மிழிலக்கிய வானில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒüரும் கவிதை முகத்துக்குச் சொந்தக்காரர் அ.வெண்ணிலா. பள்ü ஆசிரியராகத் தனது கல்விப்பணியைத் தொடர்ந்தவர், சிறு பத்திரிகைகüல் எழுதத் தொடங்கி, தற்போது "ஆனந்த விகடனில்' 122 வாரங்கள் வெüயான "நீரதிகாரம்' எனும் பெருந்தொடரையும் எழுதியுள்ளார். இதுவரை 7 கவிதை நூல்கள், 4 சிறுகதை நூல்கள், 3 நாவல்கள், 7 கட்டுரை நூல்களோடு, உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்கüன் கவிதைகளை "கனவும் விடியும்', தமிழ்ப்பெண் எழுத்தாளர்கüன் கதைகளை "மீதமிருக்கும் சொற்கள்' எனும் நூல்களாகத் தொகுத்து வெüயிட்டுள்ளார்.

Advertisment

"தேவரடியார்கள்: வாழ்வும் கலையும்' எனும் தனது முனைவர் பட்ட ஆய்வினையும் நூலாகத் தந்துள்ள இவர், "இந்திய சரித்திரக் களஞ்சியம்', "ஆனந்த ரங்கப்பிள்ளை - தினப்படி சேதிக்குறிப்பு' எனும் வரலாற்றுப் பொக்கிஷங்களாக விளங்கும் நூல்களை எழுத்தாளர் மு.ராஜேந்திரனோடு இணைந்து செம்பதிப்பாக கொண்டுவந்துள்ளார்.

Advertisment

"உத்ரா' எனும் திரைப்படத்தில் பாடல் எழுதியவர், "சகுந்தலாவின் காதலன்' திரைப்படத்தில் வசன ஆசியராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். டிசம்பரின் குüர் மாதப் பொழுதில் "இனிய உதயம்' இதழுக்காக அவரோடு உரையாடியதிலிருந்து...

தங்களின் பள்ளி நாள்கள் பற்றி சொல்லுங்களேன்!

தமிழிலக்கிய வானில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிரும் கவிதை முகத்துக்குச் சொந்தக்காரர் அ.வெண்ணிலா. பள்ளி ஆசிரியராகத் தனது கல்விப்பணியைத் தொடர்ந்தவர், சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கி, தற்போது "ஆனந்த விகடனில்' 122 வாரங்கள் வெளியான "நீரதிகாரம்' எனும் பெருந்தொடரையும் எழுதியுள்ளார். இதுவரை 7 கவிதை நூல்கள், 4 சிறுகதை நூல்கள், 3 நாவல்கள், 7 கட்டுரை நூல்களோடு, உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளை "கனவும் விடியும்', தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் கதைகளை "மீதமிருக்கும் சொற்கள்' எனும் நூல்களாகத் தொகுத்து வெளி யிட்டுள்ளார்.

Advertisment

"தேவரடியார்கள்: வாழ்வும் கலையும்' எனும் தனது முனைவர் பட்ட ஆய்வினையும் நூலாகத் தந்துள்ள இவர், "இந்திய சரித்திரக் களஞ்சியம்', "ஆனந்த ரங்கப்பிள்ளை- தினப்படி சேதிக்குறிப்பு' எனும் வரலாற்றுப் பொக்கிஷங்களாக விளங்கும் நூல்களை எழுத்தாளர் மு.ராஜேந்திரனோடு இணைந்து செம்பதிப்பாகக் கொண்டுவந்துள்ளார்.

"உத்ரா' எனும் திரைப்படத்தில் பாடல் எழுதியவர், "சகுந்தலாவின் காதலன்' திரைப்படத்தில் வசன ஆசியராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். டிசம்பரின் குளிர் மாதப் பொழுதில் "இனிய உதயம்' இதழுக்காக அவரோடு உரையாடியதிலிருந்து.

எனக்கு வளமான, நினைவுகூரத்தக்க பால்யம் அமையவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. தனிமையும், விளையாட்டுக் கூட்டாளிகளுக்காகக் காத்துக் கிடந்த கணங்களும் மட்டுமே நினைவில் இருக்கின்றன. ஆறாம் வகுப்புக்குப் பிறகான பள்ளி நினைவுகள் மட்டுமே இன்னும் மறக்காமல் இருக்கின்றன. பத்து வயது வரை ஆங்காங்கு சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. 

வீட்டுத் தோட்டத்தில், அநேகமாக அன்றைய காலத்தில் எல்லார் வீட்டுத் தோட்டத்திலும் இருந்த ஈச்சம்பழ மரத்தின் கீழே, தோழிகள் ஒவ்வோர் வட்டம் போட்டு வைத்துவிட்டுப் பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்கூடத்தில் 11 மணிக்கு இடைவேளைக்கான மணி அடித்தவுடன், ஒரே ஓட்டம் வீடு நோக்கி ஓடி வருவோம். அவரவர் வட்டத்தில் விழுந்திருக்கிற ஈச்சம்பழங்கள் அவரவருக்கு. அக்கா, தங்கைகள், சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் எனப் பெரும்பாலும் உறவினர்களாய் இருக்கும் தோழிகளில் யாராவது ஒருத்தி, என் வட்டத்தில் இருக்கும் நல்ல தேர்ந்த ஈச்சம்பழத்தை, என் கையைத் தட்டிவிட்டு எடுத்துக்கொள்வாள். என் சார்பாக பேசி, வாங்கிக்கொடுக்க சகோதர, சகோதரிகள் இல்லாத நிலையில், ஏக்கமாய் பார்த்துக்கொண்டு, கிடைத்தவரை லாபம் என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு, மணி அடிப்பதற்குள் பள்ளி நோக்கி ஓடும், பலவீனமான சிறுமியின் தோற்றம் அவ்வப்போது என் கண்ணில் தோன்றி மறையும். 

