மேஷம்
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ல் லாப ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இந்த மாதம் (மார்ச் 6-ல்) மீன ராசிக்கு மாறுகிறார். மீனம் 12-ஆமிடம். இப்போது உங்களுக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. மேஷ ராசிக்கு 10, 11-க்குடையவர் 12-ல் மறைவது குற்றம்தான். தொழில் ஸ்தானாதிபதி, லாபஸ்தானாதிபதி அங்கு மறைவதால் உத்தியோக மாற்றம், குடியிருப்பு மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரும். விரயச்சனி என்பதால் வீண் விரயம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். இடமாற்றம் வந்துகொண்டே இருக்கும். சனிபகவான் உங்களது ராசிக்கு 2-ஆமிடம், 6-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-ஆமிடம், தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம், வித்தை இவற்றைக் குறிக்கும் இடம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். உங்கள் பேச்சாலேயே குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். எனவே எப்போதும் யோசித்துப் பேசுவது சிறந்தது. கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். சிறிய குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். 7-ஆம் பார்வையாக 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். கடன் ஏற்படும். அதை சுபவிரயக் கடனாக மாற்றும் யுக்தி உள்ளவர்களுக்கு முதலீட்டுக் கடனாக அமையும். அதேசமயம் அக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கும் முயற்சிகளும் பலன் தரும். நோயின் பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். வம்பு, வழக்கு உண்டாகி நிவர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சுபக்கடன் வாங்குவீர்கள். எதிரி தொல்லைகள் குறையும். 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தந்தையும் மகனும் தனியாகவோ அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் வெளியூர், வெளியிடங்களிலோ இருந்தால் பிரச்சினைகள் வராது. பூர்வீக சொத்துகள் சிலருக்கு விரயமாக லாம். புனித ஸ்தல யாத்திரை, தெய்வ வழிபாடு பூஜை உங்களைக் காப்பாற்றும். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி சனிக்கிழமை வழிபாடு செய்யவும். சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடப்பவர்கள் திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேக வழிபாடு மிக முக்கியம். கவனமுடன் செயல்படவேண்டும்.
ரிஷபம்
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்திலிருந்த சனிபகவான் இந்த மாதம் 6-ஆம் தேதிமுதல் 11-ஆமிடத்தில் மாறுகிறார். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி. கேந்திர திரிகோணாதிபதி. எனவே உத்தியோகத்தில் இடமாற்றம், தொழிலில் முன்னேற்றம், காரிய அனுகூலம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே சனி 10-ல் இருந்த காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து வேலை பார்த்தவர்களுக்கு இக்காலகட்டம் உத்தியோக இடமாற்றம் ஏற்பட்டு மீண்டும் குடும்பத்துடன் இணைய லாம். உங்களது மதிநுட்பத்தால் பிறர் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகள் வகையில் லாபம் உண்டாகும். 11-ல் வந்திருக் கும் சனிபகவான், உங்கள் ராசியையும் (1-ஆமிடம்), 5-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். உங்கள் ராசியைப் பார்க்கும் சனிபகவான் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வார். கௌரவப் பதவிகள் தேடிவரும். குடியிருக்குமிடத்தில் சில பிரச்சினைகள் உருவாகி விலகும். வெளியூர் பயணங்களால் நன்மை கிடைக்கும். கமிஷன் காண்ட்ராக்ட் ஆகியவற்றில் லாபம் உண்டாகும். தொழில் நிறுவனங்களுக்கு நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். 5-ஆமிடத்தை சனி பார்ப்ப தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். தொழில் போட்டிகள் எதிர்ப்புகள் இருந்தால் அதை முறியடித்து வெற்றி காணலாம். சிலருக்கு வீடு கட்டுவதற்கான திட்டங் களுக்கு கடன்பெற வழிவகை உண்டாகும். 8-ஆமிடத்தை சனி பார்ப்பதால் அசௌகரியங்களும் சோர்வும் அதிகரிக்கும். 4-ஆமிடத்துக்கு 8-ல் வருவதால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். எல்லா சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மனதில் ஒருவித பயமும் கலக்கமும் உண்டாகும். சிலநேரம் ஒரு காரியத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யும் சூழ்நிலை உண்டாகும். ஆயுள் குற்றத்திற்கு இடமில்லை. தந்தை உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேனி அருகில் குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்யலாம். சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடவும்.
