"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.'
-திருவள்ளுவர்
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் என்பதாம்.
Advertisment
துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய பேர் வந்து உபதேசம் கேட்பது வழக்கம். அனைவருக்கும் அறிவுரை கூறி, ஆறுதல் சொல்வார். ஒருநாள் துறவியிடம் அறிவுரை கேட்பதற்காக வந்தான் ஒரு கஞ்சன். "சுவாமி, நான் முக்தி அடைவதற்கான வழியை சொல்லுங்களேன்...' என்றான். 
Advertisment
"இதோ பாருப்பா, நீ முக்தி அடைய வேண்டுமானால் மகான்களும் சாஸ்திரங்களும் காட்டிய தார்மீக நெறிகளைப் பின்பற்றனும். ஏழை,  எளியவர்கள் மற்றும் யாரும் இல்லாதவருக்கு உதவி செய்யனும்' என்றார் துறவி. 
இந்த துறவி சொல்றபடி நடந்தால்தான், நமக்கு முக்தி கிடைக்கும்போல இருக்கு. அதுக்கு நிறைய செலவு ஆகுமே. செலவு பண்ணினா எங்கிட்ட இருக்கிற செல்வம் எல்லாம் கரைந்து போய்விடுமே என்ன செய்வது? 
Advertisment
"சரி... இவர் சொன்ன உபதேசத்தை எடுத்துக்க முடியலேன்னாலும் குறைந்தபட்சம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பின்பற்றுவோம். அந்த அளவுக்கு முக்தி கிடைத்தால் போதும்...' என்று முடிவு செய்தான். 
தினமும் ஒரு பிடி அரிசி எடுத்து, அதை யாருக்காவது தானமாகக் கொடுத்துவிடுவான். இப்படியே செய்துகொண்டிருந்தவன் கொஞ்ச நாள் கழித்து, மறுபடியும் அந்த துறவியைப் போய்ப் பார்த்தான். 
"என்னப்பா, நான் சொன்ன மாதிரி தானம் பண்ணிட்டு வர்றியா? என்று கேட்டார் துறவி. "ஆமாம் சுவாமி.... தினமும் தவறாமல் ஒரு கைப்பிடி அரிசியை தானம் பண்ணிக்கிட்டு வர்றேன்' என்று கூறினான். இதைக்கேட்டு துறவி அவரைப் பாராட்டுவார் என எதிர்பார்த்தான். ஆனால் எதுவும் பேசாமல், அவர் அமர்ந்திருந்த மரத்தின் அடிப்பாகத்தை, விரல் நகத்தால் கீற ஆரம்பித்தார் துறவி.
இதைப் பார்த்து, "என்ன சுவாமி, என்னோட தானத்தைப் பத்தி சொன்னேன். நீங்க அதுபற்றி எதுவுமே சொல்லாமல், மரத்தை கீறிட்டிருக்கீங்களே...' என்றான். "ஒன்றுமில்லப்பா... நான் நகத்தால இந்த மரத்தை வெட்டிக்கிட்டு இருக்கறேன். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு...' என்றார் துறவி.
"என்னங்க இது கை நகத்தால் அவ்வளவு பெரிய மரத்தை வெட்டமுடியுமா? கோடாரியால் செய்யவேண்டிய காரியத்தை, உங்கள் நகத்தால் எப்படி செய்ய முடியும்' என்றான். "நீ ஒரு பிடி அரிசியைக் கொடுத்துட்டு மோட்சத்துக்குப் போகணும்னு நினைக்கும்போது, என் விரல் நகத்தால் இவ்வளவு பெரிய மரத்தை வெட்டணும்னு நான் நினைக்கக் கூடாதா?'' என்றார் துறவி.
உடனே அந்த ஆசாமி தான் செய்த தவறை உணர்ந்து தெளிவு பெற்றான். முக்தி அடைவது என்பது சாதாரண விஷயமா என்பதை புரிந்துகொண்டான்.
காசியில் விஸ்வநாதர் கோவில் இருக்கும் பகுதியில் ஒரு குறுகலான சந்து. அங்கே மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும். கங்கையில் நீராடி, தங்கள் பாவங்களை கரைத்துவிட்டு மக்கள் ஊருக்குத் திரும்பும் வழி அது.
மழை பெய்து வீதியெங்கும் ஈரமாக இருக்க அதில் தடுமாறி வழுக்கி விழந்துவிட்டார் முதியவர் ஒருவர். வழியில் அவர் துடிக்க, தன்மடியில் அவரை போட்டு புலம்ப ஆரம்பித்தார் அவரது மனைவி.
