சென்ற இதழ் தொடர்ச்சி...

ஞ்சபட்சிக்கும் சனி பகவானுக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் அனைவருக்கும் வரலாம். அடுத்த தலைமுறையை உருவாக்கும் சக்தி படைத்தவர் சனிபகவான். அவரவரின் கர்மவினைக்கு ஏற்ப ஒரு குழந்தை எந்த நேரத்தில்   உருவாக வேண்டும் என்பதை முடிவு செய்பவரும் சனிபகவான். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்று ஒரு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால் அதில்  குறைந்தது 30 ஆண்டு காலம் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என 30 ஆண்டுகள் மனிதர்களின் வாழ்க்கையில் நன்மை- தீமைகளை வழங்குவார்.

அதேபோல் சனி தசை புக்தி அந்தரம் சூட்சுமம் தேகம் பிராணன், கோட்சாரம் என ஏதாவது ஒரு வழியில் சனிபகவான் மனிதரின் வாழ்க்கையில் சூட்சம பலனை வழங்கிக்கொண்டே இருப்பார். இதுவரை குழந்தை பிறந்தவர்கள் அவரவரின் ஜாதகத்தில் உள்ள சனிபகவானுக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் உள்ள சனிபகவானுக்கும் சென்ற வார கட்டுரையின்படி ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த உண்மையை நான் ஒரு கருத்தரங்கில் பேசினேன். ஆனால் அந்த வீடியோ வெளிவரவில்லை.ஏனெனில் சில ரகசியங்களை பிரபஞ்சம் எளிதில் வெளிப்படுத்த விடுவதில்லை. இந்தக் கட்டுரையை நான் எழுத பலமுறை முயற்சி செய்தும் எழுதக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அல்லது மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிவமைக்க முடியவில்லை அல்லது எழுத உட்கார்ந்தவுடன் ஏதாவது தடை வந்து இருக்கிறது. பிரபஞ்ச ரகசியங்களை பிரபஞ்சத்தின் அனுமதியுடனே வெளியிடமுடியும். பல பிரார்த்தனைகள் செய்து பலமுறை பிரபஞ்சத்திடம் எழுத அனுமதி வழங்குமாறு பிரார்த்தித்து தான் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன். 

Advertisment

ஒருவரின் தசா புத்திக்கு ஏற்பவே அவரின்  மனநிலை இருக்கும். தசாநாதன் புக்திநாதன் அந்தரநாதன் என சூட்சும முறையில் சனி பகவான் உயிர்களை இயக்குவார். அதாவது நாள் கிரகமான சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறாரோ அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு எந்த பாவகத்தை இயக்குகிறதோ அது தொடர்பான பலன்களை கோச்சார சந்திரன் மூலம் சனி பகவான் வழங்குவார். மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத் திற்கு தகுந்தாற் போன்ற உடல் வடிவம் உண்டாகும். மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும்.

அந்த உயிர் காந்த ஆற்றலானது கோட்சார சந்திரனினின் சுழற்சிக்கு ஏற்ப தசாபுக்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். அதாவது கோட்சார சந்திரன் மூலம் ஜாதகரின் மனநிலையில் மாற்றம் செய்து அவரவரின் வினைப் பயன்களை அனுபவிக்க செய்வார். மனிதர்கள் தங்கள் வாரிசை உருவாக்கக்கூடிய நாள் வரும்போது அதற்கான நட்சத்திரபட்சியை தேர்வு செய்து அந்த நாளில் அவர்கள் இல்லற இன்பத்தில் ஈடுபட வைப்பார். சில வழிகளில் உயிர் காந்த ஆற்றலை அதிகரிக்கலாம்:உயிர் காந்த ஆற்றல் என்பது, ஒரு நுட்பமான ஆற்றல் ஆகும். இதை நாம் புரிந்து கொண்டு, அதை முறையாக கையாண்டால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

அதாவது தியானம் மற்றும் யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சீரான உணவு, நேர்மறை எண்ணங்கள், நல்ல வாழ்க்கை முறை போன்றவற்றின் மூலம் அதிகரிக்க முடியும்.

Advertisment

 மனிதர்களின் இனப்பெருக்க காலம் என்பது தோராயமாக 18 வயது முதல் 45 வயதுவரை என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு குழந்தை சுபிட்சமான மனநிலையில் இந்த பூமியில் வாழவேண்டிய அமைப்பு இருந்தால் உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது தம்பதிகள் கூடுவார்கள். பிறக்கும் குழந்தையின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் உடல் வலிமை, மனவலிமை கூடும். உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை இழக்கும் போது  ஒரு குழந்தை உருவானால்  அந்த குழந்தைக்கு காரியத்தடை ஏற்படும். மனவலிமை குறையும். ஒருவரின் மன நிலைகளில், உணர்வு நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களே காரணமாக உள்ளன. ஆக உடலின் இயக்கங்கள், தோஷங்கள், நோய்கள், மனநிலை மாற்றங்கள் என அனைத்துமே பஞ்சபூதங்களில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. சுருக்கமாக  மனிதர்களின் வாழ்க்கை பிரபஞ்சத்தின் இயக்கம் என அனைத்துமே பஞ்சபூதங்களோடு இணைக்கப்பட்டுள்ளன. 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற 5 பட்சிகளுடன் ஒப்பிடுகிறோம். 

