"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.'
-திருவள்ளுவர்
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் அறம் செய்வானாயின் அச்செயல்; தொடர்ந்து நற்செயலில் ஈடுபடுபவர்க்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
Advertisment
மலையடிவாரத்தில் சிறிய குடில் அமைத்து வசித்துவந்தார் முனிவர் ஒருவர். தவம், தியானம்செய்து மீதி நேரம் கூடை முடையும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
Advertisment
ஒருநாள் அந்நாட்டு மன்னர் முனிவரின் குடில் வழியே சென்றார். முனிவர் கூடைமுடையும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதைப்பார்த்து சிரித்துவிட்டார். முனிவரிடம் "நீங்களோ முற்றும் துறந்த முனிவர், பிறகு ஏன் கூடைமுடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சும்மா இருக்க வேண்டியதுதானே'' எனக் கேட்டார் மன்னர்.
உங்கள் கேள்விக்கு பிறகு பதில் சொல்கிறேன். "முதலில் இந்த ஆசனத்தில் அமருங்கள்'' எனக்கூறி மன்னருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். மன்னர் குடித்து முடித்தவுடன் "இந்த நீரைவிட சுவையான தேவலோக நீர் வேண்டுமா?'' எனக் கேட்டார் முனிவர். தேவலோக நீர் என்றதும் உடனே கொண்டுவரும்படி கூறினார் மன்னர்.
Advertisment
"அந்த நீரை நீங்கள் பருக வேண்டுமானால் 100 கிணற்றிலிருந்து நீர் இறைக்கவேண்டும்'' என்றார் முனிவர். இதைக் கேட்டதும் மன்னருக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டாலும் தேவலோக நீர் மீதான ஆசையால் கிணற்றிலிருந்து 100 முறை கஷ்டப்பட்டு நீர் இறைத்தார்.
இறைத்து முடித்துவுடன் மிகவும் களைப்பில் இருந்த மன்னரிடம் தேவலோக நீரைக் கொடுத்தார் முனிவர். அதை வாங்கிக் குடித்தவுடன் "ஆகா! 
அற்புதமான சுவை! இந்த மாதிரியான நீரை என் வாழ்நாளில் குடித்ததே இல்லை. இந்த நீரை நான் தினமும் அருந்த நீங்கள்தான் உதவவேண்டும்'' என்றார் மன்னர்.
"அப்படியானால் நீங்கள் தினமும் 100 முறை கிணற்றிலிருந்து நீர் இறைக்கவேண்டும்'' என்றார் முனிவர். புரியாமல் விழித்தார் மன்னர். 
"நான் கொடுத்தது தேவலோக நீர் அல்ல. முதலில் உங்களுக்கு கொடுத்த அதே சாதாரண நீர்தான் இதுவும்...'' என்றார் முனிவர்.
"அப்படியெனில் முதலில் குடித்த நீரைவிட இரண்டாவதாக குடித்த நீர் அவ்வளவு சுவையாக இருந்ததன் காரணம் என்ன?'' எனக் கேட்டார் மன்னர். நீங்கள் மன்னராக இருந்தாலும் உடல் அளவில் உழைக்காதவர். எனவே நான் கொடுத்த நீர் சாதாரணமாக இருந்தது. பிறகு நீங்கள் 100 முறை தண்ணீர் இறைத்தீர்கள். உங்கள் கடும் உழைப்பின் காரணமாக, இரண்டாவதாக நான் கொடுத்த அதே நீர் உங்களுக்கு சுவைமிக்க தேவலோக நீராக இனித்தது. தினமும் இந்த நீர் உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் தினமும் கடுமையாக உழைக்கவேண்டும்.
"நீங்கள் முதலில் கேட்டீரே. "ஏன் உழைக்கிறீர்?' என்று அதற்கான பதில் நன்றாக உழைத்தால்தான் உடல் வலிமையாகும். உடல்வலிமை இருந்ததால்தான் தவத்தையும், தியானத்தையும் சரிவர செய்ய இயலும். சும்மா இருந்தால் உடல், நோய்களின் கூடாரமாகிவிடும்.' என விளக்கம் தந்தார் முனிவர். தன்னுடைய தவறுக்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார் மன்னர்.
சகல போகப் பொருட்களையும் துறந்து எதையும் விரும்பாமல் உடலைப் பேணுவதற்குரிய செயலை மட்டும் செய்துகொண்டிருந்தாலும் புண்ணியம் கிடைக்காது.

