"செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.'
-திருவள்ளுவர்
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற் கொண்டு செய்யத்தக்கது என்னவென்றால், பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்கு புகழ் சேர்க்கும் என்பதாம்.
சாது ஒருவர் செய்த கடுந்தவத் தின் காரணமாக அவருக்கு பல சித்திகள் கைவரப்பட்டன. அத னால் அவருக்கு கர்வம் வந்தது.
நல்ல குணங்களும், தவ வலிமையும் கொண்ட சாதுவின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன்.
சன்னியாசி உருவம் தாங்கி, சாது வசித்துவரும் இடத்திற்குச் சென்றார் இறைவன்.
சாதுவிடம், "சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களைக் காணவேண்டியே இங்கு வந்துள்ளேன்' என்றார் சன்னியாசி.
சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக்கொண்டார் சாது. அச்சமயத்தில் அந்தவழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. "சுவாமி! தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா.' எனக் கேட்டார். சன்னியாசி, "ஏன் முடியாது. இப்போது பாருங்கள் என்றவாறு, ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து மந்திரித்து,
யானையை நோக்கி வீசினார் சாது. என்ன வியப்பு! அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது.
உடனே "என்ன ஆச்சரியம்! உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்துகொண்டேன். தங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்திவிட்டீர்களே...' என பாராட்டினார் சன்னியாசி.
சன்னியாசியின் புகழுரைகள், சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும், "சுவாமி! இப்போது தங்களால் இறந்துபோன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா?' எனக் கேட்டார் சன்னியாசி. "என்னால் எதையும் செய்யமுடியும். இப்போது பாருங்கள்...' என்றவாறு முன்போலவே ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து மந்திரித்து, கீழே சாய்ந்து கிடந்த யானையின்மீது வீசினார் சாது.
யானைக்கு உயிர்வந்து, மீண்டும் சாதுவிடம், "சுவாமி! உங்கள் அபாரசக்தியைப் புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார் சன்னியாசி.
"சரி! தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை...' என்றார் சாது. "சுவாமி! தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்கச் செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? தங்களுக்கு எப்படிப் பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது?
தங்களின் சித்து விளையாட்டு, பகவானை எளிதாக அடைய உதவியாக இருக்குமா?' எனக்கேட்டு, சன்னியாசி வடிவில் இருந்த இறைவன், அவ்விடத்திலிருந்து மறைந்தார்.
அரண்மனையிலுள்ள அரசனிடம் சென்ற பிச்சைக்காரன் அற்ப பொருட்களை யாசிப்பது முட்டாள்தனம். அதுபோல, பகவானது அருளைப்பெற்ற பக்தன் விலைமதிக்க முடியாத ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றை விடுத்து சித்திகளைப் பிரார்த்திப்பானானால் ஆனால் அவனும் ஒரு மூடனே!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/manickavanar1-2025-12-03-17-21-36.jpg)
மன்னர் ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர். தான் கட்டிய பெரிய கோவிலை தானே ஒருமுறை சுற்றிப் பார்த்தார். "கோவிலைக் கட்டிவிட்டோம்; ஆனால் இவ்வளவு பெரிய கோவிலை ஒளி வீசச் செய்ய ஏராளமான விளக்குகள் வேண்டுமே... என் காலத்திற்குப் பிறகும் அவை எரிய வேண்டுமே...'' என நினைத்தார். உடனே அவர் மனதில் பிறந்ததுதான் இலவசத் திட்டம்.
அதிகாரிகளை அழைத்து, "என் காலத்திற்குப் பிறகும் இக்கோவில் ஒளி வீச வேண்டுமென விரும்புகிறேன். விளக்கெரிய நெய் தேவை; எனவே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கோவிலுக்கு நெய் கொடுத்து விடவேண்டும். இதற்காக, அவரவருக்கு குறிப்பிட்ட சன்னதிகளை ஒதுக்கி, பிரகாரங் களை பிரித்துக்கொடுங்கள்.
"ஒவ்வொரு வீட்டுக்கும், பசுக்களை இலவசமாக வழங்கவேண்டும். அவை தரும் பாலை நெய்யாக்கித் தருவது மக்கள் கடமை. அவர்களே தினமும் கோவிலுக்கு வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் விளக்கேற்ற வேண்டும். கோவிலுக்கு தருவதுபோக, மீதியை அவர்களே பயன்படுத்திக்கொள்ளலாம்...' என உத்தரவு போட்டார்.
