​சூரியனின் மைந்தன் சனி. சனியின் மைந்தன் மாந்தி (எ) குளிகன். மாந்தி, சனியின் துணைக்கோள். இதனைப் பகலில் பிறந்தவர்களுக்குக் குளிகன் என்றும், இரவில் பிறந்தவர்களுக்கு மாந்தி என்றும் கூறுவர். எந்நேரமும் இருப்பவர் இக்குளிகன். இதனை உதய காலத்தை வைத்துக் கணக்கிட்டு எந்த ராசியில், அந்தப் பாகை- கலையில் உள்ளார் என்பதனைக் குறிப்பிடுவர்.
​கேரள சோதிடத்தில், இந்த மாந்தி (எ) குளிகன், மிக முக்கியப் பங்கு வகிப்பதுடன், அங்குள்ளவர்கள் இந்தத் துணைக் கோளைத் தவறாமல் ஜாதகத்தில் குறித்துவிடுவர். பிரசன்ன சோதிடத்தில், இந்தத் துணைக் கோளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
​இவர், மரணத்திற்கு காரகம் வகிப்பவர். பிறரைத் துன்பப்படுத்தி இன்பம் காண்பவர். மரணத்தையோ (அ) மரணத்திற்கு இணையான கண்டத்தை அளிப்பதிலோ இந்தத் துணைக் கோளுக்கும் பங்கு உண்டு. குளிகன் காலத்திற்கு காரகமானவர். இவருக்கு 2, 7, 12-ஆம் பார்வைகள் உண்டு என்றாலும், சப்தம பார்வை உறுதியாக உண்டு.
​மாந்தி, தான் இருக்கும் பாவத்தை அதன் காரகத்துவத்தைக் கெடுக்கக் கூடியவர். இணைந்த கிரகத்தின் உறவு முறையையும், மற்றும் காரகத்துவத்தையும் கெடுக்கக் கூடியவர். முற்பிறவி கர்ம பலன் களைக் கணிக்க உதவுபவர். இவர் திரிகோண ஸ்தானங்களில் இருப்பின், ஏன் பிறந்தோம் என்ற அளவிற்கு வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். உப ஜெய ஸ்தானங்களிலோ (அ) பதினோராமிடத்திலோ இருப்பின் நன்று எனக் கூறுவர். இதிலும், பதினோராமிடம் மாந்திக்கு மிகவும் பிடித்த இடம் என்றும், அதற்குப் புராணக் கதைகளையும் கூறுவர். ஆயினும், இந்தக் கூற்று அனுபவத்தில் சரியாக இல்லை.
இனி எந்தப் பாவங்களில் இவர் இருந்தால் என்ன பலன் என்பதனையும், எந்தக் கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் என்பதையும் பார்ப்போம்.
லக்னத்தில் மாந்தி இருப்பின் தெய்வ அருள் இல்லாதவர். முரட்டுத்தனம் அதிகமுடையவர். உடல்நிலை பாதிப்பு இருக்கும். தீய பழக்கங்கள் ஏதேனும் இருக்கும். குண சீர்கேடு உண்டு. இரண்டாமிடத் தில் இருப்பின் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு (அ) ஒற்றுமை இருக்காது. சேமிப்பும் இருக்காது, பட்டம் பெறுவதற்குள் கல்வி தடை ஏற்படும். மூன்றாமிடத்தில் இருப்பின், இளைய சகோதரம் எதிரியாவார். புதனும் பலமிழந்திருப்பான், நண்பர்களே துரோகியாவர். நான்காமிடத்தில் இருப்பின் பூமி, வாகனச் சொத்துகளும் உண்டு, பிறந்த ஊரில் வசிக்க இயலாது. அனுபவிப்பதில் தடை, தாமதம் உண்டு. ஐந்தாமிடத்தில் இருப்பின் பித்ருச் சாபம், புத்திர தோஷம் (அ) புத்திரர்களால் குடும்பத் தில் பிரச்சினை (அ) பாதிப்பு உண்டு. ஆறாமிடத்தில் இருப்பின், எதிரிகள் பணிவர், ஆயினும் வாழ்வில் கடன் உண்டு. ஏழாமிடத்தில் இருப்பின், கணவன்- மனைவி உறவில் பாதிப்புகளையும், திருமணத் தடை தாமதங்களையும் ஏற்படுத்தும். கூட்டுத் தொழில் கூடாது. வயிற்றின் கீழ்ப் பகுதியில் நோய் ஏற்பட்டு விலகும்.