subramaniyar1

துறவி ஒருவரைச் சந்தித்து, "ஐயா! கடவுள் அருளால் நடக்காத காரியம் இந்த உலகத்தில் உண்டா?'' எனக் கேட்டார் விவசாயி. "இல்லை'' என்றார் துறவி. "அப்படியானால் என்னுடைய தரிசு நிலத்தில் பயிர் விளையுமா?'' எனக் கேட்டார் விவசாயி.
"முதலில் ஆழ்ந்த பக்தி இருக்கவேண்டும். கடவுள் அருளால் நிச்சயம் நடக்கும் என்றும், நடப்பதெல்லாம் பகவான் செயல் என்றும் நீ நம்பவேண்டும்.
பின்னர் உன்னுடைய கடமைகளை பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு இதை அவரது ஆணையாகக் கருதி உன்னுடைய கடமைகளைச் செய்தால் நிச்சயம் தரிசு நிலத்தில் பயிர் விளையும்'' எனக் கூறினார் துறவி.
ஆறு மாதங்கள் கழித்து, துறவியிடம் ஓடி வந்த விவசாயி, "ஐயா! கடவுளை நம்பி நான் மோசம் போய்விட்டேன். அவர் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார். என் நிலத்தில் பயிர் விளையவே இல்லை''  எனக் கதறினான். "என்ன! பயிர் விளையவில்லையா? ஒருவேளை உன் பக்தியிலும், நம்பிக்கையிலும் ஏதாவது குறை இருக்குமோ?'' என சந்தேகப்பட்டார் துறவி.
கோபமடைந்த விவசாயியோ, "ஐயா நான் கடந்த ஆறு மாதங்களாக தரிசு நிலத்தில் பயிர் விளையவேண்டும் என பகவானுக்கு தினமும் ஆறு வேளைகள் பூஜைகள் செய்தேன். எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் சுத்தமாக இருந்தேன். தொடர்ந்து பல மந்திரங்களை ஜெபித்தும், பல விரதங்களை முறையாகக் கடைப்பிடித்தும் வந்தேன். கண்டிப்பாக பயிர் விளையும் என கடவுளின்மேல் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தேன்.
என் பக்தியும், நம்பிக்கையும் சிறிதளவுகூட குறைய வில்லை. கடவுள்தான் என்னை ஏமாற்றிவிட்டார். நான் செய்த பூஜைகளும், இருந்த விரதங்களும் இப்படி வீணாகிவிட்டதே...'' என அழுது புலம்பினான். 
குழப்பமடைந்த துறவி, அந்த விவசாயியின் நிலத்துக்குச் சென்று பார்த்தார். அந்த நிலம் மிகுந்த வறட்சியுடன் காட்சியளித்தது. விவசாயியிடம் "இந்த நிலத்தைப் பார்த்தால், நீ உழுத மாதிரியே தெரியவில்லையே...'' என வினவினார் துறவி. விவசாயி ஆவேசத்துடன் "என்ன துறவியாரே இப்படி முட்டாள் தனமாக பேசுகிறீர்கள். நான் வீட்டில் முழு நேரமும் பூஜைகள் செய்துகொண்டிருக்கும்போது எப்படி என்னால் இந்த நிலத்தை உழமுடியும்?'' என கத்தினான். 
"என்னதான் பக்தியோடும், நம்பிக்கையோடும் இருந்தாலும் கடமையைச் செய்யாமல் எப்படி பயிர் விளையும்?'' என்றெண்ணி, அந்த விவசாயியின் முட்டாள் தனத்தை நினைத்து பரிதாபப்பட்டார் துறவி.
ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் தன் கடமையைச் செய்யாவிட்டால் அவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது. அறவழியில் கடமையைச் செய்பவர்களுக்கே கடவுள் அருள்புரிவார். உழைப்பின் பலன் கருதி நேர்மறை எண்ணத்தோடு அறவழியில் வாழ்வதற்கு வழிவகை செய்யும் உன்னதமானதொரு திருத்தலம்தான் கொண்டல் ஸ்ரீ குமார சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
மூலவர்: அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமி.
இறைவன்: ஸ்ரீ தாரக பரமேஸ்வரர்.
இறைவி: சன்னதி இல்லை.
விசேஷ மூர்த்தி: ஸ்ரீ இடும்பன், மகாவிஷ்ணு.
