அரிசோனாவிலுள்ள டெம்பி நகரத்தோடு, பேஜ் (Page) பகுதியில் இருக்கும் ஆன்டிலோப் கேன்யான்ஐ ஒப்பிடும்பொழுது இப்பகுதி டெம்பியைவிட ஒரு மணி நேரத்தை கூடுதலாகக் கொண்டிருந்தாலும் அங்கிருந்து வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப டெம்பி நகரத்தின் நேரத்தையே இவர்களும் கடைப்பிடித்து ஒத்துழைக்கிறார்கள். சொற்பமான தொலைவிலிருந்து வருபவர்களுக்கு இந்த நேர வேறுபாடு மிகப்பெரிய குழப்பத்தைக் கொடுப்பதால் இப்படியான வழக்கத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணமாக அண்டை மாகாணமான யூட்டாவின் (மற்ஹட்) எல்லையின் அருகில் இருக்கும் மானுமெண்ட் பள்ளத்தாக்குக்குச் (ஙர்ய்ன்ம்ங்ய்ற் ஸ்ஹப்ப்ங்ஹ்) செல்ல திட்டமிட்டிருந்தோம். மாலை 5:30 மணிக்கு அங்கு செல்ல அனுமதி கிடைக்காது என்பதை அறிந்து அந்த நேரத்திற்குள் சென்றுவிட முயற்சி செய்தோம். இணையத்துடன் இணைந்திருந்த எங்களது அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளும் யூட்டா (மற்ஹட்) எல்லையின் அருகே வந்தடைந்தவுடன் ஒரு வினாடி நேரத்திலேயே ஒரு மணி நேரத்தை கூடுதலாகக் காட்டியது. சில இடங்களில் அரிசோனாவும் யூட்டாவும் சாலையில் மாறி மாறி வந்ததால் அதற்கேற்றபடி எங்களது நேரமும் கடிகாரத்தில் மாறிக்கொண்டே இருந்தது. இந்தியாவில் அனுபவிக்காத வித்தியாசமான அனுபவம் அது. இவற்றை வியந்துகொண்டே இருப்பிடம் வந்துசேர்ந்தோம்.
எங்களது துரதிஷ்டம் நான்கரை மணிக்கு வந்து சேர்ந்துவிட்டோமென்று எண்ணி மகிழ்ந்தால், அங்கு ஐந்தரை மணியைக் காட்டியது. நுழைவாயிலில் அனுமதியில்லையென்று மறுத்துவிட்டார்கள். முன் அனுபவம் இல்லாததால் இப்படியான குழப்பம் நிகழ்ந்துவிட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்திலேயே நேர வேறுபாடு இருப்பதில் இருக்கும் சிக்கலை எங்களால் தவிர்க்கவும் இயலவில்லை. கேன்யான்லில இல் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் நிரந்தரமாக அவர்கள் காட்டுகின்ற கருணை இங்கு நடக்கவில்லை. மாலை நான்கரை மணிக்கு வந்துசேர்ந்தாலும் ஐந்தரை மணி ஆகிவிட்டதென்று திரும்ப வேண்டி வந்தது. ஆனாலும் மானுமெண்ட் பள்ளத்தாக்கின் அடையாளமாக இருக்கின்ற அதன் முகப்பின் மூன்று பாறைகளையும் அங்கிருந்த அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுத் திரும்புவதற்கு திட்டமிட்டோம்.
பரந்தவெளியாக இருந்த அப்பாலைவனத்தில் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த அலுவலகத்தின் வரவேற்பறைக்குச் சென்று விசாரித்தோம். அங்கு பணியிலிருந்த நவாஹோ இனத்தினரின் மனதில் இருந்த இறுக்கம் அவர்கள் முகத்தில் வெளிப்பட்டது. உதட்டளவில்கூட சிறு புன்னகை இல்லை. நட்பு பாராட்டுகின்ற வரவேற்பு அவர்களிடம் சிறு துளியும் இல்லை. அங்குள்ள அருங்காட்சியகத்தை மட்டும் பார்க்கலாமென்று அனுமதி அளித்தார்கள். காலம் கடந்தமையால் மானுமெண்ட் பள்ளத்தாக்கின் பாதையில் பயணிக்க வாய்ப்பில்லாமல் போனது.
