கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அணு எண் 94 வரை உள்ள கனிமங்கள் இயற்கையாகவே கிடைக்கின்றன. எஞ்சிய சில தனிமங்கள் செயற்கைமுறையில் உருவாக்கப்படுகின்றன. இதில் பாதரசம் ஒரு வேதித்தனிமம். இதன் அணு எண் 80; தங்கத்தின் அணு எண் 79; வெள்ளியின் அணு எண் 47 என ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு எண் உண்டு. பாதரசத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு "ஹெச்ஜி' (ஐஞ்) என்பதாகும். மேலும், இதை பஞ்சபூதத்தின் கலவை என்றும் கூறலாம்.

மருத்துவ வேதியியலின் முன்னோடியான போகர் பாதரசத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார். ரசம் (செந்நிறம் கொண்டது), ராஜேந்திரம் (கருமை நிறம் கொண்டது), சூதம் (மஞ்சள் நிறம் கொண்டது), பாரதம் (வெண்ணிறம் கொண்டது), மிசரகம் (பல்வேறு நிறங்களைக் கொண்டது) எனத் தன்னுடைய நூலில் கூறியுள்ளார். பாதரசத்தில் பொதுவாக உண்டீனம், கௌடில்யம், அனவர்த்தம், சண்டத்வம், பங்குத்வம், சங்கரம், சமலத்வம், சவிஷத்வம் என்னும் எட்டுவகை தோஷங்களையும் (இரசதோஷம்) சித்த முறைப்படி நீக்கவேண்டும். மாற்று உலோகக்கலப்பு என்பதை "சட்டை' என அழைக்கிறார்கள். அவை நாகம், வங்கம், அக்கினி, மலம், விடம், கிரி, சபலம் என்பனவாகும். இவற்றையும் சுத்தி செய்யவேண்டும். இதனால் கடும் நச்சுத்தன்மை நீக்கப்படும். இதை எப்படி முறையாகப் பல நிலை களில் செய்ய வேண்டுமென்பதை நம்முடைய சித்த புருஷர்கள் தெளிவாகத் தங்களுடைய பாடல் களில் கூறியுள்ளனர்.

sivan

பல அரிய மூலிகை களைக் கொண்டு இரசக்கட்டு முறை யில் திரவ வடிவ பாதரசத்தை திடவடிவத்தில் கொண்டு வருவார்கள். அதன்பின் அதை இரசமணியாகவும், சிவலிங்கமாகவும், ஏனைய பொருட் களாகவும் செய்ய முடியும்.

"சிவநிர்ணய ரத்னாகரம்' என்னும் பண்டைய சிவாகம நூலின் கருத்துப்படி, கல்லாலான சிவலிங்கத்தைவிட கோடி மடங்கு நற்பலன் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தைப் பூஜிப்பதால் கிட்டும்.

அதைவிட பன்மடங்குப் பலன் ரத்தினங்கள் பதித்த சிவலிங்கத்தைப் பூஜிப்பதால் கிட்டும். இதைவிட பன்மடங்குப் பலன் பாதரச லிங்கத்தைப் பூஜிப்பதால் கிட்டும் எனக் கூறுகிறது. இதைப் பூஜித்தாலோ, தரிசனம் செய்தாலோ பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்தை தரிசனம் செய்த பலன் கிட்டும்.

இப்படிப்பட்ட பலன்களைத் தரும் பாதரச லிங்கங்கள் இந்தியாவில் அரிதாகத் தான் உள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினி (ன்த்த்ஹண்ய்) சித்தாஸ்ரமத்திலும், தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமா பாத் தத்தா பீடத்திலும் உள்ளன. தமிழகத் தைப் பொருத்தவரை கரூரிலும், வெள்ளி யங்கிரியிலும் உள்ளன.

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை எனும் கிராமத்தில் 1989-ஆம் ஆண்டு சபரீசன் சித்தாஸ்ரமம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு முதலில் ஐயப்பனுக்கு ஒரு கோவிலும், பின்னர் துர்க்கைக்கு ஓர் கோவிலும் கட்டப்பட்டன. 2015- ஆம் ஆண்டு ஆத்ம ஞான சன்மார்க்க திருச்சபை என்னும் அமைப்பின்மூலம் பெரிய தியான மண்டபம் கட்டப்பட்டு, அதன் நடுவே எட்டே முக்கால் அடி உயரத்தில் பாதரச சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ள னர். சித்தர்கள் பாதரசத் தினைக் கொண்டு எப்படி சிவலிங்கம் தயாரிக்க வேண்டும் எனக்கூறிய வண்ணம் மூன்றேகால் அடி உயரத்தில் பாணலிங்கத்தைத் தயாரித்துள்ளனர்.

இவ்வளவு உயரமான பாதரசலிங்கம் தமிழகத்தில் வேறெங்கும் இல்லையென்பது இதன் சிறப்பாகும். இந்த அரிய லிங்கத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தினமும் வந்து வணங்கிச்செல்கிறார்கள்.