மிதுனம்
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் ஆட்சியாக இருந்த சனிபகவான் இப்போது (மார்ச் 6-ல்) 10-ஆமிடத்துக்கு மாறுகிறார். 10-ஆமிடத்துச் சனி பதிகுலைய செய்யும் என்பது விதி. சனி மாற்றத்தால் பதி மாற்றமோ, பதவி மாற்றமோ ஏற்பட்டாலும் அது ஒரு வகையில் நன்மையானதாகவோ அமையும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில் இங்கு 9-க்குடைய சனி 10-ல் வருவது தர்மகர்மாதிபதி யோகத்தைக் குறிக்கிறது. 10-ஆமிடம் என்பது தொழில், வாழ்க்கை, ஜீவிதம் இவற்றைக் குறிக்கும் அதனால்தான் உத்தியோக மாற்றம் நன்மையானதாக அமையும் என்று மேற்கூறியிருக்கிறேன். தொழில் துறையினருக்கும் சில புதிய அணுகுமுறைகளை கையாளலாம். செய்தொழில் மதிப்பு, மரியாதை உயரும். மீனச் சனி 3-ஆம் பார்வையாக 12-ஆமிடத்தையும், 7-ஆம் பார்வையாக 4-ஆமிடத்தையும், 10-ஆம் பார்வையாக 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். 12-ஆமிடம் விரயஸ்தானம், இடமாற்றத்தைக் குறிக்கும் ஸ்தானம். 4-ஆமிடம் என்பது பூமி, வீடு, மனை, வாகன ஸ்தானம். அதனால் பூமி, வீடு, இடம் இவற்றை விற்று அதன்மூலம் பழைய கடன்களை அடைத்துவிட்டு மீதமிருக்கும் கையிருப்பைக் கொண்டு புதிய தொழில் செய்து நிரந்தர வருவாய்க்கு வழிவகை தேடலாம். அதற்கேற்ற வகையில் நல்ல விலைக்கு லாபத்தோடு உங்கள் சொத்துகளுக்கு ஆட்கள் அமையும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் சனி வீடு, மனை யோகத்தையும் தருவார். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம். அல்லது பழைய வாகனத்தை சீர்செய்து ஓட்டலாம். 7-ஆமிடத்தை சனி பார்ப்பதால் 30, 35 வயதாகியும் திருமணமாகா மல் காத்திருப்பவர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும். திருமணமான கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பிரிவு ஏற்படாது. சனி நல்லது செய்வார்; கெட்டதும் செய்வார். அது அவரவர் வினைப்பயனைப் பொருத்தே பலன் செய்வார். நாமக்கல் அருகில் ராசிபுரம் போகும் வழியில் சேந்தமங்கலம் சென்று சனீஸ்வரர்- ஆஞ்சனேயரை (எதிர் எதிரே இருப்பார்கள்.) வழிபடவும்.
கடகம்
இதுவரை உங்களுக்கு 8-ஆமிடத்தில் இருந்து அட்டமத்துச்சனியாக ஆட்டிப் படைத்து, கலங்கவைத்து, கிறங்க வைத்து, நோகடித்த சனிபகவான் இம்மாதம் 9-ல் மாறுகிறார். இதன்மூலம் அட்டமத்துச்சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். 8-ல் இருந்த சனி இடமாற்றம், பொருளாதாரச் சிக்கல், அலைக்கழிப்பு, அலைச்சல்கள், கௌரவக் குறைபாடு, அவப்பெயர் போன்றவற்றைத் தந்து காயப்படுத்தினார். இனி 9-ல் வரும் சனிபகவான் இவற்றுக்கு எல்லாம் மருந்திடும் வகையில் பாக்கிய ஸ்தான பலனைச் செய்வார். பாக்கியத்திற்கு மாறிய சனியால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் தீரும். சிலருக்கு கால் சம்பந்தப்பட்ட உபாதைகளால் தொல்லைகளை அனுபவித்த நிலைமாறி பரிபூரண ஆரோக்கியம் உண்டாகும். பதவியில் கௌரவமும் மதிப்பும் கூடும். 9-ஆமிடத்துச் சனி 3-ஆமிடம், 6-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 3-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தைரியம் தன்னம்பிக்கைகளை அதிகப்படுத்துவார். ஒரு மனிதனுக்கு முதலில் தைரியம்தான் வேண்டும். தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் இழந்த செல்வங்களையும் பதவிகளையும் மீண்டும் பெற்றுவிடலாம். நண்பர்களால் உதவி, ஒத்தாசை உண்டாகும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட அவமானங்கள் மாறி மதிப்பு, மரியாதை உண்டாகும். 