மருத்துவ ஜோதிடம் என்பது ஞானிகளின் காலம்முதல் தொன்றுதொட்டே வந்தது. வேத ஜோதிடம் செதுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஜோதிடத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், அதில் மருத்துவ ஜோதிடம் முக்கியமான ஒன்று. அன்றைய காலகட்டத்தில் இதன் தேவைகள் குறைவாக இருந்தது. ஆயினும் ஒரு மனிதனுக்கு தேவைப்படும் பொதுவான பலன்களை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது மனிதனை வேதனைப்படுத்தும் நோயைப் பற்றி அறிந்துகொள்ள மருத்துவ ஜோதிடம் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும் என்றால் திருமணம், தொழில், வீடு கட்டுதல், சொத்து, படிப்பு, ஆரோக்கியம் இதைப்பற்றி புரிந்துகொள்வதற்காக மட்டுமே ஜோதிடம் பார்ப்பார்கள். அதில் நம் ஆரோக்கியம் பற்றி ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அதிக அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்போம்.
நம் ஆரோக்கியம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. ஏனென்றால் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்க்கையில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே நாம் அனைத்தையும் பெற்று வாழமுடியும். இன்றைய சூழ்நிலையில் நோய்கள் பலவிதம். அதன் தன்மை, வீரியம், கால அளவு எப்படி என்று சொல்லமுடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கை முறையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். மருத்துவத்துறையில் அறிவியல் வளர்ச்சி வளர்ந்துவிட்ட போதிலும் நோய்களின் தன்மைகள் குறையவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் என்றாலே வீட்டில் பாட்டியின் கை வைத்தியம். முடியாதபட்சத்தில் மருத்துவமனை. ஒரே மருத்துவர் எல்லா நோய்களுக்கும் அவரே மருத்துவம் பார்ப்பார். ஆனால் இன்று மருத்துவத்தில் பல பிரிவுகள் உள்ளது. அலோபதி, ஹோமியோபதி, சித்த வைத்தியம், மூலிகை மருத்துவம், அக்குபிரஷர், நாட்டு வைத்தியம், வர்மா, மலர் மருத்துவம் இப்படி பிரிவுகள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய்களின் தாக்கங்கள் அதிகமாகிக்கொண்டேதான் போகிறது. மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்தாலும்கூட மனிதனுடைய ஆரோக்கியமும், ஆயுள் காலமும் குறைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜாதகத்தில் நாம் நோயைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய பாவம் என்று சொன்னால் ஆறாமிடம் ஆகும். லக்னத்திலேயே ஆறாம் அதிபதி இருந்தால் அல்லது லக்னாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் அடிக்கடி மருத்துவம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
லக்னத்தை ஆறாம் அதிபதி பார்ப்பது, ஆறாம் அதிபதியும் லக்னாதிபதியும் இணைந்து இருப்பது இப்படி ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகொண்டாலும் இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைவாகவே இருக்கும்.
ஆறாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதியும் தொடர்புகொள்ளும்பொழுது நோயின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். லக்னம்தான் நம்முடைய ஆரோக்கியத்தைக் குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் குறிக்கும். ஐந்தாம் பாவம் என்பது நோய் வந்தபின்பு குணமாகக்கூடிய அமைப்பைக் குறிக்கும். லக்னமும், ஐந்தாம் அதிபதியும் பலம் பெற்றிருந்தால் அவர்கள் நோயின் பிடியிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். லக்னம் ஒற்றைப்படை ராசியில் தொடர்புகொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். லக்னமும் சந்திரனும் பலமாக இருந்தாலும்,
அதைத் தாங்கிக்கொள்ளும் பலம் இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும். ஆறாம் அதிபதியுடன் எட்டாம் அதிபதியும், லக்னாதிபதியும் தொடர்புகொண்டால் அவர்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படும். தொடர்ந்து மருத்துவத்தை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்திலுள்ள ஆறாம் பாவத்தில் அல்லது ஆறாம் அதிபதியின்மீது கோட்சார கிரகங்கள் ராகு- கேது, செவ்வாய், சனி வரும்பொழுது உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும்.
