துளசிச் செடி இருக்கும் இடத்திலிருந்து குனிந்த நிலையில் திரும்பி வந்தபோது, அம்மா முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். வாசலின் மூலையில் நின்றவாறு அம்மா தலையை உயர்த்திப் பார்த்தாள். கிழக்கு திசை முழுவதும் வெளுத்துவிட்டிருந்தது. இன்னும் யாரும் கண் விழிக்கவில்லை.
எழுபது வயது கடந்து விட்ட அவள் பறவைகளுடன் சேர்ந்து கண் விழிக்கிறாள். ராஜகோபாலனும் சாந்தாவும் குழந்தைகளும் ஒரு நாளாவது சீக்கிரம் எழுவார்களா? குழந்தைகள் ஒரு நாளாவது இந்த காலியிடத்தில் பறந்து விளையாடும் பறவைகளைப் பார்ப்பார்களா?
இரவில் தாமதமாகத்தான் அவர்கள் அனைவருக்கும் தூக்கம் வரும். சீக்கிரம் படுத்து உறங் குவதில்லை என்ற பிடிவாதம் இருப்பதைப் போல தோன்றும். திரைப்படம் பார்ப்பதாக இருந்தால், சாயங்கால காட்சிக்கு போகக் கூடாதா? எப்போதும் இரண்டாவது காட்சிக்கே செல்வார்கள். அதற்குப் பிறகு இப்படி வெயில் அதிகரித்து வரும் வரை படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்கள்.
கூறினால் பிடிக்காது.
ராஜகோபாலனுக்கு இப்போது ஐம்பது ஆகிவிட்டது. சிறிய குழந்தையாக இருந்தபோது, அவனைத் திட்ட முடிந்தது. இப்போது அது முடியுமா? சாந்தா கேட்பாள்:
"அம்மா.. நீங்க கொஞ்சம் சும்மா இருக்கக் கூடாதா?''
இப்போது உரிமை அவளுக்குத்தானே?
அம்மா வாசலில் இங்குமங்குமாக நடந்தாள். தொடர்ந்து முணுமுணுத்தவாறு சற்று தள்ளி வந்தாள்.
வேலைக்காரி பாரு சற்று முன்பே வரக் கூடாதா? ஒன்பது மணிக்குத்தான் அவள் துடைப்பத்துடன் பணியில் இறங்குவாள்.
அசுத்தம்...! வாசல் முழுவதும் சிகரெட் துண்டுகளும் எரிந்து அணைந்த நெருப்புக் குச்சிகளும்தான்... கோபாலன் எத்தனை சிகரெட்களை இழுத்து முடிக்கிறான்!
அவனுடைய தந்தை சிறிது பொடிகூட போடமாட்டார்.
ராஜகோபாலனைப் பற்றி கூறுவதற்கு என்ன இருக்கிறது? கோபாலகிருஷ்ணன் மோசமானவனா? சிகரெட்டிற்குப் பதிலாக பீடியை இழுக்கிறான். அவ்வளவுதான். கோபால கிருஷ்ணனுக்கு நாற்பத்தைந்து வயதுகள் ஆகிவிட்டன. ஐம்பது வயதுக்காரனும் நாற்பத்தைந்து வயதுக்காரனும் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும். ராஜகோபாலனின் மகன் சுரேந்திரன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான்? அவனுக்குப் பத்தொன்பது வயதுதானே நடக்கிறது? வாய்ப்பு கிடைத்தால், அவனும் சிகரெட் புகைப்பான். வீட்டின் பிற்பகுதியிலுள்ள வாழை மரங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு புகைக்கிறான்.
அங்கிருந்து திரும்பி வரும்போது, அவன் ஏலக்காயைச் சாப்பிடுவான். நாற்றத்தை விரட்டுவதற்காக... இப்போதே ஆரம்பித்தால், இவனுடைய நுரையீரல் கரிந்து போகாதா? சுரேந்திரனின் அண்ணன் சங்கரனும் புகை பிடிப்பவன்தான். பம்பாயில் இருக்கும் காரணத்தால், அவனுக்கு வாழைத் தோப்பும் ஏலக்காயும் தேவையில்லை என்றவொரு வேறுபாடு இருக்கிறது.
