பத்து வருடங்களை தன்னகத்தே தசாபுக்தியாக கொண்ட தாய்மை கிரகம் சந்திரன் ஆகும்.
ஜோதிடவியலில் லக்னம், ராசி ஆகிய வற்றின் துணை கொண்டுதான் அந்த ஜாதகத்தின் நிலையை அறியமுடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
இதில் சந்திரன் நிற்கும் ராசி ஜனன ராசியாகவும், சந்திரன் ஏற்றுள்ள நட்சத்திரம் ஜனன நட்சத்திரமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இதுவே சந்திரனின் ஆளுமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.
மனதிற்கும், தாய்மைக்கும், ரத்த ஓட்டத்திற்கும், தன்னை உரித்தாக்கிக் கொண்ட சந்திரன் சில கிரகங்களுடன் இணைவது சிறப்பு என்றாலும், சில இணைவுகள் வாழ்வியலில் சில விரும்பத்தகாத மனநிலையை அளிக்கும்.
பொதுவாக குரு+ சந்திரன், இணைவு யோகமாக கூறப்படுகின்றது. அதேபோன்று சந்திரன்+ செவ்வாய், இணைவும் சந்திர மங்கல யோகமாகக் கருதப் படுகின்றது.
இந்த இணைவுகள் தசாபுக்தி காலங்களில் சில அற்புதமான பலன்களை வழங்க காத்திருந்தாலும், சந்திரன் + ராகு, சந்திரன்+ கேது போன்ற இணைவுகள் மன ஓட்டத்தில் ஒரு மாறுபட்ட சூழலை அளிப்பதோடு எந்த முடிவையும் எடுக்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றது.
சந்திரன்+ சனி புணர்பு தோஷமாகவும் பிரதிபலிக்கின்றது. சனி இரும்பு என்று எடுத்துக்கொள்வோம் சந்திரன் நீராகும் இவை இரண்டும் இணையும்பொழுது, இரும்பு துரு பிடித்து தன் வலுவை இழக்கும். அதேபோல்தான் சந்திரன்+ சனி மனம் சார்ந்த சீர்குலைவை வழங்கி விடுகின்றது.
மேலும் சந்திரனின் தசையில் இந்த பூவுலகிற்கு நமது ஜீவன் எதற்காக எந்த ஆசையின் பால் ஈர்க்கப்பட்டு ஜனனம் நிகழ்ந்தது என்பதை எடுத்துரைக்கும்.
இதுவரை வெளியில் தெரியாத வாழ்விய லில் இருந்தவர்கள்கூட இந்த சந்திர மகா தசையில் தனது திறமையை வெளிக்காட்டி அதன்மூலம் பிரபலமாவார்கள்.
இதுவரை சுற்றுச் சூழலையும், மனிதர்களையும், உறவுகளையும் நாம் காணாத கண்ணோட்டத்தில் காணும் சூழலை இந்த சந்திர தசை அமைத்துக்கொடுக்கும். எல்லாவற்றிலும் உணர்ச்சிவசப்பட்டு மனரீதியான தாக்கத்தை அளிக்கும்.
நிறைய பேருக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், தொழிலில் புதிய வாய்ப்புகள், உணவின்மீதான பிரியம் போன்றவற்றை அளிக்கும்.
குழந்தைகளுக்கு நடக்கும் சந்திர தசையின் பயனை அந்த குழந்தையை பெற்ற தாய் அனுபவிக்க நேரும்.
கற்பனைக்கு சொந்தக்காரனான சந்திரன், ஒரு புதிய கலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும். குறிப்பாக ஜோதிடம், இசை, நடனம் போன்றவற்றின்மீது ஒரு பெரும் ஈர்ப்பை வழங்கும்.
அதோடு உடலில் சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் தன்மையில் ஒரு சீரற்ற நிலையை உருவாக்கத் துணிவார். எதனால்? என்றால் சந்திரனின் தசை உணவின்மீது பெரும் ஈர்ப்பை கொடுத்து உணவினால் சில பாதகங்களையும் கொடுக்கும்.
எனவேதான் சந்திர தசையின் பயணத்தில் நிறைய பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்படுகின்றது.
சந்திர தசை சந்திர புக்தி பத்து மாத காலங்கள்
இந்த காலகட்டம் மனது வாழ்க்கையில் அடையக்கூடிய விஷயங்களுக்கான திட்டத்தை தீட்டி வைக்கும்.
எதையும் நிச்சயமாக சாதித்துவிடுவோம் என்கின்ற எண்ணமும், மற்றவர்களின்மீதான ஈர்ப்பையும் இந்த காலகட்டம் அளிக்கும்.தாயாருக்கு சில உடல் உபாதைகளை அளித்து அதன்மூலம் சில வருத்தங்களை அளிக்கும். உறவுகள் யார் என்ற அனுபவத்தை வாசல்வரை வந்து தந்து செல்வார்கள்.