இந்த மண்டபத்தில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்வண்ணம் 27 சிறிய குகை போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல்தட்டுப் பகுதியில் சித்தர்கள், மகான்களின் திருவுரு வச் சிலைகளை அழகாகச் செதுக்கியுள்ளனர்.

கீழே அமர்ந்து தியானம் செய்ய சிவ பெருமானின் அணிகலன்களுள் ஒன்றான ஆமை உருவம் பதித்த மரப்பலகை வைத்துள்ளனர். தினமும் பக்தர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் சிவனை நோக்கிய வண்ணம் அமர்ந்து தியானம் செய்து பயன்பெற்று வருகிறார்கள். மேலும், 48 நாட்கள் தொடர்ந்து இந்த லிங்கத்தை தரிசனம் செய்துவந்தால் தீராத வியாதிகளும், மனக்கஷ்டங்களும், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளிலிருந்தும் விடுதலை பெறமுடியும் என்னும் நம்பிக்கை இங்குவரும் பக்தர்களிடம் காணப்படுகிறது.

சைவ சமயத்தில் சிவபெருமான் நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரனாக சித்திரிக்கப் பட்டுள்ளார். தைத்திரிய சம்ஹிதையில் வரும் "பிரதம தைவ பிகிசஜா' என்பதற்கு தெய்வீக வைத்தியன் எனப்பொருள். ரிக் வேதத்தில் வரும் "சகஸ்ரதே ஸ்வமிவாத பேஷகா' என்பதற்கு ஆயிரம் மருந்துகளை உடையவன் எனப் பொருள். ஆகவேதான் இந்த பாதரச லிங் கத்தை வணங்கினால் நோய்கள் யாவும் நீங்கும் எனக் கூறப் படுகிறது.

இந்த பாதரச லிங்கத்தை உருவாக்கி யதைப்பற்றி கருவை. பொன் பாண்டுரங்க சுவாமிகள் (வயது 92) கூறும்போது, ""நான் சிறிய வயதில் கடவுள் மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். இதனால் என் பெற்றோர்கள் என்னை வெறுத்தார்கள். ஒருநாள் நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஐயப்பனை தரிசனம் செய்ய 1953-ஆம் ஆண்டு சபரிமலைக்குச் சென்றேன். முதல் யாத்திரை என் உள்மனதில் ஒருவித மான மாற்றத்தை ஏற்படுத்தியது. கருவை. சுகி முத்துரத்தின பாரதி என்னும் ஆன்மிக அன்பர் என்னை ஆன்மிகப் பாதைக்கு முதலில் அழைத்துச்சென்றார். அதன்பிறகு பல துறவிகள், மகான்களைத் தேடியலைந் தேன். திருச்சி ஈங்கோவில் மலை லலிதா மகிளா சமாஜ ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீஅத்வை யானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் ஸ்ரீவித்யா உபதேசத்தை முறையாகப் பெற்று, அதையே ஜெபிக்க ஆரம்பித்தேன். இராமகிருஷ்ணா குருகுல மரபைச் சேர்ந்த திருப்பராய்த்துறை மடத்தின் துறவியான ஸ்ரீசித்பவானந்தர், சேலம் கந்தாஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் போன்றவர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் மூலம் நல்ல ஆன்மிகப் பயிற்சியைப் பெற்றேன்.

அதேபோன்று சில சித்தர்களிடம் பழகியதால் இரசவாதக்கட்டைப் பற்றிய உண்மை களை அறிந்தேன். பாதரசத்தைக்கொண்டு ஒரு சிவலிங்கத்தைச் செய்யவேண்டுமென சுமார் மூன்றாண்டுகள் முயற்சிசெய்தும், ஆராய்ந்தும் வெற்றிபெற முடியவில்லை. இதற் கிடையில் ஒருநாள் விடியற்காலை கனவில், தெய்வீக வெளிச்சத்திற்கு நடுவே கரூவூரார் சித்தர் தோன்றினார். என்னை ஆசிர்வாதம் செய்யும் வண்ணம் இந்தச் சம்பவம் இருந்தது. அதற் குப்பின்பு சிவலிங்கம் செய்யும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட் டது. எனக்கு மானசீக குருவாக இன்றும் கரூவூரார் சித்தர் இருந்து வருகிறார். போகரின் சீடரான இவர் ஒன்பதாம் திருமுறையில் பத்து பாடல்களை சிவபெருமானை வணங்கும் வண்ணம் எழுதியுள்ளார். இறைவன் ஈசனின் அருளும், சித்தர்களின் அருளும், குருவருளும் ஒருசேர அமைந்தால் மட்டுமே எந்த ஒரு காரியத்தையும் நம்மால் சாதிக்கமுடியும்'' என பெருமிதத்துடன் விளக்கினார்.

ஈசனுக்கு மிக உகந்த நாளான மகா சிவராத்திரியன்று அவரின் பாதத்தைப் பற்றிக் கொள்வோம். (ஆசிரம அலைபேசி எண்: 80728 48030, 97511 24875).