ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப்பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
"எவ்வளவு பெரிய மாவீரன் தலை அரிந்து பட்டாரே!' எனக் கதறினார்கள். ஏனென்றால், மதுரை புறநகர் பகுதியில் பெரிய ஏரி உருவாக்கி, வைகை ஆற்றுநீரை அதில் பெருக்கி, நாட்டாற்றுப்புற வேளாண்மை யைச் செழிக்கவைத்து, மதுரை மாநகர உணவுத் தேவைகளுக்கு அதிகமான உணவு தானிய உற்பத்தியைச் செய்து தந்தவர். பேரரசின் வலிமையான தூணாகத் திகழ்ந்து பாண்டியப் பேரரசரின் நெருங்கிய நண்பனாகவும், அவரின் நிழல்போல் இருந்து பல போர்களில் அவரைப் பாதுகாத்தவர் தத்தன் ஆவார்.
"எது நடந்துவிடக்கூடாதெனக் கருதி விரைந்து இங்கு வந்தேனோ அது நடந்து விட்டது' எனக் கூறிக்கொண்டு ஏகன் ஆதனார், தன் பார்வையால் சுற்றும் முற்றும் தேடினார். அடுத்த நிகழ்வாக மன்னரின் மற்றொரு மெய்க்காப்பாளர் புள்ளன், தன் இடது கையால் தனது உச்சிக்கொண்டையைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் தனது உறையிலிருந்து உருவிய உடைவாளால் தன் கழுத்தை அறுத்து, தான் மன்னனைக் காப்பாற்ற முடியாமல் போனதால் அரிகண்டம் கொடுக்க ஆயத்தமடைவதைக் கண்ணுற்றார்.
"புள்ளரே! அரிகண்டத்தை நிறுத்திவிடும். பாண்டியப் பேரரசு சரிந்து வீழ்வதைக் கண்ணுற்றபோதும் அதைத் தடுத்துக் காக்கும் கடமையைத் தவறவிடுகிறீர் கள்' என உரக்கக் கூறிக்கொண்டே, தனது அருகிலிருந்த கடம்பர்களிடம் தத்தனின் உடலைத் தாங்கச் செய்துவிட்டு புள்ளனை நோக்கிப் பாய்ந்தார். அவரது வலது கரத்தை வளைத்து இறுகப் பிடித்துக்கொண்டு "அறிவீலியாக நீர் ஆகிவிட்டீர். மன்னரின் உயிராக இளவல் இருப்பதை மறந்துவிட்டீர். அவரை இப்போது நாம் காப்பாற்றியாக வேண்டும். இந்நகரைச் சுற்றிப் பகைவர்கள் சூழ்ந்துவிட்டனர். உங்களது கடமை இனிமேல்தான் உயிர் பெறவேண்டும். மூடர்களாக இனி மெய்க்காப்பாளர்கள் யாரும் அரிகண்டம் செய்துவிடாதீர்கள். போர் மூளும் அறிகுறிகள் தென்படுகின்றன. பாண்டியப் பேரரசைப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்க உங்கள் ஆற்றல், அறிவுத்திறன்கள் அனைத்தையும் இனிமேல்தான் பயன்படுத்தவேண்டும். மெய்க்காப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடுங்கள். இளவலையும் அரச குடும்பத்தாரையும் எந்தவித சிறு தீங்கும் ஏற்படாவண்ணம் தலைநகருக்குக் கொண்டுசெல்ல வேண்டும். உங்களது வீரத்தையும் கடமை உணர்வுகளையும் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் காட்டுங்கள்' என குரு ஏகன் ஆதனார் உரத்த குரலில் தன் வேண்டுதல்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே, பழையன் மாறன், அரசியார், இளவல் ஆகியோர் அங்கு வந்துசேர்ந்தனர். இளவலைப் பார்த்த ஏகன் ஆதனார், அவனைக் கட்டியணைத்து "நீ ஒரு மாவீரன். இனி உன் தந்தையார் இருந்த இடத்தில் நீ இருக்கப்போகிறாய். நீ மனம் கலங்கக்கூடாது. நாங்கள் அனைவரும் உன்னுடனே இருக்கிறோம். நாம் மதுரைக்கு உடனே செல்லவேண்டும். என்னுடனே நீ பயணத்தின்போது இருக்கவேண்டும்' எனக்கூறிக்கொண்டே, தன்னருகில் இளவலை வைத்துக்கொண்டார்.
அரசியார் ஏகன் ஆதனாரையும் மன்னரின் உடலையும் பார்த்துக் கதறி அழுதார். "ஆதனாரே உங்கள் உயிர் நண்பர் உங்கள் பேச்சொலியைக் கேட்டும் கண் விழிக்க வில்லையே, ஒரு கணப்பொழுதில் எல்லாம் நடந்துவிட்டதே...' எனக் கூறிக்கொண்டு, தன் கணவரின் மார்பில் வீழ்ந்து கதறினார். நானும் அரசருடன் எரியூட்டிக்கொள்ள விரும்புகிறேன்' எனக்கூறியபடியே, அவரது உடலோடு உடலாக உறைந்தார்.
