உடல் ஊனத்தால் உள்ளம் கலங்கி நிற்பவர்கள் பலர் உண்டு. தினமும் போராட்டம்தான் இவர்களது வாழ்க்கை. இப்படிப் பட்டவர்களின் ஊனத்தை நீக்கும் உன்னதத் திருத்தலமாகத் திகழ்கிறது கூனஞ்சேரி.
பிறக்கும்போதே எட்டு கோணல்களாகப் பிறந்த எண்கோண மகரிஷி என்னும் தபோரிஷி ஒருவர் இருந்தார்.
அவரது வாழ்வில் நடந்த அற்புதத் தைப் பார்ப்போம்.
பாரத தேசத்தின் வடகிழக்குப் பகுதியான தண்டக்காரண்யத்தில் தானவ மகரிஷி என்பவர் குடிலமைத்து வாழ்ந்துவந்தார். ஈசனது அருள்வாக்கின்படி சிறுவர்களுக்கு வேதங்களை கற்பித்தார். ஆனால் இவருக்கு குழந்தைப் பேறு இல்லை. இவர் வேதங் களை போதிக்கும்போது இவரது மனைவியும் அதை கேட்டுவந்தார். இதனால் இவரின் மனைவிக்கு ஏற்பட்டிருந்த தோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று, அவள் கர்ப்பவதியானால்.
ஒருசமயம் தானவ மகரிஷியிடம் பாடம் பயின்று வந்த சிறுவன், பாடம் கற்கும் போதே தற் செயலாக தூங்கி விட்டான். இதனால் கோபம் கொண்ட தானவர், அச்சிறு வனை கடிந்துக்கொண்டார்.
அப்போது இவரது மனைவியின் வயிற்றினுள் இருந்த குழந்தை, "தந்தையே இரவு- பகல் பார்க் காமல் போதனை செய்தால் தூக்கம்தானே வரும். இது இயற்கைதானே? இதை தாங்கள் அறியமாட்டீரா? என குரல் கொடுத்தது.
இதைக்கேட்டத் தானவர், ஆத்திரம் அடைந்து, தனது வாரிசு என்றும்கூட நினைக்காமல், "நீ பிறக்கும் முன்பே கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போல, நீ எட்டு கோணலாகப் பிறப்பாய்' என்று சாபமிட்டார்.
சாபம் பலித்தது. குழந்தை எட்டுவித உடல் வளைவுகளோடு பிறந்தது. தானவர் தன் சாபத்தை எண்ணி மனம் வருந்தினார். அப்போது மிதிலை நாட்டு (சீதா பிராட்டியின் தந்தையான ஜனக மகரிஷியின் நாடு) இராஜ சபையின் இராஜகுருவாக விளங்கிய வந்திக்கும், தானவ மகரிஷிக்கும் வாதம் ஏற்பட்டது. அதில் தோல்வியடைந்த தானவர், மனைவியிடம்கூட சொல்லாமல் தண்டக்காரண்யத்தை விட்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றார்.
பலகாலம் கயிலாயநாதரை தியானித்தபடி கடந்தவம் புரிகின்றார். இதனிடையில் எட்டு கோணலாகப் பிறந்த அஷ்டவக்கிரர் வளர்ந்து கல்வி- கேள்விகளில் தேர்ச்சியடைந்து, சிறந்த ஞானியாகின்றார்.
தனது தந்தைக்கு ஏற்பட்ட நிலையை தனது தாயிடம் கேட்டறிந்த அஷ்டவக்கிரர், மிதிலையை (தற்போதைய நேபாள நாடு) அடைந்து, வந்தியிடம் வாதம் நடத்தி, வந்தியை வாதத்தால் தோற்கடிக்கின்றார். தனது தந்தையின் மானத்தை மீட்டதோடு, வந்தியால் தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 பண்டிதர் களையும் மீட்கின்றார்.
பின்னர் தந்தையைத்தேடி கயிலாயம் சென்று அவரை கண்டுபிடிக்கின்றார். அப்போது தனது மகனின் அஷ்டகோணல் நீங்கிட, கயிலாயநாதரிடம் கையேந்துகின்றார் தானவர். மனமிறங்கிய மகாதேவர், "சோழவள நாட்டில் காவிரியின் கிளை ஆறான பழவாற்றங்கரையில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பி, பிருத்வி, அப்பு, அக்னி, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆத்மா ஆகிய எட்டு லிங்கங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஸ்தாபித்து, எட்டு விதமான பழங்கள், புஷ்பங்கள் மற்றும் நைய்வேத்தியங்களால் எம்மை மகிழ்வித்தால், அஷ்ட வக்கரனின் ஊனம் நீங்கும்'' என அசரீரி வாயிலாக வாக்கு றைத்தார் வானோர்க்கு அரசர்.
