மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது என்றா லும், "மந்தன் சேய் பார்த்திடவும் தீது சேர்ந்திடவும் தீது'' என்பதுபோல் 11-ல் உள்ள சனியை செவ்வாய் பார்க்கிறார். செவ்வாயை சனியும் பார்க்கிறார். எனவே காரிய தாமதம், மனநிம்மதியில் சங்கடம் போன்ற சங்கடங்கள் ஏற்படலாம். மாத முற்பாதிவரை சனி வக்ரகதியில் செயல்படுகிறார். நவம்பர் 17-ல் சனி வக்ரநிவர்த்தி. ராசிக்கு 7-ல் நிற்கும் புதனும் வக்ரநிவர்த்தி. அது மனதுக்கு ஒரு ஆறுதலைத் தரும். உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். தேக ஆரோக்கியம் மேம்படும். கடந்த மாதம் நீசமாக இருந்த சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 7-ல் மாறி ஆட்சி பெறுகிறார். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். 4-ல் நிற்கும் குரு வக்ரம் பெற்றாலும் வக்ரத்தில் உக்ர பலம். அத்துடன் உச்சமும் பெறுவதால் வீடு, மனை சம்பந்தப்பட்ட வகையில் நன்மைகள் ஏற்படும். சுப விரயத்திற்கும் இடமுண்டு. ஒரு சிலர் உத்தியோகம் சம்பந்தமாக தற்காலிகமாக வெளியூர் செல்ல நேரிடும். தாயார் உடல்நலனில் ஆரோக்கியம் தெளிவுபெறும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 6-ல் மாறி ஆட்சி பெறுகிறார். 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். அலைச்சல், வீண் விரயம், அலைக்கழிப்பு போன்றவற்றை சந்திக்கலாம். 17-ஆம் தேதிமுதல் 10-ல் உள்ள சனி வக்ரநிவர்த்தி பெறுகிறார். எனவே உத்தியோகம் மற்றும் தொழில் துறையில் இருந்துவந்த டென்ஷன், வேலைப்பளு, ஓய்வற்ற அலைச்சல் இவையெல் லாம் மாறி ஒரு ரிலாக்ஷேசன் ஏற்படும். ஒருசிலர் புதிய உத்தியோகத்திற்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 7-ல் செவ்வாய் நின்று 10-ஆமிடத்து சனியைப் பார்க்கிறார். சனியும் செவ்வாயைப் பார்க்கிறார். திருமணம் வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணத்தை சந்திக்க நேரும். 3-ல் குரு 18-ஆம் தேதிமுதல் வக்ரம்பெற்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் சச்சரவு, வாக்குவாதம் ஏற்படலாம். எனினும் பிரிவினை ஏற்படாது. 4-ஆமிடத்து சூரியன் நீசமாக இருப்பதால் தகப்பனாருக்கு உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் உண்டாகும். சகோதரவகையில் சகாயம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் வக்ரகதியில் சஞ்சாரம். 9-ல் உள்ள சனியும் வக்ரகதியில் சஞ்சாரம். புதன் 5-ல் நின்று வக்ரம் பெறுவதால் உங்களது திட்டங்களில், எண்ணங்களில் காரிய தாமதம் அல்லது தடை போன்றவற்றை ஏற்படுத்தலாம். குரு 2-ல் நின்று 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். தொழில் இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் என் வீட்டுக்காரரும் கோர்ட்டுக்கு போகிறார் என்ற கதையாக பிரயோஜனமற்ற நிலையாகத்தான் பிழைப்பு ஓடுகிறது. 17-ஆம் தேதிமுதல் சனி, புதன் வக்ரநிவர்த்தி. எனவே அது ஒரு ஆறுதலாக அமையும். 5-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் வக்ர புதனுடன் இணைந்ததால்தான் மேற்கூறிய தடை, தாமதம், உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு சிலருக்கு பதவி உயர்வு ஏற்பட இடமுண்டு. அல்லது ஊதிய உயர்வுடன்கூடிய இடமாற்றம் ஏற்படலாம். 18-ஆம் தேதிமுதல் குரு வகரம், தொழிலில் புதிய அணுகுமுறை உண்டாகும். 3-ஆமிடத்துக் கேது அந்த அணுகுமுறையை சமாளித்து சரிகட்டும் ஆற்றலையும் தரும். எந்த ஒரு செயல்பாட்டிலும் நிதானம் பொறுமை மிகமுக்கியம்.
