னிதர் தைரியசாலி. இதைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் நெருக்கமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Advertisment

சற்று பார்த்தால் போதும். பிரகாசித்துக் கொண்டிருக்கும் வட்டக் கண்கள்... கம்பீரமான மீசை... உடல் பலம் தேவையான அளவிற்கு இருக்கிறது என்பதை அறிவிக்கக்கூடிய முக உணர்ச்சிகள்....

Advertisment

பணியில் இருந்த காலத்திலும் தைரியமானவராக இருந்தார். சீருடையும் குறுக்குவாட்டு பெல்ட்டும் கிடைத்த நாளிலிருந்தே அவர் திருடர்களைப் பிடிப்பதிலும் தெரு ரவுடிகளைக் கீழ்ப்படியச் செய்வதிலும் திறமைசாலி என்ற பெயரை வாங்கினார்.

ஒருமுறை எட்டு ரவுடிகளை தனி மனிதனாகச் சந்தித்து மோதிய விஷயத்தை பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காத பத்திரிகைகள் கூட பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டன. இருபது வருட காலம் பணியில் இருந்துவிட்டு, போலீஸ் சூப்ரெண்ட் பதவியும் போலீஸ் மெடலும் கிடைக்கும் என்றிருந்த சூழலில், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் "கெ. எஸ். ஆர்.' என்ற அரசாங்கத்தின் பிரிவில், பொதுவாக உபயோகத்தில் இல்லாத ஒரு வகுப்பின்படி, தானே ஓய்வூதியம் வாங்கும் நிலையை உண்டாக்கிக் கொண்டார். அருமையான காலத்தில்... நல்ல காலத்தில்.... நாற்பத்தைந்தாவது வயதில்....

Advertisment

"ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்' என்று கேட்டவர்களிடம் அவர் கூறினார்: 

"இனி என்னை விட தோள்பட்டையில் நட்சத்திரங்களையும் வாள்களையும் தடிமனான ஆயுதங்களையும்  தாங்கிக்கொண்டு நடக்கும் அதிகாரிகளுக்கு நான் சலாம் வைக்க வேண்டிய 

அவசியம் இல்லையே! போலீஸ் மெடல் விஷயத்தை எடுத்துக் கொண்டால், கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட்டில் 'கோழை' என்ற பெயரைப் பெற்றிருக்கும் மன்னர்களுக்குக் கூட இப்போது அது எளிதில் கிடைக்கிறது. அதை நான் பெற்றால், 

எனக்கு என்ன பெருமை? இவற்றிற்கெல்லாம் மேலாக, என் மைத்துனர் ஆரம்பித்திருக்கும்  சிறுதொழில் நிறுவனத்தின் பொது மேலாளராக நான் பணியாற்ற இருக்கிறேன்.''

இவ்வளவையும் கேட்ட பிறகு, "நல்லது' என்று சிலர் கூறினார்கள். சாமர்த்தியம் உள்ள மனிதராக இருந்தால், ஒரே நேரத்தில் போலீஸ் சூப்ரண்டாகவும் பொது மேலாளராகவும் இருந்திருக்கலாம். அரசாங்க பணியைத் துறக்காமல், வர்த்தகம் செய்பவர்கள் எத்தனை பேர்!  போலீஸ் வேலையை இழந்த பிறகு... தவறு... இழக்க வைக்கப்பட்ட பிறகு, அவர் ஒற்றப்பாலத்தில் தங்கினார். அங்குதான் சிறுதொழில் நிறுவனம் இருந்தது.ஆடர்லிகள் இல்லை... வேண்டாம்.... பரவாயில்லை. ஷூக்களை அவரே பாலீஷ் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் என்ன? தானே முக சவரம் செய்து கொள்வதில்லையா? யாரும் தன்னைப் பார்த்து பயப்படுவதில்லை. 

அதற்கான அவசியம் என்ன? இனி தேவையானதுஉற்பத்தி, விற்பனை, லாபம் ஆகியவைதான். அதற்கு யாரும் பயப்படக்கூடாது என்பது மட்டுமல்ல.. 