இவற்றையெல்லாம் கூறினால், யாருக்கும் பிடிக்காது. ஒருநாள் சுரேந்திரனைப் பற்றி ராஜகோபாலனிடம் கூறினாள். அவன் என்ன பதில் கூறினான் என்று தெரியுமா?
"ஹா... "குழந்தைகளை நாம் அப்படி கட்டுப்படுத்தக் கூடாது. சரியா?''
முணுமுணுத்துக் கொண்டே அம்மா தொழுவை நோக்கி நடந்தாள். கறவை பசுவைக் கறப்பதற்காக சாமி வந்திருக்கிறான்.
திருடன்.... கறக்கும்போது, காவல் நிற்க வேண்டும். இல்லாவிட்டால், அவன் பாலைக் குடித்து விடுவான். அளவைச் சரி பண்ணுவதற்காக நீரைச் சேர்ப்பான். சாந்தா இவற்றையெல்லாம் கவனிக்க மாட்டாள். எவ்வளவோ முறை அவளிடம் கூறி விட்டாள். முகத்தில் அடிப்பதைப் போல அவளின் பதில் இருக்கும்.
"தொட்டதற்கும் பிடித்ததற்கும் இப்படி சந்தேகப்பட்டால்....?''
சந்தேகப்படும் செயல்தான் தவறானது.... சாமி பால் குடிப்பதல்ல.
"எனக்கு என்ன நஷ்டம்? நஷ்டம் உங்களுக்குத்தானே? சாமி மட்டுமல்ல.பால் கறக்கும் அனைவருமே திருடர்கள்தான். பசுவை எதற்கு வளர்க்கிறோம்? நல்ல பாலைப் பருக வேண்டும் என்பதற்குத்தானே? சாந்தாவிற்கு இயலவில்லை என்றால், வேண்டாம். அந்த ஸ்ரீ லதா காவல் காக்கக் கூடாதா? பெண்ணுக்குப் பதினாறு கடந்திடுச்சுல்ல? ஓ... ஸ்ரீ லதாவை ஏன் குறை சொல்லணும்? பெண்ணை முழுமையான நவ நாகரீகத்தில் திளைப்பவளாக வளர்த்திருக்கிறாள். ஒரு நேரத்தில்கூட பெண்ணின் நாக்கில் கடவுளின் பெயர் வராது.''
முன்பெல்லாம் பூஜையில் இருக்கும்போது,
ஸ்ரீ லதாவை அழைப்பாள். விருப்பமில்லை என்றாலும், சிறிது நேரத்திற்கு அருகில் வந்து அமர்ந்திருப்பாள். இப்போது அழைத்தால், வருவதில்லை. எதற்கு கடவுளும் பூஜையும்? சினிமா பாட்டு போதுமே! சத்தமாக பாடி நடக்கிறாளே! "கண்ணுக்குத் தெரியாத பாடகனே... அருகில் வா...''
பாடகனா? காதலனா?
குளியலறைக்குள் நுழையும்போது, பெண்ணுக்கு ஒரு பாட்டு இருக்கிறதே!
ஹா..... அதேதான்.
"காதலன்.... காதலன்... காமதேவனைப் போல....''
சாமி கறந்து முடித்துவிட்டான். அம்மா பால் பாத்திரத்தைக் கையில் வைத்தவாறு சமையலறைக் குள் நுழைந்தாள். அடுப்பைப் பற்ற வைத்தாள். காபியை உண்டாக்கும்போது, அம்மா தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
காபியுடன் அம்மா ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
"ஸ்ரீ லதா... எழுந்திரு பெண்ணே... இந்தா காபி...''
"சுரு... எழுந்திருடா... இந்தா காபி...''
அம்மா கதவிற்கு வெளியே காபியை வைத்தாள்.