சமூகத்தில் ஒரு பெரிய நபராக இனம் காணப்படுவார்கள். உணவின்மீதான விருப்பமும், உடைகளின்மீதான விருப்பமும் நிறைவேறும். மனது எந்த சூழலிலும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேயிருக்கும் தன்மையை பெற்றிருக்கும்.
மறைபொருள், இறை சிந்தனை, இறை சார்ந்த பயணத்திலும் சிலர் ஈடுபடுவார்கள். உடல்ரீதியாக நீரின் தன்மை குறைவது அல்லது அதிகமாவது போன்ற சூழல்கள் ஏற்படும் இந்த காலகட்டமானது ரத்த ஓட்டத்தில் சிறு தடைகளையும் அல்லது அழுத்தத்தையோ அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
இது சந்திரன் இருக்கும் நிலையை பொறுத்தே கணக்கிடமுடியும்.
சந்திர தசையில் செவ்வாய் புக்தி ஏழு மாத காலங்கள்
சந்திரமங்கள யோகமாகக் கருதப்படுகின்ற இந்த தசாபுக்தி இணைவானது சில நற்பயன்களை வழங்கும்பொழுதே மனரீதியாக உணர்ச்சிவசப்படக் கூடிய தன்மையையும் இணைந்தே வழங்கும்.
இந்த காலகட்டமானது பூமியின்மீது ஒரு நாட்டமும், ஈர்ப்பும் உருவாகும். தங்களுக்கென்று ஒரு பிடி மண்ணையாவது சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கும். இந்த காலகட்டத்தில் சந்திரனுடனோ அல்லது செவ்வாயுடனோ ராகு சம்பந்தப்படாதவரை பெரும் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை ராகுவின் நட்சத்திரத்தில் இந்த இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்று இணைந்திருந்தால் ரத்தம் சார்ந்த பிரச்சினை நிச்சயமாக அமையும்.
சந்திர தசையில் ராகு புக்தி ஒரு வருட காலம்
இந்த காலகட்டம் மனது ஒரு நிலையில் இல்லாமல் ஏதேனும் ஒன்றை சார்ந்தே பயணித்துக் கொண்டிருக்கும். குறிப்பாக எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பையே மற்றவர்களுக்கு பரிசளிக்கும் தன்மைக்கு மாறி விடுவார்கள். சின்ன விஷயத்திற்காககூட சத்த மிடுவது, பொருட்களை தூக்கி உடைப்பது போன்ற தன்மைக்கு தள்ளப்படுவார்கள்.
இதே காலகட்டத்தில்தான் இலக்கியம், கலை, எழுத்து, புது மொழி ஆகியவற்றின்மீதும் ஈர்ப்பும், அதை சார்ந்த பயணத்தில் வெற்றியையும் அடையமுடியும்.
இந்த சந்திரன்+ ராகு, இணைவுபெற்ற காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்கள் உயர்ரக சிகிச்சையை மேற்கொள்ள தேவையில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
கரு முட்டை சிறப்பானதாக இருந்தாலும் அது கருவுறும் தன்மையை பெறமுடியாது.
சந்திர தசையில் குரு புக்தி ஒரு வருடம் நான்கு மாதங்கள்
இந்த காலகட்டம் குரு சந்திர, யோகத்தை அளிக்கும். மனது ஒரு அமைதியின்வசம் சென்று இளைப்பாறும், எந்த முடிவையும் பிறரின் ஆலோசனை கேட்டு பின்பு எடுக்கும் தன்மையை வழங்கும். குழந்தை வரம் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தை உயர்ரக சிகிச்சையான ஐ.வி.எப் (ண்ஸ்ச்) ஐயுஐ (ண்ன்ண்)போன்ற சிகிச்சைக்கு தகுந்த காலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சந்திரன் மனதையும், குரு மூளையையும் குறிக்கும். மனது மற்றும் மூளையின் இணையுடன் இணைந்து எடுக்கப்படும் முடிவு நிச்சயமாக சிறப்பானதாக அமையும்.
குலதெய்வத்தின் ஆசிர்வாதமும், குறிப்பாக குடும்பத்தில் இறந்த பூவாடைக்காரி அருளும் இந்த காலகட்டத்தில் குடும்பத்திற்கு கிடைக்கும்.
சந்திர தசையில் சனி புக்தி ஒரு வருடம் ஏழு மாதங்கள்
எல்லா செயல்பாடுகளையும் தள்ளிப்போடும் மனநிலையும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற சூழலையும், தானா கவே ஏற்படுத்திக் கொள்ளும் தன்மையினை ஜாதகர் வளர்த்துக் கொள்வார்.
மேலே கூறியதுபோல புணர்பு தோஷத்தைக் குறிகாட்டும் இந்த இணைவு சில விரும்பத்தகாத நிகழ்வுகளை நம்மிடம் சேர்க்கும்.