அலுவலகத்தின் சுற்றுச்சுவரிலிருந்து சற்று தொலைவில் அவ்விடத்தின் அடையாளமாக குத்திட்டு நின்றிருந்த சிவப்பு கலந்த கருமையான மூன்று பாறைகளைக் கண்டுகொண்டிருந்தோம். ஒருசில பயணிகளின் வாகனங்கள் அவ்வழியே திரும்பிவந்ததைக் காண தீப்பெட்டி போன்ற அளவில் தெரிந்தது. அதனை ஒப்பிட்டு நாங்கள் எவ்வளவு தொலைவில் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் மூன்று பாறைகளும் எப்படியான பிரம்மாண்டத்தைக் கொண்டிருக்கலாம் என்பதையும் எங்களது கற்பனையில் யூகித்தோம். வியப்பாக இருந்தது.
தொலைதூரக் காட்சிகளைக் காண்பதற்காக நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு ஒரு பெயர் இருந்தது. “ஜான் வெய்ன்ஸ் பாயிண்ட்” என்று அதனை அழைத்தார்கள். 1939-ஆம் ஆண்டில் இந்த நினைவுச்சின்ன பள்ளத்தாக்கில் ஹாலிவுட் நடிகர் வெயின்ஸின் “ஸ்டேஜ்கோச்” எனும் திரைப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். பள்ளத்தாக்கின் அழகையும் அமைதியையும் தொலைவிலிருந்து ரசிப்பதற்கு இவ்விடம் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்பதால் அவரது பெயராலேயே இதனை அழைக்கிறார்கள்.
அதற்கடுத்த நான்கு திரைப்படங்களிலும் அவர் இவ்விடத்தில் நடித்திருக்கிறார். 1956-ஆம் ஆண்டில் இங்கு படமாக்கப்பட்ட அவரது ரசிகர்களின் மிகவும் விருப்பமான, ”தி சர்ச்சஸ்” எனும் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அவரது புகழ் மேலும் பரவியிருக்கிறது.
அதே இடத்தில் அன்றைய மாலைப்பொழுதில் அப்பாலைவனத்தின் அழகை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம். இங்குள்ள வேறுபட்ட பாலைநிலங்களில் சூரியன் உதயமாவதும் மறைவதும் வெவ்வேறு அழகினைக் கொண்டிருக்கின்றன. தடுப்புச் சுவர்களே இல்லாத பரந்தவெளியான இவ்விடத்தில் சூரியனின் கதிர்கள் மஞ்சள் வண்ணத்தைத் தூவி கரிய நிறப் பாறைகளின்மீது தெறித்து அவற்றை மேலும் அழகாக்கியது. சிறிது நேரம் அவ்விடத்தை ரசித்துவிட்டு நேரத்தைக் கணக்கிட்டவர்களாக அருகிலிருந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தோம்.
நவாஹோ இன மக்களின் பாரம்பரிய ஆடைகளில் சில பொம்மைகள் அங்கிருந்தன. ரசனைமிக்க அலங்காரங்களுடனான ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்படியான ஆடைகளை அணிந்திருக் கின்ற மக்களை இன்றைய நாட்களில் இங்கு காண இயலவில்லை. யாவரும் நவீன உடைக்கு மாறியிருந்தார்கள். நமது இந்திய நாட்டில் குறவர்கள் விற்பதைப் போன்ற கழுத்து மணிகளை சில பழங்குடியின மக்கள் விற்றுக்கொண்டிருந்ததை ஒருசில மலைப்பகுதிகளில் காணநேர்ந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. அங்கு வைக்கப்பட்டிருந்த அடுத்தடுத்த புகைப்படங்களில் எழுதப்பட்டிருந்த தகவல்களை இயன்றவரை சேகரித்தோம். அவையாவும் போர் படைகளுக்குரிய தகவல்களாகத் தெரிந்தன. இரண்டாம் உலகப் போரில் இம்மக்கள் படைவீரர்களாக பங்கு கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தது. படைக் கருவிகளுக்குத் தேவையான யுரேனியத்தை இங்கு சுரங்கம் அமைத்து தோண்டி எடுத்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் காண வேண்டிய தகவல்கள் அங்கு கொட்டிக்கிடந்தன. அங்கு ஒரு மணி நேரத்தில் எங்களால் என்ன இயலுமோ அவற்றை மட்டும் அள்ளிக் கொண்டோம்.