சாந்தாவிற்கும் அவள்தான் காபியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ம்.... முணுமுணுத்தவாறு அம்மா சமையலறைக்குத் திரும்பி வந்தாள். கூடத்திற்கு மேலே ஒட்டடை தொங்கிக் கிடக்கிறது. வரட்டும்... அந்த பாரு வரட்டும்.... அடித்து கண்ணைக் குருடாக்க ஆள் இல்லை. அதனால்தான் பாருவிற்கு இந்த அளவிற்கு திமிர்!
சமையலறையின் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் நீளமான கைப்பிடியைக் கொண்ட துடைப்பம் அம்மாவின் பார்வையில் பட்டது.
எதற்கு பாருவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்? வீடு சுத்தமாக இருக்க வேண்டுமென்றால், அவரவர்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். அம்மா துடைப்பத்தை எடுத்தாள். ஒட்டடையை அடிக்க ஆரம்பித்தாள். காலடிச் சத்தத்தைக் கேட்டதும், அம்மா திரும்பிப் பார்த்தாள்.
சாந்தா....
"அம்மா.... நீங்க ஏன் தேவையில்லாத வேலையைச் செய்றீங்க? பாருவிடம் சொன்னால் போதாதா?''
அம்மாவிற்குச் சிரிப்பு வந்தது. பாரு இந்த ஒட்டடையைப் பார்க்கவில்லையா? ஒட்டடை அங்கேயே இருக்கட்டும் என்று அவள் நினைத்திருக்கிறாள். அவ்வளவுதான். இது பாருவின் வீடு இல்லையே? எப்படி அசுத்தமாக இருந்தாலும், அவளுக்கு ஒன்றுமில்லை. குனிந்து... குனிந்து நடக்கக்கூடிய அம்மாவின் பார்வையில்கூட இந்த ஒட்டடை பட்டு விட்டது. நிமிர்ந்து நடக்கும் சாந்தாவும் ஸ்ரீ லதாவும் இதை ஏன் பார்க்கவில்லை?
"அம்மா.... உங்களிடம்தான் கேட்டேன். ஏன் இப்படி தேவையில்லாத வேலையைச் செய்றீங்க? பாருவை வைத்து செய்யவிட்டால் போதாதா?''
"அவள் முழுச் சோம்பேறி. இதையெல்லாம் செய்ய மாட்டாள்.''
"சொல்லி செய்ய வைக்கணும்.''
அதற்கு பதில் கூறுவதற்கு முயற்சிக்காமல் அம்மா ஒட்டடையை அடிப்பதைத் தொடர்ந்தாள்.
சொல்லி செய்ய வைக்க வேண்டுமாம்! யார் கூறுவது? அம்மாவா? அம்மாவின் மீது பாருவிற்கு எந்தவொரு மதிப்புமில்லை. சாந்தா கூற வேண்டும். ஆனால், கூறமாட்டாள். பாருவைக் கூறி போகச் சொல்ல வேண்டும் என்று ஒருமுறை சாந்தாவிடம் அம்மா கூறினாள். அப்போது சாந்தா கூறினாள்:
"அனைத்து பணியாட்களும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க. நாமதான் அவங்களை அனுசரித்துப் போகணும்.''
அனுசரித்துப் போக வேண்டும். அப்படியென் றால்....?
அம்மாவை வெறித்துப் பார்த்து விட்டு, சாந்தா வாசலுக்குச் சென்றாள்.
மீண்டும் அம்மா வாசல் பகுதிக்கு வந்தபோது, பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவாறு சாந்தா பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தாள். உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வீட்டில் நடப்பது எதையும் அறியாமலே இருக்க வேண்டும்.
"அம்மா.... நீங்க என்ன சொன்னீங்க?''
"நான் எதுவுமே சொல்லல.''
கேட்டைத் திறந்து கொண்டு பாரு வருவதைப் பார்த்தாள்.
"என்ன இவ்வளவு தாமதம்?'' - அம்மா கேட்டாள்.
