விட்டு விடுதலை யாகி நிற்பாய் -இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
-என்றான் பாரதி. இதுதான் உண்மையான விடுதலை உணர்ச்சி. 

Advertisment

அறிவும் மனமும் விடுதலை உணர்வுடன் இருந்தால்தான், வாழ்க்கை வாழ்வின் பூரணத் துவத்தை உணரும்.

Advertisment

 ஆனால், இப்படியொரு சுதந்திர உணர்வை, நம் எதிர் காலத் தலைமுறைக்கு நாம் யாரும் வழங்க முன்வருவதே இல்லை.

இளமைப் பருவமே ஒருவர் தெளிவாகவும் உண்மையாகவும் வளருவதற்கான பருவம். வீட்டிலும் சுற்றிலும் உள்ள பெரியவர்களுக்கு இந்தப் புரிதல் இருந்தால், தங்களின் சொந்த குணாதிசயமான விருப்புவெறுப்புகள், சொந்தக் கருத்துகள் இவற்றை இளம் மாணவர்களின் மனதில் பதியவைக்க நினைக்கும் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அப்போதுதான் இளம் மாணவர்கள், குறுகிய வட்டத்திற் குள் இருக்கும் தன்னையே தாண்டி, சுய அறிவுடன் சுதந்திர மாக, தொலைவில் உள்ளவற்றைக் கண்டறிந்து பலன் பெறமுடியும்.

Advertisment

உதாரணத்திற்கு,பெற்றோர்கள் தங்கள் இளம் வயது மகனோ,மகளோ பொய் சொல்கிறார்கள் எனில், அப்போது அவர்களிடம் ஒன்று, பொய் சொல்லாதே, சத்தியம், வாய்மை என்று  போதிப்பார்கள் அல்லது சொன்ன பொய்க்காக கண்டித்து, திட்டி, சமயத்தில் அடித்து தண்டிப் பார்கள். 

அதனால் என்ன பலன்? பெற்றோரின் அறிவுரைக்கு, தண்டனைக்குப் பயந்துதானே பொய் சொல்கிறார்கள்? மறுபடியும் அதையே செய்வதில் பயன் ஒன்றும் இல்லையே. மாறாக, அவர் ஏன் பொய் சொல்கிறார் என்ற காரணத்தைக் கண்டறிந்து, அவருக்கு அதில் உதவுவதுதானே சரியான தீர்வு? இதற்கு, பிள்ளைகளைக் கூர்ந்து கவனிப்பதற்கு நேரம் செலவிட தேவையிருக்கும்.

அதுபோலவே, இலட்சியம் என்ற பெயரில் வரையறைகளை தீர்மானித்தல் தீர்வாக முடியாது. பெரியவர்களின் பொறுமையும், அன்பும், அக்கறையும், புரிதலும் பிள்ளைகளை ஒரு வரைமுறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்காது. இத்தகைய சூழ்நிலை கிடைக்கப்பெற்றால், பிள்ளைகளின் செயல்பாடுகளில் அவர்களின் தன்னம்பிக்கையான திறமையும், தனித்தன்மையும் மிளிரும். 

வீட்டுப் பெரியவர்கள், நிராசையான தங்களின் சொந்தப் பேராசைகளுக்காக, தங்கள் வாழ்வில் தாம் அடைய விரும்பியதும், அடையமுடியா மல் போனதையும் பிள்ளைகள் மேல் திணிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. இது பல இடங்களில் அவர்கள் அறியாமலேயே நடைபெறுகிறது.

பெரியவர்கள் தங்கள் பயத்தை, தோல்விகளின் வலியை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, விதிமுறைகளை, எதிர்பார்ப்புகளை பிள்ளைகள்மேல் திணித்து, தங்கள் வாழ்க்கையை மறுபடியும் அவர்களில் வாழ பேராசைப்படுகிறார்கள். 

பிள்ளைகளை அவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழவிட்டால், அவர்களே தன்னை உணர்ந்து, தன் திறமை, தகுதி, பலம், பலவீனம் அறிந்து தங்கள் வாழ்க்கையை திறம் பட கொண்டு செல்வர். கூர்மை யான மேற்பார்வையுடன், பெரியவர்கள் அன்பெனும் தோள் கொடுத்தால் போதும். தவறான பாதையில் போகும் இளைஞர் களும், ஒரு புள்ளியில் உங்களி டமே திரும்பிவருவர். அன்பெனும் தோளுக்குள்ள ஈர்ப்பு சக்தி அத்தகையது. 

தன் பிள்ளை என்கிற உடைமைத்தன்மை பெற்றோருக்கு. 

தன் மாணவன் என்ற உடைமைத்தன்மை ஆசிரியருக்கு.  இந்த ஆக்கிரமிப்பு, உடைமைத்தன்மை, "தான்"  என்னும் அதிகாரத்தில், இளைஞர்களின் இயற்கையான இயல்பைக் காணமுடியாமல், கண்டறிய முடியாமல் செய்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, பெற்றோர் தங்களுக்கு சரியென்று தோன்றும் ருசியில் உணவைத் தயாரித்து, அதை "உங்களுக்கு நல்லது எது என்று எங்களுக்கு தெரியும், இதை நீங்கள் சாப்பிட்டே ஆகவேண்டும்" என்று கட்டாயப்படுத்தி வாயில் திணித்து முழுங்கச் செய்வதல்ல அன்பு, அக்கறை.