1942 -1943 ஆம் ஆண்டுகளில் இந்தப் பள்ளத்தாக்கில் யுரேனிய சுரங்கத்தை அமைத்திருக்கிறார்கள். அமெரிக்க கார்ப்பரேட் அமைப்புகள் தங்களுக்குத் தேவையான சுரங்கத் தொழிலாளிகளை குறைவான கூலிக்கு அமர்த்திக்கொண்டு நிறைய லாபத்தை ஈட்டியிருக்கின்றன. டினே என்பவர் சில தாதுக்களை எங்கே கண்டடையலாமென்கிற தகவல்களைக் கொண்டு அமெரிக்க அரசாங்கத்திற்கு வழிகாட்டியிருக்கிறார். அவரை கார்ப்பரேட்டுகள் பயன்படுத்திக்கொண்டு சுமாரான ஊதியத்திற்கு தொழிலாளியாக அமர்த்தியிருக்கிறார்கள். டினே இப்பகுதியின் குடியிருப்புவாசி இல்லை என்பதால் அப்பகுதியில் ஆங்காங்கே வீடுகளைக் கட்டி வசித்துவந்த மக்களுக்கு மத்தியில் இவர் கூடாரங்களை அமைத்து வாழ்ந்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/13/americatour1-2025-12-13-15-05-11.jpg)
அப்பகுதியின் குடியிருப்பாளர்களும் இங்கு ஏற்படுத்தப்பட்ட சுரங்கங்களில் தொழிலாளர்களாக வேலைசெய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை யுரேனிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான எந்தவிதமான சிறப்பு உபகரணங்களோ ஆடைகளோ அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. சுரங்கங்களிலிருந்து கழிவாக வெளியேறிய நீரானது உள்ளூர் கிணறுகளிலும் நீரூற்றுகளிலும் கால்நடைகளின் குளங்களிலும் கலந்திருக்கிறது. இவற்றின் ஆபத்தை அறியாத உள்ளூர் மக்கள், சுரங்கச் செயல்பாட்டின்பொழுது எஞ்சியிருக்கின்ற அழுக்குகளைப் பயன்படுத்தி தங்களது வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். 1960-களின் பிற்பகுதியில்தான் யுரேனியச் சுரங்கம் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அவை விட்டுச்சென்ற அபாயகரமான கழிவுகள் இங்குள்ள நிலம், நீர், கால்நடைகள் மற்றும் டினே குடியிருப்பாளர்களுக்கு இன்றளவும் தொடர்ந்து சுமையாக இருந்துவருகிறது.
பழங்குடிகளான நவாஹோ மக்கள் அவர்களின் நிலப் பகுதியில் 110 சமூகங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான தலைவர்களையும் அதிகாரிகளையும் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு உள்ளூர் சேவைகளை வழங்கும் நவாஹோ நாட்டு கூட்டாட்சி மாநில மற்றும் மாவட்டத் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் உள்ளூர் அரசாங்கத்தின் பகுதிகளாவார்கள். 1927- இல் தொடங்கிய கூட்டாட்சி முகவர்கள் குழுவினர், சமூகப் பணிகளை ஒழுங்கமைக்க உள்ளூர் சமூகங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இவர்கள் புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவிக்கின்ற அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். 1930-ஆம் ஆண்டுகளில் இதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கின்ற திட்டங்களை வகுத்தார்கள். 1950-களில் நவாஹோ தேச அரசாங்கத்தை மறுசீரமைத்தார்கள்?. 1998 இல் உள்ளூர் ஆளுகைச் சட்டம் அவர்களுக்கு இன்னும் கூடுதலான சுயாட்சியை வழங்கியது.