"தாமதமா? எப்போதும் வருவதைப் போலத் தான் இன்றும் வந்தேன்.''- பாரு கூறினாள்.
அம்மா சாந்தாவைப் பார்த்தாள். திமிரான பதிலை அல்லவா பாரு கூறியிருக்கிறாள்? அதற்கான தைரியம் அவளுக்கு எப்படி வந்தது? இல்லத்தரசி அம்மா அல்ல. சாந்தா... சாந்தா வாயைத் திறக்கவில்லை. அதுதான் விஷயமே...
ராஜகோபால் வாசலுக்கு வந்தான்.
"அம்மா... இன்னொரு காபி...''
அம்மாவிற்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது.
காபி வேண்டுமெனில், அம்மாவிடம் கூற வேண்டும் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். சாந்தாவிடம் ஏன் கூறவில்லை? அவள் பத்திரிகை வாசிப்பதை நிறுத்தி விட்டு, சமையலறைக்குச் செல்ல மாட்டாள். அதுதான் விஷயம்.
இனி சமையலறைக்கே போனால் கூட என்ன நடக்கும்? அவளுக்கு நல்ல காபியை உண்டாக்கத் தெரியாது.
அம்மா காபியைக் கொண்டு வந்தபோது, பாரு வாசலைப் பெருக்க ஆரம்பித்திருந்தாள்.
"டேய்... கோபீ... நீ இந்த சிகரெட்டையும் தீக்குச்சியையும் இங்கு ஏன் வீசி எறிஞ்சிருக்கே?"
"ம்.... பாரு பெருக்கி எடுத்து விடுவாள்''- சாந்தா கூறினாள்: "இப்படி வீசி எறியாமலிருந்தால், பெருக்காமலே வாழலாமே?''
"அது உண்மைதான்.''- அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக ராஜகோபாலன் கூறினான்.
"எது உண்மை?''- ராஜகோபாலனை நோக்கி சாந்தா திரும்பினாள்.
அம்மா முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குப் பின்னாலிருக்கும் இடத்திற்கு வந்தாள். அந்த வாழை மரங்களின் கூட்டத்திற்கு நடுவில் என்ன ஒரு காகங்களின் கூட்டம்! குலை ஏதாவது பழுத்து கிடக்கிறதோ? அம்மா அங்கு நடந்தாள். நினைத் ததைப் போலவேதான். அருமையான பூவன் பழ குலை... கீழே இருந்தவற்றை முழுமையாக காகங்கள் கொத்தி முடித்திருந்தன.
"கொஞ்சம் இங்கு வர்றியா?''- அம்மா அழைத்தாள்.
வாசலிலிருந்த சாந்தா கூறினாள்:
"அம்மா ஏன் தொல்லையைத் தர்றாங்க? கொஞ்சம் போய்ப் பாருங்க.''
ராஜகோபாலன் வாழை மரங்களை நோக்கி நடந்தான்.
காகங்கள் கொத்தி இழுத்திருந்த பூவன் பழ குலையை அம்மா சமையலறையின் மூலையில் வைத்திருந்த நிலையில், பிறகும் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
"இப்படி சரியாக கவனிக்காமல் இருப்பது நல்லதா? நான் இதைப் பார்க்காமல் இருந்தால், அனைத்தையும் காகங்கள் சாப்பிட்டிருக்கும்.''
"பக்கத்துல வாங்க... பக்கத்துல வாங்க...''-
ஸ்ரீ லதாவின் முனகல் சத்தம் கேட்டது.
அதன்படி நடப்பதைப் போல, அம்மா அருகில் சென்றாள்.
"என்ன பெண்ணே?''
"பசிக்குது''.
"தோசை மாவு இருக்கு. சுட்டுச் சாப்பிடு.''
"பாட்டி... நீங்க ஏன் என் மேலே பாய்றீங்க?''
சுரேந்திரன் அங்கு வந்தான். "இன்னைக்கு என்ன... இட்லியா.... தோசையா?''
"புட்டு...''- அம்மா கூறினாள்.
