அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை அடக்குவதற்கு ஆலோசனைகள் கூறுங்கள்? -மீரா, ஆரணி

Advertisment

மனதை சரியாக வைத்துக்கொண்டால் மட்டுமே அனைவரும் சௌக்கியமாக இருக்க முடியும். வெளி சௌகர்யங்கள் எத்தனை இருந்தாலும் மனம் நல்லபடியாக இருந்தால்தான் பயனுண்டு. இல்லாவிட்டால் துக்கம், அழுகை, பயம் சஞ்சலம்தான்.மனம் நல்லபடியாக இருப்பது என்றால் என்ன? அது வேண்டும், இது வேண்டும். இப்போது இருக்கிற வசதி போதாது. பொருள், பதவி, பேர் வேண்டும் என ஓயாமல் மனம் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மனம் அதிருப்தியிலேயே இருக்கிறது. இதனால்தான் போட்டி, பொறாமை, துக்கம், ஏற்பட்டு, எத்தனை கோடீஸ்வரனாலும் சாந்திமு லேது, ஸௌக்யமு லேது என்று இருக்கிறது.ஒரு குடம் அழகாக இருக்கிறது. அதன் அடியில் நாலு ஓட்டை இருந்துவிட்டால், உள்ளே அம்ருதத்தை பிடித்து வைத்தாலும் ஒழுகித்தானே போகும்.இதுபோல நமக்கு அதிருப்தி, கோபம், பொறாமை, அழுகை மாதிரி நாலு பொத்தல் இருந்துவிட்டால், நம் மன ஆனந்தம் என்கிற அம்ருதத்தை நமக்குள் பிடித்துவைத்து காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் மனம் அலைபாயும்.எனவே உங்கள் மனதை, எண்ணங்களை, ஆசைகளை கட்டுப்படுத்தி, தெய்வமே கதியென்று இருந்தால் அலைபாயும் மனம் அமைதியாகும்.

Advertisment

சந்திராஷ்டமம் என்றால் என்ன? என்ன செய்யலாம், செய்யக்கூடாது?-கே.எல்.பகவதி, சென்னை-91.

ஒவ்வொரு ஜாதகத்திலும், சந்திரன் நின்ற கட்டம், ராசி எனப்படும். இந்த சந்திரன் நின்ற ராசிக் கட்டத்துக்கு 8-ஆவது இடத்தில், கோட்சார சந்திரன் சென்றுகொண்டிருக்கும் காலமே.சந்திராஷ்டமம் எனப்படும். அஷ்டமம் என்றால் எட்டு என பொருள். சந்திரன் 8-ஆமிடத்தில் நிற்கும் நேரம் சந்திராஷ்டம நாள் எனப்படும்.சந்திரன், ஒரு ராசியைக் கடக்க 2 1/4 நாட்கள் எடுத்துக்கொள்ளும். பொதுவாக, இந்த 2 1/4 நாட்களையும் சந்திராஷ்டமம் ஓடுகிறது என குறிப்பிடுவர்.எனினும், குறிப்பாக சந்திராஷ்டம நாள் என்பது, உங்களின் பிறந்த நட்சத்திரத்திரம் தொட்டு எண்ணிவரும் 17-ஆம் நட்சத்திரமே, சந்திராஷ்டம நட்சத்திரம் ஆகும். இது இந்த சந்திராஷ்டம நாள் 27 நாளுக்கு ஒருமுறை வரும். இந்தநாளில் மனம் சஞ்சலப்படும். புத்தி குழப்பாகும். எனவே முடிவுகள் தவறாக போய்விட வாய்ப்பு உள்ளது. கவன சிதறலும் உண்டு. ஒரு முகமாக, சிந்திக்க இயலாது. 

Advertisment

எண்ணங்கள், செயல்களில் தடை உண்டாகும். எனவேதான் சந்திராஷ்டம தினங்களில் முக்கிய செயல்கள் முடிவுகளைத் தவிர்த்து விடுங்கள் என அறிவுரை கூறப்படுகிறது.

தினமும் நடைபெறும், தினப்படி வேலை களில்கூட சொதப்பலான முடிவுகள் வந்து விடும்.

27 நட்சத்திரங்களும் அதற்குரிய சந்திராஷ்டம நட்சத்திரமும்

1. அஸ்வினி- அனுஷம்.

2. பரணி- கேட்டை.

3. கார்த்திகை- மூலம்.

4. ரோகிணி- பூராடம்.

5. மிருகசீரிடம்- உத்திராடம்.

6. திருவாதிரை- திருவோணம்.

7. புனர்பூசம்- அவிட்டம்.

8. பூசம்- சதயம்.

9. ஆயில்யம்- பூரட்டாதி.

10. மகம்- உத்திரட்டாதி.

11. பூரம்- ரேவதி.

12. உத்திரம்- அஸ்வினி.

13. அஸ்தம்- பரணி.

14. சித்திரை- கார்த்திகை.

15. சுவாதி- ரோகிணி.

16. விசாகம்- மிருகசீரிடம்.

17. அனுஷம்- திருவாதிரை.

18. கேட்டை- புனர்பூசம்.

19. மூலம்- பூசம்.

20. பூராடம்- ஆயில்யம்.

21. உத்திராடம்- மகம்.

22. திருவோணம்- பூரம்.

