தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி
மலையடிவாரத்தில் பிறந்த எழுத்தாளர் தேனி சீருடையான், தனது எழுத்துக் களால் இன்றைக்கு உயர்ந்து நிற்பவர். சிறுவயதில் பார்வைத்திறனை இழந்து, பிரெய்ல் முறையில் கல்வி கற்றவருக்கு, பிறகு அறுவை சிகிச்சை மூலமாக மீண்டும் பார்வைத்திறன் வந்தது.
Advertisment
தனது தொடர் எழுத்துப்பயணத்தில் 7 நாவல்கள், 10 சிறுகதை நூல்கள், 1 கட்டுரை நூலையும் எழுதியிருக்கும் தேனி சீருடையான் அதிர்ந்து பேசாதவர் என்றாலும் ஆழமாய், அர்த்தபுஷ்டியுடன் எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர்.
Advertisment
தேனியில் பழக்கடை வைத்திருக்கும் இவரோடு பேசுவதென்பது மிகவும் இனிப்பான- சுவையான அனுபவமாகவே இருக்கும்.
அவ்வாறாய் அமைந்த அனுபவப்பகிர்வு...
வயல்பட்டி (தேனி மாவட்டம்) கிராமத்தில் பிறந்த தங்களின் சிறுவயது நாட்கள் எப்படி கழிந்தன?
Advertisment
நமது குடும்ப அமைப்பு ஆண்களை முதன்மையாகக்கொண்டே இயங்குகிறது. குடும்பத் தலைவன் தந்தை; தாயைக் குடும்பத் தலைவி என்று சொல்லிக்கொண்டாலும் அவளிடம் எந்த அதிகாரமும் கிடையாது; தந்தைக்கோ இளம் வயது மகனுக்கோ இருக்கும் அதிகாரம் தாய்க்கு வாய்ப்பதில்லை; அதனால்தான் தந்தை எவ்வூரோ, குடும்பத் தலைவி உட்பட குடும்பமும் அவ்வூர் என்று நிறுவப்படுகிறது.
என் பாட்டையா பிறந்து வளர்ந்தது தேனிக்கு மேற்கில் போடி தாலுகாவையொட்டி அமைந்திருக்கும் அம்மாபட்டி கிராமம்;. என் பாட்டையா நான் பிறக்கும் முன்பே குடும்பத்தோடு தேனிக்கு வந்துவிட்டார். என் தந்தையின் பங்காளிகள் எல்லாம் தேனியிலேயே தங்கிக் கூலி வேலை செய்து வாழ்ந்தனர். என் அன்னை பிறந்த ஊராகிய வயல்பட்டி என்ற அழகிய சிற்றூர்தான் நான் பிறந்த ஊரும். குடும்ப வசிப்பிடமான தேனியைவிட "வயல்பட்டி' எனக்கு மிகவும் நெருக்கமான ஊர் என்பதால்தான் என் ஊர் வயல்பட்டி என்கிறேன்.
எனது பல சிறுகதைகளில் வயல்பட்டி ஒரு கதாபாத்திரம் போல வந்திருக்கிறது. முல்லைநதி பாயும் செழுமையான ஊர் அது. கடந்த 2000-ம் ஆண்டுவரை நிலப் பிரபுக்களும் விவசாயக் கூலிகளும்தான் ஊரின் பிரதான மக்கள் தொகை. தஞ்சையில் கூலி உயர்த்திக் கேட்டதற்காக கூலி விவசாயத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைப்போல, வயல்பட்டியில் உயிரை அழிக்கும் கொடூரம் நிலப்பிரபுக்களிடம் இருந்ததை நான் காணவில்லை; பண்ணையார்கள் ஆண்டைகளாகவும் கூலிகள் அடிமைகளாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். "ஒருவரைச் சார்ந்து ஒருவர்' என்ற முறையில்தான் அவர்களின் வாழ்க்கை இருந்திருக்கிறது.
ஆனாலும் ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடிகட்டிப் பறந்த இடமாக வயல்பட்டி திகழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன். பண்ணையடிமையான இடைத்தட்டு ஜாதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 60 வயது மதிக்கத்தக்க அடித்தட்டு உழைப்பாளியாகிய கீச்சான் என்பவரை, "ஏலே கீச்சா' என்று அழைத்துத் தான் வேலை ஏவுவான். அந்த முதியவரும் அச்சிறுவனை "ஏனுங்க சின்ன முதலாளி' என்று அழைத்துப் பணிவு காட்டினார். அச்சிறுவனின் அதிகாரச் சொல்லாடலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எனக்குள் ஒரு விதையாக விழுந்து பின்னாளைய எனது படைப்புகளுக்கு உரம் தந்திருக்கின்றது. ஜாதி ஒழிப்புச் சிந்தனையை எனக்குள் விதைத்த பல காரணிகளில் இதுவும் ஒன்று. இன்றைக்கும் நான் "வயல்பட்டி'யில் பிறந்தவன் என்று சொல்வதையே விரும்புகிறேன்.
ஏழாவது வயதில் பார்வைத்திறனை முற்றாக இழந்தபோது தங்களது மனநிலை எப்படி இருந்தது..?
பார்வை இழந்த தருணத்தை "நிறங்களின் உலகம்' நாவலில் பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் அந்தக் காட்சியைப் பதிவிடுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
அப்போது நான் சின்னமனூரில் இரண்டாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன். கால் பரிட்சை வரை கரும்பலகை எழுத்துகள் நன்கு வாசிக்கக் கிடைத்தன. சில நாட்களில் எழுத்துருவம் மங்கத் தொடங்கியது. என் இருப்பிடத்தில் இருந்து பலகையின் அருகில் சென்று வாசித்து எழுதினேன். அடுத்துவந்த நாட்கள் என் கண்களை இருட்டுக்குள் மூழ்கடித்தன. கரும்பலகையின் வெள்ளை உருவம் மட்டும் புலனாகியது. அது எந்த எழுத்து என்று புரியவில்லை.
அன்று மாலை சக வகுப்பு மாணவர்களாகிய கண்ணனும் சர்தாரும் எனது நேர்த்தியற்ற நடையைப் பார்த்து, கைப்பிடித்து அழைத்துச்சென்று வீட்டில் விட்டனர். அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போயிருந்தனர். என் தங்கையும் பார்வையற்ற சிறுமியாய் வீட்டுத்திண்ணையில் ஆரங்காத்துக் கிடந்தாள். நானும் அவளருகில் சென்று அமர்ந்துகொண்டேன். என்னைத் தடவிப் பார்த்து "வந்துட்டியா?' என்றாள்.
இரவில் சாப்பிட்டுப் படுக்குமுன் மதிலொட்டித் தீபத்தைப் பார்த்தேன். ஒளி மங்கித் தெரிந்தது. அருகில் அம்மா உட்கார்ந்திருந்ததை முழுமையான உருவ அடையாளத்தோடு பார்க்கமுடியவில்லை. எதுவும் சொல்லாமல் படுத்து உறங்கிப்போனேன்.
மறுநாள் அம்மா என்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குப் போவது வழக்கம். காலணாவுக்குத் தேங்காயெண்ணெய் வாங்கிவரும்படி என்னைக் கடைக்கு அனுப்பினார். நடந்து பழகிய வீதி என்பதால் நிதானமாகச் சென்று எண்ணை வாங்கிவிட்டு வந்தேன். முக்குத் திருப்பத்தில் லட்சுமியக்கா பணியாரம் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். நிதானம் இல்லாமல் அவரின் மாவுச்சட்டியை எத்தி உருட்டிவிட்டேன். மாவு முழுவதும் சிந்தி மண்ணோடு கலந்தது. என்னைக் கன்னத்தில் அறைந்து, சட்டையைப் பிடித்துப் பரபரவென இழுத்துவந்து அம்மாவிடம் சண்டை போட்டார்; சிந்திப்போன மாவுக்குப் பணம் தர வேண்டும் என்றார். அம்மா என்னை அடித்து நொறுக்கினார். எங்களைப் போலவே லட்சுமியக்கா வீடும் ஏழ்மையின் இருப்பிடம்தான். அழுதுகொண்டிருந்தேன். பள்ளிக்குச் செல்ல நேரமாகியது. "ஏண்டா இப்படி செஞ்ச?' என்று பக்கத்துவீட்டுப் பொன்னமக்கா கேட்டார். "எனக்குக் கண் தெரியல ஆச்சி' என்றேன். வீதியே ஒன்றுகூடி என் கண்களைப் பார்த்தது. கருவிழிக்குள் சதை படர்ந்து பார்வை மங்கிப்போனதை அனைவரும் புரிந்து அனுதாபப்பட்டனர். லட்சுமியக்காவும் பணம் கேட்டுச் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அம்மாவுக்கு ஆறுதல் சொன்னார்.
எல்லாப் பெண்களும் ஆளுக்கொரு மருத்துவம் சொல்லிப் பண்டுதம் பார்க்கச் சொன்னார்கள். சிலர் குறிகேட்டால் நிவாரணம் கிடைக்கும் என்றனர்.
ஊரார் சொல்லியபடி அந்திமந்தாரைப் பூவைக் கசக்கிக் கண்களில் ஊற்றினார் அம்மா. கட்டெறும்பைப் பிடித்து வாழைப் பழத்துக்குள் திணித்து சாப்பிட வைத்தார். பூசாரி என்று பெயர் எடுத்தவர்களிடமெல்லாம் அழைத்துப்போய்க் குறிகேட்டார். யார் ஒருவரும் பார்வை வராது எனச் சொல்லவில்லை; ஒரு மாதம் இரண்டு மாதம் என்று கெடுவிதித்தார்கள்; போன பார்வை போனதுதான். என் தங்கைக்குப் பார்வை இழப்பு ஏற்பட்டபோது இப்படிப் பண்டுதம் பார்த்தார்களா என்று தெரியவில்லை.
எத்தனை நாளைக்குக் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்ட முடியும்? அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் வேலைக்குப் போனபின் நானும் தங்கையும் ஒட்டுத் திண்ணையைக் காத்துக் கிடந்தோம். வெளிச்சமற்ற இரு வருடங்கள் இருள்வெளியில் கடந்தன.
சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வை மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படித்த அனுபவம் பற்றி?
அந்தக் காலம் படிப்பறிவு இல்லாத அறியாமைக் காலம்; எல்லாப் பள்ளிகளிலும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று குழந்தைகளை அழைத்துவந்து, பள்ளியில் அட்டனன்ஸ் போட்டனர்.
அப்படிச் செய்யவில்லை என்றால் அவர்கள் வேலை பறிபோய்விடும்; அதாவது குழந்தைகள் இல்லாத பள்ளியை நடத்த முடியாதுதானே?
அதுபோல சேலத்தில் இயங்கிய பார்வையிழந்தோர் பள்ளி ஆசிரியர் செல்வராஜ் மாநிலம் முழுதும் சென்று, கண்தெரியாத பிள்ளைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி, பார்வையிழந்தோர் பள்ளியில் சேர ஏற்பாடு செய்தார். சேலத்தில் இருந்து தேனிக்கு வந்து மாணவர்களை ஏன் அழைத்துப் போகவேண்டும் என்ற கேள்விக்குப் பின்னாளில் விடை கிடைத்தது. மாணவர் சேராவிட்டால் பள்ளியை இழுத்து மூடிவிடுவார்கள் என்ற பயம் அப்பள்ளியில் வேலை செய்த ஊழியர்களுக்கு இருந்தது; அதனால் ஊர் ஊராய்ப் போய்ப் பார்வை இழந்த குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துவந்தார்.
எங்கள் வீட்டுக்கும் வந்தார். "இவர்களை ஏன் உங்களிடமே வைத்திருக்கிறீர்கள்? எங்காவது பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடலாமே' என்றார். என் பெற்றோருக்கு அவர் சொன்னது புரியவில்லை என்பதோடு எங்களை எங்கும் அனுப்பவிரும்பவில்லை. "நாங்க உசுரோட இருக்கவரைக்கும் ஊத்துற கஞ்சியக் குடிச்சுட்டுக் கெடக்கட்டும்' என்றனர்.
அப்போதுதான் செல்வராஜ் ஓர் உத்தியைக் கையாண்டு, அவர்களிடம் சமாதானம் பேசினார்.
"சேலத்தில் கண் தெரியாத பள்ளிக்கூடம் இருக்கிறது; அங்கு நீங்கள் அனுப்ப விரும்பலைன்னா மெட்ராஸ்க்கு அனுப்புங்க; அமெரிக்காவுல இருந்து பெரிய டாக்டர் வருவார்; ஆபரேஷன் பண்ணிக் கண் தெரிய வைத்துவிடுவார்' என்றார்.
கண் தெரிந்துவிடும் என்றதும் அம்மாவுக்கு ஆசை வந்தது. சம்மதம் தெரிவித்தார் என்பதோடு கொஞ்சம் படிப்பறிவுள்ள என் உறவினர் ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லியபோது, தானே அழைத்துப்போய் விட்டு வருவதாக உறுதியளித்து அழைத்துப்போனார். தினம் இரண்டு ரூபாய் சம்பாதிக்கும் என் பெற்றோர் நூறு ரூபா கந்துக்கு எடுத்து, எங்களை அனுப்பி வைத்தார்கள். என்னையும் தங்கையையும் கண் தெரியவைக்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறார்கள் என்று அறிந்து கந்துவட்டிக்காரர், தனக்கு வட்டி வேண்டாம் என்றும் தினம் ஒரு ரூபாய் வீதம் நூறுநாளில் பணம் கட்டினால் போதும் என்றும் சொல்லி, தனது தயாள குணத்தை வெளிப்படுத்தி னார்.
அந்தப் பள்ளிப் படிப்பின் அனுபவங்கள்தான் "நிறங்களின் உலகம்' நாவல். படிப்பின்மீதான ஆர்வம், குழந்தைக் காதல், ஆசிரியர்களின் கதைசொல்லும் உத்தி, அதன்மூலம் எனது வாசிப்பு அறிவை விரிவு செய்துகொண்ட தருணங்கள் என்று நாவல் பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த "கண் தெரியாத இசைஞன்' என்ற நாவலுக்குப் பிறகு, "நிறங்களின் உலகம்'தான் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஆகச்சிறந்த நாவல் என்று ஆய்வாளர்கள் பலரும் சொல்வதை என் காதால் கேட்கமுடிகிறது.
புத்தக வாசிப்பில் ஆர்வம் உண்டாக யார் காரணம்?
நான் ஆறாப்பு வாசித்தபோது சேரா டீச்சர் புது நியமனமாய் எங்கள் பள்ளிக்கு வந்தார். பார்வையிழந்தோர் பள்ளிக்கு அத்துணை எளிதாக யாரும் வரச் சம்மதிப்பதில்லை; காரணம் அந்த மாணவர்களுக்குக் கற்பிப்பது எளிதாய் இருக்காது என்ற பொதுவான கருத்து உண்டு. பொதுப் பள்ளிகளில் கரும்புள்ளிப் பட்டியலில் இருப்பவர்கள் தண்டனை நிமித்தம் பார்வையிழந்தோர் பள்ளிக்கு நியமிக்கப்படுவர். அல்லது புது நியமன ஆசிரியர்கள் வருவார்கள். அப்படிப் புதுசாய் வந்தவர்தான் சேரா டீச்சர்.
மாணவர்களோடு இணக்கமாகவும் அன்பாகவும் பழகினார். பாடத்திட்டத்தில் இல்லாத ஏராளமான கதைகள் சொன்னார்; எளிய உதாரணங்களோடு பாடம் நடத்தினார். இது மாணவர்களுக்குக் குறிப்பாக எனக்கு ஓர் உத்வேகத்தைத் தந்தது. இதுபோல் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது.
சேரா டீச்சர் வருவதற்கு முன்பாகவே வசந்தா டீச்சர் ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் வரும் நெடுங்கதைகளின் சுருக்கத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்லி எங்களுக்குக் கதைகளின்மீது ஆர்வத்தை உண்டாக்கியிருந்தார்.
கோவிந்தன் சார் சங்கத் தமிழ் இலக்கியக் கதைகளையும், பொன்னுச்சாமி சார் வரலாற்றுப் பாடம் நடத்தியபோது சோஷலிச நாடுகளின் வரலாற்றையும் மனிதகுல வளர்ச்சியையும் உணர்ச்சிகரமான குரலில் சொல்லி வாசிப்பு ஆர்வத்தைப் பெருக்கினார்.
இப்படியாக ஆசிரியர்கள் பார்வையிழந்தோருக்கு அப்பால் இருந்த வாழ்க்கை நெறிகளைப் பற்றி ஏராளம் பேசினர். சுகுமாரன் சார் நாம் எந்தப் புத்தகம் வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ நூலகத்தில் இருந்து எடுத்துவந்து வாசித்துக் காட்டினார். அப்படி வாசித்த வைகள் டாக்டர் மு.வரதராசன் எழுதிய "கள்ளோ காவியமோ', "கரித்துண்டு', "அல்லி', "அன்னைக்கு...', "தம்பிக்குக் கடிதங்கள்', "கி.பி.2000', அகிலன் ஜெக சிற்பியன் நாவல்கள் என ஏராளம் உண்டு.
இவ்வாறாக எனது ஆசிரியர்கள்தான் எனது பிற்கால வாசிப்புச் சூழலுக்கு வித்திட்டவர்கள். அவர்களை இன்றும் நன்றியோடு வணங்குகிறேன்.
நாமும் எழுதவேண்டும் என்ற உந்துதலை எப்போது பெற்றீர்கள்?
கோவிந்தன் சார் தமிழ்ப் பாடம் நடத்திய போது, சங்க இலக்கியங்களின் உன்னத வடிவமைப்பு மற்றும் கருத்தாக்கத்தைப் பற்றி ஏராளமாக மாணவர்களிடம் உரையாடினார்.
யாப்பு இலக்கணம் நடத்திய வேளை "நீங்களும் செய்யுள் எழுதலாம்' என்றார். மாணவர்களாகிய எங்களுக்கு உத்வேகம் உண்டானது. சங்க இலக்கியம் வாசிக்கப்படுவதுபோல் நம்முடைய படைப்பும் ஒருநாள் வாசிக்கப்படும் என்ற நப்பாசை வேறு. ஒவ்வொருவரும் ஒரு கவிதை எழுதிவரும்படி கூறினார். என் வகுப்பில் 12 மாணவர்கள். அனைவரும் இலக்கணத்தோடோ இலக்கணம் இன்றியோ எழுதிவந்தோம். ஒவ்வொருவரின் கவிதையையும் வாசித்து, திருத்தங்கள் சொல்லியோ புகழ்ந்தோ ஊக்கப்படுத்தினார். என் கவிதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
"சார்; என்னோடது?' என்றேன். "உன் பாட்டை வாசி பார்ப்போம்' என்றார்.
"மாசின்றிப் பிறக்கிறாய்;
மாசேற்று வாழ்கிறாய்,
தேன்கூட்டை அழித்துவிட்டுத்
தேனை நீ திருடுகிறாய்' என்றேன்.
"தேனெடுப்பது குற்றச் செயலா?' என்று கேட்டார். "கசாப்புக் கடையில் ஆடு வெட்டினால் ஆட்டைக் கொலை செய்கிறார் என்று அர்த்தமா? மனிதனுக்கு வேண்டியதை இயற்கை வழங்கியிருக்கிறது; அதை மனிதன் உழைப்பு மூலம் தனதாக்கிக் கொள்கிறான்; அதைக் குற்றச்செயல் என்று கவிதை எழுதுவது முரண்பாடானது; மனிதனை நேசத்தோடு பார்க்க வேண்டுமே தவிர குற்றக்கூண்டில் நிறுத்தக்கூடாது' என்று உபதேசித்தார்.
மனிதர்களிடத்தில் அன்பு காட்டுவதாய் ஓர் இலக்கியப் படைப்பு இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்ட தருணம் அது.
பிரெய்ல் எழுத்துமுறை பற்றிக் கூறமுடியுமா?
பிரெய்ல் எழுத்துமுறை ஆறு புள்ளிகளையும் 63 கோணங்களையும் கொண்டது. எது ஒன்றுமே புரிந்துகொண்டால் எளிதாகிவிடும். ஏற்கெனவே கண் தெரிந்தவர்கள் எழுதும் எழுத்து எனக்குப் பழக்க மாகியிருந்ததால் முதலில் பிரெய்ல் எழுத்துகளைத் தடவியபோது அத்துவானக் காட்டில் வழிதேடி அலைந்ததுபோல் இருந்தது. சில மாதங்களில் பிடிபட்டு சரளமாய் எழுதினேன்.
பிரெய்ல் எழுத்து முறையில் கவிதைகள் எழுதியதால் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. சாதாரண வெள்ளை பேப்பர் ஒரு கொயர் (24 பேப்பர்கள்) 12 பைசா. அது பிரெய்ல் எழுத்துக்குத் தோதுப்படாது. பிரெய்ல் போர்டில் பேப்பரை மாட்டி ஸ்டைலஸ் என்ற ஊசிகொண்டு குத்தி எழுதினால் ஒரு வாசிப்பிலேயே அழிந்துவிடும்; கார்போர்ட் அட்டை கொண்டு எழுதினால்தான் ஓரளவு நிலைத்து நிற்கும்.
அமெரிக்காவில் இருந்தும் ஃப்ரான்சிலிருந்தும் பார்வையிழந் தோருக்கான மாதாந்திர சஞ்சிகை கள் இலவசமாய் வந்தன. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உலகம் பூராவும் அஞ்சல் செலவு இலவசம். அதனால் கடிதம் எழுதி னால் பத்திரிகைகள் இருப்பிடம் தேடி வந்துவிடும். அவையெல்லாம் கார்ட்போர்டைவிட அதிகம் தடித்த தாள்களில் அச்சிடப்பட்டிருந்தன. அவை பல மாதங்கள் வரை அழியாமல் இருக்கும்.
லண்டனில் இயங்கிய பார்வை இழந்தோருக்கான நூலகப் புத்தகங்கள் அனைத்தும் பல வருடங்கள் அழியாமல் இருந்தன. கார்ட் போர்டைவிட இருமடங்கு தடித்த தாள்களில் அவை அச்சிடப்பட்டன. அந் நூலகத்துக்கு விண்ணப்பம் செய்தோமானால் ஆறு மாத அவ காசத்தோடு நூல்கள் அனுப்புவார்கள். நாம் வாசித்து முடித்து ஆறு மாதங்களில் திருப்பி அனுப்பிவிட வேண்டும். அப்போதும் அந்த எழுத்துகள் எந்தச் சிதைவுமின்றி அப்படியே இருக்கும். பிரெய்ல் அச்சு யந்திரங்களின் டெக்னா லஜி வெளிநாடுகளில் மேம்பட்டதாய் இருந்தது.
அப்படியான தொழில்நுட்பம் 2000-த்துக்குப் பின்புதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. மதுரையில் இயங்கும் "இந்தியப் பார்வையிழந் தோர் சங்கம் (ஒய்க்ண்ஹய் ஹள்ர்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ச்ர்ழ் ற்ட்ங் க்ஷப்ண்ய்க்)' அச்சகத்தில் அத்தகைய தடித்த தாள்களில் அச்சிடப் படுகின்றன.
அங்குதான் என்னுடைய "நிறங்களின் உலகம்' அச்சிடப்பட்டது. எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், இமையம் போன்றோரின் நூல்களும் அச்சிடப்பட்டு பிரெய்ல் வடிவ நூல்களாக நூலகத்தில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
1972-இல் உங்கள் முதல் கவிதை "கணையாழி' யில் பிரசுரமானபோது என்ன மனநிலை வாய்த்தது?
நான் பள்ளியில் படிக்கும்போது கவிதையா இல்லையா என்பது தெரியாமலே நிறைய எழுதினேன். ஆசிரியர்கள் என் கவிதை வரிகளைச் சிலாகித்தார்கள். அது எனக்கு உற்சாகம் ஊட்டியது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன்.
படித்து முடித்து 1970-ஆம் ஆண்டு தேனிக்கு வந்த போது எனக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் அனைவரும் கவிதைப் பிரியர்கள். வாசிப்பதிலும் எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்கள். 1970-இல் இருந்து தமிழ்க் கவிதையின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்துப் பத்திரிகைகளும் கவிதைகளைப் பிரசுரம் செய்தன. கவிதைகளை மட்டுமே தாங்கிய சில இதழ்கள் வெளிவந்தன.
கவிதைதான் என்னை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. படித்து முடித்துத் தேனிக்கு வந்த பிறகு, முதலில் அறிமுகமாகிய இலக்கிய நண்பர் தேனிபாலன். அவர் தந்தை தேனி வணிக வீதியில் கணக்குப்பிள்ளை; நான் சாலையோரத்து விற்பனைக்கூலி. நான் எனது விற்பனையிடத்தில் அமர்ந்து எதாவது கிறுக்கிக் கொண்டே இருப்பேன். அதைக் கவனித்து என்னுடன் பழக ஆரம்பித்தார். அவர் எழுதியதை நானும், நான் எழுதியதை அவரும் வாசித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
ஓராண்டுக்குப் பிறகு கடை வீதியில் இருந்த "அமுதுக் கலைக்கூடம்' என்று பெயர் பொறித்த ஓர் அறைக்கு அழைத்துப்போனார். அமுது சிறந்த ஓவியர் மட்டுமில்லாமல் நாடக வசனங்கள் எழுதக் கூடியவராய் இருந்தார். அங்கு நக்கீரன், கலைதாசன், தியாகன், தர்மராஜ் போன்ற கவிதை எழுத்தாளர்கள் கூடிக் கவிதைகள் சொல்லி, ஆரவாரம் செய்தபடி இருந்தனர். நான் ஒரு தனிமை விரும்பி; அவர்கள் என்னுடன் சகஜமாகப் பழகி ஊமைமுகட்டை உடைத்து எறிந்தனர். அங்குதான் கணையாழி, ஞானரதம், வானம்பாடி போன்ற இலக்கிய இதழ்களைப் பார்த்தேன். வாசித்துப் புதிய உத்திகளைப் புரிந்துகொண்டேன்.
வேலை கிடைக்கவில்லை; வறுமை அகலவில்லை; தகுதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு நாட்களைக் கழித்த நான் விரக்திமயமான கவிதைகளை எழுதிக் குவித்தேன். நண்பர்கள் பாராட்டினார்கள்.
அப்படி விரக்திநிலையில் இருந்து எழுதப்பட்ட காதல் கவிதைதான் விரக்தி. அந்தக் கவிதை கணையாழி இதழில் இடம்பெற்று எனக்கும் பேர்வாங்கித் தந்தது.
நான் வாசித்த இன்னொரு முக்கிய மாத இதழ் "ஞானரதம்'. தமிழ்நிலத்தின் இலக்கிய ஆளுமைகள் நிறைந்திருந்த அந்த இதழில் "ஆயிரம்பேர் பாய்விரிப்பு' என்ற கவிதையை எழுதினேன். "சிகரம்' இதழிலும் கவிதைகளை எழுதினேன்.
இப்படியாக வீறுநடை போட்டுக்கொண்டிருந்த எனது கவிதை யாப்பு இயக்கம் ஒருகட்டத்தில் நின்றுபோனது.
கருப்பையா என்ற இயற்பெயரை விட்டு தேனிசீருடையானாக மாறியது ஏன்?
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து, அமுதுக் கலைக்கூடம் நண்பர்களோடு பழகியபோது நான் எனக்கொரு புனைபெயர் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். அப்போதெல்லாம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்தான் அதிகம் எழுதினர். அலுவலகச் சட்டவிதிப்படி அவர்கள் பத்திரிகைகளில் எழுதக்கூடாது என்ற விதி இருந்தது. அதனால் புனைபெயர் வைத்து எழுதினர். கருப்பையா என்ற என் பெயர் நவீனத்துவம் இல்லாததாக இருப்பதாக நினைத்தேன். அதனால் "சீருழையான்' என்ற புனைபெயர் சூட்டிக்கொண்டேன். சீர் என்றால் சிறப்பு; உழை என்றால் இடம்;
சிறப்பை இடமாகக் கொண்டவன் என்று எனக்கு நானே பெயர் சூட்டினேன். 1979-இல் "செம்மலர்' மாத இதழில் "வெயில்' என்ற என் கவிதை வரும்வரை இந்தப் பெயர் நீடித்தது.
1978-இல் தமுஎச கிளை தேனி அல்லிநகரம் பகுதியில் உருவாகிறது. எழுத்தாளர் பொன்.விஜயன் அக்கிளையின் முதல் செயலாளர். ஏற்கெனவே அவர் சிறந்த எழுத்தாளர் என்று தமிழகம் முழுதும் அறியப்பட்டிருந்தார். அவர் "புதிய நம்பிக்கை' என்ற பெயரில் இலக்கிய இதழ் ஒன்றை 1980-ஆம் ஆண்டு தொடங்கினார். என்னை ஒரு சிறுகதை எழுதித்தருமாறு கேட்டார். என் பெற்றோர்களை நாயகர்களாக்கிக் கதை எழுதினேன். அப்போது என் பெற்றோர் தேனிச்சந்தையில் மொத்த வியாபாரிகளிடம் கரும்புக்கட்டு வாங்கி, அதே சந்தையின் இன்னொரு பகுதியில் துண்டு கத்தரித்து விற்று லாபத்தை எடுத்துக்கொண்டு பணத்தை வியாபாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மழைக்காலத்தில் கரும்பு விற்காமல் நட்டம் வருவதுண்டு; அப்படியான காலத்தின் நிகழ்வாகக் கதையைக் கட்டமைத்தேன். மழைக்கால இடர்ப்பாடுகள் நன்கு பதிவாகி இருப்பதாகப் பொன்.விஜயன் சொன்னார். "மௌனத்தின் விழிப்பு' என்ற அந்தக் கதை "புதிய நம்பிக்கை'யில் பிரசுரமானது அப்போது அவர், "உங்கள் பெயர் உச்சரிக்கக் கடினமா இருக்கு; இன்னும் எளிமைப்படுத்தி "சீருடையான்' என்று போட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அன்றுமுதல் இன்றுவரை "தேனி சீருடையான்' பெயர் தொடர்கிறது.; சிறுகதை எழுத ஆரம்பித்ததும் கவிதைப்பக்கம் நாட்டம் உண்டாகவில்லை; 80-களின் தொடக்க காலம் முதல் பத்திரிகைகளோ பதிப்பகங்களோ கவிதைகளை விரும்பி ஏற்பதில்லை; அதனால்தானோ என்னவோ சிறுகதைகளும் நாவல்களுமாய் உரைநடை இயக்கத்துக்கு வந்துவிட்டேன்.
தங்களது 20-ஆவது வயதில் பார்வைத்திறனை மீண்டும் பெற்றபோது என்ன நினைத்தீர்கள்?
பள்ளி வாழ்க்கை முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். பார்வை மாற்றுத் திறனாளிகளின் கல்விப் புலத்தில் மாநிலத்தில் நானே முதல் மாணவன். 421 மதிப்பெண்கள். கல்லூரி படிப்புக்கு வாய்ப்புப் பிரகாசமாய் இருந்தது. பள்ளிமுதல்வர் மூலம் எனக்கு சென்னை கிறித்துவக் கல்லூரியில் இலவசமாய் இடம் கிடைத்தது. பாடப்புத்தகங்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன்வந்தன. அரசிடம் கேட்டு ஆதிதிராவிடர் விடுதியில் இடம் வாங்கித் தருவதாக முதல்வர் வாக்களித்தார். ஆனால் அன்றைய தினம் பஸ் போக்குவரத்துக்கும் துணி துவைக்க சோப்பு வாங்கவும் என் பெற்றோரால் மாதம் ஐம்பது ரூபா அனுப்ப முடியவில்லை. அதனால் கல்லூரிக்குள் நுழைய முடியாமல் ஊர்வந்து சேர்ந்தேன்.
ஒட்டுத் திண்ணையில் படுத்துக்கிடந்த ஒருநாள் குதிரை வண்டி விளம்பரம் ஒன்று சாலையில் ரேடியோ வைத்துப் பிரச்சாரம் செய்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை மூலம் பார்வையிழந்தோருக்கான மருத்துவ முகாம் நாடார் ஆண்கள் பள்ளியில் நடக்கப்போவதாக விளம்பரம் செய்தனர். நானாகச் சென்று முகாமில் சேர்ந்துகொண்டேன். அம்மாவும் அப்பாவும் வேலைமுடிந்து வந்துசேர்ந்தார்கள்.
நீட்-ங் முறையில் எனக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது விழிகளுக்கு மேல் புரை படர்ந்திருந்தால் மேலாகப் புரைப் பரப்பை வழித்து எடுத்துவிடுவார்கள். எனக்கு கரும் படலத்துக்குள் சதை வளர்ந்திருந்ததால் ஊசியை உள்செலுத்தி சதையைச் சிதைத்துவிடும் முறையில் சிகிச்சை நடந்தது. இப்போதெல்லாம் எத்தனை பெரிய அறுவையாய் இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அன்றைய தினம் என்னை ஐந்து நாட்கள் படுக்க வைத்துவிட்டார் கள். ஐந்தாம் நாள் கட்டைக் கழற்றியபோது கண்ணுக்குள் வெளிச்சம் வந்து சுரீரெனக் குத்தியது. கடப்பாரை கொண்டு இறக்குவதுபோல் வலி. வீட்டுக்கும் பள்ளிக்கும் அரை கிலோமீட்டர் தூரம்தான் என்பதால் நடந்தே வந்துசேர்ந்தோம்.
அன்றுமுழுதும் அமைதியாய் இருந்த நான் மறுநாள் கண்ணில் கட்டப்பட்ட பட்டைத்துணியை மேலே தூக்கி, என் குடிசையையும் தேனி நிலத்தின் மண்ணையும் தரிசித்தேன். பார்வை கிடைத்து விட்டதாக நம்பினேன். இரவில் தீபத்தைப் பார்த்த போது இன்னும் முழுவெளிச்சம் கிடைக்கவில்லை எனத் தெரிந்தது, ஆம்! தீப ஒளி மங்கலாய் இருந்தது.
ஒரு மாதம் கழித்து இலவசக் கண்ணாடி தந்தார்கள்.
உடம்பும் மனமும் புளகாங்கிதம் அடைந்தன. உடன் வந்திருந்த அம்மாவைவிட வேகமாய் நடந்து வீட்டுக்கு வந்தேன். எங்கள் வீட்டுமுன் ஓடிய சாக்கடை ஓட்டத்தை முழுமையாகக் காணமுடிந்தது. ஆனா லும் ஒரு தடுமாற்றம். சாக்கடையைத் தாண்டுவதாய் நினைத்து சாக்கடைக்குள் கால்வைத்தேன். தூரத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் அருகில் இருப்பதாய்த் தோன்றியது. அருகில் இருப்ப தாய்த் தெரிந்த தண்ணி சால் கையெட்டத்தைத் தாண்டி தூரத்தில் இருந்தது.
அம்மாவிடம் சங்கதியைச் சொன்னபோது, "இப்பத்தான பார்வ வந்திருக்கு; போகப்போக சரியாயிடும்' என்றார். அப்படித்தான் ஆனது. அன்றுபோலவே இன்றும் எழுபது விழுக்காடு பார்வைதான் எனக்கு இருக்கிறது. அதன்மூலம் வாசிக்கவும் எழுதவும் செய்கிறேன்.
தேனி பேருந்து நிலையத்தின் அருகே நீங்கள் பழக்கடை வைத்திருந்தபோது உங்கள் சொந்த அனுபவம்தானே "கடை' நாவல்?
1987 என்று நினைக்கிறேன். (சரியாக ஞாபகம் இல்லை) சென்னையில் நாவல் முகாம் நடந்தது. பல்வேறு நாவல்கள் பற்றிப் பேசப்பட்டது. "உள்ளடக் ம் பிரதானம்; உருவ அழகு முக்கியம்' என்று பாடம் நடத்தினார்கள். "சொந்த அனுபவங்களின் வழியே கற்பனைப் புனைவை உருவாக்கி நாவல் படைக்கவேண்டும்' என்றார்கள். அப்போதே என் மனசுக்குள் ஒரு நாவலுக்கான காட்சிப் படிமங்கள் உருக்கொண்டன.
முகாம் முடிந்து சென்னை உயிரியல் பூங்காவுக்குப் போடி மாலன், ம.காமுத்துரை, அல்லி உதயன் உள்ளிட்ட நண்பர்களோடு நானும் சென்றேன். சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் பரவிக் கிடந்த புல்வெளியில் படுத்து உருண்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் போடி மாலன் கேட்டார். "யாரெல்லாம் நாவல் எழுதப் போறீங்க?' என்று. எனக்குத் தரப்பட்டி ருந்த குறிப்பேட்டில் அப்போதே "கடை' என்று தலைப்பிட்டு, சில காட்சிகளையும் குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.
நாவல் முகாமின் பிரதிபலிப்பாக நான் "கடை'யும், காமுத்துரை "மில்'லும் போடி மாலன் "அலையும் கால'மும் எழுதத் தொடங்கிவிட்டோம். அந்த மூன்று படைப்புகளும் இன்றைக்கும் இலக்கிய நீரோட்டத்தில் படகுகளாய்ப் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
ஓர் இலக்கிய முகாம் சிறந்த வாசகர்களை எழுத்தாளராகப் பரிணமிக்கச் செய்யும் என்பதற்கு த.மு.எ.ச. நடத்திய நாவல் முகாம் ஓர் அடையாளம். நாவல் முகாம் முடிந்த தருணம்; செம்மலர் என்ற இலக்கிய இதழ் நாவல்போட்டி அறிவித்தது. "கடை' நாவலை அனுப்பினேன். நம்பவே முடியவில்லை; எனது படைப்புக்கு மூன்றாம் பரிசு. 1991-இல் நெல்லையில் நடந்த மாநில மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த ஒரே வருடத்தில் "கடை' நாவலுக்கு சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கிடைத்தது. எம்.ஏ., தமிழ்த்துறை மாணவர்களுக்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டது. மற்றும் பல கல்லூரிகளிலும் சுய நிதிக்கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டது. இப்படியாக இன்றுவரை ஐந்து பதிப்புகள் கண்டு இன்றும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது "கடை'.
"சின்னத்தாயி' என்ற படத்தை இயக்கிய கணேஷ் ராஜ் என்ற இயக்குநர் நாவலை வாசித்துவிட்டு, எனக்கொரு கடிதம் எழுதினார். "இந்நாவலில் வரும் அம்மா பாத்திரம் என்னை ரொம்பவும் பாதித்தது; இரண்டு நாள் தூங்காமல் போனேன். வாய்ப்புக் கிடைத்தால் இதைத் திரைப்படமாக எடுப்பேன்' என்று குறிப்பிட்டி ருந்தார். இக்கடிதம் எழுதி ஆறே மாதத்தில் அவர் இறந்துபோனார்.
"ஒரு பழக்கடை வியாபாரியின் முக்கியமான வாழ்க்கைப் பதிவு' என்று வல்லிக்கண்ணன் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
காலையில் தொடங்கி இரவில் முடிவது போன்று நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது பழக்கடை நடத்துபவனின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல; தேனி நிலத்தின் இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வியல் போக்குகள், சாமான்ய மக்களின் ஆன்மீகப் பண்பாட்டுக் கூறுகள், ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு முறை ஆகியவை சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே "கடை' நாவல் தேனி நகரின் பண்பாட்டு ஆவணம் என்று சொல்லலாம்.
உங்கள் கதைமாந்தர்கள் அனைவரும் பெரும் பாலும் விளிம்புநிலை மக்களாக இருக்கக் காரணம்?
நானும் எனது வம்சப் பரம்பரையும் விளிம்புநிலை வாழ்க்கையின் பிரதிநிதிகள்தானே? வறுமை, அறியாமை, கொஞ்சம் முன்னேறியவர்களைக் கண்டால் பொறாமைப்படுவது, தான் கொஞ்சம் முன்னேறினால் அடுத்தவர்களையும் முன்னேற அழைப்பது என்று கலவையான குணாம்சங்களைக் கொண்ட மனிதவெளிக் கூட்டமாக விளிம்புநிலை மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று பெரிய ஆசைகளோ அபிலாஷைகளோ கிடையாது என்பதால் வருவதை வைத்து வாழ்ந்து காட்டுகிறார்கள். விளிம்புநிலை வாழ்க்கை கள்ளம் கபடு இல்லாதது.
விளிம்பு நிலை மக்களிடம் கோபமும் இருக்கும்; ஈரமும் இருக்கும்; ஈரத்தின் இருப்புத்தான் யதார்த்தவாதம்.
உங்கள் "நிறங்களின் உலகம்' நாவல் பலருக்கும் பார்வையற்றோர் பற்றி அறிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும் படைப்பு; அதை எழுதும் உத்வேகம் எப்படி ஏற்பட்டது?
"கடை'க்குக் கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப் படுத்தியது. அடுத்த நாவலை எழுதுவது என்று முடிவெடுத்து, என் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து எழுதினேன்.
1996-இல் திருப்பரங்குன்றத் தில் நடந்த த.மு.எ.ச. மாநில மாநாட்டில் அவ்வமைப்பின் மகத்தான தலைவர் கே.முத்தையா அவர்களிடம் தந்து முன்னுரை எழுதித்தரும்படி கேட்டேன். அவர் ஒரே இரவில் வாசித்துவிட்டு, "நாவல் நல்லாருக்கு; இன்னுங் கொஞ்சம் மாத்தி எழுதணும்' என்று சில திருத்தங்கள் சொன்னார். மனம் வருத்தப்பட்டது. அந்த ஸ்கிரிப்டை ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி விட்டேன்.
அப்புறம் நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மங்கிப்போனது. எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமியும் ச.தமிழ்ச்செல்வனும் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். எனக்கு தைரியம் உண்டாகாமல் காலம் கடத்தினேன். ஒவ்வொரு சந்திப்பிலும் தமிழ்ச்செல்வன், "பொட்டியத் தொறந்தாச்சா?' என்று கேட்பார். அடுத்தமுறை கேட்டால் "தொறந்தாச்சு' என்று பதில் சொல்ல வேண்டும் என்று மனக்கணக்குப் போட்டு அந்த நோட்டை எடுத்துப் பார்த்தேன்;
அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.
வாசித்து ஒன்றிரண்டு திருத்தங்கள் செய்து பதிப்பகத்துக்கு அனுப்பினேன்; உடனடியாகப் பிரசுரமாகியது. வாசித்தவர்கள் எல்லாம் பிரம்மித்து வாழ்த்தினார்கள். மிகச் சாதாரண வாசகர்கள்கூட, "இந்த நாவல வேற யாராலயும் எழுத முடியாது' என்று சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தது.
நாவல் வந்ததும் மூன்று பேருக்கு அனுப்பினேன்.
தோழர்கள் ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு வெங்கடேசன். அந்த நாவலில் கண் தெரியாத சிறுவர்கள் தங்கள் ஊனம் மறந்து குடும்ப உறவு மறந்து மகிழ்ந்து பொங்கி விளையாடு வார்கள். மகிழ்ச்சி மிகுதியால் அவர்கள் பயன்படுத்தும் சொல் குஷி, குஷி என்பதாகும்.
தமிழ்ச்செல்வன் இரண்டே நாளில் வாசித்துவிட்டு, எனக்கு போன் பண்ணினார். "வணக்கம் தோழர்' என்றேன்; எதிர்முனையில் "குஷி, குஷி' என்றார் தமிழ்ச்செல்வன். எனக்குப் புரிந்தது; நாவல் அவரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிறுசொல்கூட ஒரு படைப்பின் பண்பைப் பிரதிபலிக்க முடியும் என்று புரிந்தேன். அந்நாவலை குஜராத்தி மொழியில் மொழிமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது; ஆனாலும் மொழியாக்கத்துக்கான வேலை நடைபெற்றதாகத் தெரியவில்லை.
தங்கள் படைப்புகளுக்காகப் பல்வேறு அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக் கிறீர்கள்; அதில் தங்களின் மனசுக்குப் பிடித்தமான விருது எது?
1983-ஆம் ஆண்டு "இளைஞர் முழக்கம்' என்ற இளைஞர்களுக்கான மாத இதழில் சிறுகதைப்போட்டி நடத்தினார்கள். "இது உத்தமம்' என்ற தலைப்பிலான சிறுகதை ஒன்றை அனுப்பியியிருந்தேன்.
ஜோதிடப் பொய்மையை அம்பலப்படுத்திய கதை அது. அதற்கு முதல் பரிசு கிடைத்தது. பள்ளி நாட்களில் பேச்சுப்போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இப்போது தமிழக இளைஞர்கள் பல நூறுபேர் கலந்துகொண்ட போட்டியில் முதல் பரிசு என்றதும் பெருமிதம் உண்டானது. லெனின் முழுப்படைப்புகள் பனிரெண்டு தொகுதிகள் பரிசாகக் கிடைத்தது.
அடுத்து த.மு.எ.ச. நடத்திய நாவல் மற்றும் சிறுகதைப்போட்டியிலும் பரிசுகள் வாங்கினேன். எமது அமைப்பு மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தில் இயங்கும் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், கல்லூரி ஆண்டுவிழா நிகழ்வுகள் எனப் பல அமைப்புகளும் எனக்கு விருதுகள் வழங்கியுள்ளன. 2022-இல் தமிழ்நாடு அரசு "தமிழ்ச் செம்மல்' விருது தந்தது. இப்படியாக, இருபதுக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க விருதுகளை நான் வாங்கியிருக்கிறேன். இவை எல்லாம் எனது படைப்புகளுக்குக் கிடைத்தவை.
இந்த விருதுகளும் பரிசுகளும் எனது படைப்புகளுக் குக் கிடைத்தவை. எனது படைப்புகளில் உயர்வு தாழ்வு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே, விருதுகளிலும் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாமே என் மனசுக்குப் பிடித்த விருதுகள்தான்.
தங்களைப் பற்றி "தனித்த பறவை' என்ற ஆவணப்படத்தைக் கவிஞர் தமிழ்மணி எடுத்திருக்கிறார்; அந்த அனுபவம் எப்படி இருந்தது?
தேனி மாவட்டத்தில் இரட்டைப் படைப்பாளி கள் என்றால் அவர்கள் அ. உமர் பாரூக்கும் அய்.தமிழ்மணியும்தான். என்னை மிகவும் மதிக்கக்கூடிய இளைஞர் கள் அவர்கள்.
தமிழ்மணி மிகச்சிறந்த திரைத்துறை வல்லுநர். எனது எழுத்துகளால் ஆதர்சமடைந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறதே என்று வியந்துபேசுவார். என்னைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியபோது மகிழ்ந்தேன். இயற்கை எழில் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. என்னைப் பேச வைத்ததோடு, தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளான ச.தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன், பி.என்.எஸ்.பாண்டியன், காமுத்துரை, அல்லி உதயன் ஆகியோரிடமும் என்னைப் பற்றிப் பேச வைத்துப் படமெடுத்தார். புதுச்சேரி திரைப்பட விழாவில் அப்படம் வெளியிடப்பட்டது. த.மு.எ.க.ச. அறம் கிளை சார்பாக "தனித்த பறவை' காண்பிக்கப்பட்டபோது அதைக்கண்டு ரசித்த இருநூறுக்கும் அதிகமான உறுப்பினர்கள் எனக்குக் கடிதம் எழுதிப் பாராட்டினர். தோழர் உமர் பாரூக் அந்தக் கடிதங்களைத் தொகுத்து ஆவணமாக்கி எனக்குப்பரிசளித்தார். அந்தப் படத்தில் பிறர் என் படைப்புகளைப் புகழ்ந்தனர் என்றால் நான் சமூகவியல் கோட்பாடு சார்ந்த எனது படைப்புகளின் உள்ளடக்கத்தை விவரித்தேன். ஒன்றேகால் மணிநேரம் ஓடக்கூடிய அந்தப் படம் இன்னும் எடிட் செய்து நாற்பது நிமிடப் படமாகக் குறைக்கமுடியும் என்று தோன்றுகிறது. அதை அவர் எப்போது செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
அடுத்து நீங்கள் எழுத இருக்கும் நூல் எதைப் பற்றியது?
கொரோனா தொற்றுப் பரவியிருந்த காலம் நான் பார்த்த மிகக் கொடூரமான காலமாகும். மனிதனை மனிதன் நேருக்குநேர் சந்திக்க முடியாத நோய்க் காலமது. மனித வாழ்வை மட்டுமில்லாமல் மாண்புகளையும் சிதைத்துப்போட்ட காலமாய் அது இருந்தது. எனக்குத் தெரிந்த முக்கிய ஆளுமைகள் சிலர் பாதிக்கப்பட்டு இறந்து போயினர். நானும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி இரண்டு சிறுகதைகள் (ஓய்வின் வலி, நின்றான்) எழுதியிருக்கிறேன். கொரோனா கால வாழ்வியக்கம் சார்ந்த நாவல் ஒன்று எழுதலாம் என்றிருக்கிறேன்.