"எதுவாக இருந்தாலும், கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சால், நல்லா இருக்கும்.''
"இல்ல... நீ கட்டளை போடுறியா?''
"என்ன இங்கு சண்டை?''- சாந்தா அங்கு வந்தாள்.
"ஒரு சண்டையுமில்ல...''- அம்மா கூறினாள்.
"பசிக்குது...''-
ஸ்ரீ லதா பச்சைக் குழந்தையைப் போல கெஞ்சினாள். சாந்தா அடுப்பிற்கு அருகில் வந்தாள்.
"நீ ஏன் அடுப்பிற்கு அருகில் வந்தே?''
"இன்னைக்கு நான் தோசை சுடுறேன்.''
"ஓ... அப்படியா? நான் இருக்குறப்போ, நீ ஏன் தோசை சுடுறே?''- அம்மா கேட்டாள்.
சாந்தா குளியலறையில் முகச் சவரம் செய்து கொண்டிருந்த ராஜகோபாலனிடம் சென்றாள்.
"அம்மா விஷயத்துல தோத்துட்டேன்.''
"என்ன?''
"நான் சமையலறைக்குள் நுழைவதை அம்மா விரும்பல.''
"நீ சமையலறைக்குள் போக வேண்டாம்.''
"இந்த வயதான காலத்தில் அம்மா ஏன் வேலைகளைச் செய்யணும்? யாராவது பார்த்தாங்கன்னா, என்ன சொல்லுவாங்க?''
"சொல்றதுக்கு என்ன இருக்கு?''
"நான் கால்களை நீட்டி சுகமா இருந்து கொண்டு, அம்மாவை வேலை செய்ய வைக்கிறேன்னு ஆட்கள் சொல்லுவாங்க.''
எல்லோரும் காலை உணவைச் சாப்பிட்டார்கள்.
மணி பத்து ஆனது.
"இன்னைக்கு நீ அலுவலகத்துக்குப் போகலையா?''
"இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அல்லவா... அம்மா''.
"அப்படின்னா... இன்றுதானேடா கோபாலகிருஷ்ணன் வர்றான்?''
"இன்னைக்கு வர்றதா எழுதியிருந்தான்.''
தம்பி கோபாலகிருஷ்ணன் வருவதாகக் கூறினான் என்றால், வந்துதான் ஆக வேண்டும் என்றில்லை. பொதுக் காரியங்களில் ஈடுபடுபவன் ஆயிற்றே! வந்தால் வருவான். அவ்வளவுதான்.
"வருவான். இல்லையா?''
"நான் எப்படி கூற முடியும், அம்மா?
அவன் ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்து திரிபவன் அல்லவா? வந்தால், வந்துவிட்டான் என்று சொல்லலாம்.''
"அவனைப் பார்த்து எவ்வளவு காலம் ஆச்சு?''
அம்மா முன்பக்கத்திலிருந்த அறையின் சுவரில் சாய்ந்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். "இன்று கோபாலகிருஷ்ணன் வருவான். அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்க வேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற விஷயத்தை நான் எப்படி மறந்தேன்? இன்று கோபாலகிருஷ்ணன் இங்கு தங்கலாம். அவசரம் என்று கூறி திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.''
ஞாயிற்றுக்கிழமை.... ஓ... வீடு முழுவதையும் துடைத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய நாள் இன்றுதானே? செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பாரு துடைப்பாள். அது ஒரு வகையான ஒப்பேற்றலாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமையாவது நன்கு நீர் தெளித்து கழுவி விடவில்லை என்றால், அனைத் தும் அசுத்தமாகி விடும்.
பாரு என்ன செய்தாள் என்பதை அறிந்து கொள்வதற்காக அம்மா ஒவ்வொரு அறைக் குள்ளும் நுழைந்து நடந்தாள்.
ஸ்ரீ லதாவின் படுக்கையறையை அடைந்ததும், அம்மா திடீரென நின்றாள். பாரு கழுவிச் சுத்தமாக்கி விட்டுச்சென்ற அறை... பிறகு எப்படி தரையில் ஒரு கறுத்த கறை!