அனைவரும் தன்மீது அன்பு செலுத்தவும் வேண்டும். வட்டக் கண்களில் பிரதிபலித்தது பப்ளிக் ரிலேஷன்ஸின் வெளிச்சம். பெரிய மீசையின் புதிய தோற்றம் நட்பின் சின்னமாக ஆனது.

ஒரு விஷயத்தில் மட்டும் சிரமம் இருந்தது. வேலைக்காரிகள்...

அது... இந்த இடத்தால் உண்டான பிரச்சினை. இரண்டு வாரங்களோ மூன்று வாரங்களோ பணியைச் செய்து விட்டு, வேலைக்காரிகள் இடத்தை விட்டுச் செல்வது, தான் போலீஸ் பணியை விட்டதாலா? இல்லவே இல்லை. செர்ப்பளஸேரியைச் சேர்ந்த அம்மிணி மட்டும்தான் மூன்று மாதங்களுக்கு நெருக்கமாக பணியில் இருந்தாள். வெளுத்த நிறம்... பயந்த குணம் கொண்டவள். வயது முப்பத்தைந்து ஆகியும், இருபது வயதிற்கான அழகிய தோற்றத்தைக் கொண்டவள். இவ்வளவு தகுதிகள் ஒரு வேலைக்காரியிடம் ஒன்று சேர்ந்து இருக்கலாமா? ஒருநாள் சிறுதொழில் நிறுவனத்திலிருந்து திரும்பி வந்தபோது, மனைவி கூறினாள்: "நான் அம்மிணியைப் போகச் சொல்லிட்டேன். அந்த அளவிற்கு நல்லவள் இல்லை.'' அதற்குப் பிறகு, யாரையும் யாரும் போகுமாறு கூறவில்லை. அனைவரும் அவர்களாகவே போய் விட்டார்கள். இல்லாவிட்டால்... அதற்கான சூழல்களை உண்டாக்கினார்கள். கோதகுறிஸ்ஸி பாலாமணி திருடினாள். அதை அறிய நேர்ந்ததும் அவள் அங்கிருந்து வெளியேறிவிட்டாள். ஷொர்ணூர்காரி சாந்தா பால்காரனுடன் உறவு வைத்திருந்தாள். அந்த விஷயம் தனக்குத் தெரிந்துவிட்டது என்பதை அறிந்தவுடன், அவள் புறப்பட்டுப் போய்விட்டாள். இவ்வாறு ஒவ்வொரு காரணத்திற்காக, அனங்ஙனடி அம்முக்குட்டியும்  பட்டாம்பி பாருவும் முத்துக்குறிஸ்ஸி மாதவியும் த்ருக்கடீரி தங்கமும் லக்கிடி லட்சுமியும் இடத்தைக் காலி பண்ணினார்கள்.

காவல் துறையில் பணியாற்றிய காலமாக இருந்திருந்தால், குற்றவாளியைக் கைது செய்து கொண்டு வரும்போதே, ஒருத்தி போய்விட்டால் இன்னொருத்தியைப் போலீஸ் கான்ஸ்டபிள்கள் கொண்டுவந்து நிறுத்தி விடுவார்கள். வேறு எதுவுமே தெரியாவிட்டாலும், வேலைக்காரிகளை அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் கைது செய்வதற்கும் தேவைப்படும் திறமையைக் கொண்டவர்களாக இருந்தார்களே, ரைட்டர் குட்டன் பிள்ளையும் ஹெட் அவறான் குட்டியும்! இப்போது அவ்வப்போது வேலைக்காரிகள் இல்லாமல் வீட்டுக் காரியங்கள் நடைபெறுகின்றன. த்ருக்கடீரி தங்கம் போன பிறகு, மூன்று வாரங்கள் கடந்த பிறகுதானே லக்கிடி லட்சுமியே கிடைத்தாள்!

இப்படிப்பட்ட இடைவெளிகள் வரும்போது, மனைவி புலம்புகிறாள். அவர் சிறுதொழில் நிறுவனத்திற்குத் தாமதமாக வருகிறார். உற்பத்தி குறைகிறது.

சிறுதொழில் அதிபர்களின் ஒரு கூட்டத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்தபோது,"தொழிலில் லாபமும்  வேலைக்காரிகளின் குறும்புகளும்' என்ற விஷயத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரையை வாசித்தால் என்ன  என்றுகூட அவர் சிந்தித்தார்.