"அரசியாரே, உங்கள் பேரரசரின் உயிராகவும் வடிவாகவும் உங்கள் இளவல் இருப்பதை மறந்துவிட்டீர்கள். உங்கள் மன உறுதியில்தான் இளவல் மனம் தளராதிருக்கவேண்டும்' என ஏகன் ஆதனார் கூறியது, தன் காதுகளில் விழுந்தபோது, அரசியாரின் மனம் தன் கடந்த காலத்திற்குக் கடந்துசென்றது.
"மன்னவனும் தானும் களவியல் ஒழுக்கத்தில் காதல் கொண்டிருந்தபோது, தன்னை அவர் காணமுடியாத காலத்தில் அவர் முகம் கருத்து வாடிவிடும். ஏற்பாட்டில் இருவரும் சந்திக்கையில் கருத்திருந்த அவர் முகம் மலரும். இதுபோல் தென்னவன் இப்போது தன்னைவிட்டுப் பிரிந்ததால், அவரது முகம் நிரந்தரமாகக் கருகிவிட்டதோ? ஏன் இந்த நிலையைக்காலம் நமக்குத் தந்துவிட்டது' என நினைத்து, தன் கணவன் முகத்தின்மீது தன் முகத்தைப் புதைத்துக் குமுறி அழுதார்.
அரச வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரசியாரின் முகத்தை மடவை யர்கள் பேரரசரின் முகத்திலிருந்து மெல்லத் தூக்கினார்கள். அந்த நேரத்தில் "தத்தனாரே! நீர் எங்கே எம்மன்னரின் நிழலாகவே எப்போதும் இருப்பீரே! நம் மன்னரை எழச் செய்யுங்கள்!' எனக் கதறினார். அப்போது மன்னவர் சாய்ந்திருந்த பல்லக்கில் அரிகண்டமிட்ட தத்தனின் தலையை ஒரு கடம்ப வீரன் தன் இரண்டு கைகளில் ஏந்திவந்து வைத்தான். அரசியாரின் முடி படர்ந்த முகத்தில் முடிகளுக்கு ஊடே அரிகண்டமிட்ட தத்தனின் தலை தெரிந்தது. அதை உணர்ந்த அரசியார் "அய்யய்யோ! தத்தனாருக்கு என்ன நடந்துவிட்டது? இளவலின் தாய்மாமனாய் இருந்து இளவலை வளர்த்தவர். இவருக்கு நடந்தது என்ன?' என அரசியார் பரிதவித்தபோது "அன்னையே! இவர் மன்னருக்காக அரிகண்டம் செய்துவிட்டார்' என ஒரு மடவை அரசியாரின் காதில் கூறினார்.
மற்ற மெய்க்காப்பாளர்கள் எங்கே என்பதுபோல் அரசியாரின் விழிகள் சுற்று முற்றும் தேடியது. அப்போது ஏகன் ஆதனார் "இதோ தோடன், தனக்கன், அதிதன், மாடன், ஆதனூர் ஆதன், காக்கன், புள்ளன். இவர்கள் யாவரும் தம் மன்னரின் உயிர் காக்க இயலாமல் போனதால், தாங்களும் அரிகண்டம் செய்ய ஆயத்தமடைகிறார்கள். நீங்கள்தான் இவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். இவர்கள், பாண்டியத்தலைநகரின் தூண்களாக இருப்பவர்கள். நீங்கள் மனம் தளர்ந்தால் இவர்களும் மனம் தளந்துவிடுவார்கள். பாண்டியப் பேரரசில் நிம்மதியாக வாழும் மக்கள் அனைவரும் உங்கள் பிள்ளைகள். இரவு- பகல் பாராமல் கண்விழித்துக் காக்கும் மீனாட்சியை இலச்சினையாகக் கொண்ட நாம் கண்மூடலாமா? இக்கணம் நாம் விழித்தெழுந்து பேராண்மையுடன் பாண்டியப் பேரரசை பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டும்.
அதற்காக இவர்கள் ஆயத்தமடையக் கட்டளையிடுங்கள். நாம் விரைவில் மதுரையம்பதியைச் சென்றடைய வேண்டும்' எனக்கூறிக் கொண்டிருக்கும்போது, யானைப் படைகளோடு தீவெட்டிகள் ஏந்தி ஏகன் ஆதனார் கோட்டத்திலிருந்த சீராள குருமார்கள் மருங்கூர்ப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
அதிலிருந்த தலைமைச் சீராள குரு, ஏகன் ஆதனாரிடம் வந்து "இந்நகரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தாங்கள் மதுரையம்பதிக்குப் புறப்படுங்கள்' எனக் கூறியபோது, அங்கு வந்திருந்த மற்றொரு சீராள குரு, கூட்டத்தினூடே அமர்ந்திருந்த ஒருவனின் இடுப்பின்மீது தன் குதிரையிலிருந்து குதித்து அவனை இறுகப்பிடித்தார்.