அமெரிக்க அரசாங்கத்தின் கணக்கெடுப்பின் படி நவாஹோ நாட்டு மக்கள் மீதான விவரங்களை அங்கு பதியவைத்திருந்தார்கள். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வாழ்கின்ற இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லாத வீடுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் என்றும் தொலைபேசி வசதி இல்லாதவர்கள் 60% என்றும் ஒரு குடும்பத்தில் நான்குக்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்வதாகவும் அவர்களது சராசரி குடும்ப வருமானம் ஆண்டுக்கு டாலர் 22,000க்கும் சற்றுக் கூடுதல் எனவும் அவர்களது சராசரி வயது 24 ஆண்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் அங்குள்ள சுமார் 38,000 குடும்பங்களில் வறுமை நிலைக்குக் கீழேயுள்ள குடும்பங்கள் 40% ஆகவும் மோட்டார் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் 37,000 பேர் என்றும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் கல்வி கற்றவர்கள் 54% என்றும் 5 முதல் 17 வயதுடைய மக்களில் நவாஹோ மொழி பேசுபவர்கள் 56% என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அங்குள்ள ஆடுகள், மாடுகள், குதிரைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் அங்கு மேய்ச்சல் நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டிருந்தது. இந்த விவரங்களின்படி இங்குள்ள பல குடும்பங்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்பதையே அறிய முடிந்தது. நவீன உலகத்திற்கு மத்தியில் அவர்களது மொழியையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் அவர்களது முன்னோர்கள் வாழ்ந்த அதே இடத்தில் தொடர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். விவசாயங்களைப் பாதுகாத்தும் கலை, கைவினைப் பொருள்கள், விழாக்கள் ஆகியவற்றை, தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றும் அவர்களது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
1959-ஆம் ஆண்டிற்கு முன்பு, கூட்டாட்சி இந்திய முகவர்கள் (பூர்வீகக் குடியினரை இந்தியர் என்கிறார்கள்), நவாஹோ தேசத்தின் நீதிபதிகள் மற்றும் சட்ட அமலாக்கத்தை நிர்வகிப்பவர்கள் ஆகியோர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்போதிலிருந்து நவாஹோ தேசத்தின் அரசாங்கம் அதன் சொந்த நீதிமன்றங்களையும் சட்ட அமலாக்கத்தையும் நடத்திவருகிறது. தற்போது நீதித்துறை அமைப்பு ஏழு மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் ஐந்து குடும்ப நீதிமன்றங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
அவை நவாஹோ தேசத்தின் உச்சநீதிமன்றத்தால் மறு ஆய்வுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. இதுபோன்ற இன்னும் பல விவரங்களோடு அவர்களது பங்காக ராணுவத்தில் பணியாற்றியதை யும் அங்குள்ள நிலத்தின் அமைப்பு குறித்தும் இன்னும் ஏராளமான தகவல்கள் அங்கு பதிவில் இருந்தன.
இவையெல்லாம் சமீபகால வரலாறாக பதிவில் இருந்தாலும் இவர்களின் மூதாதையர் களின் வரலாறு மரணத்துவமிக்கது என்பதை யும் நினைவில் வைத்திருக்கிறார்கள். விரட்டப் பட்டவர்கள் தஞ்சம் புகுந்த இவ்விடத்தில் எழுப்பி யிருக்கும் இந்தக் கட்டமைப்பு, இவர்கள் மீண்டும் உயிர்ப்பித்திருப்பதை அறிவிக்கிறது. இயற்கையை நேசிக்கும் இவர்களது இயல்பை இந்தப் பாலைவனத்திலும் கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பாதுகாக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/americatour-2025-12-13-15-04-35.jpg)