வேலைக்காரிகளை அமர்த்துவது என்ற விஷயத்தில் மனைவி பலமான "ஒன் உமன்' சர்வீஸ் கமிஷன் என்றுதான் கூற வேண்டும். ஓராயிரம் தகுதிகளைக் கூறுவாள். செர்ப்புளஸேரியைச் சேர்ந்த அம்மிணி போன பிறகு, தகுதிகளில் முக்கிமானது இதுதான்: வேலைக்காரி மிகவும் இளம் வயது உள்ளவளாக இருக்க வேண்டும் (வயதிற்கு வந்தவளாக இருக்கக் கூடாது என்று அர்த்தம்). இல்லாவிட்டால்... வயதில் மிகவும் பெரியவளாக இருக்க வேண்டும் (தடிமனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாதவிடாயைத் தாண்டியிருக்க வேண்டும் என்று அர்த்தம்).

தானாகவே ரிட்டயர்ட் ஆன காவல் துறை அதிகாரி தேடினார்.

இந்த தகுதிகளைக் கொண்டவளாக இருந்தாள்... அனங்ஙனடி அம்முக்குட்டி.( மிகவும் பெரியவள்) ஆனால், நிற்கவில்லை.

வருகிறார்கள்.... போகிறார்கள்....

பிரச்சினையே இந்த ஒற்றப்பாலம்தான்.

உற்பத்தி குறைந்து விட்டது. விற்பனை குறைந்து விட்டது. லாபம் முற்றிலுமாக குறைந்து விட்டது.

வட்டக் கண்கள் சுழன்றன. பெரிய மீசை துடித்தது.

அவர் ஒரு தீர்மானத்தை எடுத்தார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு வேலைக்காரியைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அங்கு தம்பி இருக்கிறான். அவன் இருப்பதோ... புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் அலுவலகத்தில்.

தம்பிக்குத் தகவல் கிடைத்தது.

தம்பி ஒரு வேலைக்காரியைக் கண்டுபிடித்தான்.

முடவன்முகள் என்ற இடத்தைச் சேர்ந்த மஞ்சுபாஷிணி...

அண்ணனுடன் தம்பி தொலைபேசியில் பேசினான்.

கீழே கண்டபடி மூன்று நிமிடங்களுக்குள் ஒரு ட்ரங்க் உரையாடல் நடைபெற்றது.

"என்ன பெயர்னு சொன்னே?"

"மஞ்சுபாஷிணி".

"திரைப்பட நட்சத்திரமா?''

"இல்லை...''

"முன்னாள் திரைப்பட நட்சத்திரமா?''

"திரைப்பட நட்சத்திரமே இல்லை.''

"வயதில் மிகவும் இளையவளா.... மிகவும் அதிகமாக இருப்பவளா?"

"மிகவும் பெரியவள். ஐம்பத்தாறு.''

"நல்லது. அனுப்பிடு...''

அந்த வகையில் "ம: பாஷிணி' ஒற்றப்பாலத்திற்கு வந்து சேர்ந்தாள். பெயர் சுருக்கப்பட்டது. பாஷிணி என்று....

பாஷிணியை ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிக்கும் மனைவிக்கும் மிகவும் பிடித்திருந்தது. வயது ஐம்பத்தாறாக இருந்தாலும், நல்ல உடல் நலத்துடன் இருந்தாள். மூவாயிரத்து இருநூறு சதுர அடிகள் உள்ள மொஸைக் தரையைச் சுத்தம் செய்வது... மூன்று பசுக்களைக் கறப்பது.... தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது... துணியைச் சலவை செய்வது... இவை அனைத்திற்கும் பாஷிணிக்குத் தேவைப்படுவதே மூன்றே முக்கால் மணி நேரம்தான். பிறகு... நல்ல முறையில் சமையல் செய்யவும் தயார்தான். பாஷிணிக்கு ஓய்வு நேரம் நிறையவே இருக்கிறது. 

அதை பக்தி விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறாள். மகாபாரதத்தை வாசிக்கிறாள். கீதையை வாசிக்கிறாள். கீர்த்தனங்களைப் பாடுகிறாள். நிம்மதி நிறைந்த நாட்கள் நகர்ந்து நீங்கிக் கொண்டிருந்தன.