புராணப் பெயர்: கொண்டல் வண்ணன் குடி.
ஊர்: கொண்டல், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.
தலவிருட்சம்: கடம்ப மரம்.
தீர்த்தம்: சரவணப் பொய்கை.
சுமார் 900- 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் அப்பர், சுந்தரால் பதிகம் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகவும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் தலங்களில் ஒன்றாக வும் போற்றப்படுகிறது. 
"அண்டத் தண்டத்தின் அப்புறத்தாடும் 
அமுதனூர்
தண்டந் தோட்டம் தண்டங்குறை தண்டலையாலாங்காடு
கண்டலை முண்டங்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே.'
-சுந்தரர்
கீழ் பழனி என்றழைக்கப்படுகின்ற கொண்டல் திருத்தலம் காத்தியானிருப்பு, பரம்பரை அறங்காவலர் சோம. இராஜராஜன் பிள்ளை அவர்களது கண்காணிப்பில் அனுதினமும் இரண்டுகால பூஜை சிறப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தெற்கே திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய பழனி திருத்தலமும், வட திசையில் வடபழனியில் முருகப் பெருமானும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிரப்பாக்கத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நடுப்பழனி என்கிற வளைவு உள்ளது. அங்கே ஓர் அதிஷ்டானமும் குன்றின்மேல் முருகன் கோவிலும் உள்ளது. இவ்வகையில் அருள் பாலித்து வரும் வேலவன் கீழ்ப்பழனி என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். தேவார வைப்புத்தலமாகவும் அருணகிரிநாதர் பாடிய 1,336 திருப்புகழில் தனித் திருப்புகழ்பெற்ற தலமாகவும் கொண்டல் விளங்குகிறது.
தல வரலாறு
சிவபெருமானை வணங்குமுன் விநாயகரையும் முருகனையும் முதலில் வணங்குவது மரபு. பிரம்மன் கந்தனை மதியாது செல்ல கந்தன் பிரமனை அழைத்தார். அதாவதுலிஎந்த ஒரு தெய்வத்தை வணங்கினாலும் அதற்குரிய மந்திரத்தைச் சொல்லும்போது ஓம் என்றே துவங்குகிறோம். ஓம் கணேசாய நமஹ. ஓம் கார்த்திகேயாய நமஹ... ஓம் நமசிவாய..., ஓம் சக்தி, ஓம் நமோ நாராயணாய... இப்படி ஓம் சேர்க்காத மந்திரங்களே இல்லை.
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது என பொருள். புதுசுக்கு எப்போதுமே மவுசு. வீட்டில் புதிதாக ஒரு பொருள் வாங்கினால் அதை முதல் பத்து நாட்கள் துடைத்து, பத்திரமாக பாதுகாப்போம். கொஞ்சநாள் சென்றதும் அது தூசு மண்டலத்திற்குள் புதைந்துவிடும். அதேபோல் குழந்தை பிறந்த கொஞ்சநாள் கொஞ்சுவோம். வளர வளர கண்டிக்கத் துவங்குவோம். பெரியவர்களாகிவிட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிடுவோம். அதாவது பிறந்த குழந்தை வளர்ந்து பழசாகி விடுகிறது. பழசானதும் வெறுப்புதட்டி விடுகிறது.
ஆனால் தெய்வங்கள் அப்படியல்ல. அவர்கள் எப்போதுமே புதுசுதான். அவர்களுக்கு வயதாவதில்லை. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. கோவிலுக்கு ஐந்து வயதில் போனாலும் சரி... 50 வயதில் போனாலும் சரி... தெய்வத்தைக் கண்டதும் நம்மையறியாமல் கைகள் குவிந்துவிடுகின்றன.
"ஓம்' என்ற மகிமைமிக்க மந்திரத்தை ஓதியே உயிர்களைப் படைக்கிறீர். அப்படியானால், "ஓம் என்ற மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உயிர்களைப் படைக் கிறீர்களே... அதன் பொருள் என்ன' என கேட்டார் முருகன். பிரம்மாவுக்கு பதில் தெரியவில்லை. 
"ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதன் தலைமுதல் அடிவரையான சகல விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் தினமும் உச்சரிக்கும் இந்த மந்திரத்தின் பொருள் தெரியாமல் தொழில் செய்கிறீர். எனவே உம்மை சிறையில் தள்ளுகிறேன்' என்றார். படைப்புத் தொழிலை அவரே துவங்கினார். சிருஷ்டிப் பொறுப்பையும் ஏற்றார்.