வாசிப்பின் மீதான காதலை உங்களுக்குள் உண்டாக்கியவர் யார்?

என் அப்பா. அப்பா என்றாலே கையில் செய்தித்தாளோ, புத்தகமோ வைத்துக்கொண்டு வெள்ளை கட் பனியனும் வேட்டியும் கட்டிக்கொண்டு, தீவிரமாகப் படித்துக்கொண்டிருக்கும் உருவம்தான் நினைவில் வரும். என் அப்பா, வாசிப்பின் ருசியை எனக்குக் காட்டாமல் இருந்திருந்தால், நான் அடையாளமற்ற பல கோடிப் பெண்களில் ஒருத்தியாகவே இருந்திருப்பேன். 

எப்போது கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? நீங்கள் எழுதிய முதல் கவிதை எது?

பெண்ணாக இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளப் போவதன் அச்சமே எனக்குள் கவிதையைக் கொடுத் தது. பெரும்பாலும் மனசுக்குள் காதல் வந்தால், அதிலும் முதல் காதல் வந்தால் கவிதை வரும் என்பார்கள். 

எனக்கு அச்சத்தில் இருந்துதான் கவிதை வந்தது. 

"அடுத்த வருஷமும் வசந்தம் 
ஆர்ப்பாட்டமாய் வரும்;
வசந்தத்தின் வாசத்தை உணர 
நான் மட்டும் இங்கிருக்க மாட்டேன், 
மணமாகிப் போயிருப்பேன்' என்றெழுதியதே என் முதல் கவிதை.

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஒரே பிள்ளையாக இருந்துள்ளீர்கள். இது உங்களுக்கு நெருக்கடியைத் தந்ததா? சுதந்திரத்தைத் தந்ததா?

அப்பா மூலம் சுதந்திரத்தைப் பெற்றேன். அம்மாவின் வழியே நெருக்கடி கிடைத்தது.

இளைய வயதிலேயே ஓர் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியேற்ற அந்த அனுபவம் எப்படி இருந்தது?

நெருப்பைக் கையாளும் அனுபவம்தான் ஆசிரியப் பணி. விரும்பி அருகில் சென்று அள்ளி அணைத்துக்கொண்டதில்லை. முழுமையாக விலகி நின்றதுமில்லை. குடும்பச் சூழலால், பத்தாம் வகுப்பு முடித்தவுடன், பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவாக அமல்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். அன்றைக்கு என்னைப் பொறுத்தவரை, படிப்பில் பின்தங்கியவர்களே ஆசிரியப் பயிற்சியில் சேர்வார்கள். நன்றாகப் படிக்கும் நாம் ஏன் ஆசிரியர் பயிற்சியில் சேர வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை மிகவும் துன்புறுத்தியது. ஆசிரியர் பயிற்சி படிக்கிறேன் என்று சொல்வதில்கூட எனக்கு மனத்தடை இருந்தது. எதிர்நிலையில் என் அப்பாவுக்கு நான் ஆசிரியராவது மிகவும் பிடித்தது.

படித்து முடித்து 20 வயதில் அரசுப்பள்ளி ஆசிரியரானபோது, என் பார்வையை, புரிதலைச் சரிசெய்தவர் அப்பாதான். கிராமப்புறத்தில் திசையறியாமல், கல்வியின் மீது நம்பிக்கை வைத்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்களே குன்றா விளக்காய் இருந்து வழிகாட்ட வேண்டியவர்கள் என்பதைப் புரிய வைத்தார். பணியில் சேர்ந்த ஓராண்டில் என் மனநிலை முழுமையாக மாறியது. பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் நான் பல ஆண்டுகள் சென்றிருக்கிறேன். விடுமுறை நாள்கள், மறியல்கள், கடையடைப்புகள், பேருந்து ஓடும் நாள்கள், ஓடாத நாள்கள் எவையும் பொருட்டின்றி பணியாற்றியிருக்கிறேன்.

இன்றைய மனநிலைக்கு, கற்பிக்கும் மனநிலையில் இருந்து விலகி வந்துவிட்டேன். பள்ளிகளில் சூழல்கள் தற்போது வெகுவாக மாறிவிட்டன. 

சிறுபத்திரிகைகளுடனான உங்களின் எழுத்தனுப வமும் தொடர்பும் எப்படி அமைந்தன?

கையெழுத்துப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகத்தான் என் எழுத்துப் பயணம் தொடங்கியது. மிகச் சிறிய காலம் மட்டுமே சிற்றிதழ்களில் எழுதினேன். பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பது குறைவுதான். கேட்டு வாங்கி வெளியிடுபவர்களுக்குப் படைப்புகள் கொடுத்திருக்கிறேன்.  பெரும்பாலும் புத்தகங்களாகத் தான் வெளியிட்டிருக்கிறேன்.

சிறிய கிராமத்தில் முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்பட்டவர் நீங்கள். இதற்கான எதிர்விளைவுகள் வீட்டிலும் வெளியிலும் எப்படி இருந்தன..?

வீட்டில் பெரிதாக எதிர்ப்புகள் இருந்ததில்லை. வீடு எப்போதுமே என் விருப்பத்திற்கு இணக்கமா னது. வெளியாட்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு நான் காது கொடுப்பதில்லை.