தொழில், பணி ஆகிய இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை எடுக்கும் சூழலை உருவாக்கும். ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறுகின்ற எண்ணத்தை வழங்கும்.
சந்திர தசையில் புதன் புக்தி ஒரு வருடம் ஐந்து மாதங்கள்
கலை, கவிதை, கட்டுரை, பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவற்றை வாரி வழங்கும் ஒரு அற்புதமான காலமாக இந்தக் காலம் அமையும். குடும்பத்தில் நிச்சயமாக ஒரு கிரையம் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதோடு பத்திரங்களில் ஏற்பட்டிருந்த வில்லங்கங்களை சரி செய்யும் தன்மையினை உருவாக்கித் தரும்.
உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள் இணைந்து பயணிக்கும் சூழல் அமையும்.
விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு அற்புத மான காலகட்டமாக இந்த காலகட்டம் அமையும்.
சந்திர தசையில் கேது புக்தி ஏழு மாதங்கள்
இந்த காலகட்டம் பெண்களாக இருக்கும்பட்சத்தில் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் குறிப்பாக பிசிஓடி(ல்ஸ்ரீர்க்) பைப்ராய்ட் (ச்ண்க்ஷழ்ர்ண்க்) போன்ற பிரச்சினைகளை உருவாக்கித் தரும். அதோடு ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற தன்மைகளை வழங்கும்.
மனதானது எப்பொழுதுமே ஒரு விரக்தியான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கும். யார்மீதும் நம்பிக்கை இல்லாமல் எல்லோர்மீதும் சந்தேக பார்வையை வீசத்துவங்கும். கணவன்- மனைவியிடையே சில வீண் விவாதங்களும், கைகலப்பும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு சிறப்பான காலகட்டம் இல்லை.
சந்திர தசையில் சுக்கிர புக்தி ஒரு வருட காலம் எட்டு மாதங்கள்
பொன், பொருள் சேர்க்கையோடு மனது சந்தோஷத்தின் பக்கம் நடைபோடும். வீட்டில் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி இனிமையை வழங்கும். சகல சம்பத்தையும் மனரீதியாகவும், வாழ்வியல்ரீதியாகவும், நம் வாசல்வரை கொண்டுசேர்க்கும் காலமாக இந்த காலம் அமைந்திருக்கும்.
திருமணத்தடை அகன்று நல்லதொரு பந்தம் அமையும். கணவன்- மனைவியிடையே நிலவிவந்த முரண்பட்ட தன்மை மாறுபட்டு இணக்கமான சூழல் உருவாகும்.
சந்திர தசை சூரிய புக்தி
ஆறு மாத காலங்கள்
சூரிய, சந்திர இணைவு, சிறு இருள் தன்மையை வழங்கும். இந்த காலகட்டத்தில் வண்டி, வாகனங்கள் சார்ந்த விஷயங்களில் சற்று கவனமாக இருப்பதும், உடல் உஷ்ணமாகி அதன்மூலம் ஏற்படும் கோளாறுகள் அணுகுவதற்கான வாய்ப்புகள் அமையும். குறிப்பாக மஞ்சள் காமாலை, இதயக் கோளாறு, கண்கள் சம்பந்தப்பட்ட பாதிப்பு போன்றவை தொட்டுச் செல்ல வாய்ப்புகள் உண்டு.
உடன்பிறந்தவர்களால் சில தொந்தரவுகள் நிகழலாம். அரசு மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பு.
பரிகாரம்
முழு நிலவு தன்னை முகம்காட்டும் நாளான பௌர்ணமி தினத்தில் பச்சரிசியால் செய்யப்பட்ட உணவை இரவு நிலவு வெளிச்சத்தில் 24 நிமிஷங்கள் என்று கூறக்கூடிய ஒரு நாழிகை வைத்து பிறகு அன்னையின் கைகளால் பரிமாறி உணவை உண்டுவர சந்திர தசையினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வு மலரும்.
பௌர்ணமிக்கு மறுநாள் கோவில் குளங்களில் சென்று நீராடி தங்களின் வேண்டுதலை சமர்ப்பிக்க வேண்டுதல் மிக விரைவில் நிறைவேறும்.
உணவு தானம் மிக சிறப்பானதொரு வாழ்க்கை வழியை அமைத்துத் தரும். குறிப்பாக தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவை அமைத்து தாக சாந்தி செய்வது சிறப்பை வழங்கும்.
திங்கட்கிழமைகளில் விநாயகர்வழிபாடு பெரும் வரம் அருள காத்திருக்கின்றது.
வயது முதிர்ந்த பெண்களுக்கு செய்யப்படும் உதவிகள் சந்திரனை குளிர்வித்து மனரீதியான மகிழ்வை வழங்கும்.
செல்: 80563 79988