subramaniyar2

இச்சமயத்தில் திருமால் வருத்தமுற்று சிவனுடன் வந்து பிரம்மனை விடுக்கக்கோரி முருகனை வேண்டின தலம். பிரம்மனை சிறையிலிருந்து விடுவிக்க விஷ்ணுவும் சிவனும் இங்கு முருகனை வழிபட்டனர். அதன்பின் பிரம்மன் விடுவிக்கப்பட்டார். கரியவன் மற்றும் மேகம் என்கிற பொருளில் வரும் கொண்டல் திருமாலைக் குறிக்கும். கொண்டல் என்கிற சொல்லுக்கு கொள்ளுதல், மேகம், காற்று, கிழக்கு என்கிற பல பொருள்கள் உண்டு. இருப்பினும் மேக (கரிய) நிறமுடைய திருமால் கொண்டல் வண்ணனாவான். அத்தகைய திருமால் இத்தலத்தில் பிரம்மனை விடுவிக்க முருகனை வேண்டியதால் கொண்டல் வண்ணன் குடி என்ற பெயர்பெற்றது. நாளடைவில் மருவி "கொண்டல்' என்ற பெயரே பக்தர்கள் மனதில் பதிவாகியது. 
பிரம்மனை சிறை யிலடைத்தபின் படைப்புத் தொழிலை முருகனே செய்தார் அல்லவா... இச்செயலை கண்டித்த சிவன் பெரியவர்களை மரியாதையுடன் நடத்தத் தெரியாத நீ சிவலோகத்திலிருந்து வெளியேறி விடு என்றார். தன் தவறை உணர்ந்து கீழான பிறவியான பாம்பின் வடிவம் எடுத்து காட்டுக்குச் சென்றுவிட்டார் முருகன். இதையறிந்த பார்வதி சிவனிடம் பரிகாரம் கேட்டாள்.
108 சஷ்டி விரதமிருந்து என்னை வணங்கினால், உன் மகன் மீண்டும் பழைய வடிவம் பெறுவான் என்றார் சிவன். பார்வதியும் அவ்வாறே சஷ்டி விரதம் அனுஷ்டித்தாள். முருகன் பழைய வடிவம் பெற்றார். தன்னை புத்திசாலி என நினைத்து ஆணவம் கொண்டு சாபமாக பெற்ற பாம்பு வடிவத்தை தன் காலடியில் அழுத்திக்கொண்டார் முருகன். ஆணவம் அவ்வப்போது பாம்புபோல் தலை தூக்கும். அதை அடக்கி ஆள வேண்டும் என்பதே கந்த புராணத்தில் சொல்கின்ற கந்த சஷ்டி உணர்த்தும் தத்துவம்.
திருப்புகழின் பொருள்
தன் வாழ்க்கையில் குறுக்கிட்டு திசை மாற்றிய விலை மாதரின் நிலையை விளக்கி, அவர்களோடு தொடர்புற்று புரிந்த இழிசெயலிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகிறார் அருணகிரிநாதர். அத்தகைய பெண்கள் அடர்ந்த காடு போன்ற கூந்தல் கொண்டவர்களாகவும், மயிலின் சாயல் கொண்டவராகவும், கண்களால் காமத்தீ ஊட்டுபவராகவும், இளவயதுடையவரோடு பழகிப் பொருள் கேட்டு வீதியில் வலம்வருபவராகவும், முகத்தோடு முகம் புதைத்து விரச பாவத்தை ஊட்டுபவராகவும், இனிய சொற்களால் பேசி செல்வமில்லாதாரை ஒதுக்கி, செல்வமுடையாரை ஏமாற்றுபவராகவும் திகழ்கின்றனர். அந்நிலையில் உழன்ற தன்னை  வருத்தமெல்லாம் தொலைய திருவடி தீக்ஷைக் கொடுத்து திருவருள் தரவும் வேண்டுகிறார். எப்பேர்ப்பட்ட முருகன் தனக்கு திருவடி தீட்சை கொடுக்கவேண்டும் எனக் கூறும்போது, சேனைகளைக் கூட்டி அச்சமுறும்வகையில் அசுரர்களைக் கொன்று போரில் வேலேந்திப் போர் வீரனாகத் திகழும் முருகனை வர்ணிக்கி றார். அவன் கண்ட போர்க்களமானது ரத்த ஆறு ஓட