மணநாளிலேயே இணையரின் கவிதைகளோடு, உங்கள் கவிதைகளையும் சேர்த்து, 1998-இல் "என் மனசை உன் தூரிகை தொட்டு' எனும் கவிதை நூலை வெளியிடும் எண்ணம் எப்படி வந்தது..?

வழக்கமான திருமண வீடுகளைப்போல் இருக்கவேண்டாம் என்று நூல் வெளியீடு என முடிவெடுத்தோம். அப்போதுதான் நான் எழுதத் தொடங்கிய காலம். புத்தகம் போடும் அளவுக்கு என்னிடம் கவிதைகள் இல்லை. எனவே, இருவரின் கவிதை களையும் சேர்த்து, ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்ற யோசனையை முருகேஷ் சொன்னார். அதற்கான முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுச்செய்தார். திருமணத்திற்கு முதல் நாள் வரவேற்பன்று, எங்களின் நூல் வெளியீட்டு விழாவாக நடத்தினோம். 

திருமணத்திற்கு முன்பாக உங்கள் இணையரான கவிஞர் மு.முருகேஷுக்கு நீங்கள் எழுதிய கடிதங்கள் "கனவிருந்த கூடு' எனும் நூலாக வெளியாகி, பரவலான பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. கடிதங்களை நூலாக உருவாக்கும் யோசனை எப்படி உருவானது..?

இதுவும் முருகேஷின் யோசனைதான், எனக்குத் தோன்றவில்லை. அவருடைய கடிதங்களையும் சேர்த்திருக்கலாம் என்று அம்பை, பிறகு சொன்னார். 

கி.ரா.வும், கல்யாண்ஜியும் எழுதியிருந்த வாழ்த்துரை களை இப்போது படிக்கையில், என் எழுத்துப் பயணத்தை முன்னமே கணித்ததுபோல் இருக்கும்.

தமிழினி வெளியீடாகத் தங்களின் முதல் கவிதை நூல் "நீரிலலையும் முகம்' வெளியாகி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது. அப் போதைய தங்களின் மனநிலை குறித்து..?

முதல் புத்தகத்துக்குக் கிடைத்த பரவலான கவனிப்பும் அங்கீகாரமும் தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலையைக் கொடுத்தது. தமிழினி பதிப்பகம் வசந்தகுமார் அண்ணாச்சி, "நீங்க ரொம்பப் பிரபலமா, வரிசையா உங்க புஸ்தகத்தைக் கேட்டு வாங்குறாங்களே?' என்றார். உண்மையில் எனக்கென்று எந்த அடையாளமும் உருவாகாத காலகட்டம் அது. 

கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த உங்களுக்குச் சிறுகதை எழுதும் ஆர்வம் எதனால் வந்தது..?

கவிதை, சிறுகதை, நாவல் என்றெல்லாம் எழுத்தில் படிநிலைகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கவிதையெழுதுவதற்கான உத்வேகம் போன்றே, சிறுகதை எழுதவும் எண்ணம் பிறந்தது. உரைநடை மீதான ஆர்வம் சிறுகதை, நாவலுக்குள் என்னை நகர்த்தியது. 

குறிப்பாக, பெண் வாழ்வு சார்ந்து என்னுடைய அனுபவங்களையே நான் கவிதை, கதைகளுக்குள் எழுதியிருக்கிறேன். நான் பார்த்து வளர்ந்த, என் கண்முன் நடமாடிய பல பெண்களின் வாழ்க்கை என் கதைகளுக்குள் இருக்கிறது. முதன்முதலில் மாதவிலக்கு நாள்களைக் கையாளத் தெரியாததுடன், அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் தயக்கம் காட்டும் பெண்ணைப் பற்றிய கதைதான், கணையாழியில் வெளியான என்னுடைய முதல் கதை, "பட்டுப் பூச்சிகளை தொலைத்த ஒருபொழுதில்.'

இந்தக் கதையை இன்றைக்குள்ள ஒரு நவீன பெண்ணால் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமே. "பிளடி ஃபக்' என கடந்துபோக வாய்ப் பிருக்கிறது. ஆனால் நாப்கின், (சன் டிவிபோல், நாப்கினுக்குப் பொதுப்பெயர் விஸ்பர்தான் எங்கள் காலத்தில்) வாங்கவும், அதை அப்புறப்படுத்தவும் நரக வேதனை அனுபவித்த பெண்கள் என்னுடன் இருந்திருக்கிறார் கள். கண்கொத்திப் பாம்பாய் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் நாள்களைக் கவனத்தில் கொண்டு, குழாயடியில் நின்று "இன்னுமா தீட்டு வரலை' எனக் கேட்கும் பெண்களுக்கு மத்தியில்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது. 

கழிப்பறை இல்லாத காலங்களில் வீட்டுப் பின்புறத் தோட்டத்தில் மலங்கழிப்பது வெட்கம் பிடுங்கித் தின்னும் செயல். முற்றத்தில் சுற்றி ஐந்தாறு பேர் ஆண்களும் பெண்களுமாய் வேலை செய்துகொண்டிருக்கும்போது, குளித்தாக வேண்டிய சூழலைப் பார்த்திருக்கிறீர்களா? இயல்பாக எடுத்துக்கொண்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள். பொருந்திப்போக முடியாத பெண்களின் அனுபவங்களே என் கதைகள். 

படைப்புவெளியில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

எழுதுவதற்கான உத்வேகத்தையும் எழுத்துதான் தருகிறது. வெவ்வேறு விதமான எழுத்தனுபவங்கள் எப்போதுமே எழுத்தை நேசிக்கச் செய்கின்றன. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என்று எழுதும் நேரத்தைய, தேவையை எழுத்து மட்டுமே தீர்மானிக்கிறது. சமீப வருடங்களில் நாவல் எழுதும் பரவச அனுபவத்தை நான் மிகவும் அனுபவிக்கிறேன். புதுப் புதுக் களங்களை உருவாக்குதல், சவாலான கதாபாத்திரங்களை உயிர்ப்பித்தல், மனித மனங்களின் ரகசியங்களை, சிடுக்குகளை, முரண்களை அறிவதற்கான வழியாக நாவல் எழுதுவது அமைகிறது.