இதன்படி வீடுகளுக்கு பசுக்கள் விநியோகிக்கப்பட்டன. அதன்மூலம் கோவில்கள் விளக்கொளியில் மின்னின. இந்நிலையில் ஒருநாள் கோவிலுக்கு வந்தார் மன்னர். ஒரு சன்னிதியில் மட்டும் விளக்கு எரியவில்லை. அது மாராயன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காரணமறிய அவர் வீட்டுக்கே போய்விட்டார் மன்னர்.
வீட்டுக்குள் இருந்து வந்தாள் மாராயன் மனைவி. அவளது கையில் ஒரு சிறு குழந்தை... அது எலும்பும் தோலுமாக உயிரைவிடும் நிலையில் இருந்தது.
அவளிடம் கோவிலுக்கு நெய் தராததற்கு காரணம் கேட்டார் மன்னர்.
"மன்னரே... எங்களுக்குத் தரப்பட்ட பசுக்கள் காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றைக் காக்க முயன்ற என் கணவரும் இறந்துவிட்டார். நான் என் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய தாய்ப்பாலை விற்று கிடைத்த பணத்தில் நெய் வாங்கி விளக்கேற்றி வந்தேன்.
இப்போது தாய்ப்பாலும் வற்றிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியவில்லை. நான் செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன் மன்னா...''
என்றாள். இதைக்கேட்டதும் கண் கலங்கி விட்டார் ராஜராஜசோழன். குழந்தையை வாரியெடுத்து அணைத்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/manickavanar2-2025-12-03-17-21-46.jpg)
பெற்ற பிள்ளையின் உயிரும், தன் உயிரும் போனாலும் பரவாயில்லை என்று தாய்ப்பாலையே விற்று விளக்கேற்றிய அந்த மாதரசியின் பெயரை, கல்வெட்டில் பதிக்க உத்தரவிட்டார். அவளை திருமஞ்சன அபிஷேகப் பணியாளராகவும் நியமித்தார். "இல்லக விளக்கது இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதியுள்ளது, பல்லக விளக்கது பலருங்காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயமே'' என்ற அப்பர் பாடலுக்கேற்ப விளக்கு ஏற்றுவதன் அருமை புரிந்து நடந்த மாராயனின் மனைவியைப்போல் ஆத்மார்த்தமான வழிபாடு செய்துவந்த செட்டிப்பெண், செட்டிப்பிள்ளைக்கு இறைவன் அருளாசி வழங்கி காட்சி தந்ததொரு திருத்தலம்தான் நாகை மாவட்டத்திலுள்ள திருமருகல் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், மாணிக்கவண்ணர்.
இறைவி: அருள்மிகு வண்டுவார் குழலி அம்மன், ஆமோதளநாயகி.
புராணப் பெயர்: மருகல்.
ஊர்: திருமருகல்.
மாவட்டம்: நாகை மாவட்டம், நாகை வட்டம்.
தலவிருட்சம்: மருகல் என்றொரு வகை வாழை மரம்.
தீர்த்தம்: லட்சுமி (அ) மாணிக்க தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாôட்டில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் 143-ஆவது தலமாகவும், காவிரி தென்கரை ஸ்தலங்களில் 80-ஆவது திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருமருகல் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.
"சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே'
-திருஞானசம்பந்தர்.
அப்பர், திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருமருகல் திருத்தலத்தில், குசகேதுமகாராஜா, கோச்செங்கட்சோழன், திருமகள், செட்டிப் பெண், செட்டிப்பிள்ளை, பிரம்மதேவர் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டதாக தலபுராணம் சொல்கிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளான். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடைபெற்றபோது, சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத் திருமேனியின் பாணத்தில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதையறிந்த மன்னன் ஓடோடி வந்து, மனம், மொழி, மெய்களால் இறைவனைத் துதித்து, இறைத் திருவருளால் எழுப்பித்த ஆலயமே திருமருகல் எனப் படுகிறது.
நீதி தெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில் விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகாலம் மழையில்லாததால் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாகினர்.
பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளைப் புறந்தள்ளினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/manickavanar3-2025-12-03-17-22-01.jpg)
இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது மக்களின் பசியைப் போக்க முடியாமல், மக்களை நீதி நெறி நடத்த முடியாமல் வாழ்வதைவிட இறப்பதேமேல் எனக் கருதி, தன் துயரை எல்லாம் இறைவன் திருமுன் நின்று கதறிய அவன் இறுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றான்.
