தரணியே போற்றும் நம் தமிழகத்தில் ஈசன் புரிந்த மகிமைகள் ஏராளம் ஏராளம். அதிலும் சோழ மண்ணிலோ சொல்லில் அடங்காதவை. அவ்வகையில் சிறப்பு பெற்றத் திருத்தலமாகத் திகழ்கிறது காமரசவல்லி. அதன் சிறப்புகளைப் பார்ப்போம்.
மன்மதன் என்னும் காமனைத் தனது நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார் சர்வேஸ்வரர். காமன்மீது தீராக் காதல்கொண்ட ரதிதேவி அவனை மீட்க, ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தாள். ஈசன் தோன்றி, "காமனை உயிர்ப்பிக்கிறேன். ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்'' என ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சையிட்டார் மகாதேவர். ரதிக்கு வரம் தந்த தலம் என்பதனால் இப்பதி "ரதிவரபுரம்' என்றும், "காமரசவல்லி' என்றும் ஆதியில் போற்றப்பட்டது. தற்போது காமரசவல்லி என்று அழைக்கப்படுகின்றது.
அர்ஜுனனின் பேரனான அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்து மன்னன் ஒருசமயம் வேட்டையாட காட்டுக்குள் சென்றான். அங்கே இறந்துகிடந்த பாம்பினை எடுத்து தவம் செய்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் விளையாட்டாக போட்டுவிட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவரின் மகன், அன்றிலிருந்து ஏழாவது நாளில் பாம்புகடித்து இறந்து போவாய் என பரிக்ஷித் மன்னனுக்கு சாபம் அளித்தான். அதன்படி ஏழாவது நாளில் கார்க்கோடகன் என்னும் பாம்பினால் கடிக்கப்பட்டு இறந்தான்.
இதனால் மனம் கொதித்தான் பரிக்ஷித்தின் மகன் ஜனமேஜயன். மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தி, உலகிலுள்ள எல்லா பாம்புகளையும் பிடித்து, அதில் போட்டு அழித்தான். இதை கேள்விப்பட்ட எட்டு சர்பராஜர்களுள் ஒருவனான கார்க்கோடகன் தனக்கு ஆபத்து வரக்கூடாது என திருமாலிடம் சரணடைந்தான். திருமாலோ, காவிரி வளமாக்கும் சோழ தேசத்தில் ரதிதேவி பூஜித்த சிவலிங்கத்தை வழிபடும்படி ஆலோசனை கூறினார். அதன்படி இத்தலம் வந்த கார்க்கோடகன், தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தால் சிவ பெருமானை பூஜித்து, வழிபட்டு, தனக்கும், தன் வம்சத்தினருக்கும் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விடுபட்டான் என இத்தலம் மகாத்மி யம் விவரிக்கின்றது.
இவவூரில் பாம்பு கடித்து இறந்தவர்கள் யாரும் இல்லை என்பது இத்தலத்தின் மகிமையாகும். இப்பதி திருநல்லூர், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், கார்கோடகேஸ்வரம் மற்றும் காமரசவல்லி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் திருமடம் இங்கு இருந்ததன் காரணமாக இத்தல தேவாரப் பதிகம் தவறியிருக்கக்கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். காஞ்சி மகாபெரியவாள் 1950-ல் இங்கு தங்கி ஈசனுக்கு தனது கரங்களினாலேயே அபிஷேகம் செய்துள்ளது சிறப்பாகும்.
ஊரின் மேற்குப் பகுதியில் பிரம்மாண்ட மாக அமைந்துள்ளது ஆலயம். ஆலயத்தின் எதிரே கார்க்கோடக தீர்த்தம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கிழக்கு நோக்கி ஆலயம் நான்குபுறமும் உயர்ந்த மதில்சுவர்கள் சூழ, தோரணவாயிலுடன் திகழ்கிறது. நுழைவு மண்டபம் கலைத்துண்களுடனும், திண்ணைகளுடனும் திகழ்கிறது. உள்ளே செல்ல பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம் உயரமான இடத்தில் உள்ளன. இங்கே தனி விமானத்துடன் கூடிய அம்பாள் சன்னதி தென்முகமாக அமைந்துள்ளது. இது வெளிப் பிராகாரமாகும்.
