அன்புத்தம்பி ஆர்.டி.எக்ஸ்!
"குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.'
-என்று திருக்குறள் தத்துவம் பேசுகிறது.
முட்டையில் இருந்து குஞ்சு வெளியில் வந்து பறப்பதைப் போன்றதுதான், இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவாகும் என்பது இதன் பொருள்.
ஆம்! நிச்சயம் இல்லா ததுதான் வாழ்க்கை!
வள்ளுவப் பேரா சான் வாழ்வின் நிலையாமையை இந்தக் குறள் மூலம் உணர்த்து வதை, மனம் ஏற்றுக் கொண்டாலும், முக்கியமானவர்களை இழக்கும் போது இதயம் கவலையுறத்தான் செய்கிறது. அப்படி யானதொரு இழப்பை நமது நக்கீரன் குழுமம், அண்மையில் சந்தித்தது.
நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், உதயம் இதழின் பொறுப்பாசிரியருமான இரா.த. சக்திவேல், உடல்நலக்குறைவால் மரணம் அடைந்து, பத்திரிகைத் துறையில் பேரிழப்பை உருவாக்கியிருக் கிறார்.
ஆர்.டி.எக்ஸ் -
இது, 1990களில் அதிகம் பயன்படுத்தப் பட்ட வெடிமருந்து. அதையே தன் புனை பெயராகக் கொண்டு ஆர்.டி.எ(க்)ஸ் எனும் பெயரில் அதிரவைக்கும் கட்டுரை களை நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தவர் தம்பி இரா.த.சக்திவேல்.
அரசியல் புலனாய்வுக் கட்டுரைகளால் ஆட்சியாளர்களை நடுங்க வைத்த நக்கீரன், திரையுலகிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியதற்கு காரணம், தம்பி சக்திவே-ன் கட்டுரைத் தொடர்கள்தான்.
சினிக்கூத்து என்ற பெயரில் சினிமா செய்தி களை அவர் வழங்கி வந்த விதம், அலாதியானது. கோ-வுட்டின் அகம்-புறம் என்ற இரண்டையும் உண்மைத் தன்மையுடன் அம்பலப் படுத்தும் அவரது கட்டுரைகள் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
சின்னச் சின்ன செய்தி கள் தான். இரண்டு பக்க அளவில் வெளிவரும். அவை ஒவ்வொன்றும் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து திணிக்கப்பட்ட குண்டுகள் போல அதிர வைக்கும்.
நக்கீரனில் திரையுலகம் தொடர்பான கவர் ஸ்டோரிகள், தொடர் கட்டுரைகள் என, தம்பி சக்திவேல் எழுதியவை அனைத்துமே அதிரடி ரகங்கள்தான். அவருடைய சினிமா கட்டுரை கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, சினிக்கூத்து என்ற தனி இதழ், நக்கீரன் குழுமத்தி-ருந்து வெளியாகத் தொடங்கியது. கையெறி குண்டு போன்ற வடிவத்தில் அதிலும் ஆர்.டி.எக்ஸ் மருந்தை பக்கத்துக்கு பக்கம் நிரப்பினார் நம் தம்பி.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த தம்பி இரா.த.சக்திவே-ன் கனவுகள் பிரம்மாண்டமானவை. அவற்றை நோக்கிய அவரது உழைப்பு அசாதாரணமானது. எழுத்தை வாசகர்களின் மனதில் காட்சியாக்கிக் காட்டும் மாயாஜாலம் அவரது பேனாவுக்கு உண்டு. துல்-யமான தரவுகளும், மறுக்க முடியாத ஆதாரங் களும் அவரது கட்டுரைகளின் பலம்.
திரைத்துறையினர் அவரது பேனாவை சாந்தமாக்க நீட்டிய காசை எல்லாம், தூசென தட்டிவிட்டு, தன் எழுத்து அறத்தைக் காப்பாற்றி, நக்கீரனுக்குப் பெருமை சேர்த்தார் சக்திவேல்.
எழுத்தில் வேகம் இருக்கும். அதை எழுதி முடிப்பதிலும் அசாத்திய வேகம் அவரிடம் உண்டு. தன் விரல் நகங்களைக் கடித்தபடியே அவர் யோசிக்கும் தருணங் களில், ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு வகை செய்திகள், விரல் நுனியில் வந்து உட்கார்ந்துவிடும்.
அதை விறுவிறுவென, ரசனையான நடையில் எழுதிமுடிப்பார். கண்ணில் ஒற்றிக்கொள்வது போன்ற குண்டு குண்டான எழுத்துகள் (அதுவும் குண்டுதான்). அவை ஏற்படுத்திய தாக்கங்களும் குண்டுகளைப் போலத்தான் இருக்கும்.
சினிமா கட்டுரைகள் மட்டு மின்றி, அரசியல் செய்திகள், இலக்கி யப் படைப்புகள், கவிதைகள் என அவருடைய எழுத்து, பல பரிமாணங் களைக் கொண்டதாக விரிந்தது.