வருகின்றன.... புதிய கண்டுபிடிப்புகள்....

சர்க்கரைக்கான செலவு அதிகரித்திருக்கிறது. முன்பு ஒவ்வொரு மாதத்திற்கும் இருபத்தைந்து கிலோ கிராம் போதுமானதாக இருந்தது.

இப்போது ஐம்பது கிலோ.

காப்பிப்பொடிக்கான செலவு எட்டு ராத்தலிலிருந்து பதினேழு ராத்தலாக உயர்ந்திருக்கிறது.

ஃப்ரிட்ஜில் பாதுகாத்து வைத்திருக்கும் பழ வர்க்கங்கள் திடீரென காணாமல் போகின்றன.

பக்கத்து குடிசைகளில் வசிக்கும் குழந்தைகள் தடிமனாகி வருகின்றன.

மனைவி விசாரணை நடத்தினாள்.

இதற்கெல்லாம் காரணம் பாஷிணிதான் என்பது தெரிய வந்தது. அவள் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு சர்க்கரை, காப்பிப்பொடி ஆகியவற்றை தானமாக அளித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தைகளுக்கு சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றையும்....

பாஷிணி விசாரிக்கப்பட்டாள்.

பதிலெதுவும் கூறாமல், பாஷிணி கீதையை வாசிக்க ஆரம்பித்தாள். இடையே அவ்வப்போது முணுமுணுத்தாள்: "என்னைக் குற்றம் சுமத்துவது எனக்குப் பிடிக்காது.''

ஓய்வு பெற்ற அதிகாரியும் மனைவியும் கதவை அடைத்துவிட்டு ஒரு விவாதத்தை நடத்தினார்கள்.

மனைவி: "இப்படி நடந்தால்....?''

கணவர்: "செலவு கொஞ்சம் அதிகரிக்கும் என்பதுதான் விஷயம். பரவாயில்லை. பணிகள் அனைத்தையும் செய்கிறாள்ல?"

மனைவி: "இருந்தாலும்....''

கணவர்: "இவளையும் கோபிச்சு அனுப்பி விட்டோம்னா, பிறகு...? தம்பி கூட நினைப்பான்.... உனக்கு வேலைக்காரிகளிடம் நட்புணர்வுடன் பழகத் தெரியலைன்னு....''

மனைவி: "இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்போம்.''

கணவர்: "நல்லது...''

பாஷிணி தொடர்ந்து பணியைச் செய்தாள். கீதையை வாசித்தாள். சர்க்கரை, காப்பிப்பொடி ஆகியவற்றைப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பங்கு வைத்தாள்.

ஒருநாள் தயிரைக் கடைந்து கிடைத்த வெண்ணெய் முழுவதையும் எடுத்துக் கொண்டு பாஷிணி சாலையில் இறங்கினாள். ஒரு பிச்சைக்கார சிறுவனுக்கு வெண்ணெய் முழுவதையும் கொடுத்துவிட்டாள். மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "இது என்ன கூத்து?'' என்று கேட்டதற்கு, பாஷிணி கூறினாள்: "என்னை ஸ்ரீ கிருஷ்ணன் அழைத்தார். அந்தச் சிறுவன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் கோகுலத்தில்  விளையாடித் திரிந்தவன்...''

"கிறுக்கு!''- கணவரிடம் மனைவி முணுமுணுத்தாள்.

இன்னொரு நாள் பாஷிணி தன் இடது தொடையிலிருந்த ஒரு நீல நரம்பைக் காட்டியவாறு கூறினாள்: "இது என்னன்னு தெரியுமா?''

"நரம்பு...''

"இல்லை... மஹா விஷ்ணு...''

கிறுக்கு முற்றிவிட்டதாக கணவரிடம் மனைவி முணுமுணுத்தாள்.