படிகள் ஏறி சன்னதிக்குள் சென்று அன்னையை வணங்குகின்றோம். ஸ்ரீ பாலாம்பிகை என்கிற பெயர் கொண்டு சிறுபிள்ளைபோல் முகத்தை காட்டி திருவருள் பொழிகின்றாள். அன்னையை வணங்கிய பின் படிகள் இறங்கி, மீண்டும் சிவன் சன்னதி படிகளில் ஏறுகின்றோம். இங்கு மூன்று நிலைகள்கொண்ட சிறிய இராஜகோபுரம் காணப்படுகிறது. கீழே கணபதி மற்றும் கந்தன் குடிகொண்டுள்ளனர்.
உள்ளே பெரியதொரு மகாமண்டபம். அதன் வடபுறம் அம்பலவாணர் சன்னதி அமைந்துள்ளது. இங்கே அன்னை சிவகாமியுடன்கூடிய ஸ்ரீ நடராஜப் பெருமான் அற்புத திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கின்றார். உடன் மாணிக்கவாசகரும் வீற்றுள்ளார். இவ்வாலயத்தில் ரதிதேவிக்கு உற்சவர் திருமேனியுள்ளது சிறப்பாகும். நேராக சுவாமி சன்னதிக்குமுன்பு ஆஜானுபாகுவாக இரு துவாரபாலகர்கள் கம்பீரமாய்த் திகழ் கின்றனர். மீண்டும் பணிகள் சில கடந்து அர்த்தமண்டபத்திற்குள் நின்றவண்ணம் ஈசரை வணங்கி நிற்கிறோம். கருவறையில் ருத்ராக்ஷ பந்தலின் கீழே சதுர ஆவுடையாருடன் அற்புதமாக அருள்மழைப் பொழிகின்றார் ஸ்ரீ சௌந்தரேஸ்வரர். பெயருக்கு ஏற்றார்போல் அவரது அழகில் நம் ஆன்மாவை கவர்ந்திழுக்கின்றார். இவரை ஸ்ரீ கார்கோடகேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர் அன்பர்கள். ஐயனை மனம் ஒன்றி வணங்கி, வெளியேவந்து உள் பிராகார வலத்தைத் தொடங்கு கின்றோம்.
ஈசனது கருவறை கோஷ்டத்தைத் தரிசிக்கின்றோம். எங்கும் காணாத அதிசயமாக 11 மாடங்கள் உள்ளன. இதை ஏகாதச கோஷ்டம் என்று அழைப்பர். இந்த 11 மாடங்களில் நர்த்தன கணபதி, நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, அகத்தியர், அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளர், பிரம்மா, ஆலிங்கனர், பிக்ஷாடணர் மற்றும் அஷ்டபுஜ துர்க்கை ஆகிய தெய்வச் சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவை சோழர்களின் கலையையும், பக்தியையும் பரைசாற்றுகின்றன.
தென்மேற்கில் கணபதியும், மேற்கில் வள்ளி- தெய்வானை உடனான ஸ்ரீ சுப்பிரமணி யரும், வடமேற்கில் ஸ்ரீ கஜலட்சுமியும் தனித்தனியே சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு பகுதியில் நாகராஜர் சிலையும், இரண்டு பைரவர்களும் உள்ளனர்.
இங்கே நவகிரகங்களும் வீற்றுள்ளனர். கணபதி, நந்தி மற்றும் கார்க்கோடகன் சிவபூஜை செய்யும் சிற்பங்கள் இவ்வாலய தூண்களில் படைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆலய வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் கிணறு ஒன்று காணப்படுகிறது. ஆலயம் பிரமிப்பையும், கலைநயத்தையும் கலந்து ஊட்டுகின்றன.
