எண்ணத் தின் பிறப்பு, இருப்பு, இறப்பு எல்லாமே மனம்தான். அதைப் பொறுத்தே மனிதனின் உயர்வு அமையும். எண்ணமே வாழ்வு என்பது சாதாரண மானது அல்ல.
பிறப்புமுதல் இறப்புவரை மனிதனின் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது.
நல்லதே எண்ணல் வேண்டும், எண்ணிய முடிதல் வேண்டும்' என்று உரைத்த மகாகவி பாரதியாரின் வைர வரிகளைப்போல் கடமை, பொறுமை, உழைப்பு சேரும்போது வாழ்வில் உயர்வான வெற்றிகிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு அற்புதமான திருத்தலம் அரித்துவாரமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாதாளேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ பாதாள ஈஸ்வரர், பாதாள வரதர்.
இறைவி: அருள்மிகு அலங்காரவல்லி அலங்கார நாயகி.
புராணப் பெயர்: அரதைப் பெரும் பாழி.
ஊர்: அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டம்.
தலவிருட்சம்: வன்னி மரம்.
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்தது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் 162-ஆவது தேவாரத்தலமாகவும், காவிரி தென்கரை ஸ்தலங்களில் 99-ஆவது தலமாகவும் போற்றப்படுகின்றது. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் அரித்துவார மங்கலம் ஸ்ரீபாதாளேஸ்வரர் திருக்கோவில்.
"மறையர் வாயின் மொழி மானொடு வெண்மழு
கறைகொள் சூலம்முடைக் கையர் கார்ஆதரும்
நறைகொள் கொன்றை நயந்தார் தரும்சென்னிமேல்
பிறையார் கோவில் அரதைப் பெரும்பாழியே'
-திருஞானசம்பந்தர்.
நாவுக்கரசர் காலத்தில் திகழ்ந்த பெருங்கோவில், கரக்கோவில் ஞாழற்கோவில், கொகுடிக்கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் ஆகிய சிவபெருமான் உறையும் கோவில்களைத் தாழ்ந்து வணங்கினால் தீவினைகள் தீருமென்பது அப்பரடிகளின் கூற்றாகும். பெருங்கோவில்கள் எழுபத்தெட்டாகும். அப்பெருங்கோவில் 78-ல் 70 மாடக் கோவில்களாகும். இதனை திருமங்கை ஆழ்வார் "எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குளத்து வளச்சோழன்'' என்று பெரிய திருமொழியில் குறிப்பிடுகின்றார். 78 பெருங்கோவில்களில் 70 மாடக் கோவில்கள் நீங்கலாக எட்டுக் கோவில்கள் பெருங்கோவில்கள் வகைப்பாட்டிலே அடங்கும். அந்த எட்டு பெருங்கோவில்களில் ஒன்றுதான் அரதைப் பெரும்பாழியாகும். இத்தலம் பஞ்ச ஆரண்யத்தலங்களில் ஒன்றாகவும் போற்றப்படு கின்றது.
தல வரலாறு
எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறை ஒன்றே ஆக்கல், காத்தல், அழித்தல், நீக்கல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஐவகை வடிவங்களாக நின்று செயல்படுத்துவதும் அதன் அருஞ்செயலே. ஆயினும் ஒருமுறை படைத்தலுக்கு அதிபதியான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் "தாமே உயர்ந்தவர்' என்ற எண்ணம் மேலிட்டது. இருவரில் உயர்ந்தவர் யார் என்று சர்ச்சை எழுந்தது.
இவர்கள்மூலம் உலகத்தவருக்கு உண்மையை விளக்கிட திருவும் கொண்டார் சிவப்பரம்பொருள். தம்முடைய திருமுடியையும் திருவடியையும் காணவல்லவர் எவரோ அவரே உயர்ந்தவர் என்று உரைத்தார். அதுமட்டுமின்றி பெரும் ஜோதி ஸ்தம்பமாகக் காட்சி தந்தார்.
பிரம்மன் அன்னப்பறவையாக வடிவெடுத்து பெருமானின் திருமுடியைக் காணப் புறப்பட்டார். பெருமாளோ வராக உருவில் பூமியைத் துளைத்து திருவடியைக் காணச் சென்றார்.
இருவருக்கும் தோல்வியே மிஞ்சியது. ஆனால் பிரம்மனோ தாழம்பூவைச் சாட்சியாகக்கொண்டு திருமுடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதற்காக சாபமும் பெற்றார் என்பது அறிந்ததே. இங்ஙனம் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக அக்னி ஸ்தம்பமாகக் காட்சியளித்ததை நமக்கு வெளிப்படுத்தும் லிங்கோத்பவர் திருவடியை ஆலயங்களில் தரிசித்திருப்போம். சிவாலயக் கருவறை கோஷ்டத்தின் பின்பக்கத்தில் லிங்கோத்பவர் அருள்பாலிப்பார். சோழர்கள் பெரிதும் போற்றிய சிவவடிவம் இது.