11-ஆமிடம் என்பது லாபம், வெற்றி ஜெய ஸ்தானம். எனவே தொழில்துறையில் அடைப்பட்ட கதவுகள் திறக்கப்படும். நஷ்டங்கள் லாபமாக மாற வழிவகைகள் பிறக்கும். உங்களது விடாமுயற்சியும் உழைப்பும் யோகத்தையும், முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். மூத்த சகோதரவழியில் இடைவெளி காணப்பட்டாலும் தாமரை இலை தண்ணீர்போல நடந்துகொள்ளவும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் சனி கடன்களை உண்டாக்குவார். போட்டி, பொறாமை ஏற்பட்டாலும் அவற்றை எளிதாக சமாளிக்கலாம். எதிரிகள் தோன்றினாலும் வெற்றிகொள்வீர்கள். பாதிப்பு ஏற்படாது. தொழில் முதலீட்டுக்காக கடன் கிடைக்கும். நேரம் கூடிவந்தால் தூற்றிய வாய் போற்றத் தொடங்கும். சனி விலகும்போது திருநள்ளார் சென்று சனீஸ்வரரையும், தர்பாண்யேஸ்வரரையும் வழிபடலாம்.
சிம்மம்
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனிபகவான் இப்போது 8-ஆமிடத்துக்கு மாறுகிறார். அட்டமத்துச்சனி ஆரம்பம். சனி 7-ல் இருந்தபோது பெரும்பாலும் மனைவிமார்களுக்கு, பெண்களாக இருந்தால் கணவன்மார்களுக்கு ஆரோக்கியத்தைக் கெடுத்தார். சிலருக்கு ஆபரேஷனையும் கொடுத்தார். தாம்பயத்திதைக் கெடுத்தார். குடும்பத்தைப் பிரித்தார். தொழில் முடக்கமும் சிலருக்கு ஏற்பட்டது. இப்போது 8-ல் வரும் சனி மேலும் என்ன செய்வார் என்ற கலக்கம் ஏற்படலாம். பொதுவாக அட்டமத்துச்சனி நடக்கும்போது இடமாற்றம் அல்லது ஊர்மாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்படுவது சகஜம். அதன்படி உங்களுக்கு குடியிருப்பு மாற்றம் வரலாம். புதிய வீட்டுக்கு குடிபோகலாம். அல்லது பழைய வீட்டை இடித்துக்கட்டி புதிய வீட்டுக்குப் போகலாம். மீனத்தில் நிற்கும் சனிபகவான் 10-ஆமிடம், 2-ஆமிடம், 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிம்ம ராசிக்கு சனி 6, 7-க்குடையவர். 6-க்குடையவர் 8-ல் மறைவது நல்லது என்றாலும் 7-க்குடையவர் 8-ல் மறைவது நல்லதல்ல! 2-ஆமிடத்தை சனி பார்ப்பதால் எதிர்பாராதவகையில் தன சம்பாத்தியத்தைத் தருவார். தாராளமான பணப்புழக்கம் இருந்தாலும் அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பதுபோல தேவைகளுக்குத் தக்கபடி பணத்தைத் தேடித்தான் பெறவேண்டும். 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் ஏற்படும். சிலருக்கு மனச் சங்கடங்களைக் கொடுத்தா லும் பெரிய பிரச்சினைகளுக்கு இடம் ஏற்படாது. திருமணமான புதிய தம்பதியினருக்கு வாரிசு தாமதமாகலாம். 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் இயக்கம் தடை படாது. அரசு அல்லது தனியார் வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் இடமாறுத லும் ஏற்படும். என்றாலும் முழு அளவில் திருப்தி இருக்காது. சுயதொழில் செய்கிறவர்களுக்கு போட்டி, பொறாமை இருந்தாலும் தொழில் பாதிப்பு இருக்காது. புதிய தொழில் ஆரம்பிப்பதைத் தவிர்க்கவும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும். நாமக்கல் சென்று ஆஞ்சனேயரை ஒருமுறை தரிசனம் செய்யவும்.