அதன்படி தானவரிஷி அவரது மனைவி மற்றும் அஷ்ட வக்கிரரு டன் சோழதேசம் வந்தார். பழவாற் றங்கரையில் முற்காலசோழ மன்னனது துணையோடு ஸ்ரீ பார்வதி அம்மை உடனுறை
ஸ்ரீ கயிலாசநாதருக்கு ஆலயம் எழுப்பினார். ஆலயத்தினுள்ளே வடபாகத்தில் எட்டு லிங்கங்களையும் தேய்பிறை அஷ்டமியன்று நிறுவி, அதியற்புதமாய் வழிபாடுகள் நடத்தினார். பின்னர் கயிலை ஈசனது திருவருளால் அஷ்டவக்கிரரது கோணல் (கூனல்) நிமிர்ந்து நன்னிலை அடைந்தார். பின்னர் இத்தலத்திலேயே பலகாலம் சிவபூஜை செய்து, நற்கதி அடைந்தார். இச்சம்பவத்திற்கு பின் இத்தலம் "கூனல் நிமிர்ந்தபுரம் என்றாகி, தற்போது கூனஞ் சேரி என்று அழைக்கப்படுகின்றது.
மிதிலை மன்னன் ஜனகரின் கேள்வி களுக்கு அஷ்டவக்கிரமகரிஷியின் பதில்கள் அடங்கிய தொகுப்பே பிரபலமான "அஷ்டவக்கிரகீதை' ஆகும். அஷ்டவக்கிர மகரிஷி யின்மூலமே ஜனகரின் அறியாமைக் களைந்து ஞானம் உண்டானது. இதன்பிறகே ஜனகர், "இராஜரிஷி' என்று அழைக்கப்பட்டார்.
பேருந்து சாலையின் இடதுபுறம் ஆலயம் தென்முகத் தோரணவாயிலுடன் அமைந்துள்ளது. உள்ளே சென்று இடப்பக்கம் திரும்பிட, ஈசனது சன்னதி உள்ளது. மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்கிற அமைப்பில் சுவாமி சன்னதி அமையப்பெற்றுள்ளது. முதலில் நந்தியம்பெருமானது தரிசனம்.
சன்னதிக்குமுன்பு இரு பக்கங்களின் இரண்டு கணபதிகள் குடிகொண்டுள்ளனர்.
தலையில் குட்டிக்கொண்டு உள்ளே செல்ல, மகாமண்டபத்தின் தென்புறத்தில் தலகணபதியும், வடபுறத்தில் வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீ சுப்ரமணியரும் வீற்றருள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் லிங்கரூபராய் திருவருள் புரிகின்றார் ஸ்ரீ கயிலாயநாதர். சகல வரங்களையும் நல்கும் பெருமான் இவர். இவரை மனமுருகி வணங்கிய பின், ஆலய வலம்வருகின்றோம். கோஷ்ட மாடங்களில் உரிய தெய்வங்களை தரிசிக்கின்றோம்.
கோமுகத்திற்கு அருகே வீற்றிருக்கும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் விக்ன சண்டராக விசித்திரமாக காட்சி தருகின்றார். இவரது சிரசில் ஸ்ரீ கணபதி அமர்ந்துள்ளார். ஆலய வடக்கு பகுதியில் கிழக்குப் பார்த்தவாறு வரிசையாக எட்டு லிங்கங்கள் நந்தி வாகனத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவை: பிருத்விலிங்கம், அப்புலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம், சூரியலிங்கம், சந்திரலிங்கம் மற்றும் ஆத்மலிங்கம் ஆகும். கயிலாயநாதர் திருவருளால் இந்த எட்டு லிங்கங்களை நிருவி வழிபட்ட பின்னரே அஷ்டவக்கிர முனிவரது கூன் நிமிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஷ்ட லிங்கங்களை நமஸ்கரித்து, பின்னர் கணபதி மற்றும் காலபைரவரையும் வணங்கு கின்றோம். அருகே குலோதுங்க சோழனும், அவனது மகனும் சிற்பங்களாக உள்ளனர்.