இவ்வாலயத்தில் சுமார் 45 கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன. சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் போசள மன்னர்கள் இவ்வாலயத்தின்மீது தனி கவனம் செலுத்தி யுள்ளனர்.
இராஜராஜ சோழனின் தந்தையான இராஜகேசரி வர்மன் என்னும் சுந்தரச் சோழனால் கி.பி. 957- 974 காலகட்டத்தில் கட்டப்பட்ட ஆலயமிது.
கி.பி. 1240-ல் போசள மன்னன் வீர இராமநாதனால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கி.பி. 1240-ல் இவ்வூரில் நடந்த நிலத் தகராறில் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளான் போசளமன்னன் வீர சோமேஸ்வரன்.
சுந்தர சோழன், உத்தமசோழனின் மகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன், காடவர்மன், மூன்றாம் இராஜராஜன், திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன் மற்றும் ஹொய்சால மன்னர்களின் கல்வெட்டுகள் ஆலயமெங்கும் செதுக்கப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில் இந்த ஆலயத்தை அந்தணர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். ஊரை ஒட்டிய சில கிராமங்களும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வூரில் வேதபாராயண போட்டிகளும், சத்சங்கக் கூட்டங்களும் அதிக அளவில் நடந்துள்ளன. அதோடு திருவாதிரை திருவிழாவும் விமர்சையாக நடந்துள்ளதாக கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. இத்தல ஈசன் சோழர் காலத்தில் "திருநல்லூர் பரமேஸ்வரர் திரு கார்கோடக ஈஸ்வரத்து மகாதேவர்' என்று அழைக்கப் பட்டுள்ளார்.
தினசரி ஆலய வழிபாட்டிற்கு மாலைகள் கட்ட நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. அது "பிச்சதேவன் நந்தவனம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தவர்கள் வசிப்பதற்கென ஒரு பகுதி இருந்தது. அது "திருத்தொண்டத் தொகையன் வளாகம்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்துசமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயம் தினமும் காலை 7.30 மணிமுதல் 11.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் 7.30 மணிவரையும் திறந்திருக்கும். தினமும் இரண்டுகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் மாசி மாத பௌர்ணமியன்று காமன் பண்டிகை இங்கு கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் இரண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வைப்பர். அது ரதிதேவியின் வாழ்க்கை துளிர்த்ததுபோல் எட்டு நாட்களுக்குள் துளிர்த்துவிடுமாம். இது இங்கு மட்டுமே நடக்கும் அதிசயமாகும். மற்றைய அனைத்து சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புற நடத்தப்படுகின்றன.
மாங்கல்ய பலம் வேண்டுவோர் இத்தல அம்பிகைக்கு மாங்கல்யம் சாற்றி பிரார்த்திக்கின்றனர். திருமணத்தடை நீங்கவும், நல்ல வரன் அமையவும், குழந்தைப்பேறு கிட்டவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இத்தல வழிபாடு ஓர் சிறந்த பரிகாரத்தலமாகும். அதோடு, சர்ப்ப தோஷம் மற்றும் முன்ஜென்ம சர்ப்ப சாபங்களால் சுப காரியங்கள் தடைபட்டிருந்தால் இத்தல ஈசனுக்கும், அம்பிகைக்கும் அபிஷேகம் நடத்தி, நீல நிற வஸ்திரங்கள் சாற்றி, புளியோதரை படைத்து பலன் பெறுகின்றனர் பக்தர்கள். ரதிதேவிக்கு ஈசன் அருளியது கடக ராசி, கடக லக்னம் என்பதால் கடக ராசிக்காரர்கள் வழிபட உகந்த திருத்தலமிது.
தஞ்சை - அரியலூர் நெடுஞ்சாலையிலுள்ள திருமானூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காமரசவல்லி.