நவகோள்களில் ஒன்றான சூரியன் 27 நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்துவரும் கால அளவினைக் கொண்டு சித்தர்களால் வருடம், மாதம், கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூரியனை மையமாகக் கொண்டு பூமியின் சுற்றுவட்ட தூரம் அளவில் 360 டிகிரியும், இதற்கு ஒரு வருட காலமும் ஆகும். ஆடி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்கழி மாதம் 30-ஆம் தேதி வரை 6 மாதம் (180 டிகிரி) அரை வட்ட வடதிசைப் பயணம் "உத்திராயனம்' என்றும்; தை மாதம் 1-ஆம் தேதி முதல் ஆனி மாதம் 30-ஆம் தேதி வரை (180 டிகிரி) தென்திசைப் பயணம் தட்சிணாயனம் என்றும் அளவீடு செய்து கூறப்படுகின்றது.
சூரியனின் ஒளி ஒரு பொருள்மீது படும்போது, அந்தப் பொருளின் நிழல் உண்டாகும். இதில் தை, ஆடி ஆகிய இரு மாதங்களில் சூரியன்- பொருள்- நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் நிழல் கொஞ்சம் சாய்வாக இருக்கும்.
பூமி ஒரு வருட சுழற்சியை முடித்து தொடங்கிய ஆரம்பப் புள்ளியை அடைந்து, அதன்பிறகு அடுத்த சுற்றினைத் தொடங்கும் முதல் நாள் தை மாதம் 1-ஆம் தேதிதான். வானியல் கணக்கின்படி வருடத் தொடக்க முதல் நாளாகும்.
புராணத்தில், தேவர்களுக்கு ஒருநாள் என்பது, பூமியிலுள்ள மனிதர்களுக்கு ஒரு வருடகாலம் என கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கு இரவு முடிந்து மறுநாள் தொடங்கும் காலைப்பொழுது மார்கழி என்று கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவும் "மாதங்களில் நான் மார்கழி' என்று கூறுகின்றார். அதாவது நாள், மாதம் ஆகியவற்றில் நான் முதன்மையானவன் என்று கூறுகின்றார்.
புராண கருத்துப்படி பார்த்தாலும், தேவர்களின் ஒருநாள் முடிந்தால், மனிதனின் ஒரு வருடகாலம் முடிவடைகின்றது. இந்த கணக்கின்படி, தை மாதம் பூமியிலுள்ள மனிதர்களுக்கு அடுத்த புதுவருடத் தொடக்கமாகிறது.
வருட சங்கராந்தி தேவதை
பஞ்சாங்கத்தில், தமிழ் வருடங்கள் அறுபது என்றும்; ஒரு வருடத்திற்கு ஒரு நிர்வாக தேவதை என்றும்; ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு பெயரில் சங்கராந்தி தேவதையைக் குறிப்பிடுகின்றார்கள். இதில் மகர மாதம் எனப்படும் தை மாத நிர்வாகத்திற்குரிய மகர சங்கராந்தி தேவதைக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து, அதன் பெயர், உருவம், வாகனம், ஆயுதம், பயணம் செய்யும் திசை, பூமியில் உண்டாகும் நன்மை- தீமை போன்ற பலன்களைக் கூறியிருப்பார்கள்.
(இதில் சிலர் மாதத்திற்கொரு சங்கராந்தி தேவதை யுண்டு என்பர்).
சித்திரை மாதம்தான் புதுவருடத் தொடக்கமென்றால் மேஷ சங்கராந்தி தேவதை என குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் காலம்காலமாக நிர்ணயித்த புதுவருடப் பிறப்பின் உண்மை உணர்ந்தே, பஞ்சாங்கம் கணித்து எழுதுபவர்கள் மாற்றமில்லாமல் கூறிவருகின்றார்கள். தெய்வம், தேவதைகள் புது நிர்வாக ஆட்சியை ஏற்று கொள்வதும் வருட ஆரம்பமான தை மாதம் தான்.
புராண சாஸ்திரங்கள், பஞ்சாங்க முறைகள், பூமி, சூரியன் வட்டச் சுழற்சி, ஆரம்ப, முடிவு நிலை என எப்படி கணக்கிட்டுப் பார்த்தாலும் தை மாதம் வருடத் தொடக்கம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே புதுவருடம் தொடங்கும் நாளாகும். சைவத்தமிழ் ஓதிய குரு அகத்தியர் தன் அறிவால் அறிந்து கூறியதே தை மாதம் 1-ஆம் தேதி புத்தாண்டு நாள் என்பது.
குரு அகத்தியர், ஒவ்வொரு மனிதனும்
அவரவர் வம்ச முன்னோர்களை பூஜை செய்து வழிபட வேண்டிய நாளாகவும் தை மாத முதல் தேதியைக் குறிப்பிட்டுள்ளார். எல்லா பண்டிகைகளையும் நம் வீட்டினுள்ளே கொண்டாடலாம். ஆனால் முன்னோர் வழிபாடாகிய தைப் பொங்கலை மட்டும் அவரவர் வீட்டு வாசலில்தான் வழிபாடு செய்யவேண்டும் என்பது ஆதிகுரு அகத்தியர் நிர்ணயித்தது ஆகும்.
இந்தியாவின் தென்பகுதியில் வசித்த தமிழ் பேசும் மக்கள் இந்த தைப்பொங்கல் நாளை மட்டும்தான் புத்தாண்டு நாளாகவும், முன்னோர்களை வழிபடும் நாளாகவும் கொண்டாடி வந்துள்ளார்கள்.
முன்னோர் வழிபாட்டு முறை
வருடம்தோறும் தை மாதம் 1-ஆம் தேதி நமது முன்னோர்களை வழிபாடு செய்யவேண்டும். அன்று காலை 5.30 மணிக்கு வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, வாசலில் வாழை இலையின் நுனி பாகம் வடக்கு நோக்கி இருக்குமாறு படையல் போட்டு, இலையின் தெற்குப் பக்கம் பொங்கல் பானை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். (அவரவர் குடும்பத்தில் இறந்தவர்கள் படம் இருந்தால் வடக்கு நோக்கி வைக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.)
நமது முன்னோர்கள் காலத்தில் குடும்ப உறவு களிடையே ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் உண்டானதுதான் சகல பாவ- சாப தோஷங்களும். இந்த வினைகளால் குடும்பத்தில் உண்டான திருமணத் தடை, கணவன்- மனைவி ஒற்றுமையின்மை, வீடு, மனை, எதிரிகள் என இன்னும் பல பிரச்சினைகள் இந்த வழிபாட்டால் படிப்படியாக விலகும்.
தன் குலதெய்வம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள், முன்னோர் பூஜை செய்து இடையில் செய்யாமல் விட்டவர்கள், தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள் மட்டுமின்றி, அனைவருமே முன்னோர் வழிபாட்டினை வருடம் தவறாமல் செய்துவந்தால், வருடத்திற்கு வருடம் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து குடும்பம் மேன்மை அடைவதை உணரலாம்.
தை முதல் நாளான பொங்கல் வழிபாடு எல்லா நன்மைகளையும் அளிக்கவல்லது. அந்தநாளில் இறைவழிபாட்டுடன் முன்னோரையும் மனதிலெண்ணி வணங்குவது சாலச் சிறந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/thai-2026-01-02-16-42-24.jpg)