சினிமா தொடர்பான பல்வேறு அதிரடித் தகவல்களை உடனுக்குடன் வாசகர்களுக்குத் தந்தார் ஆர்.டி.எக்ஸ்.
குறிப்பாக-
= நடிகர் சங்கத் தேர்தல்களில் நடந்த குளறுபடிகள்,
= நடிகர் சங்க முன்னாள் தலைவர்களின் ஊழல்கள்
= என்.எல்.சி. விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடிகர்கள் நடத்திய பேரணி பற்றிய சுவாரஸ்யங்கள்.
அதேபோல-
= அவர் எழுதிய "ஒரு நடிகையின் கதை' தொடர் தமிழகம் முழுவதும் பரவலாகக் கவனிக்கப்பட்டது.
= நக்கீரன் இதழில் வெளிவந்த சினிமா தொடர்களான கலைஞானம், கங்கை அமரன், மனோபாலா, வி.சி.குகநாதன், -யாகத் அ-கான், முத்துக்காளை ஆகியோர் பற்றிய தொடர்களையும், சம்பந்தப்பட்ட பிரபலங் களுடன் பேசி, அவற்றைச் சுவைபடத் தொகுத்துத் தந்தவர் நமது ஆர்.டி. சக்திவேல்.
= கலைஞானம் தொடரை எழுதியபோது, அவர் இன்று குடியிருக்க வீடுகூட இல்லாமல் இருக்கிறார் என, சக்திவேல் குறிப்பிட, அது நடிகர் ரஜினிகாந்தின் பார்வைக்குச் சென்று, அவருக்கு வீடு கிடைக்கக் காரணமாக அமைந்தது.
= அதேசமயம் ஓராண்டுக்கு முன் நக்கீரனில் வெளிவந்த "ஏ கதை' எனும் தொடர், இந்திய, உலக அளவிலான வாசகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
= நடிகர்கள் விஜயகாந்த், விஜய் போன்றோர் கட்சி தொடங்குவதற்கு முன்பே, அது தொடர்பாக அவர்கள் ஆயத்தமானதை எல்லாம் முன்கூட்டியே எழுதி, அவற்றைத் தமிழகம் அறியச் செய்தவர் நம் சக்திவேல்தான்.
= நடிகை நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றபோது அதன் பின்னணியில் நடந்த விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் விரிவான பின்னணியுடன் அளித்திருக்கிறார்.
= தற்போது நக்கீரனில் வெளியாகி வரும் ஷாலப்பா தொடரையும் அவரே தொடங்கி வைத்தார்.
அவர் எழுத்தில் உள்ள கனல், அவரது முகத்திலோ உள்ளத்திலோ இருந்ததில்லை. முகத்தில் லேசாக அடர்ந்திருக்கும் தாடிக்கிடை யிலான அவருடைய புன்னகை இப்போதும் நக்கீரன் குடும்பத்தினரின் மனதில் நிலைத்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாகவே உடல்நலன் குன்றியிருந்த தம்பி சக்திவேல், தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி ஆகஸ்ட் 15 அன்று நக்கீரனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்.
அவரது பிரிவால் அவர் குடும்பமும் பத்திரிகை நண்பர்களும் கலங்கி நின்றபோது, தம்பி சக்திவே-ன் மறைவுக்கு அஞ்ச- தெரிவித்து செய்தி வெளியிட்ட நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன் அவர்கள், சக்திவே-ன் குடும்பத்திற்கு ஆறுதலூட்டும் வகையில் ரூபாய் 10 லட்சத்தை, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தர விட்டிருக்கிறார். (அவரது இரங்கல் செய்தி தனியே தரப்பட்டிருக்கிறது.)
முதல்வரின் இந்த கனிந்த உள்ளத்திற்கு நக்கீரன் குழுமம் சார்பிலும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தம்பி, சக்திவேல், குடும்பத்திற்கு எப்போதும்போல நக்கீரன் குடும்பம் ஆதரவாக எப்போதும் துணை நிற்கும். தம்பியின் எழுத்துகள் அவர் படத்தில் ஏற்றப்பட்டுள்ள விளக்கு போல என்றென்றும் ஒளிரும்.
=
__________________________
இதழியல் துறைக்குப் புது வெளிச்சம்!
என்னைப் போன்றவர்கள் கண்டுவந்த பெரிய கனவு, நம் தமிழக முதல்வரின் முயற்சியால் நனவாகி யிருக்கிறது.
இதழியல் துறையே புத்துணர்வு பெறும் வகையில், நமது முன்னோடித் தமிழக அரசு, இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது.இதன் மூலம் இதழியல் துறைக்கு அழுத்தமான எதிர்காலம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள இளைஞர்களும் இளைஞிகளும் இதழியல் துறையில் சாதிப்பதற்கான, ஒரு வெல்வெட்டுப் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் "நஷ்டப்பட வேண்டுமா? ஒரு பத்திரிகையைத் தொடங்கு' என்பார்கள். அந்த அளவிற்கு இதழியல் துறை இருட்டில், அதிக வளர்ச்சி யில்லாமல் சூம்பிப் போய் இருந்தது.
