இரகுகுலநாதரான ஸ்ரீ இராமபிரான் வடதேசமான அயோத்தியாவில் பிறந்தாலும், அவருக்கு அதிக ஆலயங்கள் இருப்பது என்னவோ தென்னகத்தில்தான். அப்படியான ஒர் இராமர் திருத்தலம்தான் இரகுநாதசமுத்திரம்.
ஸ்ரீ இராமர் இராவணனை அழித்து, சீதையை மீட்டு, தம்பி லக்ஷ்மணரோடு இப்பகுதியில் வரும்போது, சுகப்பிரம்ம ரிஷியை சந்திக்கின்றார். அவரிடமிருந்து வேதங்களின் உட்பொருள் அடங்கிய ஓலைச்சுவடியைப் பெற்று, அனுமனை வாசிக்கச் சொல்கின்றார். வேதத்தின் உட்பொருளைக் கேட்டு இன்புற்ற தசரத புத்திரர் அனுமனுக்கு உபநிஷதங்களில் ஒன்றான முக்திகோபநிஷத்தை உபதேசிக்கின்றார். இந்தத் திருக்கோளத்தை நாம் இந்த இரகுநாத சமுத்திரத்தில் தரிசனம் செய்யலாம்.
இத்தலத்தின் இராமபிரான் யோகநிலையில் அமர்ந்தவண்ணம் அருள்பாலிப்பவர். இவரைப்போன்று இந்த ஆலயத்தோடு சேர்த்து, படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் ஸ்ரீ யோக இராமரை தரிசிக்கலாம். இந்த மூன்று ஆலய சிற்பத்தையும் ஒரே மன்னனால், ஒரே நேரத்தில் வடிக்கப்பட்டது என்பதுதான் சிறப்பிலும் சிறப்பு.
அந்த சிறப்புக்குரிய நாயகன் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன்தான். பல கற்கோவில்களை எழுப்பிய இம்மன்னனின் மகனே புகழ்பெற்ற குடைவரைக் கோவில்களை எழுப்பிய மகேந்திரவர்ம பல்லவன் ஆவான்.
நரசிம்மவர்மப் பல்லவனால் இக்கோவில் கட்டப்பெற்றது என்பதற்குச் சான்றாக பல்லவர் கட்டடக்கலை பல இடங்களில் பிரதிபலிக்கின்றது. விசித்திர சித்தன் என்று போற்றப்பட்ட நரசிம்மவர்மப் பல்லவனின் கல்வெட்டுகளும் இங்கு பல இடங்களில் காணப்படுகின்றன.
நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்யும் காலத்தில் இப்பகுதியை ஆண்ட இரகுநாத நாயக்கன் என்னும் அரசன் இந்த ஊரில் மிகப்பெரிய ஏரி ஒன்றை ஏற்படுத்தினான். இந்த ஏரியினால் சுற்றியுள்ள பல கிராமங்களின் நீர் பஞ்சம் தீர்ந்தது.
இந்த ஏரி சமுத்திரம்போல் (கடல்போல்) காட்சியளித்தது. இதனால் இவ்வூருக்கு இரகுநாதசமுத்திரம் என்று பெயர் வந்ததாக கூறுகின்ற னர் இவ்வூர் மக்கள். அதோடு, இங்கு போர்படை வீரர்கள் பலர் தங்கியுள்ளனர். ஸ்ரீ இராமரது திருக்கோவில் இங்கு இருந்ததாலும் இவ்வூருக்கு இரகுநாதசமுத்திரம் என்கிற பெயர் வந்ததாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறுகின்றனர்.
காஞ்சிபுரம் நிகமாந்த வேதாந்த தேசிகர் இத்தலத் தினில் ஒரு மண்டலம் தங்கி ஸ்ரீ இராமரை சேவித்து, பக்தர்களுக்கு பல அருள் விஷயங்களைக் கூறி, ஆசி வழங்கியுள்ளார்.
ஊரின் தென்மேற்கு பகுதியில் ஆலயம் அழகுடன் அமைந்துள்ளது. கிழக்குப்புற நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் மேற்கு நோக்கியபடி ஸ்ரீ கருடாழ்வார் தரிசனம்.