இந்த 5 பட்சிகளுக்கும் 5 விதமான தொழில்கள்  புரிவதாக கூறப்பட்டுள்ளது. தொழில் என்று கூறப்படுவது ஐந்து விதமான இயக்க நிலைகள். பட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒவ்வொரு விதமான சக்தியுடன் இயங்கும். அதன்படி இந்த 5 பட்சிகளின் தொழில்கள் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் தசாபுக்தி அந்தரம் செயல்படுவதுபோல் உப தொழிலும் உண்டு. உதாரணமாக ஒரு நட்சத்திர பட்சி அரசு தொழில் செய்யும்போது அரசு, துயில், சாவு, ஊண், நடை என்ற சூட்சம உப தொழில் செய்யும். இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் 

அரசு- 100% பலம்

ஊண்- 80%

நடை- 60%

துயில்- 40%

சாவு- 20%

அரசு என்பது ஒரு பட்சி தனது முழு சக்தியுடன் செயல்படும் நேரம். இந்த வேளையில் அந்த நட்சத்திரப் பட்சி தனது முழு வலிமையுடன் செயல்படும். 

"ஊண்'' என்பது  உணவு. ஒரு பட்சி அரசு நிலையை விட சற்றே குறைவான சக்தி நிலையில் செயல்படும் நேரத்தை "ஊண்'' நேரம் எனலாம்.

நடை என்பது ஊண் நிலைக்கு சற்றே குறைவான சக்திநிலை இயக்கத்தை நடை எனலாம்- நடை என்பது நடத்தல் என்ற தொழிலை குறிக்கும் சொல்லாகும்"துயில்'' என்றால் தூக்கம்  ஒரு பட்சி துயில் நிலையில்  மிக மிக சக்தி குறைந்த நிலையில் தான் இருக்கும்.

"சாவு'' சலனமற்ற இயக்கங்கள் இது பட்சி முற்றிலும் சக்தி இழந்த ஒரு நிலையாகும்.

பட்சியின் தொழில்களை பொருத்த வரையில் பட்சி அரசு தொழிலில் ஈடுபட்டி ருக்கும்போது செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் 100% வெற்றி பெறும்.

அரசின் உப தொழில் அரசு நேரம் மிக மிகச் சிறப்பு. நட்சத்திர பட்சியின் அதிகார பட்சி நாளாக இருப்பது மிகச் சிறப்பு.  

ஜாதகர் தனது நட்சத்திர பட்சி அரசு நேரத்தில் வாரிசை உருவாக்கினால் பிறக்கும் குழந்தை நாடாளும் யோகம் பெற்றவனாக இருப்பான். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ஆழமான கொள்கை பிடிப்புகளோடும் நிதானத்தோடும் வாழ்க்கையை எதிர் கொள்வதால் பிறர் தொடமுடியாத உச்சத்தைக் கூட இவர்களால் தொடமுடியும். சாதனை புரிய முடியும். நினைத்ததை நினைத்த படியே நடத்தி முடிப்பார்கள்.

அதிகாரப் பட்சி நாளில் ஊண் தொழில் நேரத்தில் ஈடுபடும் செயல்களும் அதிகமாக வெற்றி பெறும் இரண்டாவது சிறந்த வெற்றி நேரமாகும். 50 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டு விடுகிறது. ஜாதகரின் நட்சத்திர பட்சியின் அதிகார பட்சி நாளில் "ஊண்' தொழில் நேரத்தில் உப தொழில் அரசு தொழில் நேரத்தில் வாரிசு உருவானால் பிறக்கும் வாரிசு சுறுசுறுப்பும் புத்திசாலித்தனம். தன்னம்பிக்கை,தைரியம் மிகுந்தவன். முரட்டுத்தனமும், முன் கோபமும் இவர்களிடம் காணப்படும். தற்பெருமை மிகுந்தவர்கள். தோல்விகளை கண்டு மனம் தளர மாட்டார்கள். எந்த பிரச்சனையையும் எதிர்கொண்டு சமயோசிதமான புத்தியால் வெற்றியை சுவைப்பவர்கள். கடுமையான உழைப்பாளிகள். வித்தியாசமான சிந்தனை, செயல்பாடுகள் அதிகம் நிறைந்தவர்கள். பகல் கனவைக் கூட நினைவாக்கும் புத்தி கூர்மை உண்டு. சமுதாயத்திற்கும், பிறருக்கும் உதவும் குணம் அதிகமாக இருக்கும்.

ஜாதகரின் நட்சத்திர பட்சி நடை, தொழிலில் ஈடுபடும்போதும், படுபட்சி நாட்களிலும் கரு உருவானால் பிறக்கும் வாரிசின் அனைத்து முயற்சியும் தோல்வி யைத் தரும். மிகுதியான அலைச்சல் இருக்கும். 

இது போன்ற நேரங்களில் கரு உருவானால் மிக மந்த கதியிலேயே குழந்தை இருக்கும். பல தடங்கல்கள் உருவாகும் வெற்றி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

பட்சி துயில் சாவு தொழிலில் ஈடுபட்டி ருக்கும் போது,படுபட்சி நாட்களிலும்  குழந்தை உருவானால் ஆட்டிசம் குழந்தை யாகவும் அல்லது மனவளர்ச்சி இல்லாத குழந்தையாகவோ அல்லது குல கவுரவத்தை கெடுக்கும் குழந்தையாகவோ பிறக்கும். முற் காலத்தில் அரசர்கள் அரச பரம்பரைக்கு அரச குலத்திற்கு வாரிசை உருவாக்க 
அரண்மனை ஜோதிடர்கள் இதுபோன்று பஞ்சபட்சி முறையை பயன்படுத்தி நேரம் குறித்து வாரிசை உருவாக்கினார்கள்.

இதேபோல் சுப ஓரைகளையும் சுப உள் ஓரைகளையும் பயன்படுத்தி வாரிசை உருவாக்கமுடியும். ஆனால் இதற்கு சனி பகவானின் தயவு தாட்சன்யம் வேண்டும். அவன் இன்றி எதுவும் அசையாது.

தொடரும்....

செல்: 98652 20406