பண்டைய தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் கடையெழு வள்ளல்களாகத் திகழ்ந்தவர் கள் பேகன், பாரி, காரி, ஆய், ஆதிகன் என்கிற ஆதியமான், நள்ளி, ஓரி. இவர்களில் பறம்பு மலையை குறுநில மன்னரான வள்ளல் பாரியைப்பற்றி-"சிறுவி முல்லைக்கு பெருந்தேர் நல்கியபிறங்கு வெள் அருவிவிழும் சாரல்பறம்பின் கோவின் பாரி'' என "சிறுபாணாற்றுப் படை'' என்கிற சங்க இலக்கிய நூலில் நல்லூர் நந்தத்தனார் என்கிற புலவர் பாடினார்.
அதேபோன்று புறநானூறு நூலில்
"நீரினும் இனிய சாயற்
பாரி வேள்பால் பாடினை செலினே''
எனப் பாடப்பட்டுள்ளது. இந்த வள்ளல் பாரியின் இரண்டு மகளுக்கு சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீகரபுரநாதர் திருவருளால் ஔவையார் திருமணத்தை நடத்திவைத்தார்.
பறம்பு மலை அல்லது பிரான்மலைப் பகுதியைக்கொண்ட ஏறத்தாழ இன்றைய சிவகங்கை பகுதியை அன்று அரசாண்ட குறுநில மன்னர்தான் பாரி. இம்மன்னனுக்கு அங்கவை, சங்கவை என்கிற இரு மகள்கள் உண்டு. மிகச் சிறப்பாக அரசாண்ட மன்னன் இளமையிலேயே இரக்க குணமும் வேண்டியவர்களுக்கு தானம் செய்து உதவுவதில் சிறந்தவராகவும் விளங்கினான். இம்மன்னனுக்கு கபிலர் என்கிற சங்கப் புலவர் உற்ற நண்பனராக இருந்துவந்தார். இப்புலவர் பாரி மன்னனைப் புகழ்ந்து பாடுவது வழக்கம்.
ஒருநாள் தனது தேரில் பாரிமன்னன் காட்டு வழியாக சென்று கொண்டியிருந்த சமயத்தில் ஒரு முல்லைக்கொடி படர கொம்பு இல்லாமல் இருந்தது. இந்தக் காட்சியைக்கண்ட மன்னன் பாரி சற்றும் யோசிக்காமல் தனது தங்கத்தேரை முல்லைக்கொடி பற்றிக்கொள்ள உதவி னான். இதுவே இம்மன்னனின் வள்ளல் தன்மைக்கு சிறந்த எழுத்துக்காட்டு. இச்சம்பவத்தைப் புகழ்ந்து கபிலர் புலவர்
"பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவன் புகழ்வர் செந்நாய் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே''
என மன்னன் பாரியையும், மாரி என்கிற
மழையையும் இணைத்துப் பாடினான்.
இப்படிப் பலவாறு மன்னன் பாரியைப் புகழ்ந்து பாடுவதை அன்றைய மூவேந்தர் களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் பாரி ஒரு குறுநில மன்னன். மன்னன் பாரி இறந்தவுடன் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மன்னரின் குடும்பத்தினர் பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மன்னன் பாரியின் மகள்களை எப்படி யாவது ஏதாவது ஒரு நாட்டு குறுநில மன்னர்களின் அரச வாரிசுகளுக்கு திருமணம் செய்யவேண்டும் என மன்னனின் நண்ப னான கபிலர் முயன்று அதில் தோல்வி அடைந்தான். இதனால் மனம் வருந்தி உண்ணா நோன்பு இருந்து உயிரைத் துறந் தான். தங்களை ஆதரித்துவந்த புலவரும் இறந்துவிடவே அங்கவையும் சங்கவையும் நாட்டைவிட்டு வெளியேறி ஒவ்வொரு இடமாகச் சென்று வாழ்ந்தனர்.
இருவரும் சேலம் அருகேயுள்ள ஒரு இடத்தில் தங்கியிருந்தனர். ஒருநாள் இரவில் மழை அதிகளவு பெய்தது.
அந்த மழையின் குளிரில் நடுங்கியவண்ணம் தமிழ்ப் புலவரான ஔவையார் இவ்விருவர் தங்கிய குடிசை வழியாகச் சென்றபோது சற்று நேரம் இளப்பாற குடிசையில் தங்கினார். குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஔவையாருக்கு இருவரும் ஓர் சால்வையைத் தந்து உதவினார்கள். விலையுயர்ந்த சால்வையை பார்த்ததும் ஔவையார் இரு பெண்களிடம் யார் என விசாரித்தபோது மன்னன் பாரியின் மகள்கள் எனத் தெரிய வந்தது.
அரச குடும்பத்தினர் தற்போது இந்த நிலைக்கு ஆளானதை நினைத்து வருந்தினார். ஒரு வகையில் இந்த நிலைக்கு வர மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியன் மன்னர்கள் காரணம் என்பதை அறிந்து மேலும் வருந்தினார். அதன்பின்னர் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தார்.
இன்றைய உத்தம சோழபுரத்தில் குடிகொண்ட அருள்மிகு கரபுரநாதர் திருக்கோவிலுக்கு இருவரையும் அழைத்துச்சென்று சிவபெருமானிடம் திருமணம் நடக்கவேண்டும் என ஔவையார் மனதார தினமும் வேண்டினர். இத்தலத்தைப்பற்றி 4-ஆம் திருமுறையில் திருநாவுக்கர சர் பாடியுள்ளார். அன்றைக்கு இப் பகுதியை ஆண்ட சோழமன்னர் இக்கோவில் திருப்பணிக்கு பலவாறு உதவி செய்துள்ளார். எனவேதான் மூலவருக்கு "சோழேகர்' என்கிற மறுபெயரும் உண்டு. சிவபெருமானின் திருவருளால் அங்கைவைக்கும், சங்கவைக்கும் திருகோவினூர் பகுதியை ஆண்ட சிற்றரசரின் இளவரசனுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இதனால் ஔவை பிராட்டியார் மனம் மகிழ்ந்து சிவபெருமானைப் போற்றி பாடல்களைப் பாடினார்.
பிற்காலத்தில் அருணகிரிநாதர் இத்தலத்திற்கு வருகைதந்து பாடியுள்ளார். நீண்ட நாட்கள் திருமணம் தடையிருப்பின், இக்கோவிலுக்கு வருகை தந்து வழிபட்டுச் சென்றால் சிறந்த முன்னேற்றம் கூடும்.
காரணம் ஔவை பிராட்டியார் சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டதும் இதுவே! தாயார் பெரியநாயகி கருணை வடிவானவள்.
60 ஆண்டுகளுக்குபிறகு 1992-ல் கோவில் திருப்பணியும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. திருப்பணி முன்னாள் சபாநாயகர் க. ராசாராம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதன்பின்னர் 2006-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம், ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கரபுரநாதரின் திருவருளை நிச்சயம் பெறலாம்.
அணுக:
ரத்தினம் சிவச்சாரியர்
செல்: 93452 63854.