இந்த நரம்பைக் காட்டிய நாளுக்கு அடுத்த நாள் ஊரின் முக்கிய செல்வந்தரான குஞ்ஞு நெடுங்ஙாடியின் கணக்குப்பிள்ளை ஓய்வு பெற்ற அதிகாரியின் நிலத்திற்கு வந்தான். கணக்குப்பிள்ளை ஒரு பாம்பைப் பார்த்து ஓடினான். பாம்பும் ஓடியது. தவறுதலாக கணக்குப்பிள்ளை பாம்பை மிதித்து விட்டான். அதிர்ஷ்டம்! கடிக்கவில்லை. அந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பாஷிணி பக்திப்பெருக்குடன் கணக்குப் பிள்ளையை வணங்கியதுடன், தொழுதுகொண்டே அவனைச் சுற்றி நடனமாடி விட்டு, சமையலறைக்குள் நுழைந்து காய்ச்சிச் சுண்ட வைத்திருந்த பாலைக் கொடுத்தாள்.

மனைவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

"நீ எப்படி நடக்கிறாய், பாஷிணி?''

"பகவான் வந்திருக்கிறார்ல?''

"பகவானா?''

"அதோ... பாருங்க.''- பாஷிணி கணக்குப் பிள்ளையைச் சுட்டிக்காட்டியவாறு தொடர்ந்தாள்: 

"காளியமர்த்தனம் முடிஞ்சு, பகவான் களைச்சுப் போய் வந்திருக்கிறார்.''

சிறிய ஒரு தலைவலியால் பாதிக்கப்பட்ட மனைவி படுக்கையில் சென்று விழுந்தாள்.

சிறுதொழில் நிறுவனத்திலிருந்து திரும்பி வந்த கணவரிடம் மனைவி காளியமர்த்தனம் என்ற விஷயத்தைப் பற்றி கூறியபோது, அவர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். "ரியல் மென்டல் கேஸ்... சரியான கிறுக்கு... ம்... பரவாயில்லை... வேலையை ஒழுங்கா செய்கிறாள்ல?''

மனைவி முனகினாள். இடையே அவ்வப்போது ஒவ்வொரு கிறுக்குத்தனமானசெயல்களையும் வெளிக்காட்டினாலும் அருமையாக பணிகளைச் செய்து கொண்டிருந்தாள்.

இருக்கட்டும்.

ஆனால், கிறுக்குத்தனம் வேறொரு 'டைமன்ஷ'னில் வளரும் என்ற விஷயம் யாருக்குத் தெரியும்?

ஒரு ஞாயிற்றுக்கிழமை...

சிறுதொழில் நிறுவனத்திற்கு விடுமுறை.

கணவர் கட்டிலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மனைவி குளியலறையில்....

அப்போது கண்களில் மை பூசி, பொட்டு வைத்து, கொஞ்சம் பவுடர் பூசி, தலைமுடியில் முல்லைப் பூ வைத்து... பாஷிணி கட்டிலுக்கு வந்தாள். ரிட்டயர்ட் அதிகாரிக்கு அருகில் அவள் அமர்ந்தாள். அவரை இறுக அணைத்தாள்.

அந்தக் காட்சியைப் பார்த்தவாறு மனைவி குளியலறைக்கு உள்ளிருந்து திரும்பி வந்தாள்.

அதிர்ச்சியடைந்து விட்டாள்.

செர்ப்பளஸேரி அம்மிணி கூட செய்வதற்குத் துணியாத செயல்!

பாஷிணியை மனைவி வேகமாகச் சென்று பிடித்தாள்.

"எழுந்திருடீ... துடைப்பக் கட்டையே!''

"நான் துடைப்பம் இல்லை...''

"அப்படின்னா...  பெருச்சாளி....''

"நான்... ராதா.... பிருந்தாவனத்தின் ராதா. இது... என் கிருஷ்ணன்''.

மனைவி பார்த்துக் கொண்டிருக்க, கணவரை பாஷிணி கட்டிப் பிடித்தாள்.

கணவர் வெளிறிப் போய் காணப்பட்டார். நெளிகிறார்...

துடிக்கிறார்.... ராதாவின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறார்.

ராதா விடுவதாக இல்லை.

"கார்வண்ணா... கோகுலபாலா.... கண்ணா!"- பல பெயர்களையும் அவள் கூறினாள்.

மனைவியைக் கணவர் கையற்ற நிலையுடன் பார்த்தார்.

"கிறுக்கு!''- அவர் முணுமுணுத்தார்.