"கூட்டத்திற்குள் எவ்வியின் ஆட்கள் புகுந்துவிட்டனர். இவனைப் பாண்டியர் மாளிகைக்குள் இழுத்துச் செல்லுங்கள்' எனக் கடம்பர்களுக்கு உத்தரவிட்டார். கடம்ப வீரர்கள் அவனைப் பிடித்து இழுத்துச் செல்லும்போது, குட்டையான தோற்றமுடைய அவன் முதுகிலிருந்த தோல் பையிலிருந்து குடுவைகளும் குறுவாட்களும் சிதறி விழுந்தன. உடனே அரச மருத்துவர்கள் கைப்பற்றி குடுவைகளைத் திறந்து ஆய்வு செய்யும்போது, அவற்றில் பாம்பின் விஷமும், விஷம் தடவப்பட்ட குறுவாட்களாக இருக்கலாம் எனவும் யூகித்துக் கூறினர்.
அவர் கூறியவுடனேயே இளவலையும் அரசியாரையும் 50-க்கும் மேற்பட்ட கடம்ப வீரர்கள் சுற்றி நின்றுகொண்டனர்.
குரு ஆதனார் தலைமைப் பறையரிடம் "மதுரையம்பதியிலிருந்து வந்திருக்கும் மக்கள் அனைவரும் புறப்படத் தயாராகுங்கள்' எனப் பறையறிவிக்குமாறு கட்டளையிட்டார். காயமடைந்த உயிர்நீத்த அனைவரையும் சாத்து வண்டிகளில் ஏற்றுமாறு சீராள தலைமை குரு கட்டளையிட்டார். வந்திருந்த சீராள குருமார்கள், கூட்டத்தினூடே குதிரைகளைச் செலுத்தி கூட்டத்தின் புறப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்தனர்.
பறையறிவிப்பைக் கேட்டவுடன், மக்கள் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு புறப்படத் தயாராகினர். சாத்துவண்டிகளை வரிசையாக வரவழைத்து, அதில் அத்தணை மக்களையும் அவர்கள் உடைமைகளையும் பரிசோதித்து, சீராள குருமார்களுடன் வந்த வீரர்கள் ஏற்றி அமர்த்தினர். குதிரைகள் மீதும் யானைகளின்மீதும் அமர்ந்தவாறு அத்தனை நிகழ்வுகளையும் சீராள குருமார்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.
"கடம்ப வீரர்களின் அணிவகுப்பு நடக்கட்டும். அதன்நடுவே மன்னவரின் பல்லக்கும், அதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினரின் ரதங்களும், அதனைப் பின்தொடர்ந்து சாத்துவண்டிகளும் புறப்படட்டும்' என குரு ஏகன் ஆதனார் கட்டளையிட்டார்.
அதன்படி பெருவழிப்பாதையின் இருமருங்கும் கடம்ப வீரர்கள் அணிவகுத்து நின்றநிலையில், மன்னவரின் பல்லக்கு தீவெட்டிகள் புடைசூழ நெடுமிடல் இருந்த மேடையின்முன்பு அவருக்கான இறுதி வணக்கம் செய்வித்து புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரச குடும்பத்தினர்கள் செல்லும் ரதங்களும், இறுதியாக பழையன் மாறனின் இரதமும், அதன்பின் ஏகன் ஆதனாரும் இளவலும் அமர்ந்து சென்ற ஆறு களிறுகளும் தயார் நிலையில் இருந்தன. அகிற்புகையும் சாம்பிராணி புகைகளும் காட்டப்பட்டு, துடி வாசிக்கப்பட்டு, பேய் மகளிர்களின் துணங்கைக் கூத்துடன், மன்னவர் முன்னால் சங்கங்கள் முழங்க, அவருக்கென்று சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட இரத்தத்தில் பல்லக்கு ஏற்றப்பட்டு, மதுரை மாநகரை நோக்கிப் பயணம் புறப்பட்டது.
அரிகண்டம் தந்த தத்தனுக்கு மன்னவன் அருகிலே பஞ்சணை அமைக்கப்பட்டு, வழிநெடுகிலும் மலர்களும் யாழிசைகளும் சங்கங்களும் தீவெட்டி வெளிச்சங்களும் படைவீரர்களின் புடைசூழ, மதுரை மாநகரை நோக்கி நீண்ட நெடுவரிசையாக சாத்துவண்டிகளும் சென்றன.
சீராள குருமார்கள் அனைவருக்கும் விடைகொடுத்துவிட்டு மருங்கூரில் சேனாதிபதிக்கு செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளில் ஈடுபட்டனர்.
இவ்வதிர்ச்சியுடனே அடுத்த இதழில் தொடர்வோம்!
(இன்னும் விரியும்...)
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்