அதில் பேய்கள் மூழ்கிக் கூச்சலிடுகிறதாம். மாமிசத்தை உண்டு பருத்துகளும், காகங்களும், கழுகுகளும் விளையாடுகின்றனவாம். நரிகள் கூட்டம் கூட்டமாக ஆரவாரம் செய்கின்றனவாம். முருகனின் வாகனமாகத் திகழும் மயில் ஒருசமயம் செருக்கு கொண்டதை நினைவுகூர்ந்து அதன்மேல் ஏறும் பலம் பொருந்தியவனாகவும் வர்ணிக்கிறார். அழகிய பொன்மாலை தரித்து, பொன்மலை போன்ற தோள்களைக்கொண்ட பெருமான், முத்துமாலையை தாங்கிய மார்பனாகவும், பார்வதியின் மைந்தனாகவும், கரியவநகர் என்னும் இந்தத் தலத்தில் வீற்றிருக்கும் தேவனாகவும் குறத்தியாகத் திகழும் வள்ளியின் தாள்களைப் பணியும் கருணாமூர்த்தியாகவும் தெள்ளு தமிழின் பாடல் கேட்டு அருளும் தெய்வமாகவும் விளங்கும் (ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்.) ஸ்ரீ குமார சுப்பிரமணியர் தனக்கு இன்னருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்வதை "கொண்டல் திருப்புகழ் பதிகம்- 778-ல்
"கனகிரி புயமுத் தார மேற்றருள்... திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள்... பெருமானே...''
அருணாகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டு புகழ்ந்து கூறுகிறார்.
இடும்பனின் சிறப்பு
இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என இரு மலைகளை பூஜித்து வந்திருக்கிறார் அகத்தியர். அகத்தியரின் இருப்பிடமோ பொதிகை மலை. இமயமலையில் நெடுங்காலம் தங்கமுடியாது. அதனால் கிரிகள் இரண்டையும் பொதிகைமலைக்கு எடுத்து செல்வது என தீர்மானித்தார். 

subramaniyar3

எனவே கேதாரமலை வரை கொண்டு வந்தார். அங்கே இளைப்பாறினார். சூரபத்மனின் நண்பன் இடும்பாசுரன் சூரபத்மனைப்போல் இல்லாமல் முருகனின் அருள்வேண்டி கேதாரமலையில் தவமிருந்தான். அவன் அகத்தியரைக் கண்டதும் ஓடிவந்து வணங்கினான். இடும்பனை ஆசீர்வதித்த அகத்தியர், "யாரை நோக்கி தவம் இருக்கிறாய்?' என்று கேட்டார். சூரபத்மனைப்போல் நானும் அழியாமல் இருக்க முருகனை வேண்டி தவமிருக்கிறேன்' என்றான். அகத்தியர் முருகனின் அருளைப்பெற சுலபமான வழி ஒன்று கூறுகிறேன்.
"சிவகிரி, சக்திகிரி இரண்டும் பெற்றோர் அம்சம். இவற்றைப் பொதிகைமலை வரை தூக்கிவந்து உதவினால் நீ முருகனின் அருள் பெறுவாய்'' என்றார். இடும்பன் மலைகளைத் தூக்க பல விதங்களிலும் முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. முடியவில்லை என்றான்.  அகத்தியர் முருகனின் மூலமந்திரங்களை பக்தியோடு உச்சரித்தார்.  அஷ்ட நாகங்கள் கயிறுகளாக மாறின. பிரம்ம மந்திரம் ஜெபித்தவுடன் பிரம்ம தண்டம் துலா தண்டமாக மாறியது. கயிறான நாகங்களை துலா தண்டத்தின் இருமுனைகளிலும் உறிகளாக கட்டச் சொன்னார். மலைகளை மந்திரங்கள் சொல்லிக்கொண்டே தூக்கி உறியில் வைத்தான் இடும்பன்.