கன்னி
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ஆமிடத்தில் ஆட்சியாக இருந்த சனிபகவான் இப்போது 7-ஆமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கெனவே சனி இருந்த இடம் நல்ல இடம் 3, 6, 11 உபஜெய ஸ்தானங்கள். அப்படி 6-ல் இருக்கும்போது சனியின் நன்மைகளைக் கணக்கெடுத்தால் சில நன்மைகளும் நடந்தன. பல நன்மைகள் நடக்காமல் போய்விட்டன என்பதுதான் உண்மை. 7-ஆமிடத் துச் சனி கணவன்- மனைவிக்குள் வாக்கு வாதம் சச்சரவுகளைத் தரலாம். உங்கள் பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஜெனன ஜாகத்தில் சாதக தசாபுக்தி நடந்தால் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். 7-ஆமிடத்து சனி 1-ஆமிடம், 4-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். ஜென்ம ராசியை சனி பார்ப்பதால் மேலே கூறியபடி உங்கள் பேச்சில் நிதானத்தைக் கண்டபிடித்தால் உங்கள்மீது மதிப்பு உண்டாகும். மரியாதையையும் காப்பாற்றி நாணயமாக நடக்கலாம். உங்களுக்கு திறமையும் ஆற்றலும் இருந்தும் அது செயல்படாமல் போன நிலை மாறி நற்பலன் செயல்படும். 4-ஆமிடத்தை சனி பார்ப்பதால் நோய் நிவர்த்தி, ஆரோக்கிய விருத்தி உண்டாகும். சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்புகளுக்கு இடமில்லை. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு தாய்வழியில் சங்கடங்களை சந்திக்க நேரும். சிலர் பூமி, வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். 9-ஆமிடத்தை சனி பார்க்கிறார். 9-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம். பூர்வபுண்ணிய ஸ்தானம். தகப்பனார்வழியில் வரவேண்டிய பாகப் பிரிவினைகள் முறைப்படி வந்துசேரும். பூர்வீகச் சொத்துகளினால் லாபம் கிடைக்கும். வில்லங்கம், விவகாரம் இருந்தால் அது சுமூகமான தீர்வுக்கு வழி கிடைக்கும். தந்தைக்கு உடல்நலரீதியாகத் தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். கணவன் அல்லது மனைவிக்கு ஆரோக்கியம் தெளிவாகும். ராஜபாளையம்- தென்காசி போகும் வழியில் கடையநல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் சென்று அபய அஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும்.
துலாம்
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த சனிபகவான் இப்போது 6-ஆமிடத்துக்கு மாறுகிறார். ரிஷபம், துலாம் இவை இரண்டுக்கும் சனி ராஜயோகாதிபதி. அதனடிப்படையில் துலா ராசிக்கு 5-ல் ஆட்சியாக இருந்த சனிபகவான் முழு அளவில் நன்மைகளைச் செய்தாரா என்பது கேள்விக்குறிதான்! கடந்த காலத்தில் சனி 5-ல் இருந்தபோது பலவகையில் பாதிப்புகளைத் தந்தார். குடும்பத்தில் சங்கடம், சிலருக்கு திருமணத்தடை, மூத்த சகோதரவகையில் சங்கடம் போன்ற பலன்களைத் தந்தார். இப்போது 6-ல் சனி! 3, 6, 11-ஆமிடங்கள் உப ஜெய ஸ்தானங்கள். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் வரும்போது கூறு பொன் பொருண்டாம் குறைவிலாச்ச செல்வம் உண்டாம் ஏறு பல்லக்குண்டாம். இடம் பொருள் ஏவலுண்டாம். காறு பாலாஷ்ட லட்சுமி கடாட்சமும் உண்டாகும் தானே'' என்பது பாடல். 6-ஆமிடத்துச் சனி 3-ஆமிடம், 8-ஆமிடம், 12-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் சகோதரம், சகாயம், தைரிய வீர்ய ஸ்தானம். தெம்பு குறைந்த உங்களுக்கு இனி நம்பிக்கையும் பலமும் தைரியமும் உண்டாகும். நமக்கும் எதிர் காலம் உண்டு. வாழ்வும் உண்டு என்ற உற்சாகமும் ஊக்கமும் உண்டாகும். நண்பர்கள்வகையில் சகாயமும் உண்டாகும். 8- என்பது சஞ்சலம், விபத்து, பீடை, கண்டம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆயுள் விருத்தியாகும். விபத்து விலகும். போராட்டமும் ஓயும். நஷ்டம் மாறி லாபம் ஏற்படும். 12-ஆமிடம் என்பது விரயம், வெளியூர் இடமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும். வேலை, உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் செல்லலாம். அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புராண காலத்தில் அம்ள் மகிஷாசுரமர்த்தினி அவதாரம் எடுத்து அசுரர்களை வதம் செய்தமாதிரி கெட்ட ஸ்தானங்களின் கெடுபலனைக் கெடுத்து ராசிக்கு நற்பலனைக் கொடுக்கும். நோய் நொடி நீங்கும். கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் பகுதியிலுள்ள பர்வதவர்த்தினி இராமநாத சுவாமி ஆலயத்தில் மங்கள சனீஸ்வரரை வழிபடவும்.