ஒரு கதாபாத்திரம் எப்படித் தன்னை வளர்த்துக் கொள்கிறது என்பதை நாவலில் நிதானமாக கண்டு ரசிக்கலாம். நான்தான் அந்தப் பாத்திரத்தின் கர்த்தாவாக இருக்கலாம். ஆனால் என் கட்டுப் பாட்டை மீறி, என் விருப்பு வெறுப்பை மீறி, அந்தக் கதாபாத்திரம் தன்னை, தன் விருப்பத்துக்கு வளர்த்துக் கொண்டு செல்வது விந்தையான நிகழ்வு. நாவலில் நடக்கும் ரசவாதம். வரலாற்றுக் காலமோ, வரலாற் றுக்கு முந்தைய காலமோ, மனித மனம் விசித்திரமானது. 

அந்த விசித்திரத்தை அறியும் முயற்சியே கலை, இலக்கியம் எல்லாம். 

விசித்திரத்தை அறிவதற்கான இந்த எழுத்துப் பயணம் எப்போதுமே சோர்வைத் தராது.

தங்களின் எழுத்துக்கான முன்னோடியென்று யாரைச் சொல்வீர்கள்? 

தமிழ் இனத்தின் சித்திரத்தைத் தம் எழுத்தில் கொண்டு வந்துள்ள ஒவ்வொரு படைப்பாளியுமே என் முன்னோடிகள் தான். எனக்கு முன்னோடியாக கொள்ள பல்லாயிரம் ஆண்டு நீண்ட பாரம்பரியம் கொண்ட புலவர்களின் வரிசையே இருக்கிறது.

ஓக்கூர் மாசாத்தியார், நக்கீரர், கபிலர், அம்மூவனார், பெருந்தேவனார், அவ்வையார், கணிமேதாவியார், கூடலூர் கிழார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், செங்கோட்டை ஆவுடையக்கா என நீண்ட மரபில் வந்த புலவர்கள் ஒவ்வொருவருமே என் எழுத்துக்கான முன்னோடி. என்னை வசீகரிப்பவர்கள்; எழுதத் தூண்டுபவர்கள். 

உரைநடையிடப்பட்ட செய்யுளான சிலப்பதிகாரம் தொடங்கி, 18-ஆம் நூற்றாண்டில்  முதல் உரைநடை எனக் கொண்டாடப்படும் ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு, பாரதியின் வசனக் கவிதைகள், கட்டுரைகள், வ.உ.சியின் தமிழ், நாமக்கல் கவிஞரின் என் கதை என தொடர்ந்து நவீன உரைநடையின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன். சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், ஜெயமோகன், இமையம், அம்பை, உஷா சுப்பிரமணியம் என என்னை ஈர்த்தும், பாதித்துக்கொண்டும் இருக்கும் எழுத்தாளர்கள் பலர். 

"வந்தவாசிப் போர் 250' எனும் நூல் ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பெரிய முயற்சி. அதைச் செய்ய வேண்டுமென்கிற எண்ணம் வரக் காரணம் உங்கள் ஊரின் மீதான பற்றுதானே..?

ஊரைப் புரிந்துகொண்டதே "வந்தவாசிப் போர்-250' என்றொரு புத்தகத்தைத் தொகுத்த பிறகுதான்.  தினம் கடந்துசெல்லும் பாதை, கடைவீதி, கோயில், கடைகள் என்றாலும் 40 வயதுக்குப் பிறகு, அவை ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்த வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தேன். வரலாறு, நம் ரத்தநாளங்களைப்போல் நமக்குள் இருப்பதை உணர்ந்த பிறகே என் எழுத்துக்கு ஒரு முழுமை வந்தது. 

வரலாறை அறிதல் என்பது, வெறும் கடந்த காலத்தை அறிதல் மட்டுமல்ல. நிகழ்காலத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள நமக்கு அவசியம் வேண்டிய கடந்த காலம்.  கடந்த காலத்துக்கு உயிர்கொடுத்து பார்க்கும் கலையைக் கற்றுக்கொடுத்த அன்பிற்குரிய டாக்டர் மு.ராஜேந்திரன் அவர்களை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

vanila1

வரலாற்று நாவல்களில் அகவுணர்வை மிக நுட்பமாகப் பேசிய பெண்மொழியிலான சிறந்த  நாவல் என்று கொண்டாடப்பட்ட "கங்காபுரம்' நாவலுக்கான வரவேற்பு குறித்து..?

என்னுடைய முதல் நாவல், கங்காபுரம். ஒரே வாரத்தில் நாவல் சென்றடைந்த விதம் பிரமிப்பைத் தந்தது. எத்தனை வாசகர்கள், எத்தனை ஊர்கள், வயது வித்தியாசமின்றி எல்லா வயதினரும் கங்காபுரத்தை வரவேற்றுக் கொண்டாடியதை மறக்கமுடியாது. 

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த காலத்தையொட்டி, ஒரு நெசவாளர் குடும்பத்தின் பின்னணியில் எழுதப்பட்ட "சாலாம்புரி' நாவல், உங்களின் வாழ்க்கை அனுபவமென்று சொல்லலாமா..?

என் ஊரார், உறவினர்கள், குடும்பத்தினர் என என் பால்யத்தின் பகுதியாக இருந்தவர்கள் பற்றிய கதைதான் "சாலாம்புரி.' நான் அப்போது பார்த்த திராவிட இயக்க வாழ்வியலைத்தான் நாவலாக்கினேன். 

சாலாம்புரி அடிப்படையில் என் அப்பாவின் கதை. அறுபத்தைந்து வயதில் என் அப்பா தன்னுடைய சுயசரிதையை எழுத முனைந்தார். 20 பக்கங்கள் மட்டுமே அவர் எழுதியிருந்த வேளையில் மரணம் முந்திக்கொண்டு அவரை அழைத்துக்கொண்டது. 

அப்பாவின் கதை பாதியில் நின்றுபோனதில் பெரும் இழப்பு எனக்கு. அவரின் நினைவுகளில் எங்கள் ஊரின் மூன்று தலைமுறை இருந்தது. மூன்று தலைமுறைகளின் வழியாக அவர் பெற்றிருந்த அனுபவம் பெரிது. 

இழந்த பிறகுதான் அருமையை உணர முடியும் என்பதுபோல், என் அப்பாவை நான் எழுதவைத்துப் பார்க்காமல் விட்டதைப் பெரிய இழப்பாக பார்க்கிறேன். 

122 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த "நீரதிகாரம்' நாவலை எழுதுவதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள்..?

உத்வேகம் ஒவ்வொரு படைப்புக்குமே தேவைதான். ஒரு வரலாற்று நாவலை 122 வாரங்கள் எழுதுவதற்கு, அடிப்படையில் வரலாற்றுத் தரவுகள் தேவை. கதைக் களனுக்கு உதவும் தரவுகள் இருப்பின் கதையை வளர்க்கலாம். நீரதிகாரம் தொடருக்காக நான் மேற்கொண்ட களப்பயணங்கள், தொடர்புடைய மக்கள் பகிர்ந்துகொண்ட கதைகள், ஆவணக்காப்பகம், நூலகங்களில் கிடைத்த ஆவணங்கள் எல்லாம் கதையை வளரச் செய்தன. இன்னும் 100 அத்தியாயங்கள் எழுதலாம். நானாகவே 122 என்று குறைத்துக்கொண்டேன். 

"நீரதிகாரம்' நாவலின் நாயகன் பென்னி குக்கின் கல்லறையைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்று வந்த அனுபவம் பற்றி..?

பென்னியின் கல்லறை மட்டுமல்ல, அவர் படித்த தொடக்கப் பள்ளி, படித்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ கல்லூரி, வேலை பார்த்த ராயல் இன்ஜினியரிங் கல்லூரி, அவர் வாழ்ந்ததாக நம்பப்படும் வீடு உட்பட, பென்னி குக் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தேன். தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் கிடைக்காத புகைப்படங்கள், ராணுவ அதிகாரிகள் பற்றிய குறிப்புகள், பெரியாறு அணை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை பிரிட்டீஷ் நூலகத்தில் பார்ப்பதற்காக இங்கிலாந்து பயணத்தைத் திட்டமிட்டேன். என் எழுத்துப் பயணத்தில் மறக்க முடியாத பயணம், அந்த 18 நாள்கள். 

ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறை, வரலாற்றைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும், வயது முதிர்ந்தோருக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையான வாழ்வு எனப் பல விஷயங்கள் வியக்க வைத்தன. இந்தியாவைத் தவிர்த்து வேறொரு நாட்டினை வசிப்பதற்காக தேர்வு செய்யச் சொன்னால் என் தேர்வு நிச்சயம் இங்கிலாந்துதான். 

தங்களின் தேவதாசிப் பெண்களின் கலையும் வாழ்வும் பற்றி ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அந்த ஆய்வு எண்ணம் எதனால் வந்தது?

உண்மையில் அப்படியொரு தலைப்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி எனக்குள் தோன்றியது என்பது பற்றி முடிவுக்கு வர முடியவில்லை. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக இந்த தலைப்பைத் தேர்வு செய்தேன். பல்வேறு காரணங்களால் தலைப்பைப் பதிவுசெய்ய முடியாமல் அலையவிட்டார்கள். என்னுடைய வசிப்பிடம் பல்கலைக்கழகத்தின் புவியியல் எல்லைக்குள் வரவில்லை என்ற காரணமும் அதில் ஒன்று. 

அரசுப் பணியில், பதவி உயர்வுக்கோ, ஊதிய உயர்வுக்கோ பயன் கொடுக்கமுடியாத முனைவர் பட்டத்திற்காக அலைந்ததுபோதும் என அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டேன். என்னுடைய தொகுப்புப் பணிகள் வெளியாகும்போதெல்லாம் நண்பர்கள், "இதுவொரு முனைவர் பட்ட ஆய்வுக்கும் மேலான வேலை' என்று. இந்த நற்சான்றே போதுமென்று பத்தாண்டுகள் சென்றது.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக என்னுடைய மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய முனைவர் ம.ராஜேந்திரன் இருந்த நேரம். ஒருமுறை அவரிடம் பேசும்போது, என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக அலைந்த கதையைச் சொன்னேன். அவர் உடனே, "தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிவுசெய்யுங்களேன்" என்றார். உடனே, நானும் முருகேஷும் விண்ணப்பித்தோம். முருகேஷ், தொழில்பிரிவில் பட்டயப் படிப்பு முடித்திருந்ததால்,  ஆய்வுக்குத் தேவையான கல்வித் தகுதி அவருக்கு இல்லாமல் போனது.

கல்வித் துறையின்கீழ், பதிவு செய்து, ஆய்வை உரிய காலத்தில் முடித்தேன். 20-ஆம் நூற்றாண்டில்தான் பெண்களுக்குப் படிப்பறிவு வந்தது, பெண்களுக்குப் பொது வாழ்வு ஒன்று இருந்ததில்லை எனப் பல கருத்துகள் நிலவுகின்ற சூழலில், கல்வியறிவு பெற்ற, பல்வேறு மொழிகள் பயின்றிருந்த, கலை தேர்ச்சி மிக்க பெண்களாக இருந்த தேவரடியார்கள் கல்வி பற்றி ஆய்வு செய்தது மிகுந்த நிறைவு தந்த காலம். 

இதிகாச காலம் தொட்டு, இன்றைக்கு வரைக்குமான பெண்களின் அகமனவுலகைக் குறிப்பாக காமத்தைப் பற்றி எழுதிய "இந்திர நீலம்' சிறுகதை நூல் போதிய கவனத்தைப் பெறவில்லை என்று நினைத்ததுண்டா..?

எந்தப் படைப்பு குறித்தும் எழுதி வெளியான பிறகு நான் கவலைப்படுவதோ, அதுகுறித்து யோசிப் பதோ கிடையாது.  

"இந்திர நீலம்' பெரும் வரவேற்பைப் பெற்றது. "கனலி' இணைய இதழில் வெளியானபோதே ஆயிரக்கணக்கான வாசகர்கள் அக்கதை குறித்து பெரும் விவாதம் நிகழ்த்தினார்கள். கதையின் கருப்பொருள் சார்ந்து ஆரோக்கியமான விவாதங்களும் நடந்தன. பெண்ணின் பாலியல் இச்சையை வெளிப்படையாகப் பேசும் கதைகளை எழுதலாமா போன்ற அர்த்தமற்ற விவாதங்களும் நடந்தன. கதையைப் படித்த பல பெண்கள் தங்களின் சொந்த அனுபவத்தை, வெளிச் சொல்லமுடியாத அனுபவத்தைப் பேசுவதாக ஆத்மார்த்தமாக எனக்குப் பகிர்ந்திருக்கிறார்கள். 

கதையின் ஆழம் அதுவே. யாருடைய அனுபவத்தை வெளிக்கொண்டு வரவேண்டுமோ, அது நடந்திருக் கிறது.

தொகுப்பில் இருக்கிற ஒவ்வொரு கதையும் எனக்கு மிக நெருக்கமானவை. நான் நேசித்து, நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டு எழுதியவை.

20 ஆண்டுகளுக்கு முன் தமிழின் தொடக்ககால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேடி யெடுத்து "மீதமிருக்கும் சொற்கள்' எனும் நூலாகத் தொகுக்கும் எண்ணம் எதனால் உருவானது?

2004-ஆம் ஆண்டு லீனா மணிமேகலையோடு ஒருநாள் அசோக்நகரில் தேநீர் குடித்துக் கொண்டி ருந்தபோது, லீனா, "நாம் ஏன் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஒரு தொகுப்பு கொண்டுவரக்கூடாது?' என்று என்னிடம் கேட்டார்.

ஏற்கெனவே சாகித்திய அகாடமி மூலம் உலகத் தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுப்பு "கனவும் விடியும்' என்றொரு தொகுப்புப் பணியை செய்துமுடித்திருந்தேன். (2004 இல் நான் கொடுத்த தொகுப்பை 2021-இல் புத்தகமாகக் கொண்டு வந்தார்கள் சாகித்திய அகாடமியினர்.)   

லீனா இப்படிக் கேட்டவுடன் ஏற்கெனவே கவிதைகள் செய்திருக்கிறோம், இப்போது சிறுகதை என்று உற்சாகமானேன். சின்னதாக ஒரு பொறி  கிடைத்தால், அதில் பேய்த்தனமாக இறங்குவதை வழக்கமாகக் கொண்டவள் நான்.  அதன் நடைமுறைச் சிக்கல்கள் எதைப் பற்றியும் நான் யோசிக்காமல்,  நிச்சயமாகச் செய்யலாம் என்று லீனாவிடம்  சொல்லிவிட்டு,  உடனடியாக யார் யாரையெல்லாம் முக்கிய எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் தயாரிக்க ஆரம்பித்தோம். 

தமிழில் "அப்பொழுது எழுதிக்கொண்டிருந்த பெண் எழுத்தாளர்கள் மற்றும் முன்பு எழுதிய பெண் எழுத்தாளர்கள்' என்று வரையறை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பணியைத் தொடங்கினேன்.  

இந்தத் தொகுக்கும் பணி என்பது, ஒரு படைப்பாளருடைய  நேரத்தை மட்டுமல்ல, படைப்பூக்கத் தையும் நிச்சயமாகக் குலைக்கின்ற செயல்தான். தொகுக்கும் பணி, வரலாற்றைத் தேடிச் செல்லுதல் என்பதெல்லாம் பெரும்பாலும் படைப்புக்கு எதிரான மனநிலையை பல நேரங்களில் கொடுக்கும்.  இக்கருத்தில் தனி நபர் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும். ஊரெல்லாம் அலைந்து திரிந்து என்னால் இதுபோன்ற பணிகளைச் செய்ய முடியும். படைப்பூக்கம் பாதிக்கப்பட்டாலும் வரலாற்றை நினைவூட்டுவதற்காகத் தொகுப்பு பணிகள் செய்யும்போது நான் பெரிதாக வருத்தப்பட்டதில்லை.