கடகம்
கடக ராசியில் ஜென்ம குரு உச்சமாக இருக்கிறார்.
8-ல் உள்ள சனி வக்ரகதியில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் யோகம் போன்றவற்றில் ஏதோ நிகழ்ந்து உங்களை ஆச்சரியப்படுத்தலாம். 2-க்குடைய சூரியன் 4-ல் நீசம் பெற்றாலும் 4-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெறுவதால் சூரியனுக்கு நீசபங்கம் ஏற்படுகிறது. 4-ல் புதனும் வக்ரமாக இருப்பதால் உடல்நலனில் அவ்வப்போது வைத்தியச் செலவோ அல்லது தாய்மாமன்வகையில் தொந்தரவுகளை சந்திக்க நேரும். அவர்களால் வீண் விரயம் ஏற்படலாம். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் மனக்குழப்பத்தை உண்டாக்கி சில நேரம் நிம்மதியை இழந்தாலும் ஜென்மத்திலுள்ள உச்ச குரு அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருவார். 5-க்குடையவர் 5-ல் ஆட்சி. சனி, செவ்வாய் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்வை. எனவே அனைவரும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது அவசியம். நாட்டிலும் தீ விபத்து, சேதம் போன்ற சம்வங்கள் நிகழலாம். 18-ஆம் தேதிமுதல் ஜென்ம குரு வக்ரம் பெறுவதால் மனக்குழப்பத்தைத் தரும். மனைவிவழியில் அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 3-ல் நீசமாக இருக்கிறார். அதேசமயம் 2-ல் நீசமாக இருந்த சுக்கிரன் 3-ல் (3-ஆம் தேதிமுதல்) ஆட்சிபெறுவதால் சூரியன் நீசபங்கம் பெறுகிறார். எனவே காரிய அனுகூலம் என்பது சற்று தாமதமாகலாமே தவிர தடைப்படாது. தடை என்பது வேறு! தாமதம் என்பது வேறு! 4-ல் ஆட்சிபெற்ற செவ்வாய் பூமி, மனை சம்பந்தமாக சுப விரயங்களைத் தருவார். 12-ல் உச்சம்பெறும் அதிசார குரு தற்காலிக இடமாற்றம் அல்லது ஊர்மாற்றத் தைத் தருவார். கட்டடம் சார்ந்தவகையில் பணிகள் இழுபறியாக இருந்தால் அந்த வேலைகள் இம்மாத பிற்பாதியில் இருந்து நடைபெறும். பூர்த்தியாவதற்கான முயற்சிகளும் வெற்றியாகும். 7-ல் உள்ள சனி வக்ரகதியாக இருந்து ராசியைப் பார்ப்பதால் தன் சுகம், மனைவி சுகம் பாதிக்கப்படலாம். 17-ஆம் தேதிமுதல் சனி வக்ரநிவர்த்தி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும். சில நேரம் வீண் மன கற்பனை பயம் தோன்றும். திருமண முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுபவர்களுக்கு முயற்சிகள் கைகூடும்.
கன்னி
கன்னி ராசிக்கு அதிசாரமாக குரு 11-ல் உச்சமாக இருப்பது ஒரு பலம். காரிய வெற்றி, முன்னேற்றம் போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். இதுவரை வேலை, உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள், தொந்தரவுகள் இனி விலகும். மேலும் 18-ஆம் தேதி முதல் 11-ல் உள்ள குரு வக்ரம் பெறுவதால் வக்ரத்தில் உக்ரபலமாக செயல்படும். சத்ருவகையில் ஜெயம் உண்டாகும். நீங்கள் யாரையும் பகையாக நினைக்காவிட்டாலும் உங்களை போட்டியாக பொறாமைப்பட்டு தொல்லை கொடுத்து வந்தவர்கள் தானாக விலகி ஒதுங்குவார்கள். 2-ல் உள்ள ராசிநாதன் புதன் நீசம் தெளிந்து சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். குடும்பத்திலும் உங்களுக்கு சங்கடம் தந்தவர்கள் மனம் மாறி ஒற்றுமையுணர்வு பாராட்டுவார்கள். 7-ஆமிடத்தை 7-க்குடையவரே பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் மறையும். அன்யோன்யம் ஏற்படும். 3-ல் செவ்வாய் ஆட்சி. 3-ஆமிடத்தை குரு பார்க்கிறார். பல கஷ்டங்களை சமாளித்து செல்லும் திறனும் பொறுமையும் குரு தருவார்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் தொடக்கத்தில் நீசமாக இருந்தாலும், 3-ஆம் தேதிமுதல் துலாத்தில் ஆட்சியாக மாறுகிறார். 