விருச்சிகம்
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ஆமிடத்தில் ஆட்சியாக இருந்த சனிபகவான் இப்போது 5-ஆமிடத்துக்கு மாறுகிறார். 4-ல் சனி இருந்த காலம் தேக ஆரோக்கியத்தில் அவதி, வேலையில் தொந்தரவு, வீடு, மனை சார்ந்த வகையில் பிரச்சினைகள் ஆகியவற்றை சந்தித்தீர்கள். இப்போது 5-ஆமிடமான பஞ்சம ஸ்தானத்தில் வரும் சனிபகவான் கடந்த கால துன்பங்களைத் துடைத்து உங்கள் எண்ணங் களையும் திட்டங்களையும் ஈடேற்றுவார். இழந்த கௌரவங்களையும் பதவிகளையும் திரும்ப பெறச் செய்வார். கடன்களை அடைக்கலாம். தொழில் முன்னேற்றம் அடையும். தன வருமானத்தைப் பெருக்கலாம். மீனச் சனி 2-ஆமிடம், 7-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் பேச்சுக்கும் சொல்லுக்கும் முக்கியத் துவம் உண்டாகும். அதேநேரம் பேச்சில் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். அவச் சொல் சொல்வதையும் நிறுத்த வேண்டும். ஆன்மிகம், ஜோதிடம், பக்தி போன்றவகையில் ஈடுபாடும் உண்டாகும். 4-ல் இருந்த சனியால் தடைப்பட்ட மேற்படிப்பை மீண்டும் தொடரலாம். 7-ஆமிடம் களத்திர ஸ்தானம். கணவன்- மனைவி ஸ்தானம். திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்- பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் கைகூடும். திருமணத் தடையும் விலகும். கணவன்- மனைவிக்குள் சில நேரம் கருத்து வேறுபாடு உண்டானாலும் அன்யோன்யம் பாதிக்காது. நண்பர்கள் வகை ஒத்தாசைக்கும் இடமுண்டு. உபதொழி-லும் முன்னேற்றம் உண்டாகும். 11-ஆமிடத்தைச் சனி பார்ப்பதால் லாபம் உண்டாகும். வீடு, மனை, நிலம் முத-யவற்றை விற்று லாபம் தேடலாம். அதை வேறுவகையில் முதலீடு செய்யலாம். அல்லது சொத்துப் பரிவர்த்தனை செய்யலாம். உடன்பிறந்த வகையில் அபிப்பிராய பேதங்கள் மாறி நடப்பும் உறவும் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சாதகமாக முடியும். திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும் சனீஸ்வரரையும் வழிபடவும்.