2004-இல் தொடங்கிய இந்தப் பணியை 2006-இல் முடித்தேன். இரண்டு வருடம் எடுத்துக்கொண்டேன். அப்போது எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து, அவர்களுக்கு  மூன்றரை வயது இருக்கும். வந்தவாசி யில் இருந்து அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் பேருந்து ஏறி,  எட்டு முப்பதுக்குச் சென்னை வருவேன். பாரிமுனையில் இருக்கும் குறளகத்திற்கு பேருந்து வரும்.  அங்கு இறங்கி, குளத்தூரில் இருந்த ரோஜா முத்தையா நூலகத்திற்குச்  செல்வேன்.   இப்பொழுது ரோஜா முத்தையா ஆய்வு நூலகமாக தரமணியில் செயல்படுகிறது. அப்போது அங்கு மிகுந்த கெடுபிடி உண்டு. இப்போது போன்று மின் நூலகம் கிடையாது. அப்போது அவ்வளவு இணக்கமான சூழல் இல்லை. ஒரு நாளைக்கு நான்கு புத்தகங்கள் கேட்டோம் என்றாலே யோசிப்பார்கள். முதலில் கொடுத்ததைப் படியுங்கள் என்று சொல்வார்கள்.  தேவையான கதைகளை நகல் எடுத்துக்கொண்டால், சற்று நிதானமாக வீட்டிற்கு சென்று படிக்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அப்போது நகல் எடுப்பதற்கும் நிறைய தொகை. ஒரு பக்கத்திற்கு வழக்கமாக வெளியே இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் என்றால், அங்கு இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமான தொகை இருக்கும். மறைமலை அடிகள் நூலகம், கலைமகள் காரியாலயம் உள்ளிட்ட நூலகங்களிலும் சிறுகதைத் தொகுப்புகள் வாசித்து, குறிப்புகள் எடுத்தேன். இத்துடன், மூத்த எழுத்தாளர்களின் சேகரிப்பில் இருந்த பழைய தொகுப்புகளையும் தேடி, பல்வேறு இடங்களுக்கு ஒவ்வொரு வாரமும் பயணம் செய்தேன். இத்தொகுப்புப் பணியின் போதுதான் தியடோர் பாஸ்கரன் அவர்களைச் சந்தித்தேன். இன்றும் தொடரும் அருமையான நட்பு.  

அப்படி கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வொரு இடத்திற்கும் அலைந்து திரிந்து, ஒரு பட்டியலை எடுத்துப் பார்க்கும்போது, முதலில் நான் ஒரு 200 பெண் எழுத்தாளர்களின் பெயர்களை எழுதி முடித்திருந்தேன். இதற்கே ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

ஏனென்றால் அதற்கு முன்பாக, இது சார்ந்த குறிப்புகளோ, தரவுகளோ கிடையாது. 

முதன்முறையாகப் பெண் எழுத்தாளர்கள் யார் என்று ஒரு நீண்ட பட்டியலை எடுக்கும்போது, அது மிகப்பெரிய சிரமமாக எனக்கு இருந்தது. இதன் பிறகுதான் சுவாரஸ்யமே. பட்டியலை எடுத்துக்கொண்டு, மூத்த எழுத்தாளர் ஐயா வல்லிக் கண்ணனைப் பார்க்கச்சென்றேன். அவரிடம்,   "பெண் எழுத்தாளர்கள் கதைகளை தொகுக்கப் போனேன். "இவர்களில்  யாரெல்லாம் உங்களுக்கு நேரடியான அறிமுகம் இருக்கிறது? இவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும்?' என்று கேட்டு, அவரிடம் பட்டியலைக்  கொடுத்தேன்.  அதை வாங்கிப் பார்த்த அவர்,  ஒரு பேனாவை எடுத்து வேகவேகமாகச் சில பெயர்களை அடிக்க ஆரம்பித்தார்.  

200 பேரில் சுமார் 25 பெயரை அடித்துவிட்டார்.  ஏனென்று கேட்க, "இவர்கள் எல்லாம்  பெண்  பெயரில் எழுதிய ஆண்  எழுத்தாளர்கள்' என்று கூறினார். 

இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக நாள்களைத் தின்று தொகுப்புப் பணி நடந்தது. அது ஒரு மன நிறைவான காலம். 

அநுத்தமா, கிருத்திகா போன்ற எழுத்தாளர்களையும் வசுமதி ராமசாமியின் மகள், வை.மு.கோ.வின் பெயரன், ஸரோஜா ராமூர்த்தியின் மகன் ஜெயபாரதி, கு.ப.சேது அம்மாளின் உறவினர் போன்ற எழுத்தாளர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது சிறப்பான அனுபவத்தைக் கொடுத்தது. தங்கள் குடும்பத்தில் இருந்த எழுத்தாளர் குறித்த அடையாளமே தெரியாத குடும்பங்களையும் பார்க்கமுடிந்தது.  

மறக்க விரும்புகிற  அல்லது மறைக்க விரும்புகின்ற பெண் எழுத்தாளர்களையும்  சில இடங்களில் பார்க்கமுடிந்தது. அநுத்தமா மற்றும் கிருத்திகா வினுடைய சந்திப்பு மிகவும் ஊக்கமளிக்கும் சந்திப்பாக இருந்தது, அநுத்தமாவை சந்தித்தபோது அவருக்கு 83 வயது இருக்கும். அதற்குப்பின் ஓரிரு வருடங்களில் அவர் மறைந்துவிட்டார். அவர் எழுத்தாளராக வாழ்ந்த அந்தக் காலத்தைப் பகிரும்பொழுது அவ்வளவு ஆச்சரியம் நிறைந்ததாக இருந்தது. பறவைகளைப் பற்றி அவர்கள் ஒரு தனி புத்தகமே எழுதி இருக்கிறார். அப்போது அவரிடம், "அம்மா எப்படி உங்களுக்கு இந்த ஆர்வம் வந்தது?' என்று கேட்டேன்.

