நாளை நான் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்போகிறேன். உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவேன்.

பத்திரிகைகளில் என்னுடைய புகைப்படமும் வாழ்க்கை வரலாறும் அச்சடிக்கப்படும்.

கடந்த ஒரு வார காலமாக வாழ்த்துவதற்காக வந்த நண்பர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் பகட்டு நிறைந்த ஒரு கூட்டிற்குள் நுழைவதற்கு தயாராகிக் கொண்டிருக்கி றேன். நான் அரசு அமைப்பின் பாகமாக ஆகிறேன்.

Advertisment

அதனால்தான் வில்வம் கூறினான்:

"அப்படின்னா‌.‌... நீயும் இறுதியில் அடிபணிஞ்சிட்டே..‌.

சரிதானே?''

Advertisment

நானும் விஸ்வமும் ஒன்றாகவே இந்த நகரத்திற்குள் நுழைந்தோம்.

அரசியலில் ஒன்றுசேர்ந்து கால் களைப் பதித்தோம்.

ஆரம்பத்தில் மாணவர்களின் தலைவர்களாக இருந்தோம். பிறகு தொழிற்சங்க உலகிற்குள் நுழைந்தோம். ஒரு நாள் இருவருமே நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழையவும் செய்தோம்.

பத்திரிகையாளரின் வாழ்க்கை வரலாறு ஆரம்பமாவதே நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் என...

அரசு என்ற அமைப்பின் பகுதியாக மாறாமலே பளபளப்பான இந்த கூட்டிற்குள் இருக்க முடியுமா? இருக்க முடியும் என்று நான் விஸ்வத்திடம் கூறவில்லை. எப்படி கூறுவேன்? எனக்கே அந்த நம்பிக்கை இல்லையே! எனக்கு முன்பும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இந்த கூட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர். சட்டங்களை முற்போக்கு சிந்தனையுடன் விளக்குவோம் என்றும், அந்த வகையில் சோஷ-சத்தின் படை வீரர்களாக நீதி நீயாய பீடத்தில் அமர்ந்திருப்போம் என்றும் கூறியவர்களால் ஏதாவது செய்ய முடிந்ததா?

இப்போதும் குளிர்சாதன வசதி கொண்ட ஹால்களில் புரட்சியைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் கூடங்களில் வெள்ளிச் செங்கோல்களை ஏந்தியிருக்கும்...

ss3

சின்னங்கள் அணிந்த சிப்பாய்களின் துணையுடன் நடக்கும்போது, அவர்களின் தலை தாழ்கிறது. அவர்கள் தோல்வி அடைந்தவர்கள்.

நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எந்தவொரு பழமையான நீதிபதியையும் போல அவர்கள் வகுப்புகளைப் பிரிக்கிறார்கள்.

அவர்களுடைய தீர்ப்புகள் இன்று வரை கொச்சி நகரத்தின் ஏரியில் ஒரு நெருப்புப் பொறியைக் கூட உருவாக்கவில்லை. 

அவர்களின் வரிசைக்குத்தான் நான் செல்கிறேன்.

சட்டங்களைப் புரட்டிப் போடுபவர்களின் கூட்டத்தில் என்னைப் பார்க்க முடியாது.

விஸ்வத்தைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

நாளை வாக்குறுதியை எடுப்பதற்கு முன்னால் நான் அந்த கல்லறைக்குச் சற்று செல்லவேண்டும். என்னை இங்கு வரை கொண்டுவந்து சேர்த்த மனிதர் அங்குதான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த மனிதரின் கனவுதான் நாளைக்கு செயல் வடிவத்திற்கு வருகிறது.

சாக்கோ ஜெ. பனவேலி.

தடிமனான சரீரம்... கருணையும் குறும்புத் தனமும் நிறைந்த கண்கள்...கம்பீரமான குரல்...

மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார். பிறகு முன்ஃப்பாக ஆனார். இறுதியில் ஜில்லா நீதிபதியாகவும்...

முதல் தடவையாக காவல் துறை என்னைக் கைது செய்தபோது, மாஜிஸ்ட்ரேட் பனவேலிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

பதினெட்டு குற்றவாளிகளைக் கொண்ட வழக்கு... ஏராளமான வகுப்புகள்...