அம்மா தரையில் அமர்ந்தாள். குனிந்து பார்த்தாள். மை...
"பாரு...''
அடுத்த அறையைத் துடைத்துக் கொண்டிருந்த பாரு எட்டிப் பார்த்தாள்.
"இது என்ன பாரு?''
"மை...''
"துடைத்து அழிக்கக் கூடாதா?''
"துடைத்தும் போகல''.
"வெறுமனே துடைத்தால், போதாது. எலுமிச்சம் பழ தோலை வைத்து தேய்க்கணும். புரியுதா?''
ஸ்ரீ லதா எட்டிப் பார்த்தாள். அம்மா கேட்டாள்: "நீதான் தரையில் மையைச் சிந்தியிருக்கே... இல்லையா?''
ஸ்ரீ லதா முகத்தைக் கோண வைத்தாள்.
அம்மா மெதுவாக எழுந்தாள். அப்போதுதான் சுவரில் பென்சிலைக் கொண்டு என்னவோ எழுதியிருப்பதைப் பார்த்தாள். கேள்வி எழுவதற்கு முன்பே ஸ்ரீ லதா கூறினாள்:
"நான் சலவை கணக்கை எழுதி வைத்தேன்.''
"எழுதுவதற்குப் பார்த்து வைத்த இடம்!''
அம்மா சமையலறைக்குத் திரும்பி வந்தாள். இன்று உணவு அருமையாக இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை அல்லவா? இன்று மட்டுமே ராஜகோபாலன் மன விருப்பத்துடன் ஏதாவது சாப்பிடுவான். பிறகு.... கோபால கிருஷ்ணனும் வருகிறான்.
"நீங்களும் உங்களின் ஒரு அம்மாவும்!''- சாந்தா ராஜகோபாலனிடம் கூறினாள்.
"நீ ஏன் கிடந்து பாய்றே?''
"இப்படியொரு சமையலறை ஆட்சி உண்டோ?''
"நீயும் போய் ஆட்சி செய்...''
"அம்மா சம்மதிக்க வேண்டாமா?''
"அம்மாவுடன் அனுசரித்துப் போகணும்.''
"குற்றம் என் மீதுதான்.''
"நான் ஒரு சமையல்காரனை வைக்கிறேன். அவன் சமையலறையை ஆட்சி செய்யட்டும்.''
"எனக்கும் சம்மதம்தான். நான் அம்மாவை வைத்து அடிமைப் பணியைச் செய்ய வைக்கிறேன் என்று யாரும் கூறமாட்டார்கள் அல்லவா? ஆனால், இங்கு எந்தவொரு சமையல்காரனும் நிற்கமாட்டான். அம்மா அவனுக்குப் பின்னால் நடப்பாங்க.... முணுமுணுத்துக் கொண்டு....''
மதிய உணவு முடிந்தது.
சுரேந்திரன் சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றுவதற்காக வெளியேறினான். சாந்தா படுக்கையில் மல்லாந்து படுத்தாள். ராஜகோபாலன் முன்பக்க அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான். ஸ்ரீ லதா சினிமா இதழ்களின் ஒரு குவியலுக்கு முன்னால் போய் அமர்ந்தாள்.
அம்மா கூடத்தில் ஒரு பாயை விரித்தாள்.
சிறிது நேரம் சற்று கண் அயரலாம்.
எனினும், கோபாலகிருஷ்ணன் ஏன் வரவில்லை? இந்த முறையும் அவன் ஏமாற்றி விடுவானோ? பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன!
கோபால கிருஷ்ணனை நினைத்தவாறு பாயில் படுத்திருந்த வேளையில், வாசலில் யாரோ பேசுவதைக் கேட்டாள்.
"யார் அது, ஸ்ரீ லதா?'' அலட்சியமாக ஸ்ரீ லதா கூறினாள்:
"அப்பாவைப் பார்க்குறதுக்கு யாரோ வந்திருக் காங்க.''
