இன்றைய காலகட்டத்தில் பெண்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் மற்றும் இரு தரப்பு பெரியோர்களும் கூடிப் பேசி, ஜாதகப் பொருத்தம் பார்த்து சம்பிரதாயத்திற்கு உட்பட்ட வகையில், குலதர்மத்துடன் செய்யப்படும் கன்னிகா தானம் திருமணங்கள் பெருமளவு குறைந்துகொண்டே வருகின்றன.
பெற்றோர்களைத் தவிர்த்து ஒரு ஆணும், பெண்ணும் மனம் விரும்பி தாமாகவே செய்துகொள்ளும் காந்தர்வ திருமணங்கள் அதிகளவில் பெருகிவருகின்றன.
நமது முன்னோர்கள் திருமணத்தை எட்டுவிதமாக பிரித்தனர்.
1. ஆஹுயம்
2. அபிகமியம்
3. காந்தர்வம்
4. கர்ப்ப நிச்சிதம்
5. ஸ்வயம்வரம்
6. குரு நியமனம்
7. தெய்வ நியமனம்
8. கன்னிகா தானம்
இவையனைத்தும் இன்றைய நடைமுறையில் இல்லையென்றாலும், ஒருசில திருமண முறைகள், இன்றளவும் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதுதான் "காந்தர்வம்' எனும் காதல் திருமணங்கள்.
சரி; காதல் அனைவருக்கும் வருமா? என்ன சார், காதலிக்காதவங்க யார்தான் இருக்கிறாங்க என, நீங்கள் கேட்பது, என் காதில் விழுகிறது. காதலிப்பவர்கள், பெரும்பான்மையோர் இருக்கலாம். அதற்காக எல்லாரும் காதல் வயப்படுபவர்களாக இருப்பார்கள் என்றும், எப்படி உறுதியாக சொல்லமுடியும்? எதிர்ப்படும் பெண்களையெல்லாம், காதலிப்பவர்களும் உண்டு; காதல் என்றால் என்னவென்று அறியாதவர்களும் உண்டு.
"அன்னை' என்னும் பழைய திரைப்படம் ஒன்றில், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடுவதுபோல, ஒரு அற்புதமான பாடல் ஒன்றை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.
"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்துபோவதில்லை''
- எத்தனை அற்புதமான வரிகள்!
சரி, விஷயத்திற்கு வருவோம். ஜோதிடரீதியாக, சில கிரகச் சேர்க்கைகள் காதலை ஏற்படுத்தி தரக்கூடியவைகளாக உள்ளன.
சந்திரன்- மனதை ஆளக்கூடியவர்.
செவ்வாய்- வீரயத்தை தரக்கூடியவர்.
புதன்- எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.
சுக்கிரன்- காதல், காமத்தை தரக் கூடியவர்.
கேது- குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன், புதன் சேர்க்கை காதலை ஏற்படுத்தக் கூடியதாகும். இச் சேர்க்கை அப் பெண்ணிற்கு நல்ல அறிவை ஏற்படுத்தி தரும். கூடவே, சில மறைமுக விஷயங்களையும் தரக்கூடியது. பொய் நிறைய சொல்வார்கள்.
புதன்- செவ்வாய் சேர்க்கை பெண்களின் ஜாதகத்தில் இருந்தால், பொறியியல் படிப்பு ஏற்படும். ஆனால், படிக்கும் காலத்திலேயே காதல் ஏற்பட்டு, ரகசியமாக, "அலைபாயுதே' பாணியில் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்து வார்கள்.
சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை அதீத காமத்தை ஏற்படுத்தித் தரும். சுக்கிரன்- ராகு சேர்க்கை உள்ளவர்கள் தெரிந்தோ- தெரியா மலோ காமரீதியான குற்றநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதிலும், குறிப்பாக இக்கிரகங்களின் தசா காலங்களில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
புதன்- கேது, கண்டிப்பான முறையில் காதலை தந்தே தீரும். புதன்- சுக்கிரன் சேர்க்கையும் காதல் வழிவகை ஏற்பட முக்கிய கர்த்தாக்களாக உள்ளன. இதெல்லாம், காதல் ஏற்பட காரணம் வகிக்கும் பொதுவான கிரகச் சேர்க்கைகளாகும்.
ஆனால், ஜெனன ஜாதகரீதியாக ஆய்வு செய்யும்போது, 5, 7-ஆம் பாவக அதிபதிகளின் தொடர்பு எவ்வகையிலாவது ஏற்பட்டால், காதல் அங்கு அரங்கேற்றம் நடத்தும்.
ஒரு ஆணின் ஜாதகத்திலோ அல்லது ஒரு பெண்ணின் ஜெனன ஜாதகத்திலோ 5, 7-ஆம் பாவக அதிபதிகளின் தொடர்பு எவ்வகையிலாவது ஏற்பட்டால், அவர்களது சம்மதம் இல்லாமல் திருமணத்திற்கு மாப்பிள்ளையோ- பெண்ணோ பார்க்க வேண்டாம்.
ஒரு ஜெனன ஜாதகத்தில் 2, 5, 7, 11-ஆம் பாவகங்களின் தொடர்பு, அந்த ஜாதகரை காதல் திருமணத்தில் ஈடுபடச் செய்யும்.
காதல் திருமணத்திற்கும் சரி, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணத்திற்கும் சரி, அத்திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு ஜெனன ஜாதகத்தில் 6, 7, 8, 12-ஆம் பாவங்களின் தொடர்பு ஏற்படக்கூடாது. அப்படி தொடர்பு ஏற்படின், திருமண வாழ்க்கை தோல்வியில்தான் முடியும்.