இறையனார் இங்ஙனம் ஜோதியாய் தரிசனம் தந்தது திருவண்ணாமலையில் என்பதை அறிவோம். அவரின் திருவடியைக் காணும்பொருட்டு வராஹப் பெருமாள் பூமியைத் துளைத்த இடம் அரித்துவார மங்கலம் என்கிறது தலபுராணம்.
ஹரியாகிய பெருமாள் பூமியில் பிலத்தை- பள்ளத்தை ஏற்படுத்தியதால் இத்தலத்துக்கு ஹரித்துவாரம் எனும் பெயர் வந்தது. அதுவே நாளடைவில் அரித்துவார மங்கலம் ஆனது. தேவாரத் தமிழில் அரதைப் பெரும்பாழி என்று அழைக்கப்படுகிறது. அரதை என்றால் கொம்பு போன்ற கூரான ஆயுதம் அல்லது நிலப்பரப்பு என்று பொருள் கொள்ளலாம். பாழி என்றால் பள்ளம், வராகம் தனது கொம்பினால் குடைந்து உருவான பெரும் பள்ளம் என்பார்கள். இந்த தலத்துக்கு அரதைப் பெரும்பாழி என்பது தமிழ்ப்பெயர். வராகத்தால் அகழப்பட்ட பள்ளத்தினை இன்றைக்கும் இங்கு காணலாம் என்பது சிறப்பு. இதை ஒரு வட்டக் கல்லால் மூடி வைத்துள்ளார்கள். இத்தல இறைவன் வராகத்தின் கொம்பினை முறித்து அணிந்துகொண்டார் என்றும் தலபுராணம் சொல்கிறது.
தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. ஆரண்யம் என்றால் காடு, வனம் என்று பொருள். இந்த ஐந்துமே காவிரித் தென்கரையில் அமைந்திருப்பதுடன் ஒரேநாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோவிலை அர்த்தஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். சைவ சமயக்குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர் தம் தல யாத்திரையின் போது ஐந்து தலங்களையும் ஒரேநாளில் அவ்வாலயத்திற்குரிய பூஜா காலங்களில் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது. அவை வரிசையாக சொல்வ தானால்...
1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) விடியற்காலை வழிபாட்டிற்குரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரிவனம்) காலை வழிபாட்டிற்குரியது.
3. ஹரித்துவாரமங்கலம் (வன்னி வனம்) உச்சிக்கால வழிபாட்டிற்குரியது.
4. ஆலங்குடி (பூளைவனம்) மாலை நேர வழிபாட்டிற்குரியது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் ஒரேநாளில் மேற்சொன்ன ஐந்து கோவில்கள் அதாவது கும்பகோணத்தில் புறப்பட்டு ஐந்தையும் பார்த்து வருவதற்குரிய நேரம் அனுசரித்துச் சென்றால் மொத்தம் ஆறு மணி நேரத்தில் நன்றாகப் பார்த்துவிட்டு வரலாம். காசிக்கு நிகரான இந்த ஐந்து தலங்களில் மூன்றாவதாகக் குறிப்பிடுவது அரித்துவாரமங்கலம் திருக்கோவில்.
சிறப்பம்சங்கள்
ப் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட பெருமை வாய்ந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் ஸ்ரீ பாதாளேஸ்வரர்.
ப் இறைவியின் திருநாமம் அருள்மிகு அலங்காரவல்லி. கல்யாண வரம் முதலான மங்கலங்களை அருளும் மங்கள நாயகியாக சகலமங்கலத் தன்மைகளும் பரிபூரணமாக நிரம்பப்பெற்றவள் என்பதால் தன்னை நாடிவரும் பெண்களுக்கு மங்கலம் அளித்து அவர்களுக்கு தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியத்தை அருள்பவள்தான் இத்தலத்து அம்பிகை.
ப் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் பாதாளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனை தரிசித்தால் வட இந்திய புண்ணியப் பதிகளில் மிகுந்த சிறப்புடைய ஹரித்துவாருக்கு சென்றுவந்தால் என்ன பலன் கிட்டுமோ அத்தகைய பலனை நமது அரித்துவார மங்கலத்தில் வழிபட்டாலே பலன்கிட்டும் என்கிறார் ஆலய செயல் அலுவலரான தினேஷ்.