"இந்த கிறுக்குத்தனம் இங்கு வேண்டாம்''- பாஷிணியை மனைவி பிடித்து இழுத்தாள். கீழே போட்டாள்.

பாஷிணி கீதையுடன் ஒரு மூலையில் சென்று அமர்ந்தாள்.

கணவரைப் பார்த்து மனைவி கேட்டாள்: "இது என்ன கூத்து?''

"இது..... கிறுக்குத்தனம்.''

"இந்த கிறுக்குத்தனம் உங்களுக்குப் பிடித்திருப்பதைப் போல தோன்றுகிறதே!"

"ச்சே... ச்சே....''

"இவளை இன்று  இங்கிருந்து போகச் செய்யணும்.''

"அப்படின்னா... வேலைக்காரி பிரச்சினை?''

"ஒரு வேலைக்காரியும் வேண்டாம். அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.''

பாஷிணி உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் எழுந்தாள். ஒரு பையில் தன் சொத்துக்களான இரண்டு மேற்துண்டு, மூன்று வேட்டி, இரண்டு ரவிக்கை ஆகியவற்றை வைத்தாள். பிறகு.... ஒரு நடை... கேட்டை நோக்கி.

"அவள் போகிறாள்.'' - கணவர் கூறினார்.

"போகட்டும்...''

"மூவாயிரம் சொச்சம் சதுர அடிகள் கொண்ட தரை, மூன்று பசுக்கள், தோட்டம், சமையல், வீட்டு வேலை ஆகியவை பற்றிய விஷயங்களுக்குள் கணவர் பயணித்தார்.

சில நிமிடங்களுக்கு மனைவி எதுவும் பேசவில்லை. பிறகு... ஒரே தாவல்.... கேட்டை நோக்கி... 

"பாஷிணி, நீ எங்கு போறே?"

"பிருந்தாவனத்திற்கு''

"எதற்கு?''

"கிருஷ்ணனைப் பார்ப்பதற்கு...''

"கிருஷ்ணன் இங்கும் இருக்கிறாரே?''

"எங்கு?''

"உள்ளே... கட்டிலில்...''

"ஆனால், என்னைப் பக்கத்துல போறதுக்கு சம்மதிக்கலையே?''

"இனி சம்மதிக்கிறேன்''.

பாஷிணி புன்சிரித்தவாறு திரும்பி வந்தாள்.

அன்று இரவு மனைவியும் கணவரும் படுக்கையறையில் கீழ்க்கண்டபடி பேசிக் கொண்டார்கள்:

மனைவி: "வீட்டு வேலை நடக்கணுமே! அதனால்தான் நான் அவளைத் திரும்ப அழைத்தேன்.''

கணவர்: "இருந்தாலும்... அவள் என்னைக் கட்டிப் பிடிக்க வந்தால்....''

மனைவி: "வந்தால் என்ன? ஐம்பத்தாறு ஆயிடுச்சுல்ல?''

கணவர்: "ஆமாம். ரொம்பவும் நல்லது.''

மனைவி: "நீங்கள் பிரச்சினையை உண்டாக்கக்கூடிய ஆள் இல்லை என்பது  எனக்குத் தெரியும்.''

கணவர்: "தேங்க்ஸ்:''

மனைவி: "எப்போதாது உங்களுக்கு அருகில் வந்துட்டுப் போகட்டும்.''

கணவர்: "அய்யோ!''

மனைவி: "என்ன அய்யோ? பரவாயில்லைன்னு சொல்றேன்.''

கணவர்: "அவளைக் கட்டிலை விட்டு இறக்கிய நீயா இப்போ இப்படிச் சொல்றே?''

மனைவி: "ஒரு "ரியலிஸ்டிக் அப்ரோச்'சை ஏற்றுக்கொண்டேன்னு அர்த்தம்.''

கணவர்: "அப்படின்னா... அவளுக்கு ஒரு சந்தன சோப்பைக் கொடுக்கணும்.''

மனைவி: "ஒய்?''

கணவர்: "நாற்றம் மிகவும் ரியல் ஆச்சே! என்னைக் கட்டிப்பிடித்தால், சகித்துக் கொள்ளலாம். ஆனால், நாற்றம்!''