தன்னலம் கருதாமல் தன் குடிமக்களின் நலனுக்காக தன்னுயிரையும் துறக்கத் துணிந்த மன்னனைத் தடுத்தாட்கொண்டு சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மாணிக்கம், நெல், முத்து, நீர் ஆகிய மழைகளை பொழியச் செய்து அருளியுள்ளார். மாணிக்க மழை பொழியச் செய்து மக்களின் வறுமையைப் போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வடமொழியில் ரத்தின கிரீஸ்வரர் என்று வழங்கப்படுகிறது.
செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமணம்பாண்டிய நாடு, வைப்பூரைச் சேர்ந்த வணிகன் தாமன் என்பவனுக்கு ஏழு பெண் பிள்ளைகள். ஆண் மகவு இல்லாத அவன் தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்துவந்து வளர்த்துள்ளான். மேலும் தன் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் தங்கைக்கு அவன் வாக்களித்திருந்தான். ஆனால் காலப்போக்கில் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியவனாக அந்த தன்னுடைய ஏழு பெண்களில் ஆறு பெண்களை செல்வந்தர்களாகத் தேடிப்பிடித்து மணம் முடித்தான். தன் தந்தையின் வாக்குத்தவறிய இச்செயலைக்கண்டு வருந்திய 7-ஆவது பெண், தன் தந்தை தன்னையும் தன் மாமனுக்கு மணம் முடிக்கமாட்டார் என்பதையறிந்து, தன் மாமனை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வது எனத் திட்டமிட்டு, அவனுடன் உடன்போக்குப் புறப்பட்டாள். இந்த ஊர் வழியே வரும்போது இரவாகி விடுகிறது.
அன்றிரவு இத்திருத்தலத்தின் தெற்கு வீதியில் தர்ப்பையைப் போட்டு அவர்கள் இருவரும் தங்கி உறங்குகின்றனர்.
அப்போது விதிவசத்தால் அந்த செட்டிப் பிள்ளையை அரவம் தீண்டியது. அவன் இறந்தான்.
இதனால் பெரும் துயருற்ற அந்த செட்டிப் பெண், கண்ணீர்விட்டு கதறிப் புலம்பினாள். மணமாகா கன்னிப் பெண் என்ற எல்லையை மீறாமல் இறந்துகிடந்த மாமனின் உடலைத் தீண்டாமல் அருகிலிருந்தே அழுது புலம்பினாள். "அரவம் அணிந்த நிமலா, அடியவர் தம் கூட்டம் உய்ய நஞ்சுண்ட அமுதே காத்தருள வருவாய்!' என இறைவனைப் பலவாறு அழைத்தாள், அரற்றினாள்.
தன் அவல நிலையிலும் ஆண்டவனின்மீது நம்பிக்கைகொண்டு துதித்த அந்தப் பெண் ணின் அழுகுரல், சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. திருஞானசம்பந்தரின் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி, அருள் சுரக்கச் செய்தது.
இளம்பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராக்கரதவான நிலைமையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல் "சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்' என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி இறந்து கிடந்த செட்டிப்பிள்ளை மாணிக்கவண்ணரின் திருவருளால் துயில் எழுந்தவன் போல உயிர்பெற்று எழுந்தான். பரம்பொருளின் பெரும் கருணையில் புனர்வாழ்வு பெற்ற செட்டிப் பெண்ணும், செட்டிப் பிள்ளையும் இறைவனைப் பலவாறு வேண்டித் துதித்தனர்.
அப்போது, இறைவன் திருவுளப்படி வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர் திருமுன்னிலையில் வன்னிமரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு செட்டிப்பெண் செட்டிப்பிள்ளை இருவருக்கும் மணமுடித்து வைத்தார் சம்பந்தர் பெருமான் என்பது இத்தல புராணம் உணர்த்தும் ஆன்மிக அற்புதம். இதன்காரணமாக இத்தலம் திருமணத்தடை நீக்கும் பதிகமாகவும் விளங்குகிறது.
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ மாணிக்க வண்ணர். வடமொழியில் ரத்தினகிரீஸ்வரர், மூர்த்தி சுயம்புமூர்த்தி, சுயம்புமூர்த்தி என்பது உளி பாயாத உரு என்பதாம்.