ப் ஆதிகாலத்தில் வன்னி மரக்காடாகத் திகழ்ந்ததாம் இந்த இடம். இந்த வன்னி வனத்தில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கம் ஆதலால் இத்தலத்து மூலவருக்கு "சமீவனேஸ்வரர்' என்பது புராணக்காலத்து திருநாமம். இன்றளவும் தொன்மையான முதிர்ந்த வன்னி மரங்கள் கோவிலைச் சூழ்ந்து திகழ்வதைக் காண்பதே பரவசமான அனுபவம் என்கிறார் ஆலய மெய்க்காவலர் ராஜசேகரன்.
ப் வல்லி என்றால் "கொடி' என்பது பொருள். அலங்காரவல்லி என்ற பெயருக்கு ஏற்றவாறு சர்வாலங்கார பூஷிதையாக எப்போதும் இத்தலத்து பரமனிடத்தில் பக்தி செலுத்திக்கொண்டிருக்கும் பாங்கினனாய் இவ்வன்னை அருள் செய்துகொண்டிருக்கிறாள். பொதுவாக கன்னியர்கள் திருமணப் பிராப்தி வேண்டி துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள். இதுவே சகல திருமண தோஷங்களையும் போக்கிட வல்ல எளிய பரிகாரம் ஆகும். சிவாலயங்களில் தனித்த சன்னிதியில் மூலவர் அம்பிகையும், கோஷ்டத்தில் துர்க்கையையும் நிலைப்படுத்தி வழிபடுவது மரபு.
இத்தலத்தில் துர்க்கையின் அம்சத்தை தன்னிடமிருந்தே வெளிப்படுத்தி அருள்கிறாள் அலங்காரவல்லி. இதனால் தனித்த துர்க்கை இவ்வாலயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பம்சங்களுடன் நிகழும் அன்னை அலங்காரவல்லி மாங்கல்ய பிராப்தி அருள்பவளாகவும், மங்கையரின் மங்கலத்தன்மைக்கு காப்பாகவும் திகழ்வது கூடுதல் விசேஷம் என்கிறார் கோவில் கணக்கரான ஸ்ரீதேவி.
ப் முன்னோர்கள் செய்த பாவம், புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப விதைத்தது முளைக்கும், விரித்தது நடக்கும் என்ற கோட்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்... பாவக்கணக்கை தீர்க்க காசி, கயா, புத்தகயா ஹரித்துவார் போன்ற இடங்களுக்கு சென்று அத்தகைய பாவக்கணக்கை தீர்க்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியப்படாது... அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், மேற்சொன்ன க்ஷேத்திரங்களுக்கு சென்றுவந்த பலனை இதோ சோழ வளநாட்டிலே காவிரித் தென்கரையில் அருளும் ஹரித்துவார மங்கலத்துக்கு வாருங்கள்; மனத்தெளிவுடன் வீடு திரும்பலாம்... எப்படி?
பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் பழையன கழிதலாகி சித்தம் தெளிவாகிறதே. அதைச் சொல்வதா... கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வன்னி வனத்துக்குள் சென்ற அனுபவம் கிடைக்கிறதே. அத்துடன் அபூர்வ அமைப்பும்கூடிய நர்த்தன கணபதியை வணங்கினால் நலமுண்டாகுதே அதைச் சொல்வதா... மும்மூர்த்திகளான அரி, அரன், அயன் ஆகியோரின் திருவருள் ஒருங்கே கிடைக்குமே என்று பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசித்து பலன் கண்டார்களே அதைச் சொல்வதா... சங்கடஹர சதுர்த்தியன்று இத்தலத்திற்குட்பட்ட சப்த கணபதிகளை (துவார விநாயகர், கொடி மர விநாயகர், க்ஷேத்திர விநாயகர், வன்னி மர விநாயகர், தீர்த்த விநாயகர், நர்த்தன விநாயகர், செல்வ விநாயகர்) தொழ சங்கடங்கள் தொலைகிறதே அதைச் சொல்வதா... சிவசந்நிதிக்கு எதிரில் மேடை ஒன்றில் கனகம்பீரமாகக் காட்சிதரும் பிரதோஷ நந்தி, மேடைக்கு முன்புறத்தில் கைகூப்பிய நிலையில் திருமேனி ஒன்று காட்சி தருகின்றதே இவருக்கு அதிகார நந்தி என்று பெயர். இப்படி ஒரே இடத்தில் அரிய அமைப்புடன் காட்சிதரும் நந்தீசரை பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் உயர்பதவி, வேலை வாய்ப்பு, காரிய சித்தி உண்டாகுதே அதைச் சொல்வதா... தலவிருட்சமான வன்னி மர மேடையிலே இருபுறம் நாகர்களுடன் வன்னிமர விநாயகர் அருள்கின்ற நிலையிலுள்ள மரத்திற்கு நீர் ஊற்றி வலம்வந்து வணங்கினால் வளம் பெறுவார்களே அதைச் சொல்வதா... சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக அக்னி ஸ்தம்பமாகக் காட்சியளித்ததை நமக்கு வெளிப்படுத்தும் லிங்கோத்பவர் திருவடியை பல சிவாலயங்களில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் அரித்துவாரமங்கலமான இத்தலத்தில் கருவறைக் கோஷ்டத்தின் பின்புறம் அருள்பாலிக்கும் லிங்கோத்பவரை பார்த்தால் பிரம்மன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவபெருமானின் திருமுடியைக் காணப்புறப்பட்டதும்; பெருமாள் வராக உருவில் பூமியைத்துளைத்து திருவடியை காணச் சென்றதும் தலவரலாற்றை சித்தரிக்கும் லிங்கோத்பவர் திருமேனியின் அதி அற்புதமான காட்சிதந்து அருள்பவர்க்கு தீபமேற்றி வணங்கினால் மும்மூர்த்தியின் அருள் கிட்டுகிறதே அதைச் சொல்வதா... வாழ்க்கை நல்லவிதத்தில் அமையவேண்டும் என்றால் நவகிரகங்களின் ஆசி அவசியம்.
இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. கிரகங்களின் ஆசியை வழங்கி வாழ்வை சுபிட்சமாக்குபவராக பாதாள வரதராம் மூலவர் பாதாள ஈஸ்வரர் விளங்குகிறாரே அதைச் சொல்வதா மாங்கல்ய பலத்தைக் கொடுத்து திருமணத்தடை அகற்றி வாழ்க்கைத் துணைவருக்கு நீடித்த ஆயுளைத் தருகின்ற துர்க்கையின் அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ள கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் நின்ற நிலையில் அம்மன் அலங்காரவல்லி
அருள்கிறாளே அதைச் சொல்வதா...
இத்தலத்திற்கு வந்து பலன் கண்டவர்கள் கூறியதைச் சொல்வதா... இத்தல மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்... வாழ்வில் ஒருமுறையாவது வாருங்கள்.
அசுபப்பலன் நீங்கி சுபமங்கலத்தை தந்தருளும் அருள்மிகு அலங்காரவல்லி சமேத ஸ்ரீ பாதாள ஈஸ்வரரை சோமவாரத்திலே உச்சிகால பூஜையில் வழிபட்டு வளமாக வாழுங்கள் என்று ஆலயப்பிரதான அர்ச்சகர் ஸ்ரீராம்குமார் பெருமிதத்துடன் கூறுகிறார்.
திருக்கோவில் அமைப்பு
நீர்வளம், நிலவளமிக்க சோழநாட்டில் காவிரித் தென்கரையில் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் வயல் வெளிகளுக்கு நடுவில் அரித்துவாரமங்கலம் சிற்றூரின் மையத்தில் பரந்துள்ள பிரம்ம தீர்த்தக்குளத்துடன் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தால் நந்தி பலிபீடம் கொடி மரத்தை கடந்து உள் நுழைவாயிலைக் கடந்தால் கிழக்கு நோக்கியவண்ணம் சுயம்புமூர்த்தியாய் அருட்காட்சி தருகிறார் மூலவர்.
அவருக்கு வலப்புறம் தனிச் சந்நிதிகொண்டு அருள்மிகு அலங்காரவல்லி அம்பாள் கிழக்கு நோக்கி மங்கலமாய் அருள்கிறார். சுற்றுப் பிராகாரத்தில் தலவிருட்சமான வன்னிமரங்கள் உள்ளன.
கருவறைக் கோஷ்டம் மற்றும் சுற்றுப் பிராகார கோஷ்ட தெய்வங்கள் சிவாலய விதிப்படி ஒருங்கே அமைந்துள்ளது. மடப்பள்ளி, திருக்கோவில் அலுவலகம் ஆலயத்தின் உட்புறம் உள்ளது. உள்ளே நடராஜர் சபை உள்ளது. விநாயகர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி மற்றும் தீர்த்தக்கிணறு உள்ளது. கற்றளி மண்டபம் மற்றும் சோழர்கால சிற்பங்கள் பழங்காலத் தொன்மை வாய்ந்ததை ஆலயத்தைப் பார்க்கும்போது உணர்கிறோம்.
நடைதிறப்பு: காலை 6.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரையும்; மாலை 4.30 மணிமுதல் 8.30 மணிவரை ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர் மற்றும் ஸ்ரீ பாதாளேஸ்வரர் திருக்கோவில், அரித்துவார மங்கலம், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 612 802. செயல் அலுவலர்: தினேஷ் செல்: 93611 80926. கோவில் கணக்கர் ஸ்ரீதேவி, செல்: 84892 34981.
பூஜை விவரங்களுக்கு: ஆலய அர்ச்சகர், ஸ்ரீராம்குமார், செல்: 96006 13721.
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அரித்துவார மங்கலம். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா