நாற்பது ஆண்டுகளாக எழுத்தில் தடம்பதித்து வருபவர் நாராயணி கண்ணகி, எழுத்துக்காக நிறைய பரிசுகளும், விருதுகளும் பெற்றவர். எழுதுவதோடு நிற்காமல் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் நடத்திவருபவர், சமீபத்தில் வெளிவந்த அவரின் வாதி, அலர் இரண்டு நாவல்களும், மென்முறை குறுநாவலும் பெரிதும் கவனிக்கப்பட்டவை. வெகுஜன எழுத்து, திரை எழுத்து,இலக்கியம் என்று நடந்து வந்த அவரின் அனுபவத்தை அறிய இந்தப் பேட்டி
உங்கள் பெற்றோர் பற்றிச் சொல்லுங்கள், பெற்றோருடனான இளமைக்காலம் எப்படி இருந்தது?
அப்பாவின் பெயர் சின்னக்கண்ணு! பொற்கொல்லர்! பழையபொன்னை உருக்கி புதிய அணிகலன்கள் செய்துவந்தவர், ஆபரண கலைஞர் என்றும் சொல்லலாம், இந்தக் காலத்தில் எல்லாவற்றிற்கும் இயந்திரங் கள் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் எந்த அணிகலன் களையும் கையால்தான் செய்யவேண்டும். அவர் காலத்தில் கால்களில் அணியும் நகைகளைத் தவிர மற்ற எல்லா நகைகளும் தங்கத்தால் செய்தார்கள். அவருக்குப் பிறகு நடுத்தர மக்களும், விளிம்பு நிலை மக்களும் அணியும் நகைகளாக வெள்ளி இருந்தது. அதுவும் மாறி தற்போது கவரிங் நகைகளும், நெகிழி நகைகளும் அதிகரித்துவிட்டது. தங்கங்களும் ஒரு சிலரிடம் மட்டும் பிஸ்கட்டுகளாக தங்கிவிட்டது. மக்களின் வாழ்க்கை நிலையும் அப்படித்தான் ஆகிவருகிறது என்பார் அப்பா. ‘கவரிங் நகை மாதிரி எல்லாரும் டூப்ளிகேட் வாழ்க்கை வாழறாங்க..’ என்பார்.? தங்கத்தை தங்கமா அணியணும், வெள்ளியை வெள்ளியா அணியணும், பித்தளையை பித்தளையா அணியணும்.. மனுசன் எப்போ பித்தளைக்குத் தங்கம் முலாம் பூசி தங்கம்னு சொல்றானோ, அங்கேயே பித்தலாட்ட காலம் தொடங்கிருச்சி..’ என்று சொல்வார். அதிகம் பேசமாட்டார். பேசினால் இப்படி ஞாபகத்தில் வைத்துக்கொள்கிற மாதிரி பேசுவார்.
அப்பா தெருக்கூத்து கலைஞர், மோகினி வேடம் தரிப்பவர். கறுப்பாக இருக்கும் அவர் நீல வண்ணம் தீட்டிக்கொண்டு ஆடுவார். கையில் எப்போதும் மாரியம்மன் தாலாட்டு புத்தகம் வைத்திருப்பார். அம்மை நோய் வந்தவர்களின் வீட்டிற்குச் சென்று மாரியம்மன் தாலாட்டு பாடுவார்.
அப்படி ஒரு வைத்திய நடைமுறை இருந்தது. அவர் பாடும்போது சாமி வந்து ஆடுபவர்களும் உண்டு.
அம்மாவின் பெயர் கோவிந்தம்மாள். எங்களுக்கு எல்லாமே அம்மாதான். மாதாவுக்குப் பின்னாடி வருகிற பிதா, குரு, தெய்வம் எதுவுமே என் கணக்கில் இல்லை, எல்லாம் அம்மாதான்.
1968-ல் இந்திய அரசு தங்கக் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்தது. அதனால் நாடு முழுவதும் நகைத் தொழிலாளிகள் வேலை இழந்தார்கள். தொழிலாளிகளிலேயே வசதி படைத்தவர்கள் நூறு கிராம் தங்கம் வரை வைத்துக்கொள்ள அரசு உரிமம் பெற்று நகைத்தொழில் செய்தார்கள். வசதி/ற்ற தொழிலாளிகள் வேலை இழந்தார்கள். அந்தக் காலத்தில் அம்மாதான் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று எங்களைக் காப்பாற்றினார்.
என் இளமைக் காலங்களைச் சரியாகச் சொல்வதென்றால் மற்றவர்களின் இளமைக்காலம் போல் இல்லை, பதினேழு வயதில் படிப்பு முடிந்தது, பதினெட்டு வயதில் திருமணம், பத்தொன்பது வயதில் குழந்தைக்குத் தந்தை. என்னுடைய இளமைக்காலம் குடும்பத் தலைவனாகப்க்தான் அமைந்தது.
பள்ளிக்கால நாட்கள் பற்றி?
பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். வறுமைச் சூழலில் அந்தப் படிப்பே பெரிதுதான்.. வாரத்தில் நான்கு நாட்கள் கூலி வேலைக்குப் போய்விடுவேன். இரண்டு நாளோ, மூன்று நாளோ பள்ளிக்குப் போவேன். அதனால்தான் கல்வித் தகவல்களைவிட, வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்துள்ளது.
உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத மனிதர்கள்?
நூறு பேரைச் சொல்ல முடியும். மிச்சமாகவும் சொல்லலாம் இந்தப் பேட்டியில் மறக்கவே முடியாதவர்களாக என் எழுத்து வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தவர்கள் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன், பத்திரிகை ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன். இருவரும் என் இதயத்தில் எப்போதும் இருப்பார் கள்.
எழுத்தை விட்டுட்க் போனாலும் விடாமல் இழுத்து வந்தவர்கள் எழுத்தாளர் பா.ராகவன், அமிர்தம் சூர்யா, கே.என்.சிவராமன். எழுத்தாளர் மாலன் மறக்கவே முடியாதவர். வெகுஜன எழுத்திலிருந்து விலகி இலக்கிய எழுத்திற்கு வந்ததும் வாதி நாவல் எழுதினேன். நான் யாரென்றுகூட தெரியாமல் வாதி நாவலை ‘பேசாப் பொருளைப் பேசும் நாவல்’ என்ற தலைப்பில் விமர்சனம் எழுதி பெரும் வெளிச்சத்தைக் கொடுத்தார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. வாதி நாவல் வெளிவந்த ஒரு வாரத்தில் முழுதாக வாசித்து தொலைக்காட்சியில் மதிப்புரை வழங்கினார். ந.பெரியசாமி, வேல் கண்ணன், கிருஷ்ண பிரபு இவர்களோடு கோகிலன் இந்த நால்வரும் நான் எப்போது எழுதிக் கொடுத்தாலும் சூடாக வாசித்து உடனடியாக கருத்து பகிர்வார்கள், அது பெரும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டு இவர்களோடு சித்த மருத்துவர் பாஸ்கரன், பேராசிரியர் இந்துமதி, எழுத்தாளர் ஸ்ரீதேவிகண்ணன், பாரத் தமிழ் இணைந்திருக்கிறார்கள்.
திரைத்துறையில் நான் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தாலும் கதை, திரைக்கதை உருவாக்குவதற்கு முழுமையாக சொல்லிக் கொடுத்த ஆசான் இயக்குனர் நந்தா பெரியசாமி. வயதில் இளையவராக இருந்தாலும் கதை சொல்வதில் அண்ணன். தற்போது இயக்குனர் ஜெய்சரண் அதே கதை ஆற்றலோடு பயணிக்கிறார் ஆரம்ப கால எழுத்தை வழிநடத்தினவர்கள் எழுத்தாளர்கள் சோ.தர்மன், பி.ச.குப்புசாமி, செல்விகாந்த் ஆவார்கள். மண்ணின் மூத்த படைப்பாளிகள் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிஞர் யாழன் ஆதி, சிறார் கதைசொல்லி ப.நீதிமணி.
எழுதுங்கள் அதுமட்டும் போதும் அதை வெளியிடுவதைப் பற்றியோ, லாபநஷ்டம் பற்றியோ கவலை வேண்டாம் என்று சொல்லி என் படைப்புகளை வெளியிடும் ராம்ஜி, காயத்ரி என்னுடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பெண்ணியம் எழுத்தாளர் பத்மா அமர்நாத், அதற்கு

எழுதுங்கள் அதுமட்டும் போதும் அதை வெளியிடுவதைப் பற்றியோ, லாபநஷ்டம் பற்றியோ கவலை வேண்டாம் என்று சொல்லி என் படைப்புகளை வெளியிடும் ராம்ஜி, காயத்ரி என்னுடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பெண்ணியம் எழுத்தாளர் பத்மா அமர்நாத், அதற்கு முழு காரணமாக விளங்குபவர் எழுத்தாளர் ஒளிவண்ணன்.
காலையில் நிச்சயமாக வாசிக்கும் படைப்பாளிகளாக எப்போதும் இருப்பவர்கள் கவிஞர் கரிகாலன், பேராசிரியர் பி.பாலசுப்ரமணியன். முப்பத்தைந்து ஆண்டுகளாக என்னோடு பயணிப்பவர் பதிப்பாளர் ப.இளம்பரிதி.
உங்கள் குடும்பத்தில் பலரும் எழுத்தாளர்களாக இருக்கிறார்களே எப்படி?
முதலில் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வாசகர்கள், வாசகர்களாக இருந்த காரணத்தால் எழுத்தாளர்களாவது மிகச் சுலபமானதாக இருந்தது. என் மூன்று அக்காக்களும் நிறையப் புத்தகங்கள் வாசிப்பார்கள் அதனால் எனக்கும் வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலேயே தொற்றியது. அது என் பிள்ளைகளுக்கும் பரவியது.? என் பேரப் பிள்ளைகளுக்கும் தொடர்கிறது. நான் எங்கேயாவது வெளியூர் போய் திரும்பினால் என்ன பலகாரம் வாங்கி வந்தேன் என்று ஒரு நாளும் வீட்டில் உள்ளவர்கள் கேட்டதில்லை, என்ன புத்தகம் வாங்கி வந்திருக்கிறேன் என்றுதான் பார்ப்பார்கள். வாசகர்களாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் எழுத்தாளர் ஆவது எளிது. அந்த வகையில் கோகிலன், திங்களன் எஸ்.தேவி எழுதுகிறார்கள் என்று கணிக்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் படைப்பு பற்றி, உங்களின் கருத்து?
மருமகள் தேவி, என் அக்கா மகள்! அக்காவுக்கு எழுத முடியாத சூழ்நிலை அமைந்தது. தேவியின் நாவல் பற்சக்கரம் ஸீரோ டிகிரி நாவல் போட்டியில் பரிசு வென்றது. அதை என் அக்காவே எழுதியதாகப் பார்க்கிறேன். பெரிய மகன் நா.கோகிலனின் சிறுகதைத்தொகுப்பு ‘காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது’ நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறது. அதில் உள்ள சிறுகதைகளும் பத்திரிகைகளில் பரிசுகள் பெற்றது. கண்மணி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற சூது நாவலும் முக்கியமானது. இளைய மகன் திங்களன் நல்ல கவிதைகள் எழுதிவந்தான். காவல்துறை பணி காரணமாக தொடர்ந்து எழுத முடிய வில்லை. இவர்களின் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் குறை, நிறை சொல்வதைக் கேட்பேன். நானாக எந்தக் கருத்தும் சொல்வதில்லை.
பதிப்பகத் துறையிலும் கால் பதித்து இருக்கிறீர்களே?
பதிப்பகத் துறை பற்றி நிச்சயமாக எனக்கு எதுவும் தெரியாது. அது தேவியும், கோகிலனும் இணைந்து நடத்துவது. அவர்கள் வெற்றி பெறவேண்டும் என தந்தையாகவும், எழுத்தாளனாகவும் வாழ்த்துகள் தெரிவிக்கின்றேன்.
இப்போதைய சிறுகதை, புதின இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது?
தமிழ் இலக்கியப் படைப்புகள் உலகின் பல மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசாங்கம் இலக்கியத்திற்காக நல்ல நிதி ஒதுக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புரியாத எழுத்து என்று இலக்கியங்களை மக்கள் வாசிக்காமல் இருந்தார்கள். இப்போது அப்படி இல்லை, வெகுஜன எழுத்தைக் காட்டிலும் இலக்கிய எழுத்துக்களை அதிகமாக வாசிக்கிறார்கள். குறிப்பாக நாவல்கள் அதிகமாக வாசிக்கிறார்கள். நாவல்கள் அதிகமாக படைக்கப்படுகின்றன. இலக்கியத்தின் போக்கு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். என் நாற்பதாண்டு இலக்கிய அனுபவத்தில் வடிவரீதியாக, கோட்பாடுரீதியாக நிறைய மாறுதல்களை அடைந்துகொண்டே வருகிறது. தற்போது தொன்மங்களை கூர்மையாகவும், அழகாகவும் ஆராயும் எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. வரும் காலங்களில் இலக்கியப் படைப்புகளைக் காட்டிலும், இலக்கியத் திறனாய்வுகள் முக்கியமானதாக கருதப்படும். ஏனெனில் திறமையான திறனாய்வு மாணவர்கள் அடுத்த தலைமுறை இலக்கியத்தைக் கோலோச்சுவார்கள்.
“தாங்கள் எழுத வந்ததன் பின்னணி சொல்லுங்கள்”எழுத்தாளர்கள் யாராவது தூண்டுகோலாக இருந்தார்களா என்று பார்த்தால் பின்னணி இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அம்மா வகையில், அப்பா வகையில், பாட்டி வகையில், மாமா வகையில், அத்தை வகையில், ஆயிரக்கணக்கான உறவினர்கள் இருக்கிறார்கள் என்றால் யாருமே எழுத்தாளர்கள் கிடையாது. எங்களுக்கு முந்தைய தலைமுறை வரை கல்வி அறிவே இல்லாதவர்கள். என் பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாராவது எழுத்தாளர்களாக இருந்தார்களா என்றால் அப்படியும் இல்லை. யாரும் கையைப் பிடித்து அகரத்தை எழுதவைக்காமல் எழுத்தைத் தொடவோ தொடரவோ முடியாது என்கிற அர்த்தத்தோடு உங்கள் கேள்வி நியாயமானது.
எனக்கு மூன்று அக்காக்கள்! மூன்று பேரும் புத்தகப் பைத்தியங்கள். அப்போது தொலைக்காட்சிகள் இல்லை, என் அக்காக்கள் என்றில்லை. நாட்டில் எல்லா அக்காக்களுக்கும் இருந்த ஒரே பொழுதுபோக்கு கதைப் புத்தகங்கள். முக்கியமாக தொடர்கதைகள். நடு அக்கா குடும்பம் ஜோலார்பேட்டையிலேயே இருந்ததால் நாள்முழுவதும் அக்கா வீட்டிலேயே இருப்பேன். அக்கா வாசிப்பதற்கு நூலகத்திலிருந்தும், கடைகளிலிருந்தும் புத்தகங்கள் வாங்கி வந்து கொடுப்பது என் வேலை. ஒன்பது வயதில் வாசிப்பு தொடங்கிவிட்டேன். பத்து வயதிலேயே ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் வாசித்தேன். தொடர்கதைகள், மாத நாவல்கள் வாசித்துக்கொண்டே இருந்தேன்.வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். எழுதுவதற்குத் தோன்றவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் நீதிபோதனை வகுப்பு இருந்தது, அன்று நீதிபோதனை ஆசிரியர் விடுமுறை.
அவருக்குப் பதிலாக வேறு ஆசிரியர் வந்தார். அவர் ஒரு கட்டுரைப் போட்டி வைத்தார். அதுதான் என்னை மடைமாற்றி விட்டது. ‘தன்னல நியாயம் அது பொது நல அநியாயம்’ என்பது தலைப்பு. இந்தத் தலைப்பே பல மாணவர்களுக்குப் புரியவில்லை. அதற்கு முன்புவரை பள்ளிக் கூடத்தில் கட்டுரைத் தலைப்பாக மகாத்மா காந்தி, சுதந்திரம், பாரதியார், திருக்குறள் இப்படித்தான் இருக்கும், முதல் முறையாக ‘தன்னல நியாயம் அது பொதுநல அநியாயம்’ என்று தலைப்புக் கொடுத்ததும் யாருக்கும் புரியவில்லை. ‘சார்! புரியல கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க என்று கேட்டார்கள். நீதி போதனை ஆசிரியர் எந்த விளக்கமும் கொடுக்க வில்லை, கரும்பலகையில் தலைப்பை மட்டும் எழுதிப் போட்டார். பரீட்சை அறையில் உட்கார வைப்பது போல், தள்ளி தள்ளி உட்கார வைத்தார். ‘பாருங்க இப்படிதான் இருக்கணும்னு இல்லை, உங்களுக்கு என்ன தோணுதோ அதை எழுதுங்க… முன்னுரை, முடிவுரை அவசியம் இல்லை, விசயம்தான் முக்கியம். நல்ல கட்டுரை மூன்றுக்கு பேனா பரிசு’ என்றார்.
எல்லோரும் கட்டுரை எழுதினோம். அடுத்த வாரம் பரிசுகள் கொடுப்பதற்காக அவரே வந்தார்.
முதலில் மூன்றாம் பரிசு அறிவித்தார்.
மூன்றாம் பரிசு சி.நாராயணன்’ என்றார்.
என்னால் என்னை நம்பவே முடியவில்லை. மாணவர்களின் கைத்தட்ட லோடு போய் பேனா பரிசு வாங்கிக் கொண்டு வந்தேன்.
‘இரண்டாம் பரிசு’ என்றார். எல்லோரும் ஆவலோடு பார்த்தோம். ‘இரண்டாம் பரிசு சி.நாராயணன்.’
நான் எழுந்து ‘சார்’ என்று தயங்கி நின்றேன்.
‘நீதான் வாடா’ என்றார். இரண்டாம் பரிசு பேனாவும் எனக்கே கிடைத்தது.
முதல் பரிசும் எனக்கேதான் அறிவித்தார் என்பதை ரொம்பவும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாலும் நன்றாக இருக்காது, ஆனால் வகுப்பில் அந்தச் சூழல் ஒரு திரைப்படத்தின், ஒரு நாவலின், ஒரு சிறுகதையின் எதிர்பாராத சம்பவ முடிவிற்கு சமமானதாக இருந்தது. மாணவர்கள் அந்த கணம் என் எதிரிகளாக இருந்தார்கள்.
ஆசிரியர் நான் எழுதிய கட்டுரையை வாசித்து காண்பித்தார். மாணவர்கள் யாருமே இப்படி ஒரு பார்வையில் எழுதவில்லை.
பின்னாளில் நான் பத்திரிகைகளுக்கு படைப்புகள் எழுதி அனுப்பியபோது கவிதை யிலோ, சிறுகதையிலோ, நாவலிலோ எதுவாக இருந்தாலும் ‘தன்னல நியாயம் அது பொதுநல அநியாயம்' என்கிற மானுட தத்துவத்தை நிறுவுவதற்கான எழுத்தாகவே எழுதினேன். எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
இந்த வகையில் நான் எழுதவந்ததன் பின்னணியில் இருப்பவர்கள் எழுத்தாளர்களோ, கவிஞர் களோ இல்லை, வாசிப்பதற்கு அக்காவும், எழுதுவதற்கு எழுத்திற்குத் தொடர்பு இல்லாத ஒரு பொறியியல் ஆசிரியரும் காரணமாக இருந்தார்கள்.
நாராயணி கண்ணகி என்று தங்களது பெயரினை முழுமையாக பெண்மை ததும்பும் வண்ணம் மாற்றிக் கொண்டதற்கு முக்கிய காரணம் உண்டா?
ஆஹா! பெயரில் மட்டும் பெண்மை நிரம்பித் ததும்புவதாக நினைக்கவில்லை. என் புத்திக் குள்ளே பெண்மை நிரம்பித் ததும்புவதாக உணர்கிறேன். அதைப் பெண்மை என்று சொல்வதை விட கொஞ்சம் கண்கள் பனித்து தாய்மை என்று உணர்கிறேன். என்னில் என் அம்மாவைக் காண்கிறேன். ஆனால் புனைபெயருக்குக் காரணம் தாய்மைத் தன்மை அல்ல- ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளிடம் ‘படிச்சிட்டு என்னவாகப் போறீங்க? என்று கேட்டால் டாக்டராகப் போறேன். என்று சொல்வார்கள். வாழ்க்கையும், கல்வியும் அந்தக் குழந்தையை டாக்டராக்குமா தெரியாது.
அப்படிதான் என் புனைபெயரும் உருவா னது என்று சொல்லலாம். தொண்ணூறுகளில் நான் எழுதத் தொடங்கின போது சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ஹேமா ஆனந்த தீர்த்தன், சுபா, தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன் இப்படி பிரபல வெகுஜன எழுத்தாளர்கள் எல்லோருமே பெண்மை ததும்பும் பெயரைப் புனைபெயராக வைத்திருந்தார்கள். வெகுஜன எழுத்தைத் தொடங்குபவர்களுக்கு சுஜாதாதான் ஆதர்சம். குழந்தைகள் டாக்டராவேன்னு சொல்கிற மாதிரி எனக்குள்ளும் ஆரம்ப காலத்தில் சுஜாதா ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவின் காரணமாக கண்ணகி என்று புனைபெயர் வைத்துக்கொண்டேன். அப்போது அந்தப் பெயரில் வேறு சிலரும் எழுதிவந்தனர் அதனால் கண்ணகியோடு நாராயணியும் சேர்த்துக் கொண்டேன். நாராயணி கண்ணகி பெயரில் தொடர்ந்து படைப்புகள் வெளி வந்ததால் அதுவே நிலைத்துவிட்டது. ஓரிரு முறை நாராயணி கண்ணன் என்று பெயரோடு படைப்புகள் அனுப்பி வைத்தேன். பத்திரிகைகளில் பெயரைமாற்றவில்லை. குமுதம் துணை ஆசிரியர் ஒருவர் முறுக்குப் பிழிந்த மாதிரி பெயர் இருக்கிறது என்றார். அப்போது குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் ஜாங்கிரி பிழிந்ததுபோல் இருக்கிறது பெயர் என்றார்.
99.9 சதவீத படைப்பாளிகளுக்கு புனைபெயர் உண்டு. சொந்தப் பெயரிலேயே பிரபலமாகி இருந்தாலும் எழுத ஆரம்பித்த புதிதில் ஒரு கவிதையாவது புனைபெயரில் எழுதிவிடுவார்கள். நம்ம கடவுள்களுக்கும்கூட சொந்தப் பெயரை விட புனைபெயர்களே அதிகம்.
புனைவு எழுதுவதற்கு முன்பு புனைவைப் போலவே பெயரையும் எழுதுவது ஒரு வகை ஆனந்தம்தான்…
என்ன சொன்னீர்கள் பெண்மை ததும்பும் பெயரென்றா? ஏற்கனவே மெஸஞ்சர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
எளிய விளிம்பு நிலை மாந்தர்களை அவர்களுக்கே உரிய வாழ்வியலோடு உங்களுடைய கதையில் உலவ விட்டிருக்கிறீர்கள் இது எவ்வாறு சாத்தியமாயிற்று?
விளிம்புநிலை, மையநிலை, உச்ச நிலை என்பது இங்கே அறிவார்ந்த வாழ்வையோ, சித்தாந்த வாழ்வையோ, பண்பாட்டு வாழ்வையோ குறிப்பிடுவதில்லை. பொருளாதார வாழ்வையே குறிப்பிடுகிறோம். பெரிய கோடீஸ்வரர்கள் வாழ்வில் என்ன போராட்டங்கள் இருந்துவிடப் போகிறது? என்ன போதாமை இருந்துவிடப் போகிறது? பனியில் போர்வை இல்லாமல் விறைத்து மாண்ட முதியவர்களை என் கண்கள் படம்பிடித்து வைத்திருக்கிறது, பசியில் பாலின்றி இறந்த குழந்தைகளை என் உள்ளம் புதைத்துவைத்தி ருக்கிறது. ஆனால் விளிம்புநிலை மக்கள்தான் நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளுக்கும் வியர்வை சிந்தியவர்கள் கல்லை உடைத்தவர்கள், மண்ணைத் தோண்டியவர்கள். பாதைகள், பங்களாக்கள், உலகம் போற்றும் கற்கோயில்கள், அணைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் உருவாக் கினவர்கள் விளிம்பு நிலை மக்கள்.
பணக்காரர்கள் பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தார்கள் என்று எழுதுவதால் யாருக்கு என்ன உபயோகம்? மனைவியின் பிறந்த நாளுக்கு அறுநூறு கோடியில் பங்களா பரிசு, காதலியின் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த வைரக் கடிகாரம் பரிசு, ஆயிரம் கோடியில் மகனுக்குத் திருமணம், திருமணத்திற்குத் தங்கத்தில் நெய்யப்பட்ட உடை என்பதெல்லாம் வாழ்க்கை இல்லை, செய்தி! மனிதத்தின் அவலம், மனிதம் அவலமாவது ஓரிடத்தில், மனிதர்கள் அவலமான வாழ்க்கை வாழ்வதுதான் நம் கண் முன்னே நாம் காண்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கும் கூரை வீட்டை அடமானம் வைத்து பெண்ணுக்குத் திருமணம் செய்யும் ஆயிரக்கணக் கான ஏழைமக்கள்தான் என் கண் முன்னே வாழ்கிறார்கள். மூக்கிலிருக்கும் குண்டூசி பொட்டளவு மூக்குத்தியை விற்றுவிட்டு விருந்தாளிகளுக்குச் சோறு போடுகிற அம்மாக்களின் மூக்குகள்தான் என் முன்னே காய்ந்த புல்வெளியாய்த் தெரிகிறது.
தாலியை குடும்பச் செலவுக்கு அடமானம் வைத்து விட்டார் ஒரு அம்மா, கணவர் இறந்துவிட்டார், அந்தம்மா யாருக்கும் தெரியாம ரகசியமா கடைக்குப் போய் பித்தளைத் தாலி வாங்கி, கழுத்துல மாட்டிக்கொண்டு வந்து அதன் பிறகுதான் கணவனோட பக்கத்தில் உட்கார்ந்து அழுகிறார். விளிம்புநிலை அம்மாக்களின் எத்தனை பேர் கழுத்துகளில் தங்கத்தாலி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? யார் கழுத்திலும் இல்லை, இரும்பு கம்பியாலான ஊக்குகள்தான் தொங்குகின்றன.
ஆனால் கோடீஸ்வரர்கள் தங்கத்தை வைப்பதற்கு இடமில்லாமல் செங்கற்களாக செய்து சுவரில் அடுக்கி சிமெண்ட் கலவை பூசி மறைக்கிறார்கள்.
எளிய விளிம்பு நிலையில் வாழும் அம்மாக்களைதான் நான் பிறந்ததிலிருந்து காண்கிறேன். எழுத்தில் அவர்கள்தான் இருப்பார்கள்.
சரித்திர நாவல்கள் எழுதியிருக்கிறீர் களா? இதுவரை எழுதவில்லை என்றால் இனி எழுதுவீர்களா?
என்னைப் பொறுத்தவரை வாதி சரித்திர நாவல்தான். வடார்க்காடு மண்ணில் நடந்த சத்தியமான போராளிகளின் சரித்திரம்! சரித்திரம் என்பது எழுதுவதல்ல நிகழ்வது. இங்கு எழுதப்பட்ட அதிகப்படியான சரித்திர நாவல்கள் கற்பனை மிகுந்தவை. ராஜராஜ சோழன் பற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் கூட ஆயிரம் நாவல்கள் வெளிவரும் அபாயம் இருக்கிறது. சரித்திரம் என்பது ராஜராஜசோழனோடு முடிந்துவிட்டதா? ராஜராஜசோழனுக்குப் பிறகு சரித்திர நாயகர்கள் இல்லையா என்பது மிகப் பெரிய கேள்வியாக நிற்கிறது. என்னைப் பொறுத்தவரை பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி, மணியம்மை, தொல். திருமாவளவன் போன்ற ஆளுமைகளும் சரித்திர நாயகர்கள்தான் அவர்களைப் பற்றியும் நாவல்கள் வெளிவர வேண்டும். நான் எழுத்தாளர்கள், கவிஞர்களையே சரித்திர நாயகர்களாக கருதுகிறேன். பாரதியார், பாரதிதாசன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் ஆகியோரைப் பற்றி புனைவுகள் யாரும் எழுதவில்லை. அந்தந்த மண்ணில் எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் அந்தந்த மண்ணின் முன்னோடி எழுத்தாளர்களைப் பற்றியும் நாவல்கள் எழுதவேண்டும். ஒருவரின் சரித்திரத்தை நாவலாக எழுதும்போது அவர்கள் வாழ்க்கையை மட்டும் சம்பவத் தொகுப்புகளாக எழுதாமல் மேலான, கீழான தனித்துவமான குணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு கவிதைப் பரப்பில் மனுஷ்ய புத்திரனின் ஆளுமை முழு கவனத்தையும் பிடித்து இழுக்கிறது. கவிதை என்கிற ஒரே ஒரு தங்க வாளை வைத்துக்கொண்டு வாழ்வினைப் போராடி அவர் வென்ற நாயகத் தன்மையும் என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. புனைவுகளில் அழகிய அழகியபெரியவனின் நாயகத்தன்மை அவரைப் பற்றிய சித்திரங்களை உருவாக்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. நான் சரித்திர நாவல்கள் எழுதினால் இப்படிப்பட்டவர்களின் சரித்திரங்கள் நிச்சயம் இருக்கும்.
ஐம்பது வருட நாவல் இலக்கியத்தில் ஒரே மாதிரியான சரித்திர நாவல்களும், ஒரே மாதிரியான புலனாய்வு நாவல்களும், ஒரே மாதிரியான குடும்ப நாவல்களும்தான் வெளிவந்ததாக நான் கருதுகிறேன். அதனாலேயே அவைகள் வெகுஜன எழுத்தாகவே கணிக்கப்பட்டுள்ளது. இது என் தனிப்பட்ட கருத்து.
எழுத்தின் மூலம் வருவாய் ஈட்டினீர்கள் என்பது உண்மையா? எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியுமா?
