ட அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தை ஒட்டிய பெரும்பாலான பாலைவனப்பகுதிகள் இன்றளவும் மக்களால் முழுவதும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கின்றன. அங்கு பார்வையாளர்களாகச் செல்லும் நமக்கு அறிவிக்கும்படி, புவி தோன்றியதிலிருந்து அந்த நிலப்பகுதி எவ்வாறு உருவாகியது என்பதை ஆய்வின் அடிப்படையில் அங்கு பதிய வைத்திருக்கிறார்கள். காட்சியாகத் தெரிகின்ற வெவ்வேறு வகையான கற்களும் மலைகளும் அவை உருவான வரலாற்றை தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கின்றன. காற்றும் நீரும் இப்பகுதியை செதுக்குகின்ற உளிகளாக இருந்திருக்கின்றன. இதன் மூலப்பொருள்களாக ராக்கி மலையைவிட பழமையான மலைத்தொடரிலிருந்து வரும் நீரோடைகள், புரட்டிக் கொண்டு வரும் வண்டல்களும் மறைந்த உயிரிகளின் ஓடுகளும் இன்றைய இப்பள்ளத்தாக்கு களின் அடித்தளங்களை உருவாக்கி இருக்கின்றன. 

Advertisment

இப்பகுதியில் வீசும் காற்று மணலைக் குவித்து மேடுகளாக்கி அதன் திட்டுகளை உருவாக்கியிருக் கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதி முழுவதும் நீரில் மூழ்கி திடப்படுத்தப்பட்டிருக்கிறது. பிறகு காலமாற்றத்தால் இப்பகுதிகள் மேலெழுந்து, காற்றுக்கு இலக்காகி, அரிப்புகள் ஏற்பட்டு, இன்று நாம் காண்கின்ற காட்சிகளாக உருமாறி இருக்கின்றன என்பதாக இவ்விடம் பிறந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லலாம்.

Advertisment

இப்பகுதி நிலம் உருவானதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களுக்கு அப்பால் இந்த மண்ணின் மைந்தர்களுக்கே உரிய கற்பனைக் கதைகளும் வாய்வழியாக நிலவுகின்றன. அதேபோல இங்கு வாழ்கின்ற நவாஹோ மற்றும் அப்பாச்சி இன பழங்குடி மக்களின் மூதாதையர்கள் தொலைதூர வடக்குப் பகுதியிலிருந்து இங்கு வந்திருக்கலாம் என்கிற கணிப்பும் இருக்கிறது. இதற்கு சாட்சியாக இருக்கின்ற அலாஸ்கா, மேற்கு கனடா மற்றும் வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள மக்களுடன் நவாஹோ மற்றும் அப்பாச்சி மொழிகளின் உறவை ஒப்பிட்டு மானுடவியலாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். 

வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்டிருக் கும் இவர்களது பண்பாடாக குடும்பங்களில் பெண்களே முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். பெண் தெய்வங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள நீரூற்றுகளையும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதிக்காதபடி வாழ்கின்ற இவர்கள், இவையாவும் தங்களை பாதுகாப்பதாக உணர்ந்திருக்கிறார்கள். இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பங்களின் கதைகளையும் இங்குள்ள மணல் திட்டுகளும் பாறைகளும் வனவிலங்குகளும் தாவரங்களும் நீரூற்றுகளும் அறிந்துவைத்திருப்பதாக தங்களது மரபில் பிறந்த வாரிசுகளுக்குப் பதியவைத்திருக்கிறார்கள். அவற்றைக் காக்கின்ற உணர்வை இதனால் அவர்கள் வழிவழி யாகப் பெறுகிறார்கள்.