"யாருன்னு கேட்டியா?''
"எனக்குத் தெரியாது. யாராக இருந்தாலும்.... பாட்டி, உங்களுக்கு என்ன?''
கோபால கிருஷ்ணனாக இருக்குமோ? அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை.
அப்படி இருந்தால், அவன் நேராக உள்ளே வரமாட்டானா? பிறகு... யாராக இருக்கும்? இந்தப் பெண் சற்று போய் பார்க்கக்கூடாதா? பிறகு... நேரில் ஒரு பதிலைக் கூறக் கூடாதா?
வாசலுக்குச் சென்றால் என்ன? வேண்டாம்.
முன்பொருமுறை சாந்தா கூறினாள்:
"அவரைப் பார்ப்பதற்கு பலரும் வருவாங்க. அம்மா... நீங்க ஏன் அந்தப் பக்கம் போறீங்க?''
எல்லோரும் எல்லாவற்றிற்கும் விலக்கு உண்டாக்குவதாக அம்மாவிற்குத் தோன்றியது.
களைப்பு காரணமாக அம்மா கொஞ்சம் தூங்கி விட்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு முன்பக்கமிருந்த அறையில் சாந்தாவும் ராஜகோபாலனும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாள். சாந்தா அவள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தாள். அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் அவர்களுக்கு. அம்மா கண்களை மூடி படுத்தவாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.
"இந்த வீடு முழுவதையும் தான்தான் நிர்வாகம் செய்வதாக அம்மாவிற்கு நினைப்பு... உத்திரத்தைத் தாங்கக்கூடிய பல்லி...''
"சாந்தா, அம்மாவிற்கு நேரம் போக வேண்டாமா? அதனால்தான் இப்படி ஓடி நடக்குறாங்க.''
"எனக்கு நேரம் போக வேண்டாமா?
நான் இப்படி பொம்மையைப் போல இருக்கணுமா? பிறகு... பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? வயதானால், அடங்கி ஒதுங்கி இருக்கணும்.''
சமையலறையில் ஏதோ உருண்டு விழும் சத்தம் கேட்டது. அம்மா திடுக்கிட்டு எழுந்தாள். சமையலறைக்கு நடந்தாள். ஒரு சொறி நாய் சமையலறைக்கு உள்ளேயிருந்து வெளியே ஓடுகிறது. பாத்திரங்களும் சோறும் தரையில் சிதறிக் கிடக்கிறது.
அம்மா அழைத்தாள்: "பாரு... பாரு....''
சாந்தாதான் சென்றாள். "என்ன ஆச்சு?''
"இனி என்ன ஆகணும்? சமையலறைக்குள் நாய் நுழைந்துவிட்டது.''
"நாயும் கூட நுழையலாம்.''
"சாந்தா, நீ ஏன் அப்படிச் சொன்னே?''
"ஒண்ணுமில்ல...''
"நீ சமையலறையின் கதவை அடைக்கக் கூடாதா?''
"அம்மா... நீங்கதானே சமையலறை விஷயங்களைப் பார்த்துக்குறீங்க?''
அம்மா பேசவில்லை. சாந்தா குத்தக்கூடிய வார்த்தைகளால் பேசுகிறாள். சமையலறைக்குள் நுழையக் கூடாது என்று தான் அவர்களை விலக்கி வைத்திருக்கிறோமா என்ன? பிறகு எதற்கு இப்படிக் கூற வேண்டும்? தனக்கும் வயதாகி விட்டது அல்லவா? காலத்தைக் கடந்து விட்டவர்களைப் பற்றி யாரும் எதுவும் கூறலாம். தான் இல்லாவிட்டால், பார்க்கலாம். இவள் வீட்டை ஆட்சி செய்யும் கோலத்தை....
சாமியும் பாருவும் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு நிற்பதை அம்மா கவனித்தாள். கறவைப் பசுவின் நிறைந்த காம்பில் முட்டிக் கொண்டு நிற்கிறது கன்றுக்குட்டி.... முழுப் பாலையும் குடித்துக் கொண்டு...