அஷ்டம ஸ்தானத்தில் இருப்பின், நீரினால் கண்டம் உண்டு. வாழ்வில் தசாபுக்திகேற்ப யோகத்தைப் பெற்றாலும் ஒருமுறையேனும் வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும்.
​ஒன்பதில் இருப்பின், தந்தையினால் பாதிப்பு (அ) பயன் ஏதும் இல்லை என்ற நிலையோ, தந்தைவழிச் சொத்துகளை அடைவதில் பிரச்சினைகளும், சரியான பங்கு கிடைக்காமையோ (அ) அதில் வில்லங்கங்களோ இருக்கும். பொதுவாக ஒன்பதில் மாந்தி இருந்தாலே முற்பிறவி பாவ கர்ம அனுபவிக்கவே பிறந்தவர் எனலாம். பத்தாமிடத்தில் இருப்பின், சிக்கனமானவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்; ஆயினும், துரோகமிழைக்கவும் தயங்காதவர். பதினோராமிடத்தில் இருப்பின், பெரும் செல்வம், செல்வாக்கு உடையவர். சிலர் தலைமைப் பதவிக்கும் வரக்கூடும். ஆயினும், இங்கு இணைந்த கிரகம், பாதக ஸ்தானம் போன்றவற்றையும் ஆராயத்தான் வேண்டும். விரய ஸ்தானத்தில் இருப்பின், குடும்பத்தில் நிம்மதியின்மை மற்றும் வீண் விரயமும் உண்டு.
​ஒரு கிரகத்திற்கு முன் (அ) பின், ஐந்து பாகைக்குள் மாந்தி இருப்பின், அதனை முழுமையான இணைவு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
​மாந்தி, சூரியனுடன் இணைந்தால், மன அழுத்தம் உண்டு. தந்தை, மகன் உறவில் விரிசல், பிதுர் தோஷம், குலதெய்வ தோஷம் மற்றும் அரசு வழியிலும் ஆதாயமில்லை. சந்திரனுடன் இணைந்தால், மன அழுத்தம், தாய்க்கு உடல்நலப் பாதிப்பு, வீடு போன்ற சொத்துகளில் பிரச்சினை, விவசாயத்தில் நஷ்டம் போன்றவை உண்டு. செவ்வாயுடன் இணைந்தால், முன்கோபி. சகோதரம், பூமி, எலும்பு மஜ்ஜை, ரத்தம் போன்றவற்றினால் பிரச்சினைகள் உண்டு. சிலருக்கு, மற்ற கிரக நிலைகள் தசாபுக்தி கோட்சாரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை (அ) விபத்தும் நேரிடலாம்.
​புதனுடன் இணைந்தால், அறிவுத் கூர்மை இருக்கும்; மகள் (அ) மாமன்வழியில் பிரச்சினைகள் இருக்கும். குறுக்குவழியில் சாதிக்கும் எண்ணமும் இருக்கும். குருவுடன் இணைந்தால், தெய்வ நம்பிக்கை குறைவு உண்டு. குண சீர்கேடு, புத்திர வழியில் பிரச்சினைகள், விபத்து (அ) கண்டத்தினைச் சந்திக்க நேரிடும். சுக்கிரனுடன் இணைந்தால், காம எண்ணம் அதிகமுடையவர். களத்திர காரகனெனில், வாழ்க்கை துணையினால் பிரச்சினைகள், வசதியான வாழ்வு வாழ எதுவும் செய்யலாம், எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் இருக்கும். சனியுடன் இணைந்தால், விபத்து, கண்டம், ஆயுள் பயம், அவமானம், காராகிருஹ வாசம், உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, அங்கீகாரம் இல்லாமை போன்றவையும் இருக்கும். ராகுவுடன் இணைந்தால், போகத்தின்மூலம் சீரழிவு, சட்டத்திற்குப் புறம்பாக நடத்தல், காராகிருஹ வாசம், தான் வாழப் பிறரைக் கெடுக்கும் குணம் போன்றவை இருக்கும். கேதுவுடன் இணைந்தால், தெய்வத்துடன் ஒன்றுதல், உலக வாழ்வில் பற்றினைத் துறக்க வைத்தல், பொருளாதார ஆர்வமின்மை போன்றவை இருக்கும்.
செல்: 63824 12545.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/manthi-2026-01-22-12-00-39.jpg)