Advertisment

இவர்கள் வாழ்கின்ற இடத்தைக் குறித்த அறிவையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர்ந்து கடத்திவருகிறார்கள். அதற்கு இவர்கள் வாய்வழியாகக் கூறுகின்ற கதைகள் பயன்படுகின்றன. அவற்றில் புனைவுகள் மிகுந்திருந்தாலும் உண்மைகளும் காக்கப்படுகின்றன. இவர்களது மூதாதையர்கள் பிறந்து வளர்ந்த இடத்தை, அவர்கள் மரித்த பிறகு புதைத்த இடத்தைக் கொண்டு வழிவழியாக அறிந்துவைத்திருக்கிறார்கள். இதனை மறக்காமல் இருப்பதற்கு இவர்கள் மேற்கொள்கின்ற சடங்குகள் உதவியாக இருக்கின்றன. அப்படியாக அவர்கள் குடும்பத்தின் கதை, அங்கு வாழும் ஒரு சிறுமிக்குத் தெரிந்திருக்கிறது. அவளது பாட்டி அஸ்த்ஸான் டீ டி என்பவள் நீண்டதொரு நடை பயணத்தை மேற்கொண்டு இப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். அப்பொழுது அவளுக்கு 12 வயது இருந்திருக்கலாம்.

மெக்சிகனால் சிறைபிடிப்பட்ட அவள் ஒரு போர்வையால் மூடப்பட்டு கழுதையின் மீது ஏற்றப்பட்டிருக்கிறாள். ஓர் இரவில் சமயம் பார்த்து அவளால் சிறைப்பிடித்தவர்களிட மிருந்து தப்பியோட முடிந்திருக்கிறது. தன்னுடன் போர்வையையும் எடுத்துக்கொண்டு இருட்டில் மறைந்தபடி ஓடிய அவள், மலை களுக்குள் சென்று தொலைதூரம் நடந்திருக்கி றாள். காலணி அணியாத அவளது பாதங்கள்‌ காயப்பட்டு நடக்கமுடியாமல் இருந்திருக்கிறாள். 

ஆனாலும் விடிவதற்குள் அவள் அங்கிருந்து தப்பிவிட்டாலும் அவள் இல்லாததைக் கண்டறிந்து தேடி அலைந்திருக்கிறார்கள். பாதங்களில் ஏற்பட்ட காயங்களை, அவள் அங்கிருந்த மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சிசெய்திருக்கிறாள். 

மரத்தின் கிளைகளின்மீது அமர்ந்து உறங்கியிருக்கிறாள். பெர்ரி பழங்களையும் இன்னும் பிற பழங்களையும் உணவாக உண்டு, காட்டில் மறைந்து வாழ்ந்த அவளை நாய்களையும் மலைச் சிங்கங்களையும் விட்டு விரட்டி தேடிப் பிடித்திருக்கிறார்கள். குணமாகும் வரை அவளை முகாமில் தங்க வைத்திருந்து பிறகு பண்ணைகளில் நடவு நடச் செய்திருக்கிறார்கள். மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தபோது மீண்டும் அங்கிருந்து தப்பியோடி தனக்குப் பொருத்தமில்லாத ஒருவரை சந்தித்து திருமணம் செய்துகொண்டு அவரோடு இந்த நினைவுச் சின்ன பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். அவளது சகோதரரும் இப்பகுதிக்கு உயிர் பிழைத்து வந்து, இவர்களுடன் இணைந்திருக்கிறார். அங்கிருந்த கொம்பு ஆடுகளை இவர்கள் வளர்த்து அதன் மூலம் பொருளீட்டி வாழ்ந்திருக்கிறார்கள். 

அவளது போராட்டம் அத்துடன் நிற்கவில்லை. குடியேறிய இப்பகுதியில் வெள்ளையர்கள் யுரேனிய சுரங்கத்தை அமைப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை இடப்பெயர்வு செய்ய உட்படுத்தியிருக்கிறார்கள். அதனை எதிர்த்து "எங்களது குழந்தைகளை இங்கிருந்து நீங்கள் வெளியேற்றக் கூடாது' என்று கூச்சலிட்டு வெள்ளையர்களுடன் வாதாடியிருக்கிறாள். அதற்காக அவளை இரண்டு முறை பிடித்து இழுத்துச்சென்றிருக்கிறார்கள். அவர்களுக்காக அவள் பேசிய மொழிகள் அங்குள்ள பாறைகளில் பட்டு, பள்ளத்தாக்குகள் வழியாக எதிரொலிக்கின்றன என்று அவளது வாரிசுகள் நினைவுகூர்கிறார்கள். இப்படியாக அங்குள்ள பாறைகளும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் இவர்களது முன்னோர்களின் கதைகளை அறிந்து வைத்திருப்பதாக உணர்வதால் அவற்றை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துகிறார்கள்.

அவளது அசாதாரணப் பயணத்தாலும் உயிர் பிழைத்து வாழத்தெரிந்தவள் என்பதாலும் அங்குள்ள மக்களுக்கு மத்தியில் மிகவும் மதிக்கப்பட்டவளாக இருந்திருக்கிறாள். அவளை அனுபவமுள்ளவராகவும் ஒரு மருத்துவராகவும் அங்கிருந்த மக்கள் உயர்வாகக் கருதினார்கள். பழங்குடிகளுக்குள் நடக்கின்ற கழுகு பிடிக்கும் விழாவை இவள் முன்னிருந்து நடத்தியிருக்கிறாள். 

இவளோடு பிறந்த மூன்று உடன்பிறப்புகளில் ஒருவர் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. கழுதையில் அமர்ந்துகொண்டு பயணிக்கின்ற இவள் அங்கு இருக்கின்ற உறவினர் வீடுகளுக்குச் செல்லும்பொழுது பாறைகளின்மீது எப்படி பயணித்திருப்பார் என்றெல்லாம் இன்றைய சந்ததியினர் யோசிக்கிறார்கள். அவ்வாறு செல்லும்பொழுது வழியில் மணல்மேடுகளிலிருந்து சறுக்கிவிழவும் செய்திருக்கிறாள். இப்பகுதியில் இவர்கள் மேற்கொண்ட பயணம் இப்படியாகத்தான் இருந்திருக்கிறது.

இப்பொழுது இங்கு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் வாகனங்களில் பயணம் செய்வதற்கேற்ற வசதியுடனும் மண் பாதைகளில் பயணித்து மலைப் பகுதிகளைக் கண்டுகளித்து திரும்புகிறார்கள். இங்குள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 17 மைல்கள் (27 கிலோமீட்டர்) நீளமுள்ள செப்பனிடப்படாத மண் சாலையில் பயணிப்பதற்கு அனுமதி பெறவேண்டும். அங்கு சென்று திரும்ப அதிகபட்சமாக 2 மணி நேரங்கள் ஆகலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் பெருமழையின் பொழுது ஏற்படும் வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அச்சமயத்தில் பயணத்தைத் தவிர்க்கிறார்கள்.

சடங்குகளின் மூலம் இவர்கள் பழமையை பாதுகாத்துக்கொண்டாலும், பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இவர்களது குடும்பங்களில் இன்றைய பெண்கள் பிற நாடுகளைப்போல நவீனமயமாக்கப் பட்ட வசதிகளைப் பெறுவதில் கவனம்செலுத்துகிறார்கள். இவர்கள் வீடு கட்டுவதில் இருக்கின்ற மரபில் பன்னெடுங்காலமாக எந்தவிதமான மாற்றமுமில்லை என்றாலும் இவர்கள் பயன்படுத்துகின்ற மின் உபகரணங்களாக, தொலைக்காட்சிப் பெட்டி முதல் தலைமுடி உலர்த்தும் கருவி வரை வீட்டில் இடம் பெற்றிருக்கின்றன. இணையதள வசதியையும் இன்றைய நாளில் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். நவீன பெண்களிடம் இந்த மாற்றத்தைக் கண்டாலும் இன்றளவும் மின்சாரத்தைப் பயன்படுத்தாத விறகடுப்புகளில் சமைக்கின்ற பல வயதான பெண்மணிகளும் இங்கு இருக்கிறார்கள்.