சட்டவிரோதமாக கூட்டம் கூடியது...

கடுமையாக சரீரத்தைத் தாக்கியது..

கொலைச் செயலுக்கான முயற்சியும் கூட்டு ஆலோசனையும்கூட இருக்கின்றன.

பழைய காலம்... கொச்சியில் அரசர் ஆட்சி செய்த காலம்... ராஜேந்திர மைதானத்தில் அடியிலும் உதையிலும் முடிவடைந்த ஒரு கூட்டம் நடைபெற்றது. நான் அந்த கூட்டத்தில் ஒரு பேச்சாளராக இருந்தேன். கொச்சி அரசருக்கு எதிராக உரையாற்றியபோது, காவல்துறை தலையிட்டது. மோதல் உண்டானது.

எங்களுக்கும் காவல்துறையில் இருந்தவர் களுக்கும் காயம் உண்டானது.

காவல்துறையின் அத்துமீறல் முடிந்தபிறகு, மைதானம் முழுவதும் கற்களும் செருப்புகளும் சிதறிக் கிடந்தன.

இன்றைய உயர்நீதிமன்றத்தின் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய ஒரு அவுட் ஹவுஸில்தான் அன்றைய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இருந்தது.

மாஜிஸ்ட்ரேட் பனவேலி எங்களுக்கு ஜாமீன் அளிக்க மறுத்தார். ஜாமீனை அனுமதித்தால், ஜாமீன் அளிக்கப்பட்டவர்கள் கிடைக்காமல் போகும் காலம்.

கம்யூனிஸ்ட்கள் அன்று மதிக்கப்படும் நிலையில் இல்லை. யாரும் நெருங்க மாட்டார்கள். என் விஷயத்தை எடுத்துக் கொண்டால், வீட்டிலுள்ளவர்கள் விட்டெறிந்த கெட்ட மகனாக நான் இருந்தேன்.

நாங்கள் காவல் நிலையத்தின் லாக்கப்பிற்குள் இருந்தோம். சப் ஜெயில் என்பது வழக்கத்தில் வந்திராத காலமல்லவா அது? காலையில் காபி என்ற பொய் பெயரைப் பெற்றிருந்த ஒரு பருகும் நீர் கிடைக்கும்.

சாயங்காலம் கஞ்சியும்... பிறகு...

கிடைப்பது...

லாக்கப்பிற்குள் நுழைக்கப்படும் போதும், லாக்கப்பிலிருந்து வெளியே கொண்டு வரும் போதும் உள்ள அடி, உதைகள்...

விசாரணை ஆரம்பித்தது.

காலையில் ஒன்பது மணிக்கு எங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள்.

செஷன்ஸுக்கு அனுப்பப்பட வேண்டிய வழக்கு.

எனது மதிய உணவு முடிந்த பிறகுதான் அன்று நீதிமன்றம் கூடியது. அரை மணி நேரம் தாமதமானது.

மறுநாள் மதியம் பெஞ்சில் படுத்திருந்தபோது, தொம்மன் வந்தார்: "மாஜிஸ்ட்ரேட் அய்யா கூப்பிடுறாரு.''

"உட்காருடா... உனக்கு இன்னைக்கு ஒரு  நல்ல சாப்பாடு இருக்கு.''- அவர் கூறினார்.

ஆச்சரியம்...

அவருடைய வீட்டிலிருந்து இரண்டு சாப்பாடு கொண்டுவந்திருக்கிறார்.

"உன்னைப் பற்றி நான் என் வீட்டுக்காரிக்கிட்ட சொன்னேன். அவள் உனக்கு ஒரு சாப்பாடு கொடுத்தாள்.

மீன் குழம்பு நல்லது... ம்...

"சாப்பிடு''.

சைவம் சாப்பிடக்கூடிய நான் தயங்கி நிற்க, அவர் கேட்டார்: "ம்.‌.. என்ன?''

"ஒண்ணுமில்ல...''- நான் சோற்றையும் மோர்க் குழம்பையும் சேர்த்து சாப்பிட்டேன்.

அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. மேஜையின் மூலையிலிருந்து ஒரு புட்டி பசும் மோரை, நீர் பருகுவதைப்போல குடித்துக்கொண்டே அவர் சத்தமாக சிரித்தார்.