மக்கள் மத்தியில் பத்திரிகைகள் செல்வாக்கு பெற்றபோதும், பத்திரிகையாளர்களின் வாழ்க்கை என்பது, ஓகோ என்று பஞ்சுமெத்தையிலே புரளக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்பைப் பெறவில்லை.
அன்றைய பத்திரிகை உரிமையாளர்கள் கருத்துச் செல்வந்தர்களாக இருந்தபோதும், மக்களிடம் அவர்கள் பத்திரிகையைக் கொண்டு சேர்க்க பெரிதும் போராடினார்கள். அப்படிப்பட்ட பத்திரிகை வாழ்வை, வரித்துக்கொண்ட பேனா நண்பர்களான பத்திரிகையாளர்கள், கசங்கிய சட்டை, அழுக்கு வேட்டி, சோடா புட்டிக் கண்ணாடிக்கண்கள், கன்னக் குழிகளை மூடிய தாடி என முன்பு காட்சியளித்தார்கள். இதில் சிலரது இடுப்பு மடிப்பில் பொடி மட்டையோ,அல்லது காதில் பீடித் துண்டோ பதுங்கியிருக்கும்.இன்னொரு வகையினர் கும்பகோணம் வெற்றிலையை போட்டுக் குதப்பிக்கொண்டே எழுதுகிறவர்களாக இருந்தார்கள்.
எது எப்படி இருப்பினும் பத்திரிகையாளர்கள் என்றால் வறுமை நிச்சயம் இருக்கும் என்ற நிலை இருந்தது. இந்த இலக்கணத்திற்கு பாரதியோ, புதுமைப்பித்தனோ கூட விதிவிலக்குகளாக இல்லை. அவர்களோடும் வறுமை கைகுலுக்கியபடியே இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னரும் கூட பெரிய மாற்றம் எதுவும் பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஏற்படவில்லை.
பின்னர் திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு பெரும்பாலான பத்திரிகைகள், கருத்துப் புரட்சியை வழிமொழிய ஆரம்பித்தன. இதன்பின்னர் பெரிய பெரிய பத்திரிகைகளும் நம்மைப் போன்ற புலனாய்வு இதழ்களும் உருவான நிலையில், பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்தது.
சவால்களுக்கு மத்தியிலும் சாதனை புரியக் கூடியவர்களாக பத்திரிகையாளர்கள் மாற ஆரம்பித் தார்கள். அதனால், பத்திரிகையாளர்களுக்கு என்று ஒரு கெத்து உருவானது.பின்னர் தொலைக்காட்சி சேனல்கள் தோன்றி, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பிறகு ஊடகவாதிகளின் நிலை பலவகையிலும் உயர ஆரம்பித்தது.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் இதழியல் துறையில், அதிரடி மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழக அரசு, இப்போது "இதழியல் கல்வி நிறுவனத்தை'த் தொடங்கி இருக்கிறது. இதனால் இதழியல் துறையும் காட்சி ஊடகத்துறையும் மேலும் சிறந்து வளரும் என்கிற நம்பிக்கை நமக்குப் பிறக்கிறது.
இந்த ஆண்டு சட்டமன்றத்தில், செய்தித் துறையின் மானியக் கோரிக்கை வந்தபோதே, இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவுவது என்றும், இதழியல் மற்றும் ஊடக ஆய்விய-ல் தரமான கல்வியை வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கான நிதியாக ரூபாய் 7.75 கோடியை அரசு உடனடியாக ஒதுக்கியது.
இதைத் தொடர்ந்து, இதழியல் கல்வி நிறுவனம் சென்னை கோட்டூர்புரம் இணையக் கல்வி நிறுவனத் தின் எதிரில் கிடுகிடுவென உருவானது. அதை நம் முதல்வர் ஸ்டா-ன் அவர்கள், கடந்த 25-ஆம் தேதி திறந்துவைத்திருக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி, தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் புடைசூழ இந்த விழா இனிதாக நடந்தது.
இதழியல் கல்வி நிறுவனத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டா-ன், முதலாம் ஆண்டு இதழியல் படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் ஆர்வ மாகக் கலந்துரையாடினார்.
இங்கே இதழியல் கல்வியைக் கற்பவர்கள், அச்சு ஊடகத்திலும் காட்சி ஊடகத்திலும் பணியாற்றும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். டிஜிட்டல் மீடியாப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட இருக்கிறது.தவிரவும் தனியார் இதழியல் கல்வி நிறுவனத்தில் பயில கணிசமான பணம் வேண்டும். இங்கு அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும் சேர்ந்து படிக்கும் வண்ணம் கட்டணம் குறைவுதான்.
இதழியல் துறையில் புதிய தலைமுறையினர் தங்கள் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று, இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கும் முதல்வரையும் அவர் தலைமையிலான திராவிடக் கருத்தியல் அரசையும் மனம் குளிரப் பாராட்டுவோம்.
என்றென்றும் அன்புடன்,