திருவாவினன்குடி (பழனி)வரை வந்தாயிற்று. மூச்சிறைத்தது. இருமலை களையும் கீழே வைத்தான். பின்தொடர்ந்த அகத்தியரும்  திருவாவினன்குடி முருகனை தரிசித்துத் திரும்பினர். இளைப்பாறிய இடும்பன் மலைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட முயற்சித்தான். மலைகள் நகரவில்லை. மிகவும் பலசாலியாக இருந்தும் உன்னால் தூக்க முடியவில்லையே... என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். மலைமேல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன் கேலி செய்தான். ஆத்திரத்துடன் சிறுவன்மேல் பாய்ந்தான். சிறுவன் நகர மலைமீதிலிருந்து உருண்டான் கூடவே இடும்பனின் மனைவி ஓடிவந்தாள். ஆடு மேய்க்கும் துரட்டிக்கம்பு வேலாக மாற சிறுவன் குமரனாகக் காட்சிதந்தான். "முருகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா வேலவா, சுப்ரமணியா, ஆறுமுகா எனது கணவனின் தவறை மன்னித்தருள வேண்டும். எனக்கு மாங்கல்ய பிச்சை தந்தருள வேண்டும்' எனக் கண்ணீர்விட்டுக் கதறினாள். முருகன் அருளால் இடும்பன் எந்த சேதமும் இல்லாமல் எழுந்துவந்தான். இருவரும் முருகனை வணங்கி அவனருள் பெற்றனர்.
"இடும்பா இந்த மலைச் சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இதிலுள்ள மூலிகைச் செடிகள் மக்களின் உடற்பிணி தீர்க்கும். நீ இங்கு காவல் தெய்வமாக இருப்பாய். உன்னைப்போல் காவடி தூக்கி வருபவர்களின் குறைகள் உடனே விலகிவிடும். உன்னை வணங்கிய பின்பு என்னை வணங்குபவர்களின் கோரிக்கை உடனே நிறைவேறும்' என்று வரமளித்து அகத்தியரையும், இடும்பன் தம்பதியினரையும் ஆசீர்வதித்து மறைந்தான். பழனி செல்பவர்கள் இடும்பனை வழிபட்டு பின் முருகனை வழிபட்டு அருள்பெறுவார்கள். இது அன்றுமுதல் இன்றுவரை வழக்கத்தில் உள்ளது இத்தகைய சிறப்புப் பெற்ற இடும்பன், கீழப்பழனி என்கிற கொண்டல் திருத்தலத்தில் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். 
கொண்டல் திருத்தலத்திலுள்ள சரவணப் பொய்கையில் நீராடி விநாயகர், இடும்பன், முருகனை வழிபட்டால் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்குச் சென்றுவந்த பலன் கிட்டும் என்கிறார் பரம்பரை அறங்காவலர் சோம. இராஜராஜன் பிள்ளை.
சிறப்பம்சங்கள் 
ப் மூலவர் குமார சுப்ரமணியர் உடனுறை வள்ளி- தெய்வானை. இறைவன்: தாரகபரமேஸ்வர்; முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம். "கீழப்பழனி' என வழங்கும் "கொண்டல் குமார சுப்ரமணியர்' என்று வழக்கில் வழங்குகிறது. 
ப் கொண்டல் உள்ளார் கொண்டச்சரத்தின் உள்ளார்' என்று அப்பர் பெருமானும், "அண்ட தண்டத்தின் அப்புறத்தாடும்' என்று சுந்தரரும் பதிகம் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம்.
ப் முருகனுக்குகந்த கார்த்திகை நட்சத்திர தினத்தில் பன்னிரு ராசி  நேயர்களும் கலந்துகொண்டு பலன் பெறுவார்கள். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அன்றைய தினம் வழிபாடு செய்தால் கூடுதல் பலன் கிட்டுவதோடு நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார் ஆலய அர்ச்சகர் சதீஷ் குருக்கள்.
ப் தேங்காயில் மூன்று கண்கள் உள்ளது போல் மூன்று மரமாக உள்ளது ஒரே தென்னங்கன்று. வள்ளி- தெய்வானை, முருகன் அம்சமாக இது கருதப்படுகிறது. மூலஸ்தானத்தில் முருகனுக்கு வஜ்ரவேல் இருப்பது மிகச் சிறப்பான ஒன்று. 