"நீ தாளையும் தண்டு கீரையையும் சாப்பிடுறவன். 

இல்லையாடா?''

மறுநாளிலிருந்து நான் ஒருமுறை கூட பார்த்திராத அந்த இல்லத்தரசி, எனக்கு அருமையான சைவ உணவைக் கொடுத்தனுப்ப ஆரம்பித்தார்.

என்னைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட் டோருக்கு ஆச்சரியம் உண்டானது. "இந்த தடிமனான மாஜிஸ்ட்ரேட்டை தோழன் தன் கைக்குள் போட்டுக் கொண்டானே!''- அவர்கள் கூறினார்கள்.

அவர்களை விட அதிக ஆச்சரியம் எனக்குத்தான் என்று நான் கூறியபோது, அவர்கள் சிரித்தார்கள்.

வழக்கு விசாரணையில், விசேஷமான நல்ல மனதை என்மீது காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.

சாட்சிகளிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்கவும், நான் என்னுடைய சொற்பொழிவில் மகாராஜாவை எதிர்த்துபேசினேன் என்ற ப்ராசிக்யூஷன் வழக்கை பலவீனமாக ஆக்குவதற்கும் அவர் முயற்சித்தபோது, எனக்குக் கூட பயம் உண்டானது.

அவருக்கு ஏதாவது பிரச்சினை உண்டாகுமோ? குற்றம்சாட்டப்பட்ட மனிதனை தன்னுடன் அமர வைத்துக் கொண்டு உணவு தரும் மனிதர்! காவல்துறையினர் அரசாங்கத்திடம் புகார் கொடுக்கக்கூடாது என்றில்லை.இது எதுவுமே அவருடைய மனதிற்குள் நுழையவில்லை.

ஒரு இரவு வேளையில் அவர் லாக்கப்பிற்கு வந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் அவர் கட்டளையிட்டார்: 

"இவனை தொடக் கூடாது. தொட்டால்...!''

அந்த கம்பீரமான குரல் ஒரு பயமுறுத்தலாக இருந்தது.

ஏன் இப்படி கூறவேண்டும்?

மறுநாள் 

ss2

மதியம்தான் புரிந்தது.

புட்டியிலிருந்து பசும் மோரைப் பருகும் போது, அவர் கூறினார்: "நேற்று இரவு அவர்கள் உன்னைக் கடுமையாக அடித்து உதைப்பார்கள் என்று நான் பயந்தேன். உனக்குத் தெரியுமா? நேற்று சாயங்காலம் உன் கட்சிக்காரர்கள் ஒரு போலீஸ்காரரை வெட்டிட்டாங்க...''

வெளியே கூறினால், யாருமே நம்ப மாட்டார்கள். எனினும், கூறுகிறேன். அன்று மதிய வேளையிலேயே மாஜிஸ்ட்ரேட் பனவேலியின் ஒரு புதிய முகத்தை நான் பார்த்தேன். ஒரு கள்ளச் சிரிப்புடன் அவர் கூறினார் : "நான் இங்கு பருகுவது என்னன்னு உனக்குத் தெரியுமா?"

"பசும் மோர்.''

"நீ நல்லா பாரு''.

ஒரு குவளையில் கொஞ்சம் ஊற்றித் தந்தார். அது... கள்ளு..

இரண்டு மூன்று நாட்களுக்குள் மாஜிஸ்ட்ரேட் பனவேலி "கம்மிட்டல்' உத்தரவை வெளியிட்டார்.

என்னைத் தவிர, அனைவரையும் செஷன்ஸிற்கு அனுப்பிவைத்தார்.

விடுதலையான நான் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, பொம்மன் வந்தார்.

"மாஜிஸ்ட்ரேட் அய்யா அழைக்கிறாரு.''

நான் சென்றேன்.

"இனி என்னடா செய்யப் போறே?''

"எனக்குத் தெரியல''.

"உட்காரு... இன்னைக்கும் என் கூட சாப்பிடு''.

உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு, அவர் கூறினார்: 

"இன்னைக்கு சாயங்காலம் நீ வீட்டிற்கு வா!''

ஐம்பது ரூபாயும் கொஞ்சம் அறிவுரைகளும் எனக்காகக் காத்திருந்தன.