உண்மைதான் நம் நாட்டின் பொருளாதார சூழலில் வருமானத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியுமே தவிர, நாம் வாழ நினைக்கிற மாதிரியெல்லாம் வருமானத்தை ஈட்ட முடியாது. ஜோலார்பேட்டையில் இன்றைய சூழலில் ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் வாங்கும் சம்பளம் ஆறாயிரத்திலிருந்து பனிரெண்டாயிரம் வரைதான். அதே அரசுப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளம் அறுபதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை. இவரும் ஆசிரியர்தான், அவரும் ஆசிரியர்தான், ஆறாயிரத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களையும் பார்க்கிறேன். அறுபதாயிரத்தில் கஷ்டப்படுபவர்களையும் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் வெகுஜன பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். மாத நாவல்களுக்கு இரண்டாயிரம் முதல் ஏழாயிரம் வரை தந்தார்கள். அந்த வருமானம் எனக்குப் போதுமானதாக இருந்தது. அப்போதே மாதம் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் சம்பாதித்த எழுத்தாளர்களும் இருந்தார்கள். இப்போதும் தன் சொகுசான வாழ்க்கைக்கும், விலையுயர்ந்த மதுவிற்கும் பணம் போதவில்லை என்று வருந்துபவர்கள் இருக்கிறார்கள். அமைதியாக எழுதி பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். வெகுஜன இதழ்களிலும்கூட 1980-ருந்து 2000 வரை வெகுஜன எழுத்தாளர்கள் சம்பாதித்தார்கள். தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் பெரும்பாலான எழுத்தாளர்கள் சம்பாதித்தார்கள். ஒன்றிரண்டு திரைப்பட இயக்குனர்கள் தவிர மற்ற எல்லா இயக்குனர்களும் எழுத்தாளர்களை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். கதைகளையோ கதைகளில் வரும் காட்சிகளையோ எழுத்தாளர்களுக்குத் தெரியாமல் திருடுவதில்தான் திறமையாக இருக்கிறார்கள். எழுத்தாளருக்குக் குறைந்தபட்ச தொகையாகவாவது கொடுத்து திரைக்கதையில் பங்கு பெற வைக்கவேண்டும் என்கிற நல்லெண்ணம் இருப்பதில்லை. அப்படி பங்கு பெறும் வாய்ப்புகள் இருந்தால், ஒரு எழுத்தாளரும் வறுமையில் இருக்கமாட்டார்கள். தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் ஒரே மாதிரி இருக்காது.
உங்களின் திரைப் பிரவேசம் என்னவாயிற்று?
போன கேள்விக்கு என்ன பதில் சொன் னேனோ அதற்கு அப்படியே முரணான ஒரு பதிலை இந்தக் கேள்விக்குச் சொல்கிறேன். ஒரு எழுத்தாளனால் செக்கு மாடுகளைப் போல் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுண்ணாம்பு அரைத்துக் கொண்டிருக்க முடியாது. நான் திரைப்படத்தில் நுழையவேண்டிய இளம் வயதில் வெறும் காதல் படங்களாகவே வெளிவந்தது. அதற்கு காரணம் காதல் கோட்டை திரைப்படம். காதல் கோட்டை என்ற ஒரு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அதற்குப் பிறகு வெளிவந்த எல்லாத் திரைப்படங்களும் அர்த்தமற்ற காதல் படங்களாகவே எடுக்க வைத்தது. இருபது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படத்தின் இருண்ட காலம் என்று சொல்வேன். பல இயக்குனர்களோடு தொடக்கத்தில் பங்கேற்பேன். திரைக்கதை பிடிக்காமல் வெளிவந்து விடுவேன். அனேக திரைப்பட இயக்குனர்கள் ஆட்டு மந்தைகள் மாதிரி சிந்திப்பவர்கள்.
சகலகலாவல்லவன் ஒரு படம் ஓடியதும் அதே வகைமையில் படம் எடுப்பார்கள். பருத்தி வீரன் ஓடியதும் மதுரைப் பின்னணி கொண்ட படங்களாக எடுத்தார்கள்.
இளையராஜாவின் இசைக்கு வரவேற்பு கிடைத்ததும் கதை, திரைக்கதையை விட்டு விட்டு இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். என்னைத் திரைப்படத்திற்கு அழைத்த பெரும்பாலான இயக்குனர்கள் இப்படிதான் இருந்தார்கள். கதைக்கு ஏற்றமாதிரி ராமராஜனைப் பண்ணாமல், ராமராஜனுக்கு ஏற்றமாதிரி கதை பண்ண வேண்டும் என்றார்கள். கொஞ்சம் கதை அறிவு இருக்கும் இயக்குனர்கள் குடிகாரர்களாக இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் கதை அறிவு மிகுந்திருந்த இயக்குனர் பெரிய தயாரிப்பாளர் கிடைத்ததும் மது, மாது இரண்டிலும் மூழ்கினார். எனக்கு வாய்த்த இயக்குனர்கள் மட்டும் அப்படியா? பெரும்பாலான இயக்குனர்களே அப்படியா? நல்ல இயக்குனர்கள் பணம் தரமாட்டார்கள். பதினைந்து ஆண்டுகள் திரைத்துறை அனுபவம் இதுதான். அதனால் எழுதுவதை பதினைந்து ஆண்டுகள் நிறுத்தி இருந்தேன்.