"பறவைகளுக்கும் பெண்களுக்கும் உறவு இல்லாமல் இருக்குமா? எல்லா நேரமும் தோட்டத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்க்கும்போதும், தண்ணீர் இறைத்து ஊற்றும்போதும், நம்முடன் இருப்பது பெரும்பாலும் பறவைகள்தான். இதற்கு என்ன தனியாக ஆர்வம் வேண்டி இருக்கிறது?' என்றார். "பளார்' என்று அறைந்தது போலிருந்தது. 

ஒரு பெண்ணிற்கு இதை எழுதுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கும் என்ற ஒரு வழக்கமான பார்வை இருக்கிறது. அதை அநுத்தமா அழுத்தமாக ஒரு விநாடியில் தூக்கி எறிந்துவிட்டார்.

அதன்பிறகு கிருத்திகாவின் சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்படி ஓர் எழுத்தாளரை ஒரு வீடு கொண்டாடும் என்பதை அவர் வீட்டில் பார்த்தேன். செல்போன் வராத காலமாக இருந்த நேரத்தில், நான் அவருடைய வீட்டின் லேண்ட்லைன் தொலைபேசிக்குத் தொடர்புகொண்டு செய்திகளைத் தெரிவிப்பேன். மிகச் சரியான நேரத்தில், என்னுடைய வருகைக்கான தயாராகி உட்கார்ந்திருப்பார்.

வரலாற்றறிஞர் ப.சிவனடியின் "இந்திய சரித்திரக் களஞ்சியம்' எனும் 140 ஆண்டுக்கால உலக- இந்திய- தமிழக வரலாற்று நூலைத் தேடியெடுத்து பதிப்பித்திருக்கிறீர்கள். அது உங்களின் கனவு முயற்சியா..?

இதுவும் எதேச்சையாக நடந்ததுதான். எங்களின் திருமணத்தன்று இலக்கிய வட்டம் நாராயணன், சிவனடியின் இந்திய சரித்திரக் களஞ்சியத்தின் ஒரு தொகுதியை எங்களுக்குப் பரிசளித்திருந்தார். திருமணம் முடிந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, 

அந்தப் புத்தகத்தை மறுபடியும் படித்தபோது, உலக வரலாற்றில் சிவனடியைப் போன்ற வரலாற்றறிஞர் இல்லையென்று தோன்றியது.

அவரின் எழுத்துகளைச் சமகால வாசகர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக மறுபதிப்பு கொண்டு வரலாம் என்று நினைத்தோம்.

எங்களின் நண்பரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.  கொடுத்த உற்சாகத்தினாலும் உதவியினாலும் மிகப் பெரிய பதிப்புப் பணியைச் செய்ய முடிந்தது.  

நீங்கள் இதுவரை பெற்ற விருதுகளில் பரிசுகளில் மிகவும் பிடித்தமானதாக எதை நினைக்கிறீர்கள்..?

ஒவ்வொரு விருதும் என்னுடைய படைப்புகளுக் காகக் கொடுக்கப்பட்டவை. விருதுகளில் இருந்து விலகியிருக்கும் மனோபாவம் கொண்ட நான், அதற்காகவே அவற்றை நான் ஏற்றுக்கொண்டி ருக்கிறேன். விருது வழங்கும் விழா மேடைகளிலும் நான் பெருமளவு விலகியே தான் இருந்திருக்கிறேன். 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், நாமக்கல் பாவை கல்லூரி நிறுவனங்கள் வழங்கிய விருது விழாவினைச் சொல்லலாம். கவிஞர் சிற்பி, ஏன் இவ்விருது வழங்கப்படுகிறது என்பதற்காக என் படைப்புகள் குறித்த திறனாய்வு செய்து பேசினார். ஒரு படைப்பாளியின் இடம் என்ன, மிக நீண்ட மரபுடைய தமிழ் இலக்கிய மரபில் நம் படைப்புகள் எங்கிருக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் போல் அவர் உரை இருந்தது. எனவே, மனதுக்கு நெருக்கமாய் இருந்தது அவ்விழா. 

இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி களில் மிகவும் ஈர்த்த எழுத்து யாருடையது?

லஷ்மி சரவணகுமார், கார்த்திக் புகழேந்தி, அகர முதல்வன், கமலதேவி, ஜா.தீபா, மானசீகன், கார்த்திகைப் பாண்டியன், கார்த்திக் பாலசுப்பிரமணியம் என இந்த வரிசை நீளமானது. பொதுவாக, பட்டியல் என்றாலே விடுபடல்கள் வந்துவிடும். நான் பெரும்பாலும் அதை விரும்புவதில்லை. தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்களில் இருந்து உடனடியாக மனத்தில் எழும் பெயர்களாக இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

உங்களின் பார்வையில் "இனியஉதயம்' இதழ்..?

இன்றைக்கு அச்சிதழ் நடத்துவது என்பதே பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான ஒரு பணியாக மாறியிருக்கும் சூழலில், தொடர்ந்து "இனிய உதயம்' இதழின் வழியே சிறந்த படைப்பாளர்களின் தரமான படைப்புகளை வெளியிடும் இதழாக வெளிவரும் "இனிய உதயம்' இதழின் பணி பாராட்டுக்குரியது. கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழி பெயர்ப்புகள் என "இனிய உதயம்' இதழின் வழி சிறப் பான படைப்புகள் வாசகப் பார்வைக்கு அறிமுக மாகின்றன. தமிழ் வாசகர்கள் தொடர்ந்து இத்தகைய இதழ்களை ஆதரிக்க வேண்டும்.