குழந்தையின் சுவை மாறுபட்டதாக இருக்கலாம். அதைக் கண்டறிய ஏன் நம் அதிகாரம் தடுக்கிறது? அவர்கள் சுவைப்படி உணவு தயாரித்து சாப்பிடத் தருவதில் உறவுநிலை மேலும் உறுதியாகும்தானே?

அதேபோல் தான், குழந்தை களின் வாழ்க்கையின் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு அம்சமும் கவனத்தில் வைப்பது மிகவும் ஆரோக்கியமானது. 

பல இலட்சங்கள் சம்பாதிக் கும் அறிவாளியாக, திறமைசாலியாக பிள்ளைகளை உருவாக்க முயலுவதற்கு முன், அவர்களை முதலில் அன்பும் நற்பண்புகளும் கொண்ட மனிதராக உருவாக்கப் பார்ப்போம். தானாக அவர்களுக்குள்ள திறமையும், அறிவும் வெளிப்படும். அவற்றின் பலன்களும் அழிவில்லாதவைகளாக கிடைத்து நிலைக்கும். 

இன்றைய தலைமுறையினர் சரியான கல்வியினால் மகிழ்ச்சிகரமான, ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். கேள்விகள், சந்தேகங்கள் கொண்டு விடை கண்டறிய முனையும் மனநிலை இயல்பிலேயே இருப்பதாலும் அரசியல், சாதி, மதம், சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் இவற்றுடன் தன்னையும் பற்றிய எல்லா விஷயங்களையும், அவற்றின் உண்மையான நிலையையும் கண்டறிய முற்படும் மனநிலை இருப்பதாலும், இன்றைய தலைமுறையினர் முக்கியமானவர்கள் ஆகிறார்கள். அப்போதுதான் ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைநிறுத்துவதற் கான நம்பிக்கையும் உடையவர்களாக இருக்க முடியும்.

இளைஞர்கள் இந்த முயற்சியில் தடுமாறும் தருணங்களில், அவர்களின் அதிருப்தியைப் பார்த்து, பெற்றோரும் ஆசிரியர்களும் பயப்படுகிறார்கள். உடனே பாதுகாப்பு தருகிறேன் என்று அவர்கள் வழியில் குறுக்கிட்டு, சொத்து, திருமணம், சமயநெறிகள், பாதுகாப்பான வேலை என்று இளைஞர்களின் திருப்தியின்மையை தங்கள் கோட்பாடுகளில் ஊக்குவித்து, அதுதான் பாதுகாப்பு என்று திசைதிருப்புகிறார்கள். 

இதில் தடுமாறும் இளைஞர்கள், தங்களின் உண்மையான இயல்பையும், ஆர்வத்தையும், தனித்திறமையையும், தனித்துவத்தையும் இழந்து, பெற்றோர்கள், ஆசிரியர்களின் நிறைவேறாத வாழ்க்கையை, தங்கள் வாழ்க்கையில் வாழ வழிகொடுத்து சுயம் இழக்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் தங்களை அறிந்து, தங்கள் வாழ்க்கையை  நிர்ணயிக்கும் வாய்ப்பு பறிக்கப்படு கிறார்கள். 

இவர்கள் போதாதென்று அரசியல்வாதிகளும், மத அமைப்புகளும் இளைஞர்களை அவரவர் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.  குழம்பிய மனநிலையில் பல இளைஞர்கள் இவர்களின் ஆசை வார்த்தைகளில் தங்கள் இலட்சி யம் அல்லாத ஒன்றால் ஈர்க்கப்படுகிறார்கள். கிடைக்கும் தற்காலிக வசதிகளில் வழியும் நெறியும் தவறி தடுமாறுகிறார்கள். முழுதும் நனைந்த பிறகு முனகி, வெற்று எதிர்காலத்தை வைத்துக்கொண்டு செய்வதறியாமல்,  நிலையற்ற சௌகரியங்களில் நிகழ்காலத்தை வீணடிக்கிறார்கள். 

சிலர் தோல்வி தந்த அதிகப்படியான சிந்தனையில், விரக்தியில், பெரியவர்கள் விதிக்கும் கோட்பாடுகளை மீறுவதில் தற்காலிக திருப்தி தேடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்ததுபோல் அணுகும் சில சமுதாய விரோதிகளுடனான கூட்டுறவில், வழி தவறி, முடிவில்  அச்சத்தில்  மனம் கலங்கி, நொடியில் தற்கொலை முடிவும் கூட எடுக்கிறார்கள். 

கோட்பாடுகள் திணிக்கப்படும் இடத்தில், தோழமை காணாமல் போய்விடுகிறது. விளைவு...  தவறான பாதையும், தற்கொலைகளும் தான். 