ஓர் எழுத்தாளனாக நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினை என்று எதைக் கருதுகிறீர்கள்?
பூமியில் தோன்றிய அனைத்து மனிதக் குழுக்களும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள் என்பதோடு அதைக்கண்டு அச்சம் கொண்டும் தவித்தனர். இடி மின்னலைக் கண்டும், சிங்கம் புலி, கரடி, பாம்பு போன்ற விலங்குகளைக் கண்டும் பயந்தார்கள். "என்னைக் காப்பாற்று' என்ற கோரிக்கையை இயற்கையிடத்து வைத்தபோது உருவானதுதான் மன இயக்கம் சார்ந்த ஆன்மீக அனுபவம். அது இன்றளவும் வாழ்வியல் விதியாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சக மனிதனை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்த ஒரு வன்முறைக் கூட்டம் ஆன்மீகவாதத்தை மதவாதமாக மாற்றி, சமுதாயத்தைப் பிளவுபடுத்தியது. மதம் என்பது பேய் போன்றது. இல்லாத பேயைக் கண்டு மனிதன் அஞ்சுகிறான் அல்லவா; அதுபோல் மதத்தைக் கண்டும் மனிதன் அஞ்சுகிறான். ஒரு சின்னக் கஷ்டம் வந்தால்கூட மத நிந்தனையோ என்று மனிதன் மருள்கிறான். அதனால்தான் சிறந்த ஆன்மீகவாதியான வள்ளலார் ராமலிங்க அடிகளார், "மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்' என்று பாடினார்.
ஆன்மிகம் என்பது பொது வாழ்க்கையை மையமிட்டு நகர்வது; அரசியல் நிர்வாகத்தை நேர்படுத்தும் தன்மை கொண்டது. இன்று இந்தியாவில் மதவாதம் அரசியலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. புரட்சி நாயகன் லெனின், புரட்சி வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியதும், 27 மசோதாக்களில் கையெழுத்துப் போட்டார். முதல் கையெழுத்து நிலச்சீர்திருத்தச் சட்டம். நிலப்பிரபுக்களிடமிருத உபரி நிலங்களை எடுத்து, கூலி விவசாயிகளுக்கு விநியோகிக் கும் சட்டம் அது. அடுத்த கையெழுத்து மத ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது. "மதம் அரசியலில் தலையிடாதவரை அரசு மதத்தில் தலையிடாது' என்று அறிவித்தார். இது அரசையும் மதக் கோட்பாடுகளையும் பிரிக்கும் கோடு. சோவியத் யூனியன் சிதையும்வரை இந்தக் கோடு இருதரப்பாலும் பாதுகாக்கப்பட்டது.
மதவாதம் அரசியலுக்குள் நுழையும்போது எதேச்சதிகாரக் கோட்பாடு தன்னையும் நுழைத்துக் கொள்கிறது. விளைவு மதச் சுதந்திரம் மட்டுமில்லாமல் மனிதன் தான் எதை நம்புகிறானோ அந்த நம்பிக்கை யைச் சிதைத்துத் தவிடுபொடியாக்குகிறது. நான் எதை உண்ணவேண்டும், உடுத்தவேண்டும் என்பதையும் தாண்டி எதைச் சிந்திக்கவேண்டும் என்பதையும் அந்த வன்முறைக் கோட்பாடு வடிவமைக்கிறது. அரசியலும் மதமும் கலந்துவிட்ட பின் தனிமனித சுதந்திரம் நிராகரிக்கப்படுவதோடு நான் வாழவேண்டிய பகுதிஎது என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியாமல் போகிறது.
ஹிட்லரும் முசோலினியும் இனவாதத்தை முன்னெடுத்தார்கள்; வரலாறு அவர்களுக்கு மரண தண்டனை தந்தது. இந்தியாவில் மதவாத அரசியலை முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ் நிச்சயம் முற்போக்கு இயக்கங்களாலும் மனித சமூக வாழ்க்கை முறைக் கோட்பாடு களாலும் நிராகரிக்கப்படும் என்று நம்பலாம்.
தங்களது பெரும்பாலான படைப்புகளில் பாலியல் உணர்வு மிகுந்திருப்பதாகச் சொல்லப்படு கிறதே; அது குறித்து?
பாலியல் உணர்வும் இயக்கமும் ஜீவித வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத அம்சங்கள். வீட்டுக்குள் ஆண்லிபெண் உறவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே நிகழ்வு பொதுவெளியில் நிகழுமானால் சமூக விதிகளுக்கு முரணானது. நான் எந்த இடத்திலும் பொதுவெளி சார்ந்த உறவுகளைப் பதிவிடவில்லை.
"நாகராணியின் முற்றம்' நாவலில் வரும் ஒரு காட்சிதான் பலரையும் முகம்சுழிக்க வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். சந்திரனும் நாகராணியும் ஊரிலிருந்து விலகிப்போய்ப் பாலியல் உறவுகொண்டு வாழ்க்கை நடத்துவார்கள். இன்றைய நிலையில் ஆண்களில் எண்பது விழுக்காடும் பெண்களில் பத்தும், ஒருவருக்கும் அதிகமானவர்களோடு உறவுகொண்டு வாழ்கிறார்கள். திருமணத்தின்போது இருவரும் முதல் முறையாகத்தான் உறவாடுகிறார்கள் என்று கணிக்கமுடியாது. ஆனால் இந்த நாவலின் நாயகனும் நாயகியும் முதன்முறையாக உறவு கொள்கிறார்கள். அதன் பிரதிபலிப்பாய், நாகராணி வீர்யத்தோடு இருக்கும்போது சந்திரன் சுணங்கி விடுகிறான். முதல் உறவில் கன்னிச்சவ்வு உடையும் சூழலில் இருவருக்குமே உடல் உபாதை நிகழும்; அந்தக் காட்சியை விவரித்ததில் பலருக்கும் அசூயை உண்டா னது என்பது உண்மை. ஆனால் அது யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என்பதாகவே உணர்கிறேன். ஆணோ, பெண்ணோ திருமணத்துக்குப் பின் முதல் உறவு கொள்வது தாம்பத்தியம் சிறப்பாக வளர உதவும்.
"இனிய உதயம்' இதழைப் பற்றி?
நக்கீரன் குழுமத்தில் இருந்துவரும் பண்பாட்டு இதழாக "இனிய உதயம்' இருக்கிறது. இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்று பிங்கல நிகண்டு வரையறுத்திருக்கிற பொருண்மைப்படி வாசிக்க எளிமையாகவும் அடர்த்தியான விஷயத் தொகுப்போடும் இருக்கிறது. தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு நல்ல விருந்து தருகிறது "இனிய உதயம்'.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/interview-2026-03-07-17-08-32.jpg)