"நீ இனிமேலும் படிக்கணும்... நீ ஒரு நல்ல வக்கீலாக வருவாய்.''

நான் நன்றிப்பெருக்குடன் ரூபாயை வாங்கி னேன். அவர் என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

பூனாவிலிருக்கும் ஒரு சட்டக் கல்லூரி பேராசிரியருக்கு...

நான் வீட்டிற்குச் செல்லவில்லை. புகைவண்டி நிலையத்திற்கு...

அந்த கடிதம் அனைத்து கதவுகளையும் திறக் கக்கூடிய சாவியாக இருந்தது. நான் எல்.எல்.பி.யில் சேர்ந்தேன்.

ஹாஸ்டலில் என்னைக் குறைந்த கட்டணத் திற்கு சேர்த்துக் கொண்டார்கள்.என் பேராசிரியர் என்னை அவருடைய பேத்தியின் ட்யூஷன் மாஸ்டராக ஆக்கினார். அந்த வருமானம் என் படிப்பிற்குப் போதுமானதாக இருந்தது.

பட்டம் வாங்கிய பிறகு, நான் ஊருக்கு வந்தேன். முதலில் செய்த காரியமே மாஜிஸ்ட்ரேட்  பனவேலியைப் பார்ப்பதுதான்.

அப்போது அவர் முன்ஸீஃப் பனவேலியாக இருந்தார்.

"நீ எப்போ உறுதிமொழி எடுத்துக்கப் போறே?''

"உடனடியாக...''

"உறுதிமொழி எடுத்தவுடன், என்னை வந்து பார்க்கணும்.''

நான் அதன்படி நடந்தேன்.

எழுநூற்றைம்பது ரூபாய் வருமானமாக வரக்கூடிய ஒரு வழக்கை அவர் எனக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

கோட்டிற்கும் கவுனுக்கும் பதவியேற்பிற்கும் செலவான தொகையைவிட அதிகமான தொகை.

இந்த நகரத்தில் இளம் வக்கீல்களுக்கு மத்தியில் நான் அறியப்பட்டவனாக ஆகும் வேளையில், அப்போது ஜில்லா நீதிபதியாக ஆகியிருந்த அவர் மரணமடைந்து விட்டார்.

தூங்கும்போது உண்டான மாரடைப்பே காரணம்.

என் வாழ்க்கையில் மன வேதனையுடன் நான் அழுதது அன்றுதான்.

என் தந்தை இறந்தபோதுகூட நான் அந்த அளவிற்கு அழவில்லை.

நாளை நான் உறுதிமொழி எடுப்பேன். நான் அரசாங்க அமைப்பின் ஒரு பாகமாக ஆவேன். விஸ்வமும் மற்ற ஏராளமான அரசியல் தோழர்களும் என்னை வெறுப்பார்களோ? இனி அவர்களைப் பார்க்கும்போது, முன்பைப் போல நலம் விசாரிப்பதில் பிரச்சினைகள் இருக்குமோ? இந்த பகட்டான கூட்டில் இருக்கும்போது, நான் அனைவரை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்பதல்லவா முறை?

உறுதிமொழியை எடுப்பதற்குமுன்பு, அந்த கல்லறையில் நான் தலை குனிந்து நிற்கவேண்டும்.

அந்த பழைய வழக்கு காலத்தில் என்மீது அவருக்கு வாஞ்சை உண்டானதற்குக் காரணம் என்ன? இப்போதும் தெரியாது.

நீளமான புற்களும் உண்ணி மலர்களும்  மூக்குத்தி பூக்களும் வளர்ந்திருக்கும் கல்லறையில் நின்று கொண்டிருக்கும் வேளையில், நான் சிந்தனையில் மூழ்கி விடுவேன். இப்போதுவரை வைத்து காப்பாற்றிய நம்பிக்கை வார்த்தைகளையும் புரட்சி உணர்வையும் நான் முழுமையாக விட்டெறிகிறேனோ?

ஒருவேளை... என் சிந்தனைகள் அவருக்குத் தெரிந்திருக்கும்.

சிதிலமடையத் தொடங்கியிருக்கும் எலும்புகளிலிருந்து அன்பு நிறைந்த உரத்த ஒரு குரல் எழலாம்.

போடா! முன்னோக்கி போடா!