"காசிக்குப் புண்ணியம் தேடிவந்த இடத்தில், இவருக்கு அடிபட்டு உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. யாராவது காப்பாற்றுங்களேன்...' என அனைவரிடமும் கெஞ்சினார். சாதாரண உடையில் பரம ஏழைகள் போல இருந்த அவர்களை யாரும் திரும்பிப் பார்க்க வில்லை.
பெரியவரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியபடி இருக்க, அந்த மூதாட்டியின் புலம்பல் இன்னும் அதிகமானது. "என் கணவருக்கு உயிர் பிரியும் நிலை வந்துவிட்டது. காசியில் உயிர் விட்டால் புண்ணியம் என்பர். அதற்கும் அவர் வாயில் கொஞ்சம் கங்கை நீரை விடவேண்டும். யாராவது புனித நீர் கொடுங்களேன். என்னால் எழுந்து போகமுடியவில்லையே...' என கெஞ்ச ஆரம்பித்தார். 
வந்த பலர் கையிலும் கங்கை நீர் இருந்தது. அந்தப் புனித நீரை ஊருக்கு எடுத்துப் போகவேண்டும் என நினைத்ததால், முதியவரின் வாயில்விட, அவர்களுக்கு மனம் வரவில்லை. நேரம் கடந்து, இருட்ட ஆரம்பித்தது. கூட்டமும் குறைந்தது. அப்போது அந்த வழியாக வந்தான் ஒரு திருடன். அவன் கையில் ஒரு சிறு சொம்பில் கங்கை நீர் இருந்தது. புலம்பிக்கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்ததும் அவனுடைய மனம் இரங்கியது. முதியவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து, கங்கை நீரை அவர் வாயில் ஊற்றப் போனான். 
அவனைத் தடுத்து, "ஐயா! இதை ஊற்றுவதற்கு ஒரு மரபு உள்ளது.  நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்திருந்தால், அதை மனதில் நினைத்து, இவர் வாயில் கங்கை நீரை விடுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்' என்றார் மூதாட்டி.
திகைத்தான் திருடன். இத்தகைய சூழலில் பொய் சொல்லவும் தயங்கினான் "அம்மா, நான் ஒரு திருடன், எந்த நல்ல காரியத்தையும் செய்ததில்லை. என்னுடைய தீய செயல்கள் நிறைந்த வாழ்க்கையில் முதல் முறையாக இப்போதுதான் இந்த நல்ல காரியத்தைச் செய்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்றபடி முதியவர் வாயில் நீரை ஊற்றினான்.
முதியவரும் மூதாட்டியும் மறைந்து, அங்கே உமையவள் சகிதம் காசி விஸ்வநாதர் தரிசனம் தந்தார். நெக்குருகிப் போனான் திருடன்.
"இந்த பாவிக்கு இப்படி ஒரு புண்ணிய தரிசனமா?' என பணிந்து வணங்கினான் திருடன். "உன் மனதில் கருணை சுரந்து பெருகிற்று. உன் கையில் கங்கை நீர் இருந்தது. உன் பேச்சிலும் சத்தியம் இருந்தது. உன்னைவிட என் தரிசனம் பெற வேறு யாருக்குத் தகுதி இருக்க முடியும்?' என சொல்லி ஆசிர்வதித்தார் இறைவன்.
ஈகைக் குணம், மனதில் கருணை, பேச்சில் சத்தியத்துடன் அறவழியில் வாழ்ந்தால், அல்லல்கள் நீங்கி, ஆனந்த வாழ்வு வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற உன்னதமான திருத்தலம்தான் திருமங்கலம் ஸ்ரீ சாமவேதீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ சாமவேதீஸ்வரர்
இறைவி: அருள்மிகு லோகநாயகிபுராணப் பெயர்: பரசுராமேஸ்வரம், சாமவேதீஸ்வரம்.
ஊர்: திருமங்கலம், லால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தலவிருட்சம்: பலாமரம்.
தீர்த்தம்: பரசுராம தீர்த்தம், காவிரி தீர்த்தம், கயாமற்குழி தீர்த்தம்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற பெருமையுடன், தமிழ்ச் சைவ நாயன்மார்கள் புகழ்ந்த தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றானதும், ஆனாய நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருமங்கலம் சாம வேதீஸ்வரர் ஆலயம்.