"சாமீ... இன்னைக்கு பால் முழுவதும் கன்றுக்குட்டிக்கா?'' அம்மா கேட்டாள்.
"இந்த கிழவி கிட்ட தோல்விதான்...''- சாமி சற்று உரக்கவே கூறினாள்.
அம்மாவிற்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அம்மா தொழுவத்தை நோக்கி நடந்தாள். போகும்போது, ஒரு வேரின் பகுதி காலில் பட்டது. அம்மா விழுந்து விட்டாள்.
மாலை வேளை கடந்தது.
அம்மா பாயில் கிடக்கிறாள். சுற்றிலும் யாரெல்லாமோ இருக்கிறார்கள். ராஜகோபாலன்.... சாந்தா... இல்லை.... கோபாலகிருஷ்ணனும் இருக்கிறானோ? எப்போது வந்தான்?
"அம்மா, நீங்க ஒரு இடத்தில் அடங்கி இருக்கக்கூடாதா? ஏன் இப்படி ஓடிப் பாய்ந்து நடந்து திரியிறீங்க? நாளைக்கு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால்தான் எலும்பு ஒடிந்திருக்கிறதா என்பதே தெரியும்.'' ராஜகோபாலன் குற்றம் சுமத்துகிற பாணியில் பேசுகிறான்.
"எனக்கு எதுவுமே ஆகலைடா...''
"அம்மா, அப்படி நீங்க சொன்னால், போதுமா? கையோ காலோ ஒடிந்து கிடந்தால், மற்றவர்களுக்கு சிரமம் உண்டாகும் என்ற சிந்தனை வேண்டாமா?''- சாந்தா கேட்டாள்.
கோபாலகிருஷ்ணனை அம்மா பார்த்தாள்.
அவனுடைய அபிப்ராயம் என்ன? ராஜகோபாலனும் சாந்தாவும் கூறுவதைக் கேட்டால், மற்றவர்களை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே தான் உயிர் வாழ்வதைப் போல தோன்றும். யாருக்குமே தேவையற்ற ஒரு கிழவி... ஒரு சுமை.... ஒழிக்க முடியாத ஒரு பாரம்!
"கோபாலகிருஷ்ணா... எனக்கு எதுவுமே ஆகல. கொஞ்சம் கால் இடறி விட்டது. விழக்கூட இல்லை. கையை ஊன்றி உட்கார்ந்துட்டேன்.
அவ்வளவுதான்....''
"அம்மா..... வயசாயிடுச்சுல்ல? இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டது போதாதா? இனியாவது கொஞ்சம் ஓய்வெடுங்க...'' - கோபால கிருஷ்ணன் கூறினான்.
அம்மாவின் கண்கள் நிறைந்தன.
யாருக்குமே தான் தேவையில்லை. அனைவரின் காரியங்களையும் பார்த்துக் கொள்ளக்கூடிய தான் எல்லோரின் பார்வையிலும் ஒரு தொல்லை.... அனைவரின் வழிகளையும் தடுக்கக்கூடிய ஒரு வயதான கிழவி... ஓய்வு எடுக்கவேண்டுமாம்! ஓய்வு எடுப்பதற்காகவா பிறந்தோம்? இவர்கள் அனைவரையும் வளர்த்து ஆளாக்கிய தாயிடம்தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.
அம்மாவின் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களின் வழியாக கண்ணீர் பாய்ந்தோடியது.
"ஓய்வு எடுக்கலாம்டா... இனி ஓய்வு எடுக்கலாம்.'' அம்மா தூங்கினாள்.
நேரம் வெளுத்தது.
அப்போதும் அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள்.
எப்போதும் பறவைகளுடன் சேர்ந்து கண் விழிக்கக்கூடிய அம்மா....
ராஜகோபாலன் குலுக்கி அழைத்தான்:
"அம்மா... அம்மா...'' அம்மா கண் விழிக்கவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/ss1-2026-02-06-16-57-23.jpg)