ப் இறைவியின் திருநாமம் அருள்மிகு வண்டுவார் குழலியம்மை. வடமொழியில் ஆமோதள நாயகி
ப் இத்தல விருட்சம் மருகல் என்றொரு வகை வாழை. இவ்வாழை எவ்வித செய்நேர்த்தியுமின்றி தானாகவே பயிராகிறது. இதன் பழம் தனித்தொரு இன்சுவையுடையது. இதனை பெயர்த்து கோவிலுக்கு வெளியில் நட்டால் பயிராவதில்லை.
ப் சித்திரை மாத பிரம்மோற்சவம்- 18 நாட்கள். தினமும் காலை- மாலை இரண்டு வேளைகளில் சுவாமி வீதி உலா. திருவிழாவின் 7-ஆம் நாள் செட்டிப் பெண் கல்யாணம் என்ற விழா. அன்று மாலை செட்டிப் பிள்ளைக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறும். 10-ஆம் நாள் தீர்த்தவாரி. இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழா இது என்று கூறுகிறார் ஆலய கணக்கர் ஸ்ரீநிவாசன்.
ப் வரலட்சுமி நோன்பு தோன்றிய இத்தலத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பு அன்று கமல வாகனத்தில் லட்சுமியும் வரதராஜப் பெருமாளும் எழுந்தருளி லட்சுமி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்து அருள்வர். கருத்து வேறுபாட்டினால் பிரிந்த தம்பதிகள் இத்தல வழிபட்டால் ஒற்றுமை உணர்வுடன் மனபேதம் விலகி ஒன்றுசேர்வர் என்றும், தமிழ்நாட்டிலே ஒரு சிவ ஸ்தலத்தில் இந்த அளவு மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடு அமைந்த கோவில் வேறு எதுவும் இருக்கமுடியாது என்கிறார் ஆலயச் செயல் அலுவலர் வெ. அசோக் ராஜா.
ப் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற இத்தலத்தில் சீராளன் கல்வி பயின்றுள்ள இடம் என்பது குறிப்பிடத் தக்கது. சிவாலயத்திற்கு உரிய அனைத்து விசேஷங்களும் நடந்தாலும் கிரகப் பெயர்ச்சியன்று சிறப்பு, ஹோம வழிபாடு நடப்பது சிறப்பானது.
ப் இத்தலத்தில் வழிபடுவோரை பாம்பு தீண்டுவதில்லை என்பதால் பூச்சி விஷ ஜந்துக்களால் பாதிக்கப் பட்டோர் அல்லது பயம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பயம் விலகி நன்மை கிடைக்கப் பெறுகிறார்கள் என்றும்; உடல் உபாதையுடன் தீராத காய்ச்சல் மிகுதியால் அவதிப்பட்டுவந்த சோழமன்னர் இத்தல ஜுரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு நலம் பெற்றார் என்றும்; திருமணவரம் வேண்டுவோர் காயத்ரி சகஸ்ரநாமம் (1,008 மந்திரங்கள்) சொல்லி அர்ச்சனை செய்து நல்ல வரன் அமையப் பெறுகிறார்கள் என்றும்; தனி சந்நிதி கொண்டு அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக் கின்ற சனிபகவானை மந்தனார் கொட்ட மடங்குங்கு கோவி லிது என்று காகபுஜண்டர் குறிப்பிட்டதும்-
"மந்தனுக்குற்ற பெரும் பேறுங்கீர்த்தியும்
மருகலானுக்கல்லாங் வேறில்லை நல்லனவெல்லாந்
தந்தே வேதனை யறுப்பான் கொடுமையை யெடுத்துண்பனே''
என கோரக்க சித்தர் அருளியுள்ளதும், எப்பேர்ப்பட்ட சனி தோஷம், (7 1/2 சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி) சனி தசாபுக்தி நடந்தாலும் சனி தோஷத்தின் உக்கிரமம் போக்கும் தலம் என்றும்; பிரம்மதேவர் தவமியற்றிய இத்தலத்தை "பருகலாம் பரமாய தோர் ஆனந்தம் மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே'' என அப்பர் பெருமானாலும், "சிந்தாயெனுமால் சிவனேயெனுமால் என்று திருஞானசம்பந்தராலும், பதிகம் பாடப்பெற்ற சிறப்பான தலம் என்றும்; மனக்குழப்பங்கள் நீங்கி, வறுமை நீக்குவதுடன், மணப்பேறு, மக்கட்பேறுடன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தருளும் திருமருகல் மருகலான் அடி பணிவோம். மனம்போல் நல்வாழ்வு வாழ்வோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகர் சுந்தர கணபதி சிவாச்சார்யார்.