"அங்கண் அகன்று அம்மருங்கில் 
அங்கணர்தம்
"பதி பிறவும்' அணைந்து போற்றி,
செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும்
வயல் மதுவால் சேறு மாறா,
பொங்கு ஒலி நீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய், புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சி 
ராமம் பணிய நண்ணும் போதில்''
-சிவக்கவிமணியார் பதிகம்
பொருள்: அவ்விடத்தினின்றும் நீங்கி அருகிலுள்ள சிவபெருமானின் பிற திருப்பதிகளையும் வணங்கி, செந்தாமரை மலர்களின மொட்டு அவிழ், சேல்மீன் பாய தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களுடைய, பொங்கும் ஒலிமிக்க நீரையுடைய  மழநாட்டில், காவிரி வடகரை வழியாகச் சென்ற சீகாழித் தலைவர், நம் இறைவரின் திருப்பாச்சிலாராபத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில்; பாச்சில்லி ஊரின் பெயர், ஆச்சிராமம். கோவிலின் பெயர், "பதிபிறவும்' என்பன திருத்தலத்துறை, பூவாளூர், திருமங்கலம் முதலியனவற்றைக் குறிக்கும் என சிவக் கவிமணியார் பதிகங்கள் சொல்கின்றன.

sivan1

திருவாகிய லட்சுமி தேவி வழிபட்டதால் திருமங்கலம் எனப் பெயர்பெற்றது. இத்தல இறைவனின் அருளால் ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1,000 சாகைகளாக (கிளைகளாக) பிரித்தார். எனவே இவ்விறைவனுக்கு சாம வேதீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
ஜைமினி முனிவர், உதங்க முனிவர், லட்சுமி, குபேரன் பரசுராமர், ரைக்வரிஷி, ஆனாயநாயனர், சண்டிகேஸ்வரர் வழிபட்டு பலன் அடைந்த தலம்தான் திருமங்கலம் ஸ்ரீ சாமவேதீஸ்வரர் ஆலயம்.
தலவரலாறு
63 நாயன்மார்களில் ஒருவரான ஆனாயநாயனார் மழநாட்டில் உள்ள திருமங்கலம் எனும் சிற்றூரில் இடையராக அவதரித்தார். மழநாடு என்பது திருச்சி அருகேயுள்ள திருவானைக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள லால்குடி பகுதியைச் சார்ந்தது. இவர் இடையர் குலத்திற்கேற்ப ஆவினங்களை மேய்த்து வரும் தொழிலைச் செய்துவந்தார். இவர் ஆவினங்களை முல்லை நிலத்திற்கு ஓட்டிச் செல்லும்போது கையில் கோலும் புல்லாங்குழலும் வைத்திருப் பார். இடையராக இருந்தபோதிலும் இவருக்கு சிவனாரிடம் அலாதிப் பிரியம். எப்போதும் வெண்ணீறு அணிந்த சிவனாரை எண்ணிக்கொண்டே இருப்பார்.
கார் காலத்தில் ஓர் நாள் ஆனாயநாயனார் நெற்றியில் வெண்ணீறு அணிந்து கோலோடும் புல்லாங்குழலோடும் ஆவினங்களை மேய்க்க காட்டுக்குப் புறப்பட்டார்.
கால்களிலே பாதுகையை அணிந்து கொண்டார். கையிலே கோலும் வேங்குழலும் எடுத்துக்கொண்டார். ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது கார்காலம் என்பதால் முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச் சோலை போல் காட்சியளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புதுமலர்களை தாங்கியவண்ணம் எழிலுறக் காட்சியளித்தன. ஆனாயர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில் இன்பத்தை அளிக் கும் வண்ண மலர்களின் நறுமணத்தினில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். தம்மை மறந்து வேங்குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக்கொண்டே இருந்தார். அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை மரத்தின்மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்துக்கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. எந்நேரமும் சிவனைப் பற்றியும், திருவெண்ணீற்றைப் பற்றியும் எண்ணிக்கொண்டிருக்கும் ஆனாயர் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந் தருளியிருப்பது போல் தோன்றியது. 
அத்திருத்தோற்றப் பொலிவினில் சிவனைப் பார்த்துவிட்டாற் போன்ற பெருமகிழ்ச்சி பூண்டார் அடியார். அவரது ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. ஆனாயர் அம்மரத்தை வலம்வந்து வணங்கினார். தாம் வைத்திருந்த வேங்குழலை எடுத்தார். ஆனாயர் பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை அமைத்தார். அவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார். வேங்குழலின் இசை இன்பவெள்ளம்போல் பாய்ந்தோடியது. கல்லும் கரையும் தன்மைபெற்ற அவ்வின்ப இசை அமுத கானம்போல் அமைந்தது. புற்களை அசைபோட்ட படியாக நின்றுகொண்டிருந்த ஆநிரைகள் ஆனாயர் இசைக்கு மயங்கி அவரது அருகே வந்துநின்றன. கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து இன்ப இசையில் ஆனாயரைச் சுற்றி நின்றன.