தங்கள் இயல்புப் படி வாழக்கையை வாழும் முயற்சி பாதையில் சந்திக்கும் தடுமாற்றங்களினால், மனநிறைவை முழுவதும் அடையும் முன்னரே, சுற்றியுள்ளவர்கள் தலையிட்டு, அவர்களுக்குள் சுடர்விட்டு எரிய ஆரம்பித்திருக்கும் தன்னம்பிக்கை ஒளியை வெற்றிகரமாக அணைத்துவிடுகிறார்கள். 

இதனால் பல இளைஞர்கள் நிலைதடுமாறி பெற்றோர், ஆசிரியர்களின் வழியில் பாதுகாப்பை யும், சௌகரியத்தையும் கண்டுபிடித்து, தன் இயல்பே அல்லாத ஒரு நிலைக்குள் முடங்கிவிடுகிறார்கள். 

இளைஞர்கள் தங்களைப் பற்றியும், தங்களை சுற்றியுள்ளவர்களைப் பற்றியும் திருப்தியடையக் கூடாது. இளமைப் பருவம் அத்தகையது. 

தெளிவாக,  விருப்பு வெறுப்பு என்ற பாகு பாடில்லாமல், சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். இப்படி சுயமாக, ஆரோக்கியமாக சிந்திக்க கற்றுக்கொண்டால், தங்களின் வாழ்க்கையையும் சரியாக வாழ்ந்து, நல் எடுத்துக்காட்டாக சக இளைஞர்களுக்கும் அமைக்கமுடியும்.

சமுதாயச் சீர்கேட்டில் தவறான திசையில் தடம்மாறிச் செல்லும் தன் வயதொத்த இளஞர் களையும் தைரியமாக நல்வழிக்கு திசைதிருப்பி இழுத்து வரமுடியும். பாடம் சொல்லித்தரும் பதவியில், அதிகாரத்தில் இருப்பவரே, பாதகம் செய்யத் துணியும்போது, தட்டிக்கேட்டு, அச்ச மில்லாமல் வெளிப்படையாக கன்னத்தில் அறைந்து, இவர்கள் அவருக்கு பாடம் சொல்லித்தர முடியும்.

தன் தனித்திறமையை தானே கண்டறிந்து, தன் வாழ்க்கையை தானே வடிவமைக்கும் முயற்சியில் அதிருப்தி, சிக்கல்கள், ஒழுங்கின்மை வரக்கூடும். அவைகளே உங்கள் உறுதிக்கு உரம். அவற்றை வெற்றிகொண்டு கடந்துவருவதில், எதிர்த்து வெல்வதில்தான் உங்கள் பலமும், நம்பிக்கையும் அதிகரிக்கும், விரிவு காணும். வாழ்க்கையின் பாதையை சரியாக, புதியதாக புரிந்துகொள்ள முடியும். 

மூத்தவர்கள், அவர்களின் இளமைக்காலத்தில் பல வினாக்களை, சந்தேகங்களை பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் கேட்டு, விடை கிடைத்தால் பயனடைந்தும், அவர்களுக்கு விடைதெரியாததால் பதில் கிடைக்காதபோது, தங்கள் கேள்விக்கு பதிலே இல்லாமல், அந்த சந்தேகத்திற்கான தெளிவை இழந்தும் வளர்ந்தார்கள். 

இன்றைய தலைமுறை உங்களை அதிகம் கேள்வி கேட்பதில்லை. அவர்களாக தெரிந்துகொள்கிறார்கள். பதில் பெறமுடியாத கேள்விகளுக்கு, ஐயங்களுக்கு விடை கண்டுபிடிப்பதில், தங்கள் தனித்துவத்தை நிரூபிக்கிறார்கள். இந்த முயற்சிக்கு அவர்களுக்கு தேவை சரியான கல்வித் திட்டமும், நிறைய நல்ல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும், பெற்றோர், ஆசிரியர்களின் அன்பான, அக்கறையான வழிநடத்தலும்தான். 

சரியாகச் சொல்வதென்றால், இளைஞர்கள் அவர்களாக, அவர்களுக்குள் உள்ள ஆற்றலை, திறனை அறிந்துணர்ந்து, அவர்களுடைய இலட்சியத்தைத் தீர்மானிப்பதும், அதை அடைந்து வாழ்க்கையில் வெற்றிபெற பயணிக்கும் சுதந்திரம் பெறவேண்டும். கட்டாயப்படுத்துதல் திறமையை வெளிக்கொண்டுவராது. தடைகளை உடைக்க பலருக்கு தவறான பாதையில் தடம் மாற நேருகிறது.

பெற்றோரும், ஆசிரியரும், மொத்த சமுதாயமும் இளம் பருவத்தினருக்கு, தோழமையுடன் அன்பெனும் தோள் கொடுப்போம். இளைஞர்களை தவறான பாதையில் பயணிக்கத் தூண்டும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்தும், பாலுணர்வு பிரச்னையிலிருந்தும் தெளிவுபடுத்தி, பெருகிவரும் தற்கொலை அவலங்களையும் தடுத்து நிறுத்துவோம். 

சுய ஒழுக்கம் மட்டுமே வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி அனைவரையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்லமுடியும் என்பதே உறுதியான உண்மை.