இன்றைய கட்டமைப்பாக பல சமூகங்களாகப் பிரிந்து ஆட்சி செய்துவரும் இம்மக்களின் தலைவர் கள், அவர்களின் கல்வி, மருத்துவம் உட்பட பல துறைகளின் மீது கவனம்கொண்டு, மக்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூக வளர்ச்சிக்கும் வழிகோலும்படி சிந்தித்துச் செயல்பட்டு வருகிறார்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையைப் பேணும்படியாக இவர்களது திட்டங்கள் அமைந்திருக்கின்றன. புனிதமான இடமாகக் கருதுவதால் இங்கு வாழும் மக்கள் யாவரும், இதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் தலைவ ராக ஹெர்மன் டேனியல்ஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். லாபநோக்கமற்ற கல்வித் திட்டத்தைக் கொண்டு நவாஹோ அல்லாத மக்களுடன் இணைந்து பள்ளிகள் சமூகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு கல்வியைக் கற்பிக்கிறார்கள். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அறிஞர்கள், விருதுபெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய மருத்துவர்கள், தொழில் முனைவோர், பழங்குடி அரசாங்கத்தின் பணியாளர்கள், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரை முன்மாதிரியாக இவர்களிடம் சித்தரிக்கிறார்கள். இளைஞர்களிடம் தொழிலையும் ஊக்குவிக்கிறார்கள்.

இப்பொழுது இங்கு வாழ்பவர்களின் தந்தைகளும் தாத்தாக்களும் இரண்டாம் உலகப் போரின்பொழுது அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நவாஹோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தவர்கள். கோமன்ச்சஸ் (ஈர்ம்ஹய்ஸ்ரீட்ங்ள்), ஹோப்பிஸ் (ஐர்ல்ண்ள்), பிமாஸ் (டண்ம்ஹள்), நவாஹோஸ் (சஹஸ்ஹத்ர்ள்) மற்றும் பிற பழங்குடி யினரின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி இவர்களது மொழியை குறியீடாகக் கொண்டு ராணுவத்தில் செய்திகளைப் பரிமாறியிருக்கிறார்கள். 1942 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அவர்களின் நான்கு புனித மலைகளின் பாதுகாப்பிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சிறிய பசிபிக் தீவுகளில் இருந்த நவாஹோ மரைன்கள் (சஹஸ்ஹத்ர் ஙஹழ்ண்ய்ங்ள்) தங்கள் சொந்த மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட குறியீட்டில் பேசியிருக்கிறார்கள். இது அமெரிக்க ராணுவத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், இந்தக் குறியீடு ஜப்பானியர்களை குழப்பிய நிலையில், பசிபிக் பகுதியில் இரண்டாம் உலகப் போரை வெல்ல இது பெரிதும் உதவியிருக்கிறது. முதலாம் உலகப் போரின்போதே அமெரிக்கா முதன்முதலில் பூர்வீக அமெரிக்கர்களை தகவல் தொடர்புகளில் பயன்படுத்தி யது என்கிற நிலையில், இந்த சிந்தனை இவர்களுக்குப் புதியதுமல்ல.

ஆரம்பத்தில் நவாஹோ குறியீடுகளானது, முதல் இருபத்தி ஒன்பது நவாஹோ குறியீடு மொழி பேசுபவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு 1942-களில் ஆள் சேர்ப்புத் திட்டமாக உருவெடுத்து வளர்ந்திருக்கிறது. பின்னர் இதன் உறுப்பினர்கள், ஆங்கில எழுத்துக்கள், பொது சொற்களஞ்சியங்கள், அதிகாரிகள், நாடுகள், இராணுவ உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கான 200-க்கும் மேற்பட்ட சொற்களை உருவாக்கினர். புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டபோது, ​​மீண்டும் பயிற்சி மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான போர்களுக்கிடையேயான சங்கேத மொழியாளர்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டனர். 

1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போது, ​​நவாஹோ குறியீடு கிட்டத்தட்ட 800 குறியீட்டு சொற்களைக் கொண்டிருந்தது.