முல்லை வனத்து விலங்குகளான மான், புலி, கரடி, யானை, பாம்பு, மயில் உள்ளிட்டவைகள் தம் நிலை மறந்தன. முல்லை நிலத்து விலங்குகள் தம்முடைய இயல்பு மாறி பகைமையை மறந்து எல்லாம் ஒன்றாக ஆனாயரைச் சுற்றி நின்றன.
சிவனாகும் ஆனாயனாரின் இசையில் ஒன்றி அவ்விடத்தில் உமையம் மையோடு இடபம் வாகனத்தில் காட்சியளித்தார். சிவபெருமான், "ஆனாயா, நீ இந்த நிலையிலேயே எம்மை வந்து அணைவாயாக'' என்று அருளினார். இறைவனின் விருப்பப்படி ஆனாயரும் திருவைந்தெழுத்தை புல்லாங் குழலில் இசைக்க பரமுக்தி அடையப் பெற்று சிவபுரம் சார்ந்தார்.
ஆனாய நாயனார் பிறந்து வளர்ந்து முக்தியடைந்த தலம் திருமங்கலம். திருமங்கலத்தில் இன்றும் ஆனாய நாயனார் குருபூஜை, கார்த்திகை மாதம் அஸ்த நட்சத்திரத்தன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ சாமவேதீஸ்வரர். இறைவியின் திருநாமம் அருள்மிகு லோகநாயகி. ஊர்: சாமவேதீஸ்வரம், திருவிருந்த மங்கலம் பரசுராமேஸ்வரம் என்ற புராணப் பெயர்களோடு தற்பொழுது "திருமங்கலம்' என்றே நடைமுறையில் உள்ளது.
ப் சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் பெருமான் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலம் பித்ருஹத்தி, மாத்ருஹத்தி தோஷநிவர்த்தி தலமாகவும், சாமவேதியர்களுக்கான தலமாகவும் சிறப்புப்பெற்று விளங்குகிறது.
ப் பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டார். இறைவன் அருளால் பரசுராமருக்கு அத்தோஷம் நீங்கப்பெற்றது. இதனால் கோவிலுள்ள தீர்த்தம் பரசுராமர் தீர்த்தம் என்றும், இவ்வூர் பரசுராமேஸ்வரம் (திருமங்கலம்) என்றும் அழைக்கப்படுகிறது.
ப் சண்டிகேஸ்வரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ரு ஹத்தி தோஷம் நீங்க பல்வேறு திருக்கோவில்களுக்கு சென்று வழிபட்டார். எங்கு சென்றும் தோஷம் நீங்காததால் இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி அவரது கனவில் கூற சண்டிகேஸ்வரரும் இறைவனின் சன்னதியில் இடதுபுறம் இருந்து வணங்கி, பித்ருஹத்தி தோஷம் நிவர்த்திபெற்று இறைவனடி சேர்ந்தார். அர்த்த மண்டப நுழைவாயிலில் சண்டிகேஸ்வரரின் திருமேனியை காணலாம். வேறு எந்த தலத்திலும் இல்லாத தனிச்சிறப் பாகும்.
ப் ரைக்வரிஷி என்ற முனிவர் பித்ருசாபம் நீங்க இத்தல இறைவனை வணங்கவந்தார். இங்கு நதி இல்லாததால் காசி, கயாவுக்கு செல்ல சங்கல்பித்தார். உடனே இறைவன் அசரீரியாக வந்து உனக்காக இங்கேயே நதியை உருவாக்குகிறேன் என்று அருளினாராம். இந்த ரிஷிக்காக இறைவன் உண்டு செய்த நதி கயாபற்குனி (தற்போது பங்குனி நதியாக அழைக்கப்படுகிறது) என்ற நதியாகும். இந்நதி இவ்வூரை வளமாக்குகிறது. காசிக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அது இங்கேயே கிட்டும் என இறைவன் ரிஷிக்கு அருளினா ராம். இந்நதியில் நீராடி இறைவனை வழிபட்டால் பித்ரு கடன்கள், பித்ரு சாபங்கள் நீங்கி நன்மை பெறலாம்.
