லக உயிர்கள் அனைவருக்கும் உணவு அளிப்பவர் உமையொரு பாகனாம் சிவ பெருமான்! அம்மையப்பனாகிய அந்த இறைவனுக்கு பக்தர்கள் உணவைப் படைத்து வணங்கி வழிபடும் மகத்துவம் நிறைந்த நாள்தான் ஐப்பசி பௌர்ணமியில் வரும் "அன்னாபிஷேகத் திருநாள்' ஆகும்.

Advertisment

சிவபெருமான் அபிஷேகப்ரியர். அவருக்கு 70 வகையான மங்கலப் பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்வதுண்டு. அதில் முக்கியமான அபிஷேகம்தான் ஐப்பசி பௌர்ணமியில் செய்யப்படும் அன்னாபிஷேகம் ஆகும். இந்த அன்னாபிஷேக நிகழ்வுக்கு ஒரு கதை உண்டு. பார்வதிதேவியின் தந்தை தட்சணின் சாபத்தால் சந்திரன் வ−வும், பொலிவும் இழந்து தேய்ந்து கொண்டே வந்தான்! இதனால் பெரும் கவலையடைந்த சந்திரன் என்ன செய்வது என்று திகைத்தான். இறுதியில் ஈசன்தான் இதிலிருந்து தம்மைக் காப்பாற்றுவார் என்று தீர்மானித்து "சிவனேகதி' என்று மூன்றாம் பிறையாகிய வடிவில் அவரிடம் தஞ்சம் அடைந்தான். சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவபெருமான் மூன்றாம் பிறை சந்திரனை தலையில் சூடிக்கொண்டு அவனிடம், "நீ உன்னுடைய தவறை உணர்வதற்காக இன்றுமுதல் உன் உருவம் சிறிது சிறிதாக தேய்ந்து பின் வளர்ந்து முழு நிலவாக பிரகாசிக்க அருள்புரிகிறோம். இந்த ஐப்பசி மாதத்தில் நீ மிகுந்த ஆற்றல்பெற்று ஒளிர்வாய்'' என்று அருள்கிறார்! இதன் காரணமாகத்தான் ஐப்பசி மாதத்து பௌர்ணமி மிகுந்த ஒளியுடன் பிரகாசிப்பதைக் காணலாம்.

Advertisment

நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசியாகும்! இதனால் தனக்கு சாபவிமோசனம் அளித்த சங்கரனுக்கு அரிசி சாதத்தால் சந்திரன் அபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஐப்பசி மாத பௌர்ணமியில் வரும் அன்னாபிஷேக நாளில் சிவபெருமான் திருமேனி முழுவதும் சோற்றால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்! 

இதனால் உலகம் முழுவதும் மக்கள் பசிப்பிணி நீங்கி சுபிட்சம் பெறுவார்கள் என்று சிவாகமம் கூறுகிறது!

Advertisment

நமது முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்லியிருந்தார்கள். அதாவது- "சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது அந்த பழமொழி! சோறு எங்கு கிடைக்கிறதோ அங்கேயே சிலர் தங்கிவிடுவார்கள் என்ற அர்த்தத்தில் கிண்டலாக இந்தப் பழமொழி கூறப்பட்டுவருகிறது. 

ஆனால் உண்மை அதுவல்ல... ஐப்பசி மாதப் பௌர்ணமியில் லிங்க வடிவான ஈசனின் திருமேனி முழுவதும் சோற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த சோற்றின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகக் கருதப்படும். எனவே திருமேனி முழுவதும் சோறு எனும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அன்றைய தினம் தரிசனம் செய்து வணங்கினால் கோடி லிங்கத்தை தரிசித்த பலன் கிட்டும் என்பதும் அன்னாபிஷேக தரிசனம் செய்து  சிவலிங்கத்தைக் காண்பவர்களுக்கு பாவங்கள் அகன்று புண்ணியம் பெற்று மோட்சகதி கிடைக்கும் என்பதும் நிதர்சனம்! இதைத்தான் நமது முன்னோர்கள்- 

thanjur1

"சோறு கண்டால் சொர்க்கம்' என்று சொல்லி வைத்தார் கள் என்பதே நிஜம்! 

சிவபெருமானுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேக வைபவத்தைக் காணும் பக்தர்கள் அனைவரும் வறுமை அகன்று பட்டினியில்லாத வாழ்வை பெறுவார்கள் என்பது நம்பிக்கை!

மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வென்றதன் நினைவாக கட்டியதே "கங்கை கொண்ட சோழபுரம்' கோவிலாகும். இந்த ஆலயத்தின் லிங்கம் மிகப்பெரியதாகும். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று 1,000 கிலோ அன்னத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து நிவேதனமாக அளிக்கின்றார்கள். இதுவே மிகப்பிரமாண்டமான அன்னாபிஷேக வைபவம் ஆகும்.

அன்னாபிஷேகம் என்பது சிவனுக்கு மட்டுமே உரிய வைபவமாக கொண்டாடப்படும் விழா என்றாலும் திருச்செந்தூர் திருத்தலத்தில் மட்டும் முருகப் பெருமானுக்கு அன்னத்துடன் வெண்ணெய்யைக் கலந்து பட்சணப் பலகாரங்கள் அலங்கரித்து வழிபடுவது இந்த திருத்தலத்துக்கேயுரிய சிறப்பு ஆகும்.

சிவபெருமானின் வடிவங்களில் பெரும் காவல் தெய்வமாக விளங்குபவர் பைரவர் எனப்படும் பைரவமூர்த்தி ஆவார். பைரவருக்கு உரிய நட்சத்திரம் பரணி! எனவே சித்திரை மாத பரணியிலும் ஐப்பசி மாத பரணியிலும் என இருமுறை பைரவ மூர்த்திக்கு "அன்னப் பாவாடம்' எனும் பெரும் படையிலிட்டு வழிபடுகின்றனர் என்பது தனிச்சிறப்பு!

சிதம்பரம் திருத்தலத்தில் நாள்தோறும் ஸ்படிகலிங்க மூர்த்திக்கு அன்னாபிஷேக வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது! 

உலக மக்களின் வறுமையையும் பசிப்பிணியையும் போக்கும் இறைவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் செய்யப்படுகிற அன்னாபிஷேகமே மிக உயர்ந்த அபிஷேகம் ஆகும். இந்த அபிஷேகம் காணும் பக்தர்கள் ஈசன் அருள்பெற்று வளமுடன் வாழ்ந்து சொர்க்கம் அடைவார்கள் என்பது திண்ணம்!