சுவாமி சன்னதிக்கு இடபாகத்தில் தனியே சன்னதி கொண்டருள்கின்றாள் ஸ்ரீ சௌந்தரநாயகி. ஈசனதி இச்சா சக்தியாக அருள்புரிகின்றாள் இவ்வன்னை. சௌந்தரம் எனில் அழகு என்பது பொருளாகும். இவ் வம்பிகையின் எழில்மிகுந்த தோற்றத்தில் நம் மனம் மயங்குவது உறுதி. இவ்வன்னையின் வரத அஸ்தம் நடன முத்திரையுடன் உள்ளது.
பிரதான அம்பிகையான ஸ்ரீ பார்வதிதேவி தெற்கு பார்த்தவண்ணம் தனியே சன்னதி கொண்டு திகழ்கின்றாள். கரங்களில் ஜெப மாலையும், நீலோற்பல புஷ்பமும் கொண்டு ஜடாமகுடதாரியாக அருளுகின்றாள். இவ்வம்பிகையின் அருட்தரிசனம் நமை பரவசத்தில் ஆழ்த்துகின்றது.
சிறிய ஆலயம்தான். ஆனால் அருள் தழும்புகின்றது. பொதுவாக நடக்கும் எல்லா சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புற நடத்தப்படுகின்றன. பிரதிமாத பௌர்ணமி யன்று 108 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அதோடு, தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக - அலங்கார - ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்தில் தினமும் இரண்டுகால பூஜைகள் நடக்கின்றன. தற்போது ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், இவ்வாலய அர்ச்சகரை தொடர்புகொண்டு, திருப்பணியில் பங்குபெற்று, புண்ணிய பலன்களைப்பெற அன்பர்களை வேண்டுகின்றோம்.
காவிரியின் கிளையாறான பழவாறு இத்தலத்தின் தீர்த்தமாகவும், வில்வம் இத்தல விருட்சமாகவும் திகழ்கின்றது.
பரிகாரங்கள்
ப் அஷ்ட லிங்கங்களுக்கு விபூதி அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக தினமும் பூசிவர, நற்பலன் உண்டாகும்.
ப் அஷ்டலிங்களுக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதை அங்கங்களில் தடவிவர, விசேஷ பலன் உண்டு.
ப் வாய்பேசா குழந்தைகளுக்கு... எட்டு லிங்கங்களுக்கும் தேன் அபிஷேகம் செய்து, அதைப் பெற்றுச்சென்று, பருகிவர, நல்லபலன் உண்டாகி, பேச்சு குறைபாடுகள் நீங்குகிறது.
ப் முதல் தேய்பிறை அஷ்டமிக்கு கணபதிக்கும், 2-ஆவது அஷ்டமி கயிலாசநாத சுவாமிக்கும், 3-ஆவது அஷ்டமி முதல் 10-ஆவது அஷ்டமிவரை ஒவ்வொரு லிங்கத்திற்கும் என எட்டு லிங்கங்களுக்கும், 11-ஆவது மாதம் அம்பிகைக்கும் கீழ்க்கண்டவாறு பூஜை செய்து வரவேண்டும். இது போன்ற முறையில் வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட ஊனமும் சரியாகும். 6-ஆவது மாதத்திலேயே உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமின்றும் அபிஷேகம் நடத்தி, எட்டுவித பூக்களால் அர்ச்சனை செய்து, எட்டுவித பழங்களைப் படைத்து, எட்டுவிதமான அன்னங்களால் நைவேதனம் செய்து வழிபடவேண்டும். அதோடு, கலசம் ஸ்தாபித்து, ஹோமம் நடத்தி, அந்தந்த மூர்த்திக்கு கலசா பிஷேகம் செய்து, அந்த கலச தீர்த் தத்தை பாதிக்கப்பட்டவரின் மேல் ஊற்றிடவேண்டும்.
உடல் ஊனத்தை சரிசெய்வது மட்டுமில்லாமல், புத்திர பாக்கியத்திற்கும் உகந்த தலம் இந்த கூனஞ்சேரி.
அதோடு, நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கின்றார் ஸ்ரீ கயிலாசநாதர்.
வழி: கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் திருவையாறு செல்லும் சாலையில், சுவாமிமலைக்கு அருகேயுள்ள அண்டங்குடிக்கு வடக்காக அமைந்துள்ளது கூனஞ்சேரி. இவ்வூருக்கு அருகே புள்ளம் பூதங்குடி மற்றும் ஆதனூர் திவ்யதேசங்கள் அமைந்துள்ளன.
ஆலய தொடர்புக்கு
கூனஞ்சேரி விக்னேஷ் குருக்கள்:
அலைபேசி: 93454 65829.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/kunamcheriy-2026-01-03-16-21-33.jpg)