ப் திருமங்கலம் அருளும் தட்சிணாமூர்த்தி வழக்கம்போல் சின்முத்திரை காட்டாமல் அபயமுத்திரை காட்டுகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பு. இதனால் தன்னை வணங்குபவர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத் தையும், கலைகளில் சிறந்து விளங்க அருளை வாரி வழங்குவது தனிச்சிறப்பு. 
ப் முருகன் வள்ளியை மணந்த பின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின்மேல் அமர்ந்த கோலத்தில் காட்சிதருவது அற்புதமான அமைப்பு. முருகப் பெருமானுக்கு ஆறுமுகமும் 12 கைகளுமில்லை. அதற்கு மாறாக ஆறுமுகமும் 4 கைகளுமாக பக்தர்களுக்கு அருட்காட்சி தருகிறார்.
ப் சனிபகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனிபகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். 
ப் ஸ்ரீ பைரவரும் காலபைரவரும் சேர்ந்திருப்பது விசேஷம். அர்த்த ஜாம பூஜையின்போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி, சூன்யம், நோய்களும் குணமாகும் என்றும்  மக நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம்வந்து தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்றும் தலைமை அர்ச்சகர் ஞானஸ்கந்த குருக்கள் கூறுகிறார்.
ப் இத்தலத்தில் அமைந்துள்ள விஷ்ணு, துர்க்கை மகிச வாகனமின்றி சிம்ம வாகனத்தில் இருப்பது சிறப்பம்சம் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் 11 வெள்ளிக்கிழமை வழிபட்டு முடிவில் மஞ்சள் காப்பணிந்து நேர்த்தி செய்தால் திருமணம் நன்முறையில் கைகூடும்.
ப் சோழமன்னன் பரகேசரிவர்மன் என்னும் திரிபுவனச் சக்கரவர்த்தியின் மூன்றாவது ஆட்சி ஆண்டில் இத்திருக்கோவில் கட்டப்பட்டது. 2-ஆம் ராஜராஜ சோழப் பேரரசுக்குப் பின்பாக திருமறவுடைய நாயனார் திருக்கோவில் என்ற பெயருடன் விளங்கிய இக்கோவில் 17-ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு தற்போது வழங்கப்பட்டு வரும் சாமவேதீசுவரம் (திருமங்கலம்) என்ற திருப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
ப் நான்கு வகை வேதங்களில் 3-ஆவது வகை வேதமாக இருப்பது சாமவேதம். இந்த வேதத்தின் நடையே சங்கீத இசை வடிவிலானது. எனவேதான் திருமங்கலத்தில் அவதரித்த ஆனாய நாயனாரின் இசைக்கு மயங்கி அவருக்கு இடப வாகனத்தில் காட்சிதந்தாரே அதைச் சொல்வதா... இசை விரும்பிக் கூத்தன் என்று பெயர் புராணத்தில் இத்தல ஈசனை குறிப்பிட்டாரே அதைச் சொல்வதா... திருமணத்தடை, கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இத்தல முருகனை வழிபட்டு பலன் பெறுகிறார்களே அதைச் சொல்வதா... 7 1/2 சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி என எத்தகைய சனி தோஷம் இருப்பினும் இத்தலத்திலுள்ள வடக்கு நோக்கிய சனியை வழிபட்டால் தாக்கத்தின் வலிமையை குறைத்து ஊக்கத்தைத் தருகிறாரே அதைச் சொல்வதா... இறைவனுக்கு அபிஷேகம் செய்த தேனை அனுதினமும் சாப்பிட்டுவர வாய்திக்கிப் பேசுபவர்கள் பூரண நலம் பெற்று நல்ல ஞானம், கல்வி ஆற்றல் உயர்ந்து வருகிறதே அதைச் சொல்வதா... மக நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக உள்ளதே அதைச் சொல்வதா... முன்னோர்கள் விட்ட சாபங்கள், தோஷங்கள் ஏழேழு ஜென்மங்களாக இருந்த தோஷங்கள் நீங்க 11 நெய் தீபம், 11 முறை சிவனை வலம்வந்தால் தோஷ நிவர்த்தி பெறுவதுடன், மூன்று கோடி சிவலிங்கத்தை தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் பூலோக கைலாயம், பரசராமேஸ்வர ஷேத்திரம், காசிக்கு நிகரான ஸ்தலம் என்றெல்லாம் போற்றப்படுகின்ற திருமங்கலம் ஸ்ரீ சாமவேதீஸ்வரரை வழிபட்டால் நற்பலன் கிட்டும் என்று பயனடைந்தவர்கள் சொல்கிறார்களே அதைச் சொல்வதா... அத்துடன் சுகவாழ்வு, சுபமங்களங்களை தந்தருள்கின்ற திருமங்கலம் 
அருள்மிகு லோகாம்பாள் சமேத ஸ்ரீ சாமவேதீஸ்வரரை நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி காலத்தில் (கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு 6-3-2026 மாசி 22-ஆம் நாள்) வழிபடுங்கள்வலம் வந்து வளம் பெறுங்கள் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான பாலசுப்பிரமணிய குருக்கள்.