23. அவிட்டம்- உத்திரம்.

24. சதயம்- அஸ்தம்.

25. பூரட்டாதி- சித்திரை.

26. உத்திரட்டாதி- சுவாதி.

27. ரேவதி- விசாகம்.

சந்திராஷ்டம நாளில் கவனமாக இருங்கள் என்று கூறப்பட்டுதேயொழி என்ன செய்ய லாம் என்று எதுவும் கூறப்படவில்லை.

மானிட பிறப்பின் சிறப்பு என்ன?-எஸ்.ஆர். ஹரிஹரன், சென்னை.

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றனர். உண்மையிலேயே மனிதராய் பிறப்பது சிறப்புத்தான். ஏனெனில், எல்லா உயிரினங்களிலும், மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கத் தெரியும். இந்த சிந்தனை தரும். உத்வேகமே, இறைவனை வணங்கும். உயர் நிலையைத் தருகிறது. இறைவனை குறித்து விரதமிருப்பது, கீர்த்தனைகள், ஸ்லோகங்கள். நூல்கள் இவற்றை பாராயணம் செய்வது என வாழ்வை உயர் நோக்கி நகர்த்த இயலுகிறது. மனிதர்கள்தான் யாகம், பூஜை என அக்னி சம்பந்த விஷயங்களை செய்கிறார்கள். இறைவனின் நாமங்களை அஷ்டோத்ரம் அல்லது சகஸ்ரநாமமாக கூறமுடிகிறது. அவ்வளவு ஏன்? தேவர்களும், இந்த மனிதப் பிறவியை பார்த்து, சில நேரம் பொறாமைப்படுவார்களாம். மனிதர்களால் எளிதாக, இறையருளை பெறமுடிகிறதே என பொறாமைப்படுவார்களாம். இதனால் மனித பிறப்பு சிறப்புடையது என்பதில் சந்தேகமில்லை.

பசு மாட்டிற்கு பழம், கீரை கொடுத்தால் ஏழு பிறவிக்கும் புண்ணியம் வருமா?-விஜயபத்மா, ஈரோடு.

உண்மைதான். பசு எனும் காமதேனு பாற்கடலை கடையும்போது வெளிவந்தது. மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது மட்டும். அவனது தாயார் பால் கொடுக்கிறாள். ஆனால் அந்த மனிதன் கிழவனாகும் வரை பால் கொடுப்பது கோமாதா எனும் பசுதான். ஒரு முறை, பூமியில் அசுர சக்திகளின் ஆர்ப்பாட்டமும், துன்பமும் அதிகமான போது, பூமாதேவி, விஷ்ணுவிடம் முறையிட அவர் கிருஷ்ணாவதாரம் எடுத்தார். அப்போது பூமாதேவியே பசுக் கூட்டமாக மாறி, கிருஷ்ணருடன் போனாள். சன்யாசிகளின் ஆகாரத்தில் இரண்டு விஷய கட்டுப்பாடு உள்ளது. ஒன்று அமைதி தரவேண்டும். இரண்டு அது எந்த ஜீவனையும் இம்சை படுத்தாமல் இருக்கவேண்டும். எனவே நிஜமான சன்யாசிகள், பாலை உணவாக எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.பசுவின் சாணம், கோமூத்ரம், நெய், பால், தயிர் இவை ஐந்தும் சேர்ந்தது பஞ்ச கவ்யம் எனப்படும். இதனை சற்று உட்கொள்வதால், தீட்டு போகும். இது உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்தின் அழுக்கையும் நீக்கும். கூடவே நமது பூர்வ கர்ம பாபத்தையும் போக்கும். கோரோசனையும் மிகச் சிறந்த மருந்து ஆகும். மேலும் கோ ச்ருங்கம் எனும் மாட்டு கொம்பு வழியே ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்வதை மிக விசேஷமாக கூறுவர்.

சனி பகவானின் பூரண அருளைப் பெறுவது எப்படி?ஆர்.கே. -ங்கேசன் மேலகிருஷ்ணன்புதூர்.

பொதுவாக சனியின் பூரண அருளைப் பெற, அவரின் வாகனமான காகத்திற்கு தினமும் சாதம் வைக்க வேண்டும் என்பது பொதுவான விஷயம். தேய்பிறை அஷ்டமியில், சனியின் குருவான பைரவருக்கு தீபமேற்றலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடலாம்.இரும்பு பாத்திரம், எவர்சில்வர் பாத்திரம், கேழ்வரகு, நீலக்கல் இவற்றை தானம் செய்யலாம். முக்கியமாக பனைமரம் சம்பந்த பொருட்களை வாங்கி தானம் செய்வது மிக நல்லது.இவை எல்லாவற்றையும்விட மிக அதிக முக்கியமான பரிகாரம் என்றால் நாம் உண்மையாக இருப்பது. நேர்மையாக நடந்து கொள்வது. சொந்த உழைப்பில் உண்பது. பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது. 
சொந்த காசில் செலவுசெய்வது. எளிய வாழ்ககை வாழ்வது. சனி ஒரு எளிமையான மந்தக்கிரகம். எனவே யார் அமைதியான- பணிவான வாழ்வை வாழ்கிறார்களோ, அவர்களுக்கு சனீஸ்வர பகவானின் கிருபை கிடைக்கும்.