முதலில் நீண்டதொரு முகமண்டபம். அதன் வடபாகத்தில் பழமையான அனுமன். பின் மகா மண்டபம். அதன் வலப்புறம் ஆழ்வார்களின் தரிசனம்.
இங்கேயும் ஒரு அனுமன் சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கருவறையுள் பேரருடன் நடுநாயகமாய் ஸ்ரீ இராமச்சந்திரப்பிரபு யோகாசனமிட்டு அமர்ந்தவண்ணம் தனது வலது கரத்தை சின்முத்திரையாகக் கொண்டு, ஆத்ம ஸ்தானத்தில் வைத்தபடி கருணாகரசம் பொழியும் திருமுகத்துடன் வீற்றருள..... வில்லேந்திய கோலத்தில் தம்பி லட்சுமணர் இடதுபக்கம் நின்றருள, தாய் சீதாப் பிராட்டியாரோ வலதுபக்கம் அமர்ந்து திருவருள் பொழிய, தேஜோமயமாய் திகழ்கின்றனர் தசரத குடும்பத்தினர்.
எதிரே ஈசான மூலையில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சுகப்பிரம்மரிஷி தந்த ஓலைச்சுவடியை பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருக்கின்றார். இந்த வினோதமான அமைப்பினை இங்கும், படைவீடு மற்றும் நெடுங்குணம் ஆகிய இம்மூன்று திருத்தலங்களில் மட்டுமே தரிசித்து பரவசம் அடைந்திட முடியும் பக்தர்கள்.
இதில் இந்த இரகுநாதசமுத்திரத்தில் மட்டும் ஸ்ரீ இராமபிரானுக்கு வலதுபுறம் மாறியபடி சீதா தேவியும், இடதுபுறத்தில் ஸ்ரீ லட்சுமணரும் திருக்காட்சித் தருவது சிறப்பம்சமாகும். உற்சவ மூர்த்தமாக ஸ்ரீதேவி - பூதேவி உடன் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் எழுந்தருள்கின்றார். ஸ்ரீ பத்மாசனித் தாயாருக்கும் இங்கு உற்சவத் திருமேனியுள்ளது.
ஆலய வலம்வருகையில் ஸ்ரீ பத்மாசனித் தாயாரின் தனிச்சன்னிதி தென்புறமுள்ளது. இங்கு கருவறையில் இரண்டு தாயார்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். வடமேற்கில் ஸ்ரீ நாகர் சிலையும், அருகே வேப்ப மரமும் உள்ளன. வடதிசையில் தென்முகமாக ஸ்ரீ யாக்ஞவல்கிய மகரிஷி தனியே சன்னிதி கொண்டியிருகின்றார். இவர் ஆஞ்சனேயரின் குருவான ஸ்ரீ சூரியனது குருவாவார்.
பாஞ்சராதர ஆகம முறைப்படி தினமும் பூஜைகள் நடக்கின்றன. 2009-ஆம் ஆண்டு இவ்வாலய சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. வருடாவருடம் ஸ்ரீ இராமநவமியன்று இங்கு விசேஷ அபிஷேக - அலங்கார- ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மூன்று வாரங்கள் இங்கு ஸ்ரீ இராமரை சேவித்து, கோரிக்கைகளைச் சொல்லி, கருடனின் பாதங்களை தொட்டு வணங்கினால், திருமண வரம் மற்றும் குழந்தை வரும் கிட்டும் என்கின்றார் இவ்வாலய பட்டச்சாரியார். ஸ்ரீ இராமருக்கு திருமஞ்சனம் செய்து, 11 சுமங்கலிகளுக்கு புடவை மற்றும் மங்களப் பொருட்களை தானம் தந்து, வேப்பமரத்தில் தொட்டில் கட்டிச்செல்ல ஆண் குழந்தை பெறுவது கண்கூடு.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்திலுள்ள இவ்வூர், சேத்பட்- பெரணமல்லூர் சாலையில் சேத்பட்டிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஆலயத் தொடர்புக்கு:- திரு பார்த்த சாரதி, பட்டாச்சாரியார்:- செல்: 98940 08630.