திருக்கோவில் அமைப்பு
திருச்சி மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம்மிக்க லால்குடி பகுதியில் காவிரி வடகரையில் பசுமையான சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள சிற்றூர்தான் திருமங்கலம். கிழக்கு நோக்கி அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. அதனருகே பரசுராம தீர்த்தக்குளம் தலதீர்த்தமாக உள்ளது. ராஜகோபுரத்தை கடந்தவுடன் விசாலமான பிராகாரம் உள்ளது. கொடிமர விநாயகர்,  கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளது. 
அடுத்துள்ள சிறப்பு மண்டபத்தின் வலதுபுறம் அம்பாள் லோகநாயகி நின்ற கோலத்தில் காட்சிதந்து அருள்பாலிக்கிறாள். இறைவி சன்னதி நுழைவாயிலில் துவாரபாலகிகளின் சுதைவடிவ திருமேனிகள் அழகாய் அமைந்துள்ளன.
அடுத்துள்ள அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலில் துவார பாலகருக்குப் பதிலாக தென்புறம் சுவரிலுள்ள மாடத்தில் தனது துணைவியாருடன் அதிகார நந்தியும், வடபுற சுவரிலுள்ள மாடத்தில் ஆக்கு கணபதியும் வீற்றிருக்கிறார்கள். கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்கத்திருமேனியில் அருள்
பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் தென்திசையில் பிட்சாடனார், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோரும் கீழ்த்திசையில் சங்கரநாராயணன் மற்றும் வடதிசையில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். 
பிராகாரத்தின் தென்திசையில் பரசுராமர் பூஜித்த லிங்கமும், கிழக்கு பிராகாரத்தில் மயில் வாகனத்தில் வள்ளி அமர்ந்தும், முருகன் தெய்வானை நின்ற கோலத்திலும் அருள்கிறார்கள். மகாலட்சுமி, ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆனாய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. கிழக்கு பிராகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன் சனி மற்றும் நவகிரக நாயகர்கள் உள்ளனர். சுற்றுப் பிராகாரத்தில் தல விருட்சம் பலாமரம் மற்றும் தீர்த்தக்கிணறு உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அனுதினமும் நான்கு காலபூஜைகள் நன்கு நடைபெறுகிறது. கடைசியாக 2017-ஆம் ஆண்டு குடமுழுக்கு கண்டு பொலிவுடன் உள்ள இவ்வாலயத்தில் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் நடைபெற்றா லும் குறிப்பாக ஆனாய நாயனார் குருபூஜை விமரிசையாக நடக்கும் மற்றும் கிரகப்பெயர்ச்சி காலங்களில் (சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி) சிறப்புப் பூஜைகள் உண்டு.
அமைவிடம்: திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருமங்கலம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந் தும் வருபவர்கள். நெம்பர் 1 டோல்கேட், வாளவாடி, மாந்துறை வழியாகவும், லால்குடி சந்தைப் பேட்டை வழியாக வும் சென்று லால்குடியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமங்க லம் அடையலாம். நகரப் பேருந்து வசதிகள் உண்டு. லால்குடியிலிருந்து ஆட்டோ மூலமும் வரலாம்.
நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரை; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை. பூஜை பொருட்கள் வெளியிலிருந்து வாங்கி வரவும். கோவில் அருகில் கடைகள் கிடையாது.
ஆலயத் தொடர்புக்கு
செயல் அலுவலர், ஸ்ரீ சாமவேதீஸ்வரர் திருக்கோவில், ஆங்கரை கிராமம், லால்குடி தாலூகா, திருமங்கலம் (அஞ்சல்), திருச்சி மாவட்டம்: 621 703.
பூஜை விவரங்களுக்கு: ஞான ஸ்கந்த சிவாச்சாரியார் செல்: 97100 64571,  ஜி. பால சுப்ரமணிய சிவாச்சாரியார் 
செல்: 98654 22027.