12-க்குடைய புதன் சேர்க்கை. ஒருசில காரியங்கள் துரிதமாக நடந்தாலும் சில காரியங்கள் ஆமை வேகத்தில்தான் நடைபெறும். 11-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நீசம் பெறுவதால் காரிய முன்னேற்றத்தில் சில தாமதங்கள். 5-ல் உள்ள சனி 17-ஆம் தேதிமுதல் வக்ரநிவர்த்தியும், ஜென்ம சூரியன் 2-ஆமிடத்திலும் மாறுவதால் அதன்பிறகு காரிய சித்தியும் மனமகிழ்வும் உண்டாகும். 10-ல் உள்ள உச்ச குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவுக்கு இடமுண்டு. அவர் 4-ஆமிடத்தையும் பார்ப்பதால் மனை சம்பந்தமாக விரயம் ஏற்பட்டு அதன்மூலம் பணவரவு ஏற்படலாம். அதன்மூலம் பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட தொழிலை நடத்துபவர்களுக்கு அபிவிருத்தியும் உண்டாகும். 5-ஆமிடத்து ராகு பிள்ளைகள் பற்றிய மனக்கவலை அவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையை உண்டு பண்ணினாலும் ஜென்ம புதன், 5-ஆமிடத்துச் சனியின் வக்ர நிவர்த்திக்குப்பிறகு நற்பலனை எதிர்பார்க்கலாம். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 2-ல் மாறி குருவின் பார்வையைப் பெறுவதால் அணுகூலம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் ஜென்ம ராசியில் (செவ்வாய்) ஆட்சியாக இருக்கிறார். குருவின் பார்வையைப் பெறுகிறார். 4-ல் சனி வக்ரமாக இருப்பதால் அவ்வப்போது உடல்நலத்தில் சௌகரியக்குறைவு ஏற்பட்டாலும் குரு ராசியைப் பார்ப்பதால் சமாளித்துவிடலாம். 3-ஆமிடத்தையும் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் உருவாகும். 10-க்குடைய சூரியன் 12-ல் மறைவு, நீசம். உத்தியோகம் அல்லது வேலை சார்ந்த விஷயங்களில் சில தர்மங்கடங்கள் நேர்ந்தாலும் 5-ஆமிடத்தை 5-க்குடையவரே பார்ப்பதால் உங்கள் மனதில் தோன்றும் திட்டத்தில் நிவர்த்திக்கும் இடமுண்டு. 17-ஆம் தேதிமுதல் குரு 10-க்குடையவரைப் பார்ப்பதால் தொழில் அபிவிருத்திக்கு இடமுண்டு. ஒருசிலர் உத்தியோகரீதியாக இடமாற்றத்தையும் சந்திக்கலாம். 4-ஆமிடத்து சனி வக்ரநிவர்த்திக்குப்பிறகு தேகநலம் நன்றாகும். நீண்டநாட்களாக நடைபெறாமல் இழுபறியாக இருந்த காரியம் ஒன்று நடைபெறும் அமைப்பும் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியும் எண்ணிய எண்ணம் ஈடேறியதில் குதூகலமும் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 8-ல் மறைவு. உச்சம். பொதுவாக உச்சம்பெற்ற கிரகத்திற்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது ஜோதிடவிதி. இங்கு ராசிநாதன் மறைவது அவ்வளவு நல்லதல்ல. அபகீர்த்தி, அவமானம், சங்கடம் போன்றவற்றை சந்திக்க நேரும். 3-ல் உள்ள சனி வக்ரம் தெளிந்தபின் மேற்கண்ட சங்கடங்களை சமாளித்தாலும் நிறைவு இருக்காது. மன திருப்தியும் இருக்காது. 3-ஆமிடத்து ராகு சகோதரவகையிலும் மனக்கசப்புகளைத் தரும். 9-க்குடைய சூரியன் 11-ல் நீசமாக இருக்கிறார். தகப்பனார் அல்லது பூர்வீக சொத்து சம்பந்தமாக விவகாரங்கள் உருவாகும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு இடமாற்றத்தையும் உண்டாக்கும். ஒருசிலருக்கு அரசு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை சந்திக்க நேரும். எந்த செயல்பாட்டிலும் நிதானமும் பொறுமையும் அவசியம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க வேண்டாம். கணவன்- மனைவிககுள் அன்யோன்யம் உண்டாகும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு ஆரோக்கியம், தாய் சுகம் இவற்றில் நற்பலன்களைத் தருவார். பிள்ளைகள்வகையிலும் நன்மதிப்பு உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. கோட்சாரத்தில் ஒரு பொதுவிதி உண்டு. ஏழரைச்சனி காலத்தின் தொடக்கத்தில் உயர்வு உச்சம். இவற்றை சனி தந்தால் கடைசி காலத்தில் அதாவது- பாதச்சனி காலத்தில் வாழ்வா- சாவா போராட்டத்தைச் சந்திக்க வைத்துதான் நிவர்த்தி தருவார். அத்துடன் அவரவர் ஜெனன ஜாதக தசாபுக்தி பலனையும் அனுசரித்து பலன் நடைபெறும். இக்காலகட்டடம் 2-ல் சனி வக்ரமாக இருப்பதால் பொருளாதாரத்தில் தேக்கம், தொழிலில் முடக்கம் இவற்றையும் சந்திக்க நேரும். என்றாலும் 7-ல் குரு உச்சம்பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால் இந்த கஷ்டங்களை சரிகட்டி சமாளிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். 11-ஆமிடத்தை குரு பார்ப்பத்தால் முன்னேற்றத்தையும் தருவார். லாபத்தையும் தருவார். ஏழரைச்சனியில் சந்திர தசையோ- சந்திர புக்தியோ சந்திக்காமல் இருந்தால் மேற்கண்ட பலன் சாத்தியம்தான். பொறுத்தார் பூமியாள்வார் என்பதற்கிணங்க உங்களது தவம் நற்பலனைத் தரும். முயற்சி திருவினையாக்கும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் கடந்த நான்கு மாதகால வக்ர கதியில் பயணிக்கிறார். எனவே அடிக்கடி உடல் உபாதை தொந்தரவுகள் வந்து விலகும். குடியிருப்பு அல்லது உத்தியோகம் சார்ந்த இடமாற்றம் உண்டாகும். 2-க்குடைய குரு 6-ல் உச்சம்பெற்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். தனவரவுகளைத் தந்தாலும் மேற்கூறிய வாறு மருத்துவச் செலவுகளையும் தருவார். 10-ல் செவ்வாய் ஆட்சி, அவருக்கு குருபார்வை. தொழில் துறையினருக்கு இயக்கம் தடைப்படாது. ஜென்ம ராகு சப்தம கேது என்பதால் கணவன் அல்லது மனைவிவகையில் சிற்சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். யாரேனும் ஒருவர் அமைதி காப்பதன்மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். வேலை சம்பந்தமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு முயற்சித்தவர்களுக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்புகள் கைகூடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சிலர் மீண்டும் தாயகம் திரும்பும் சூழலும் அமையும். 9-ல் சூரியன் நீசம். தகப்பனா ருக்கு சங்கடங்கள் ஏற்படலாம். அல்லது அவரின் உத்தியோகம் பாதிக்கப்படலாம், கவனம் தேவை.
மீனம்
மீன ராசிநாதன் குரு 5-ல் உச்சம்பெற்று (அதிசாரப் பெயர்ச்சி) ராசியைப் பார்க்கிறார். ஜோதிடத்தில் ஒரு விதியுண்டு. எந்த ஒரு ராசிக்கோ- லக்னத்திற்கோ குரு பார்வை கிடைத்தால் சிறப்பு என்பது. இங்கு குருவே ராசிநாதன். அவரே அவர் இடத்தைப் பார்ப்பதால் ஏழரை இருந்தாலும் கழுவின மீனில் நழுவின மீன்போல சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு முன்னேற்றத்தைத் தருவார். தொழில் துறையில் லாபத்தைத் தருவார். 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஆன்மிக வழிபாட்டையும் சிறக்கச் செய்வார். 12-லுள்ள வக்ர விரயச்சனி உத்தியோகம் அல்லது தொழில் சம்பந்தமாக விரயத்தைத் தந்தாலும் அது சுப விரயமாக மாற்றும் யுக்திகளையும் தருவார் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக புதிய தொழில் தொடங்குவது அல்லது வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்றவையும் சுபவிரயத்தில் சேருமல்லவா! 5-ல் குரு உச்சம் என்பதால் பிள்ளைகள் வகையில் மனக்கவலையைத் தருவார். நல்லவற்றை எதிர்பார்ப்பிலேயே காத்திருக்க வைப்பார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/monthrasi-2025-11-04-16-08-32.jpg)