நவாஹோ சங்கேத மொழியாளர்கள், இரண்டாம் உலகப் போரின்போது, ​​அதிநவீன, துல்லியமான, வேகமான மற்றும் பாதுகாப்பான இராணுவத் தொடர்புகளை பசிபிக் பகுதியில் வழங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள். போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், எதிரிகளின் நகர்வுகள், உத்தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான செய்திகளை அனுப்புதல் ஆகிய வற்றிற்கு குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க மரைன் ரைடர்ஸ் என்று அழைக்கப்படும் கடற்படை வீரர்கள், உளவு மற்றும் நீருக்கடியில் செயல்பட்ட ராணுவக் குழுக்களுடன் இணைந்து, முன்வரிசையில் நின்று, கப்பல்கள் மற்றும் விமானங்களில், சங்கேத மொழியாளர்களாக பணியாற்றினர். 

வேகமாகவும் துல்லியமாகவும் ரகசியத் தகவல் தொடர்புகளை அனுப்பும் திறனில்லாமல் போயிருந்தால், பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முயற்சிகள் பெரிதும் தடைபட்டிருக்க வாய்ப்பு அதிகம். ஒருவேளை போரை நீட்டித்து மேலும் பல உயிர்களை இழந்திருக்க நேர்ந்திருக்கலாம். பூர்வீக அமெரிக்கர்களான இவர்கள் இராணுவத்தின் கடுமையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஏற்றபடி சிறப்பாகத் தயாராகியிருந்தனர் என்ப தைப் பற்றி, அச்சமயத்தில் வந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டி ருந்ததை அங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள். 

1942 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வெள்ளைக்காரரான பிலிப் ஜான்ஸ்டன், இராணுவத் தொடர்புகளுக்கு பூர்வீக அமெரிக்க மொழியைப் பயன்படுத்துவதற்கான சிந்தனையுடன், யுனைடெட் ஸ்டேட்ஸ் மரைன் கார்ப்ஸை எவ்வாறு அணுகினார் என்பதில் ஆரம்பித்து, தொடர்ந்து செயல்பட்ட பல தகவல்கள் புகைப்படங்களுடன் இங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாக இவர்களில் சங்கேத மொழியாளர்களாக சுமார் 400 பேர் பணியாற்றியது மட்டுமல்லாமல், பசிபிக் போரில் களத்தில் ஈடுபட்டவர்களில் 19,733 பேர் கொல்லப் பட்டும் 67,207 பேர் காயமடைந்தும் 348 பேர் கடல் கைதிகளாகவும் பலியாகியிருக்கிறார்கள். 

இப்படியாக இந்நிலத்தின் உடைமைகளாக வாழ்ந்த பூர்வீக குடியினரை, பிறந்த இடத்திலிருந்து விரட்டுவதிலிருந்து அடைக்கலமான இடத்திலிருந்து துரத்துவது போக, தங்களது போரில் வெல்வதற்கு பயன்படுத்துவது வரை அவர்களை வந்தவர்கள் முற்றிலும் உறிஞ்சியிருக்கிறார்கள். எஞ்சிப் பிழைத்தவர்கள் தங்களது முன்னோர்களின் வரலாறுகளை சுமந்துகொண்டு இங்கு இன்னும் மிச்சமிருக்கிறார்கள். அவ்விடத்தை விட்டு அகன்று வெளியே வந்தபொழுது அவர்களது வீட்டின் மாதிரி வடிவம் எங்களை வழி அனுப்பி வைத்தது. ஒரேயொரு கூரைக்குக் கீழிருந்த நான்கு சுவர்களை மட்டும் கொண்ட வீடு அது. குனிந்து செல்லும் அளவிற்கு குட்டையான வாசலில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை எட்டிப் பார்த்துவிட்டு வந்தோம். நம் இந்திய நாட்டின் குடிசை வீட்டின் வசதியைவிட குறைவாக இருந்தது. மாலைநேரத்து சூரியன் மங்கிய நிலையில் அங்கிருந்து கிளம்பினோம். ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவுகளில் சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சூரிய ஒளித் தகடுகள் இவர்களுக்காக மின்சாரம் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. இவர்களது வாழ்வில் எப்பொழுது ஒளி வீசும் என்கிற ஏக்கத்தை அந்த மாலை நேரச் சூரியனும் கொண்டிருப்பதாக எங்களுக்குள் உணர்த்தியது.