திருக்கோவில் அமைப்பு
நீர்வளம், நிலவளம்மிக்க பசுமை வளம் சூழ்ந்த திருமருகலில் இரு பிராகாரங்களுடன், கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் கோச் செங்கட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ளது. அதன் எதிரே எழில் சூழ்ந்த நீராழி மண்டபத்துடன் கூடிய லட்சுமி தீர்த்தக்குளம் உள்ளது. கரை அருகே வடக்கு நோக்கி விநாயகர் சன்னதி உள்ளது.
ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தால் வலப்புறம் திருக்கோவில் அலுவலகமும், இடப்புறம் மடப்பள்ளியும் உள்ளது. கொடிமரம், பலிபீடம் நந்தி உள்ளது. ஐந்து படிகள் ஏறி கற்றளி மண்டபத்தில் தெற்கு நோக்கியவண்ணம் நின்ற நிலையில் வண்டுவார்குழலி அம்மன் சன்னதி உள்ளது. சுவரில் ஆலய வரலாற்று ஓவியங்கள் பொலிவுடன் உள்ளது. கற்றளி மண்டபத்திலிருந்து 3 படிகள் ஏறினால் அர்த்த மண்டபம் உள்ளது. மீண்டும் 3 படிகள் ஏறினால் கருவறையில் ஸ்ரீ மாணிக்கவண்ணர் கிழக்கு நோக்கி அருள்கிறார். உள்ளே நடராஜர் சன்னதி உள்ளது.
உள் பிராகாரத்தின் தென்புறம் 63 நாயன்மார்கள் சில ரூபங்கள், பிரதான விநாயகர் சன்னதி, கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளன. மகாலட்சுமி, வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் சன்னதி உள்ளது. நவகிரகங்கள், காலபைரவர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சூரியன், பராசர முனிவர் பூஜித்தலிங்கம், நாகர், திருஞானசம்பந்தர், விஸ்வநாதர்- விசாலாட்சி, சந்தான விநாயகர் திருமேனிகள் உள்ளன.
வெளி பிராகாரத்தின் தென்புறம் சப்தமாதர்கள் சன்னதி, சுரம் தீர்த்த விநாயகர் சன்னதி, வெளி பிராகாரத்தின் கிழக்கு புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், திருமணத்திற்கு சாட்சியாக இருந்த கிணறு மற்றும் வன்னி மரம் உள்ளது. வடபுறம் தலவிருட்சம் "கல்வாழை' மரங்கள் உள்ளது. தெற்கு பார்த்தபடி மருகலுடையார், மேற்கு பார்த்தபடி சௌந்திரநாயகி இரண்டும் சேர்ந்தாற்போல் தனிச் சன்னதி உள்ளது. ஈசான்ய திக்கில் சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னதிக்குமிடையே மேற்கு நோக்கி சனிபகவான் தனித்துவத்துடன் அருள்கிறார். (தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், அனுதினமும் நான்கு காலபூஜைகள் நடக்கின்றது.
பூஜை சாமான்கள், பூமாலை மற்றவை வெளியில் இருந்து வாங்கி வரவேண்டும். ஆலயத்தின் அருகே கடைகள் கிடையாது.
நடைதிறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையும்; மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரை. விழாக்காலங்களில் மாறுதலுக்குட்பட்டது.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், நாகை வட்டம் திருமருகல் (அஞ்சல்)- 609 702, நாகப்பட்டினம் மாவட்டம். செயல் அலுவலர்: வெ. அசோக் ராஜா , செல்: 90801 81162. கோவில் கணக்கர்: சீனிவாசர், செல்: 94424 46823.
பூஜை விவரங்களுக்கு: சுந்தர கணபதி சிவாச்சாரியார் செல்: 97861 92196.
அமைவிடம்: மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சன்னாநல்லூருக்கு கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நன்னிலம்- சன்னாநல்லூர் வழியாகவும், நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் திட்டச்சேரி வழியாகவும் திருமருகல் வரலாம். அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/manickavanar-2025-12-03-17-21-24.jpg)