இப்போது நான் பணிபுரியும் இயக்குனர்கள் மாறுபட்டு இருக்கிறார்கள். நிறைய வாசிக்கிறார்கள். புதியதாக சிந்திக்கிறார்கள். என்னைச் சந்திப்பதற்கு முன்பு என் நாவல்களைப் படித்து இருக்கிறார்கள். அது சம்பந்தமாக பேசுகிறார்கள்.
சாகித்ய அகாதமி விருது குறித்து ஏதேனும் கருத்து இருக்கிறதா?
கருத்து இருக்கிறதோ இல்லையோ எல்லோருக்கும் அதன் மீது ஒரு கண் இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுவது படைப்பிற்கா, படைப்பாளிக்கா என்று கேள்வி எழுப்பி வந்தேன். ஏன் இந்த கேள்வி என்றால், ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாதமி விருது அறிவித்த பிறகு, இன்னும் விருதுகள் வாங்காத மூத்த படைப்பாளுமைகளின் பெயர்களைச் சொல்லி இவர்களுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். விருது அறிவிப்பதற்கு முன்பேகூட மூத்த படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்லி இந்த ஆண்டு இவர்களுக்குதான் என்று அனுமானம் சொல்வார்கள்.
அப்படி அனுமானங்கள் பரப்புரை செய்யும் போதெல்லாம் நான் பதிவிடுவேன் ‘சாகித்ய அகாதமி விருது படைப்புக்கா, படைப்பாளிக்கா?’ என்று.? மூத்த எழுத்தாளர் மாலன் ஒருவர்தான் ‘படைப்புக்குதான் விருது’ என்று தெளிவான விரிவான பதில் உரைப்பார். முன்னோடிகளின் வழிகாட்டலின் காரணமாக இந்த ஆண்டிலிருந்து படைப்பாளிகள் எல்லோருமே படைப்புகளை அனுப்பலாம் என்கிற விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
ஆனாலும் இலக்கியத்தில் சிறுகதைக்காக சாகித்ய அகாதமி விருது வழங்குவதற்கு ஏழாண்டுகள், பத்தாண்டுகள் என்கிற கால இடைவெளி உருவாகிறது. கவிதைக்கும் அதுபோல்தான் பத்தாண்டுகள் இடைவெளி விழுந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கவிதைக்கும், சிறுகதைக்கும், நாவலுக்கும், ஆய்வு நூலுக்கும் தனித்தனியாக சாகித்ய அகாதமி விருது வழங்கவேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாக நான் மட்டுமே கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறேன். இலக்கியவாதிகள் அனைவருமே குரல் கொடுக்க வேண்டும்.
இலக்கியத்திற்காக நீங்கள் வாங்கிய விருதுகள், பரிசுகள்?
சிறுகதைப் போட்டிகளிலும், நாவல் போட்டி களிலும் கலந்துகொண்டு நிறைய பரிசுகள் வென்றிருக்கிறேன். குமுதத்தில் சிறுகதைப் போட்டியில் வென்று வைர மோதிரம் பரிசு பெற்றுள்ளேன். இப்போதைய மதிப்பிற்கு அது ஒரு லட்சம் ரூபாய்.
கல்கி நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பத்தாயிரம் பெற்றேன்.
இப்போது அதன் மதிப்பு பத்து லட்சம் ரூபாய். இந்தப் போட்டியில் பல முன்னணி எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள் என்பது முக்கியமான தகவல். பரிசுகள் பெற்றது நீளமான பட்டியல் அதில் முக்கியமானதாக கருதுவது தமிழறிஞர் ம.நன்னன் நடத்திய புதினப் போட்டியில் பரிசு வென்றததுதான்.. புதினத்தின் பெயர் ‘கருந்தீ’ கலைஞர் அவர்கள் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். அந்த நாவலைக் கலைஞர் வெளியிட்டார். நாவலை வாசித்து அரை மணி நேரம் நாவல் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
குடும்பத்தில் அனைவரும் எழுத்தாளராக அமைவது சாதகமானதா? பாதகமானதா?
குடும்பத்தில் எழுத்தாளர்கள் இருப்பதால் என் மதிப்பும் என் எழுத்தின் மதிப்பும் அவர்களுக்குத் தெரிகிறது. என் முதல் வாசகனாக மூத்த மகன் கோகிலன் வாசிக்கிறான். என் படைப்புகள் மொத்தமும் தட்டச்சு செய்து தருவது கோகிலன்தான். அவனும் எழுத்தாளனாக இருப்பதால் தட்டச்சில் சிக்கல்கள் வருவதில்லை. இளைய மகன் திங்களன் நன்றாக எழுதுவான். காவல் துறை பணி காரணமாக எழுத நேரமில்லை. கோகிலனின் மனைவி எஸ்.தேவியும் சிறப்பாக எழுதக்கூடிய பெண். என் அக்காவின் மகள் என்பதால் வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் தாய் வீட்டிலிருந்தே உருவானது.