ப் ஆலயப் பிரதான அர்ச்சகர் சந்தோஷ் சிவாச்சாரியார் கூறுகையில் எங்களது குடும்பம் 16 தலைமுறைகளாக கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயத்தில் பூஜை செய்து வருகிறோம். இத்தல விழா தைப்பூசத் திருவிழாஅன்று சிறப்பு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து (உற்சவர் படத்துடன் மூலவர் வேல்) சுவாமி புறப்பாடு, தேனூரில் தீர்த்தவாரி முடித்து ஆலயம் வந்தவுடன் பால்காவடி களின் அபிஷேகம் தொடர்ந்து இரவு மகா அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் திருக்கல்யாண உற்சவத்துடன் கோலாகலமாக நடக்கும். ஆறு ஷஷ்டி விரதமிருந்து வழிபட்டால் மழலைப்பேறு கிடைப்பதற்குண்டான நல்ல சூழ்நிலை உருவாகும். செவ்வாய்க்கு அதிபதி முருகன். குருவின் அம்சமாக விளங்கும் மூலவர் குருமங்கள யோகத்தைத் தருவதோடு திருமணத்தடை விலகி காரிய சித்தியைத் தருவார். நவகிரகங்கள் கிடையாது. அனைத்து செயல்களை முருகப்பெருமானே பார்ப்பதாலும், செவ்வாய் தசை செவ்வாய் புக்தி நடப்பவர்களுக்கு தெளிவு பிறக்கும். முருகனே சிவன், சிவனே முருகன் என்ற அம்சத்தில் உள்ளதால் நவகிரக தோஷங்கள் விலகி தீராத வினைகளும் தீரும். தமிழ் மாதப் பிறப்பு, செவ்வாய்க்கிழமை களில், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை பிரதிவார செவ்வாயன்று நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்வோம். கற்பவனுக்கு அறிவுப் பசி, பசித்தவனுக்கு வயிற்றுப்பசி, பிரச்சினைகள் தீரவில்லையே என்ற ஏக்கப்பசி எதுவாயினும் கொண்ட பசியினை அகற்றி குதூகல வாழ்வைத் தந்தருளும் கொண்டல் ஸ்ரீ குமார சுப்ரமணிய சுவாமியை செவ்வாயன்று வழிபடுவோம். வளம் பெறுவோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தலைமை அர்ச்சகர் சந்தோஷ் சிவாச்சாரியார்.
திருக்கோவில் அமைப்பு
சீர்காழி வட்டத்தில் கொண்டல் கிராமத் திலே பசுமையான சூழ்நிலையில் நாற்புறமும் மதில்கள் சூழ கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்திற்கு முன்புறம் சரவணப்பொய்கை தீர்த்தக் குளமும் குளக்கரை விநாயகர் வேப்பமர அரச மரத்தடியில் அருள் பாலிக்கிறார். ஒரே ஒரு பிராகாரத்தைகொண்ட இவ்வாலயத்தின் ராஜகோபுர வழியாக நுழைந்தால் அக்னி மூலையில் மடப்பள்ளி, நிருதிமூலையில் க்ஷேத்திர விநாயகர், இடும்பன் சன்னதி உள்ளது. பிராகாரவலம் வருகையில் பைரவர் மேற்கு நோக்கியருள்கிறார். கற்றளி மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நாகர், தாரக பரமேஸ்வரி, நந்தி, சண்டிகேஸ்வரர் மற்றும் மகாவிஷ்ணு அருள்பாலிக்கின்றனர்.
கருவறை மண்டபத்தில் மூலவர் குமார சுப்ரமணியர் நான்கு கரங்களுடன் வஜ்ரவேல்கொண்டு அவரது துணைவியார்களான வள்ளி- தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தில் தீர்த்தக் கிணறும், அருகில் நந்தவனத்தில் கடம்மரம், வில்வமரம் நெல்லி மற்றும் மலர்ச் செடிகள் உள்ளன. அனுதினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கின்றது. பூஜை சாமான்கள் வாங்கிச் செல்லவும். அருகில் கடைகள் இல்லை. 
நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் பகல் 11.30 மணிவரையும்; மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரை ஆலயம் திறந்திருக் கும். 
ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங்காவலர், சோம. இராஜராஜன் பிள்ளை, அருள்மிகு குமார சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் (கீழப்பழனி) கொண்டல், வள்ளுவக்குடி அஞ்சல் சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்- 609 116.
பூஜை விவரங்களுக்கு: சந்தோஷ் சிவாச்சாரியார் செல்: 96595 49450, சதீஷ் சிவாச்சாரியார் செல்: 75503 69136.
அமைவிடம்: மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ, கார்மூலம் செல்லலாம்.
படங்கள்: போட்டோ கருணா