தனுசு
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சியாக இருந்த சனிபகவான் இப்போது 4-ஆமிடத்துக்கு மாறி அர்த்தாஷ்டமச் சனியாகிறார். 3-ல் சனி இருந்தபோது தைரியம் நன்றாக இருந்தது. "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை'' என்ற பாடல்போல உங்களது வாழ்க்கை செயல்பட்டாலும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான ஒரு சூழ்நிலைகளையும் சந்தித்தீர்கள். சில நேரங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும் எதிர்கொண்டீர்கள். அந்த நிலைக்கும் உங்கள் நடவடிக்கைதான் காரணமாக அமைந்தது. இனி 4-ல் வரும் சனி 2, 3-க்குடையவர். பூமி, மனை சார்ந்தவகையில் தன வருமானம் உண்டாகும். நீண்ட நாள் பூட்டியிருந்த வீட்டை சரிசெய்து வாடகைக்கு விட்டு அதன்மூலம் தனவரவு ஏற்படுத்தலாம். தாயாருக்கு உடல்நலக் குறைவு உண்டாகும். ஜனன ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தாயாருக்கு கண்டம் ஏற்பட நேரிடும். 4-ஆமிடத்து சனி ஜென்ம ராசி, 6-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 1-ஆமிடத்தைப் பார்க்கும் சனி நீங்கள் அறியாமல் செய்த நடவடிக்கையால் ஏற்பட்ட காயத்திற்கு ஆறுதல் அளிக்கும்வகையில் உங்கள் மதிப்பு, மரியாதையை உயர்த்துவார். நாணயத்தையும் காப்பாற்றலாம். 6-ஆமிடம் என்பது கடன், போட்டி, எதிரி, வைத்தியச் செலவு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். தொழில்துறை மேன்மை உண்டாகும். வைத்தியச் செலவு விலகும். போட்டி, பொறாமைகள் அகலும். தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு 6-ஆமிடம் பாக்கிய ஸ்தானம் என்பதால் மேற்கூறிய தொழில் மேன்மை நன்மை தரும். 10-ஆமிடத்தைப் பார்க்கும் சனி உத்தியோக இடமாற்றத்தைத் தரும். தொழில்துறையில் நிலவிய கஷ்டங்களும் பிரச்சினைகளும் பொருளாதாரத் தடைகளும் இனி விலகும். அரசு ஆணையால் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் திருப்பம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியி-ருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எட்டியத்தளி சென்று சனீஸ்வரரை வழிபடவும்.
மகரம்
கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை படாதபாடுபடுத்திய சனிபகவான் இம்மாதம் 6-ஆம் தேதிமுதல் விலகி ஏழரைச் சனியில் இருந்து விடுதலை அளிப்பார். ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டத்தில் நன்மைகளை அனுபவித்தவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் வாழ்வா? சாவா? போராட்டத்தை சந்தித்த நிலை! தொழில் முடக்கம், அவமானம், இடமாற்றம், அலைச்சல் போன்ற சங்கடங்களை சந்தித்த நிலை மாறி ஒரு சுதந்திரப் பறவைபோல சுதந்திரமாக செயல்பட சனிபகவான் கருணைபுரிவார். 3-ல் வரும் சனி மனதைரியத்தை அதிகப் படுத்துவார். நண்பர்களால் சகாயம் உண்டாக்குவார். சகோதர- சகோதரிவகையில் நற்பலன் நடைபெறும். அதற்கு உங்களது உறுதுணையும் செயல்படும். 3-ஆமிடத்து சனி 5-ஆமிடம், 9-ஆமிடம், 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-ஆமிடத்தைப் பார்க்கும் சனி நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அந்தவகையில் அருள்புரிவார். பூர்வீகச் சொத்துவகையில் வில்லங்கம் ஏற்பட்டு விலகும். பிள்ளைகள் வகையில் நற்பெயரும் நன்மையும் ஏற்படும். 9-ஆமிடத்தைப் பார்க்கும் சனி தந்தைவழியில் ஆதாயத்தைத் தருவார். தெய்வீக ஆலய யாத்திரை உண்டாகும். நீண்டகாலமாக நிறைவேற்றாம-ருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். சிலநேரம் தந்தைக்கு மருத்துவச் செலவு வந்துவிலகும். 12-ஆமிடத்தைப் பார்க்கும் சனி வீண் விரயங்களை அதிகமாக்கினாலும் அதை சுப விரயமாகவும் மாற்ற வழிவகைகளைத் தருவார். புதிய வீடு குடியிருப்பு உண்டாகும். அல்லது பழைய வீட்டை பழது செய்யும் பணி ஏற்படலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சிகளும் கைகூடும். ஏழரைச்சனி முடியும்போது திருநாள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரையும் சனீஸ்வரரையும் வழிபடவும்.
கும்பம்
இதுவரை ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் இம்மாதம் 6-ஆம் தேதி 2-ஆமிடத்துக்கு மாறுகிறார். உங்களுக்கு ஏற்கெனவே ஏழரைச்சனி நடக்கிறது. அதில் ஐந்து வருடம் முடிந்தது. இன்னும் இரண்டரை வருடம் பாக்கி இருக்கிறது. ஏழரைச்சனி ஆரம்பம் உங்களுக்கு தொழில் யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், சொந்த வீட்டுக்கு குடிபோனது மாதிரியான நற்பலனைக் கொடுத்தது. ஜென்மச் சனியாக வந்தபோது தொழில்துறையில் எதிர்பாராத கடனாளியாக்கியது. உறவுகளிலும் மனக் கசப்புகளை சந்திக்க வைத்தது. இப்போது 2-ஆமிடத்து சனி. இது பாதச்சனி எனப்படும். இதனால் பெரிய நன்மை என்று சொல்லமுடியாமல் போனாலும் பெரிய கெடுதல் நேராது என எதிர்பார்க்கலாம். 2-ஆமிடத்து சனி உங்கள் பேச்சில் அனலைக்கக்குமாறு வார்த்தைகளைத் தருவார். உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக்கொள்வதும் வாக்கில் நிதானத்தையும் கடைபிடிக்கவும், 2-ல் உள்ள சனி 4-ஆமிடம், 8-ஆமிடம், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். 4-ஆமிடம் பூமி, மனை, வாகன ஸ்தானம். உடல்நலத்தில் நிலவிய வைத்தியச்செலவுகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். தாயாருக்கு சற்று மருத்துவச்செலவு ஏற்படும். அதேசமயம் புதிய வீடு குடிபோகலாம். அதற்குண்டான கடனுதவியும் கிடைக்கும். 8-ஆமிடம் ஆயுள் ஸ்தானம். ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத் தைப் பார்ப்பதால் ஆயுள் விருத்தி உண்டு. அவ்வப்போது வீண் மனக்கவலைகள், கற்பனை பயம், சஞ்சலம் ஆகியவற்றை சந்திக்க நேரும். வாகனத்தில் கவனம் தேவை. 11-ஆமிடத்தை சனி பார்ப்பதால் மூத்த சகோதரவழியில் நன்மைகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வில்லங்க, விவகாரம் அனுகூலமாக முடியும். சந்திர தசையோ- சந்திர புக்தியோ நடப்பவர்கள் சிவன் கோவி-ல் ருத்ர ஹோமம் செய்து சுவாமி அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவும். சனிக்கிழமை தீபமேற்றி வழிபடவும்.
மீனம்
இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ல் இருந்த சனி இப்போது ஜென்ம ராசியில் மாறியிருக்கிறார். ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தது. வீண் விரயம், அலைச்சல், தொழில் மாற்றம், உத்தியோக இடமாற்றம், அலைக்கழிப்பு ஆகியவற்றை சந்தித்தீர்கள். படிக்கும் மாணவ- மாணவியருக்கு படிப்பில் கவனமின்மை, மந்தம் போன்ற பலன்களை சந்தித்தனர். ஜென்மச் சனியின் இக்காலம் கெடுதல் செய்யும் என்பதில்லை. நல்லதும் செய்ய வாய்ப்பிருக்கிறது. "ஜென்மச்சனி சீரழிக்கும்' என்பது பொதுவிதி. மீன ராசிக்கு சனி 11, 12-க்குடையவர் லாபாதிபதி, விரயாதிபதி. அதனடிப்படையில் நன்மை- தீமை கலந்து செயல்படும். ஜென்மச்சனி 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடங்களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் என்பது சகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம், தைரிய ஸ்தானம். அந்த இடத்தைச் சனி பார்ப்பதால், சகோதர ஒற்றுமை உண்டாகும். பகையும் வருத்தமும் மாறும். தைரியமும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். இராமாயணத்தில் இராமனோடு சேர்ந்து கஷ்டப்பட்ட தம்பி லட்சுமணனும் உண்டு. இராமன் பாதுகையை வைத்து அரசு யோகத்தைக் கட்டிக்காத்த பரதனும் உண்டு. அவரவர் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து அந்த நன்மை- தீமை நடக்கும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் சனி காலதாமதமான திருமணத்தை நிகழ்த்தும். 5-ல் வரும் உச்ச குரு திருமண யோகத்தைத் தருவார். 10-ஆமிடம் தொழில் ஸ்தானம். தொழில் மேன்மை, புதிய தொழில் யோகம், நடந்துவரும் தொழி-ல் முன்னேற்றம், லாபம், புதிய முயற்சியில் வெற்றி போன்ற பலன்கள் உண்டாகும். சிலருக்குத் தொழில் அல்லது குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். அடிமை வேலையில் இருப்போர் கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு உண்டாகும். நாகர்கோவில் அருகில் சுசீந்திரம் சென்று ஆஞ்சனேயரை வழிபடலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
செல்: 99440 02365
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/monthrasi-2026-02-28-16-57-03.jpg)