முக்கியமான கிரக அமைப்புகள்
சூரியன், சந்திரன் நீசமடைந்து பலவீனமாக இருப்பது. பாவ கிரகங்களுடன் சனி, ராகு- கேது சேர்வது அல்லது பார்வை பெறுவது நோயை ஏற்படுத்தும்.
சுகஸ் தானம் என்று சொல்லக்கூடிய நாலாம் பாவத்தில் ராகு- கேது, சனி இருப்பது அவர்களுக்கு நல்ல சுகத்தைத் தராது.
நாலாம் அதிபதியும் பலவீனமடைந்தால், ஆறு, எட்டு, பனிரண்டாம் வீடுகளில் இருப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆறாம் அதிபதி வக்ரத்தில் இருந்தால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது. அல்லது நோய் குணமாவதுபோல் இருந்து திடீரென வீரியமடையும். முதலில் குணமாகியபின்பு மறுபடி நோயின் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆறாம் அதிபதியுடன் ஏழு அல்லது 11-ஆம் அதிபதி தொடர்புபெறும்பொழுது நோயாளிக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும்.. ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் அவர் மருத்துவம் எடுக்க மிகவும் சிரமப்படுவார். ஒன்பதாம் அதிபதி தொடர்பு கொண்டால் மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளும் திறனையும் மருந்தின் அளவு மருந்தின் செயல்படும் தன்மையையும் தெரிந்து கொள்ளலாம். பனிரெண்டாம் அதிபதி தொடர்புகொண்டால் அடிக்கடி மருத்துவ முறைகளை மாற்றுதல், மருத்துவமனை மற்றும் மருந்துகளை மாற்றுதல் ஏற்படும். அவர் மருத்துவமனையில் தங்கி மருத்துவமெடுக்கும் சூழ்நிலை உருவாகும். ஜாதகருக்கு நோயால் ஏற்பட்ட நிம்மதியின்மை, மனக்கசப்பு, வருத்தம், தூக்கமின்மை போன்றவற்றை சுட்டிக் காட்டும்.
நோயிலிருந்து மீளுதல் 4, 11 நான்காமிடம் நோயாளிகள் குணமடைவதையும், 11-ஆமிடம் நோயில் இருந்து குணமடைவதையும் குறிக்கும். பதினொன்றாம் இடத்தில் பாவ கிரகங்கள் இல்லாமல் 11 ஆம் அதிபதி கெடாமலும் இருந்து, நோய் குணமானால் அது பூரண குணமாகும். பாவ கிரகங்கள் இருந்தால் நோயின் தன்மை இன்னும் பூரணமாக வெளியேறவில்லை. மறுபடியும் தீய கோட்சார காலத்தில் அல்லது தீய தசாபுக்தி காலத்தில் மறுபடியும் அதே நோய் வரும் என்பதைக் காட்டுகிறது.
நோய் ஏற்படும் தசாபுக்தி அந்தரம்
ஆறாம் அதிபதியின் தசாபுக்தி அந்தரம் நடக்கும் காலங்களில் நோய் ஏற்படுகிறது. ஆறாம் வீட்டில் நிற்க கிரகங்களின் தசாபுக்தி அந்தரம் நடக்கும் காலங்களிலும் நோய் ஏற்படும்.
சந்திரனின்மீது கோட்சாரத்தில் ஆறாம் அதிபதி வரும் காலங்களில் நோய் வருகின்றது. இவ்வாறு வந்த நோய் உடல் அளவில் பாதிப்பு ஏற்படுத்திவிட்டு சரியாகிவிடும். கோட்சாரத்தின் கிரகங்களால் ஏற்படும். நோய் அதனுடைய காலம் குறைந்த அளவே. அதுவே தசாபுக்தியாக செயல்படும்போது மட்டும் நீண்டநாள் ஜாதகர் நோயால் அவதிப்படுவார். இந்த நோயிலிருந்து விடுபட தன்வந்திரி பகவானை வழிபாடு செய்வதும் மருத்துவ கடவுளான வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.
செல்: 90802 73877
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/medical-2025-12-12-17-51-40.jpg)